அந்த நாள் ஞாபகம் – என்னைத் தெரியுமா!

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

ஸ்ரீனி


என்னைத் தெரியுமா!

நடிகனாகிப் போனேன்!எட்டாவது படிக்கும் போது.
இந்த எட்டாவது நிறைய கொடுத்தது.சில சமயம் சில வருடங்கள் அமைந்து விடும்.அதில் ராசி எல்லாம் பார்ப்போம்!8வது டாப்பு…9வது டவுனு…10 டாப்பு…இப்படி alternate அது இது என்று…!

நம்ப டென்ஷன் சார்தான் பள்ளி நாடகக் காவலர்!
முதலில் நடிகர் பிடிக்கும் படலம்.பின்ன நம்ப சார் ஆள் பிடிக்கிறார் என்றதும் அவனவன் ஓடி ஒளிய,ஓடாத,ஒளியத் தெரியாத நான்,வக்கில் பையன், சங்கரு,தொந்தி சுந்து,காமடி வேங்கிட்டு…இப்படி பிடித்து வரப்பட்ட ஒரு ட£ம்!பிறகு கதை சொன்னார்…சொன்னார்..பொன்னியின் செல்வன் கெட்டது.ஒரு வாரம் கிளாஸ் இல்லை!

என்ன கதை…அப்பா,அம்மா இல்லாத ராஜகுமாரன்,அவன் சித்தப்பு வில்லன்,ஒரு விதூஷகன்…அப்புறம் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சிகள்,அப்புறம் எப்பவும் வரும் சோக,சாகச இத்யாதிகள்!ராஜ குமாரன் கதி அதோகதியாகும் போது தளபதி என்ட்ரி!தளபதியின் சாகசத்தால் குமாரனும் நாடும் காப்பாற்றப்படுகிறது!

தளபதி?!…நாந்தேன்!!அட்டைக் கத்தி,ஜிகினா கவுன்,டால்டா டப்பா தொப்பி,வீர வசனம் என்று…காலில் ஹவாய் செருப்பு!!நடுவில் நாடோடி மன்னன்வாத்யார் மூக்கு ஸ்டைல் செய்து அப்ளாஸ் வேறு!! இது சொந்த சாகித்யம்! எனக்கும்,வெங்கிட்டுவிற்கும் பிரைஸ்!அந்த மூக்கு வித்தை காட்டி தாண்டா உனக்கு ப்ரைஸ்! தொந்தி இன்றும் சொல்கிறான்.

எட்டாவதில் நடந்த இன்னொரு சம்பவத்தால் எனக்கு ஞான ஒளி கிட்டியது! ஒரு குருட்டு லக்கில் மார்க் அடித்து overall prize கிடைத்து விட்டது! பள்ளிப் படிப்பில் எனக்கு கிடைத்த முதலும்,கடைசியும் அதுதான்!

பரிசைப் பார்த்து அம்மா சொன்னாள்,’இனிமே இதே மாதிரி எப்பவும் மார்க் வாங்கணும்,புரியுதா’!

ஆஹா! தப்பாகிவிட்டதே! இந்த பரிசு,முதல் ரேங்க் எல்லாம் நமக்கு ஒத்து வருமா?வராதே!நாம பாட்டுக்கு தேமேனென்று படம் பார்த்து ஊர் சுற்றி…ஒழிந்த போது படிக்க…எவ்வளவு தேறும்…60 (அ) 70%…மாப்ளே,அதுதான் கரீக்டு!

டேய் சீனி,ரேஞ்சைக் குறைச்சுடு என மனசாட்சி(!) அறிவுரைக்க,குறைத்தே விட்டேன்!படிப்பு காலம் முழுவதும் இதே ரேஞ்சு தான்!உனக்கு competetive spirit கிடையாதா, என சகோதரி கேட்பாள்.
அது என்ன..புதுப் படமா…!எதுல வந்திருக்கு..!

நம்ப யுனிபார்ம் தையலடி உற்சவத்தை தொடர்ந்தது நாத சங்கீதம்!

அப்போது எல்லாம் பெண் பிள்ளைகளுக்கு பாட்டு
சொல்லிக் கொடுப்பது ஒரு எழுதாத சட்டம் போல!
எங்கள் வீட்டிலும் இது நடந்தது.பாட்டு வாத்யார் என் அம்மாவின் குரு!என் சகோதரி, தெரிந்தவர் வீட்டுப் பெண்கள்,உறவுக்காரப் பெண்கள் என சபை அலறத் துவங்கியது!

‘கர்த்தப கான சபை’ எனப் பெயர் வைத்திருந்தேன்!
அவ்வப்போது விசில் அடித்து புலமை காட்டுவேன்.
அதற்கு பாட்டு ட£ச்சரிடம் சபாஷியும் வாங்குவேன்!
சகோதரி முறைப்பாள்! பாவம் அவர்! திருவிளையாடலில் சிவாஜி சொல்வது போல தலையால் தண்ணீர் குடித்து பார்த்தார்.அவர் தானே குடிக்கணும்!ஒன்றும் மசியவில்லை!
பொறுத்து பூமி ஆள முடியாமல் ஒரு நாள் அம்மாவிடம்,

“இந்த பெண்டுகளுக்கு சங்கீதம் வரவே வராது.ஞான சூன்யங்கள்.காசைக் கரியாக்காதே.முடிஞ்சா உன்
பிள்ளைக்கு சொல்லிக் கொடு”,என்று சொல்லி விட்டார்!

அவ்வளவு தான்!பாட்டு வாத்யார் ஒழிக..ஒழிக..என கோஷ்டம் போடாத குறை,என் பாட்டி தலைமையில்!
உடனடியாக பத்தி விடப்பட்டார்!அவர் செய்த தவறு இரண்டு!முதலில் எங்கள் வீட்டுப்பெண்களை ஞான சூன்யம் என்றது.

இவன் ஞானத்தை ரொம்ப கண்டவன்!போனாப் போகுதுன்னா ரொம்ப பேசறானே.போ..போ..ரெண்டு ரூபா போச்சு,ஒம் பொண்டாட்டிக்கு ரவிக்கை துணியும் போச்சு!-பாட்டி.

தவறு எண்.2:ஆண் பிள்ளைக்கு பாட்டு சொல்லித் தர சொன்னது.

இவேன்ல்லாம் பாட்டு படிச்சு என்ன லாபம்;பெரிய மதுரை மணி!தேங்கா மூடி கச்சேரிக்கு கூட லாயக்கு இல்லாத வாத்தி!
இதுவும் பாட்டி தான்!

பாட்டி விட்ட லந்தில், அம்மா ரொம்பவே அப்செட்டாகி இனி பாட்டு கூத்து இந்த வீட்டில் இல்லை என்று விட்டாள். என் சகோதரி பாட்டே படிக்கவில்லை,அதன் பிறகு.
.
இதனால் ஆய பயன் எனக்குத் தான்!கொஞ்சம் ஆர்வம் வந்து கேள்வி ஞானமாக ராகம் சொல்லும் வரை வந்தேன்!

மோஹனம் சொல்லு…?
வந்த நாள் முதல்..!!!

ஸ்ரீனி


Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி