அஞ்சலி

This entry is part 20 of 49 in the series 19991203_Issue

சி சு செல்லப்பா (29.9.1912 – 18.12.1998)


சி சு செல்லப்பாவின் மறைவு தன்னலத்தை முதன்மைப்படுத்தாமல் கொள்கையை முன்வைத்துப் போராடும் எழுத்தாளனுக்கு மற்றுமொரு நம்பிக்கைத்தூண் சரிந்துவிட்ட சங்கடத்தைத் தரக்கூடியது. கடைசிவரையிலும் எழுதிற்று அவர் கை. அந்தவகையில் அது நிறைவுகூடிய வாழ்க்கை. பரிசு, பணம், புகழ் ஆகியவற்றைக் கண்டு மிரள கடைசிவரையிலும் மறுத்த படைப்பாளி அவர். விமர்சனம், மறுபார்வை, விழிப்பு நிலை அளிக்கும் தார்மீகக்கோபம் இவையின்றி ஒரு படைப்பாளி இல்லை.

செல்லப்பா பிறந்தது மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு. சொந்த ஊர் சின்னமனூர்.

சிறுகதை, நாவல், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் செல்லப்பா உழைத்திருக்கிறார். மொழிப்பற்றும், தேசப்பற்றும் கொண்டவர். தியாகங்களை ஏற்றவர். அசெளகரியங்களுக்கு அஞ்சாதவர். மதுரைக் கல்லூரியில் படிக்கும்போதே காந்திய இயக்கத்தில் பங்கு கொண்டார். 1942 தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார்.

சந்திரோதயம், தினமணி இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். அவரது முதன்மையான சாதனை எழுத்து இதழ்தான். மிக மோசமான பொருளாதார நெருக்கடியைப்பொருட்படுத்தாமல் அந்த இதழைப் பத்தாண்டுகளுக்கு மேல் கொண்டுவந்தார். இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இது ஒரு திருப்பு முனை. எழுத்து இதழ்மூலம் புதுக்கவிதை உறுதிப்பட்டது. புகைப்படம் எடுப்பதில் செல்லப்பாவுக்கு தனி ஈடுபாடு உண்டு.

சிறுகதை எழுத்தாளராக செல்லப்பாவின் சாதனை பொருட்படுத்தத்தக்கது. அமெரிக்கச் சிறுகதையின் தொழில்திறனால் பாதிக்கப்பட்டவர் அவர். உருவச்சிறப்பு மிகுந்த லட்சியங்களை நோக்கியோ அல்லது லட்சியங்களின் சரிவை நோக்கியோ நகரும் கதைகள் அவருடையவை. வாழ்விலும் இலக்கியத்திலும் அவர் இலக்கணத்தின்மீது அழுத்தமான நம்பிக்கை கொண்டவர். ஒழுக்கம், உண்மை, எளிமை ஆகியவை அவருக்கு முக்கியமானவை.

சேமிப்பில் நம்பிக்கை இல்லாத அவருக்கு சிக்கனத்தில் மிகுந்த நம்பிக்கை. இந்த குணங்களை அவரது படைப்புக்களும் பிரதிபலிக்கின்றன. இலக்கணத்தில் அழுத்தம் கொண்டிருந்த அவர்தான் கவிதையை இலக்கணத்திலிருந்து விடுவிக்கவும் முயன்றார். புதுக்கவிதைக்கு இலக்கணம் வகுக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. காலப்போக்கில் புதுக்கவிதை, எழுத்து இதழைத்தாண்டி, சரமாரியாக விரிவுகொள்ளத் தொடங்கியபோது அதை அவரால் கட்டிபோட முடியாமல் ஆயிற்று.

விமர்சகராக அவர் உருவாக்கிய கருத்துக்கள் பிரிட்டிஷ் விமர்சன மரபின் பாதிப்பைப் பெற்றவை. தமிழில் விமர்சன மரபைத் தோற்றுவிக்க முயன்ற புலவர்களும் இந்த மரபில்தான் நம்பிக்கை வைத்தார்கள். அவர்கள் தாங்கள் உருவாக்கிய அளவுகோலைப் பண்டைய இலக்கியத்தைப் பார்க்க எடுத்துச் சென்றபோது செல்லப்பா ஏறத்தாழ அதே அளவுகோலைப் புதுமை இலக்கியத்துக்கு கொண்டுவந்தார். இந்த அளவில் அவரை ஒரு நவீனப் புலவர் என்று அழைக்கலாம்.

அவருடைய வாடிவாசல் குறுநாவல் மிகச்சிறப்பாக உருவாகியிருக்கிறது. பிற நாவல் முயற்சிகள்:ஜீவனாம்சம், சுதந்திரத்தாகம் ஆகியவை. பாரதிக்குப்பின் கவிஞர் என்றால் அவருக்கு ந.பிச்சமூர்த்தி, சிறுகதை எழுத்தாளர் என்றால் பி.எஸ். ராமைய்யா. இவர்களை உறுதிப்படுத்த கடுமையான உழைப்பை மேற்கொண்டார்.

எழுத்து இதழுக்குப் பின்வந்த சிறு பத்திரிக்கை இயக்கத்தை செல்லப்பா கண்டு கொள்ளவில்லை.

