அடியும் அணைப்பும்

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

கஜன்


அதிகம் உண்டு விளையாட
ஆணால் அழைத்தார் அம்மாதான்
பதிகம் பாடிப் புகழ்பெற்ற
பரமன் கோயில் செல்வதற்கு;
எதிலும் நாட்டம் இல்லாமல்
இறைவன் வீதி சுற்றிவந்தேன்
மதியம் ஆன போதினிலே
வயிற்றில் பசியும் வந்ததுவே

கடைகள் பலதைக் கண்டதுமே
களித்துக் கேட்டேன் இனிப்பைத்தான்
கிடைக்கும் உணவுப் பதார்த்தத்தில்
கிருமி இருக்கும் என்பதனால்
இடைஞ்சல் தராமல் வருவாயோ
என்று சொன்னார் என்தாயார்
விடையாய் இதனைக் கேட்டதுமே
மெதுவாய்ச் சொன்னேன் பசிப்பதென

இந்த நேர வேளையிலே
இங்கே வேண்டாம் சாப்பாடு
சந்தி கடந்து சென்றுவிட்டால்
தருவேன் சோறு பாயாசம்
அந்த சொல்லைக் கூறியதும்
அங்கே இருந்த கல்லொன்றில்
குந்தி விட்டேன் களைப்புற்று
கொண்டார் கோபம் எனன்னையார்

உச்சி வெய்யில் வெப்பத்தில்
உணர்வில் அகோரம் அடைந்ததினால்
மெச்சி வளர்க்கும் பெற்றவளோ
மிருகம் போல அடித்திடவே
அச்சிரமத்தைத் தாங்காமல்
அழவே தொடர்ந்தும் அடித்திடவே
குச்சியாக மடிந்தபடி
கொண்டேன் மயக்கம் அவ்விடத்தில்

காலை யாரோ தேய்த்திடவும்
கையில் மெதுவாய் தடவிடவும்
பாலை வாயில் தந்திடவும்
பருக மறுத்துத் துப்பியபின
வேலை வணங்கும் குரலினிலே
விஞ்சும் சோகம் உணர்ந்தபடி
சாலை பெரிதாய்த் தெரிகின்றது
சற்றுக் கண்ணைத் திறந்திடவும்

என்ன வேண்டு மென்றுசொல்
இங்கே வாங்கித் தந்திடுவேன்
உன்னால் தானே தாயென்றும்
உலகம் என்னைக் கண்டதன்றோ
முன்னம் அடித்தேன் செல்வத்தை
மூர்க்க அரக்கி தானென்றாள்
என்னில் காட்டும் அன்பினிலே
எவரெஸ்ட் அங்கே தோற்றதுவே
—-
avathanikajan@yahoo.ca

Series Navigation

கஜன்

கஜன்