காலச்சுவடு

சி சு செல்லப்பாவின் கடைசி மூன்று ஆண்டுகள்

இலக்கியவாதிகள் தங்கள் இலக்கியப் பயணத்தில் திடார் திடாரென அரங்கத்துக்கு வருவதும், உறக்கத்தில் ஆழ்வதும் புதிய விஷயமல்ல. ஆனால் செல்லப்பா தன்னுடைய கடைசி 3 ஆண்டுகளில் (1995-1998) காட்டிய வேகமும் வெளிப்படுத்திய சக்தியும் ஆச்சரியப்படக்கூடியவை. இந்த நாட்களில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு கையெழுத்து வடிவில் நைந்து போயிருந்த அவருடைய என் சிறுகதை பாணி (250 பக்கம்) சுதந்திரத்தாகம் (1800 பக்கம்) ராமையாவின் கதைப்பாணி (368 பக்கம்) ஆகிய பழையப்பிரதிகள் புத்தக வடிவம் பெற்றன. இவையெல்லாவற்றையும் அவரே புரூப் பார்த்து சரி செய்திருக்கிறார். சுதந்திரத்தாகத்தின் பல பக்கங்களை மீண்டும் திருத்தி எழுதியிருக்கிறார். தூக்கம் வராதபோது இரவு ஒரு மணிக்குக்கூட எழுந்து புரூப்களைத் திருத்தியிருக்கிறார். அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்காத அச்சகங்களை உறவு முறியும் அளவுக்குக் கடுமையாக சாடியிருக்கிறார். புத்தகங்கள் விஷயத்தில் அவர் யாரிடமும் தயவு காட்டியதில்லை. தான் படித்த புத்தகங்கள் குறித்தும், பழகிய மனிதர்கள் குறித்தும் அவருடைய நினைவுகள் மிகமிகத் துல்லியமானவை.செய்யுளியல் என்கிற கவிதையில் உபயோகப்படுகிற பல குறியீட்டு வார்த்தைகளின் விளக்கமாக ஒரு புதிய அகராதியை கிட்டத்தட்ட 10 நாட்களில் எழுதி முடித்தார். இலக்கிய விமர்சனம் அதன் சரியான பரிமாணத்தில் இன்று செயல்படவில்லை என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக நம் விமர்சனப்பாதை என்ற் நீண்ட கட்டுரையை (விருட்சம் 36) சமீபத்தில் எழுதினார்.

என் சிறுகதைப்பாணியிலிருந்து துவங்கி புத்தகங்கள் அச்சாக்கம் பெறுவதும் அடுத்த புத்தகத்தைப் பற்றி சிந்திப்பதுமாகவே அவர் இயக்கம் கொண்டிருந்தார். அதுவே அவருடைய வாழ்வை நீட்டித்தது. பலமுறை அவரை மரணம் நெருங்கி நெருங்கி விலகியபோது புத்தகம் பதிப்பாவதைப் பற்றிய செய்தி அவரை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கும். அவருடைய சுதந்திரத்தாகம் நாவல் நூலகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்தப் பணத்தில் அவருடைய செய்யுளியல், எழுத்துக்களம், விமர்சனத்தேட்டம், தமிழ்ப்படைப்பாளிகளின் விமர்சனங்களுக்கு பதில்கள் ஆகிய பிரதிகளை பதிப்பிக்கத் திட்டமிட்டிருந்தோம். சாதாரண நாட்களில் நூலக ஆர்டர்களை அவர் நம்பியவர் அல்ல. தானே புத்தகங்களை சுமந்துகொண்டு கால்நடையாக அலைந்தவர்தான். ஆனால் இயலாத சூழலில், சுதந்திரத்தாகம் நாவல் நூலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படாமல் சிறிய வீட்டில் வீடு முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருந்த காட்சி செல்லப்பாவுக்கு பெரிய மனத்தளர்ச்சியை உண்டாக்கியது. மரணத்திலிருந்து மீள அவருக்கு வழி இல்லாது போயிற்று. உண்மையான இலக்கியவாதிகளை அடையாளம் கண்டு கொள்ளத்தெரியாமல் தமிழ்வாழ்க என்று முழங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கம் நம்முடையது. புத்தகங்களின் மதிப்பு தெரியாத ஆட்கள் நூலகங்களுக்குப் பொறுப்பாளர்களாக இருப்பதும் இங்கேதான் இயலும்.

செல்லப்பா எழுத்து இயங்கிய காலத்திலிருந்து வெளியே வரவே இல்லை. ஆனால் அதுவே அவருக்குப் போதுமானதாக இருந்தது. அவரை இந்தக் காலத்துக்குள் இழுக்க முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் அது தேவையற்றது போலும் தோன்றியது. இனி அந்தக் காலக் குழப்பத்துக்கு இடமில்லை. செல்லப்பா நீண்ட தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாகி விட்டார். நிறைவான இலக்கிய வாழ்க்கை அவருடையது.

– வெளி ரெங்கராஜன் – புகைப்படங்கள் :ஸ்நேகிதன்

சி சு செல்லப்பா எழுதிய நூல்கள்

நாவல்

வாடிவாசல்

ஜீவனாம்சம்

சுதந்திரத்தாகம்

நாடகம்

முறைப்பெண்
 

குறுங்காவியம்

நீ இன்று இருந்தால்
 

சிறுகதை

சரஸாவின் பொம்மை

மணல்வீடு

செல்லப்பாவின் சிறுகதைகள்(ஏழு தொகுதிகள்)
 

விமர்சனம்

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

படைப்பியல்

ஊதுவத்திப் புல்

மாயத்தச்சன்

என் சிறுகதைப்பாணி

பி, எஸ். ராமையா சிறுகதைப்பாணி

மணிக்கொடி முதல்வர்கள்

(முழுமையான பட்டியல் அல்ல)

**

(காலச்சுவடு மார்ச் 99)

 

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்திராவிட இயக்கங்களின் நாடகங்கள் >>

Scroll to Top