‘நகுலன் ‘
இலக்கியத்தைப் பற்றி என் அணுகல்முறை பற்றி ஓரிரு தகவல்கள். நான் வேறு இடங்களில் சொல்லியிருப்பது போல எந்த கலைப்படைப்பிற்கும் விளைநிலம் அனுபவமே. அதன் தளங்களும் நுணுக்கங்களும் ஆழங்களும் விரிந்துகொண்டே செல்பவை. இதை அறிய ஒரு சிருஷ்டிபரமான உள்ளத்தை நாடுகிறோம். இதனால்தான் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்ற ஒரு பார்வை ஏற்பட்டிருக்க வேண்டும். பல கலைஞர்கள். பல பார்வைகள்.
சிறுகதை என்ற வடிவத்தைப் பற்றி நான் அறிந்த வரை அதில் ஆரம்பமும் முடிவும் சிறப்பாக அமைந்திருக்கவேண்டும். ஒரு மையம் இருக்கவேண்டும். மிகவும் இறுக்கமான ஒரு கட்டுக்கோப்பு உடையதாக இருக்கவேண்டும். அதனால்தான் அதில் ‘ஒரு சிறு ‘ என்பது ‘ஒரு பெரு ‘ என்று அர்த்தப்படுகிறது. இங்கு கூறப்பட்ட எல்லா விதிகளையும் தாங்காமலேயே ஒரு சிறுகதை எழுதப்பட்டிருக்கலாம்; எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சிறுகதையில் நடை முக்கியம். அதுவும் கட்டுக்க்கோப்பின் ஒரு அம்சமாக இருக்கிறது.
அசோகமித்திரனின் ‘நம்பிக்கை ‘ என்ற சிறுகதையைப் பார்ப்போம்(வாழ்விலே ஒரு முறை தொகுப்பு). இரு பாத்திரங்கள். ஒரு தையல்காரனும் அவனிடம் ஒரு சட்டையை தைக்கக் கொடுக்கவருபவரும் (இவர்தான் கதையைச் சொல்கிறார்).பிறகு அவர் மகன். (இவன் இருப்பவன். இறந்து போனவன் இவனுக்கு மூத்தவன்) ஒரு சைதன்ய பிரபு என்று கூறப்படும் சித்த புருஷர் படமாக தொங்குகிறார். கதையில் குறிப்பிடப்படும் சம்பவமும் முக்கியமானது. அதைச் சொல்பவர் அந்த தையல்காரர். அவருக்கு சித்தபுருஷர் மீது அவ்வளவு சிறந்த அபிப்பிராயம் இல்லை என்று குறிப்பிடுகிறார். ஏன் சில ஆண்டுகளுக்கு முன் அவர் மகன் கடும் நோயினால் சாகக்கிடக்கும் தருணத்தில் அவன் பிழைப்பானா என்று அவரைக் கேட்கப்போனபோது அந்த சித்த புருஷர் ஒன்றும் சொல்லாமல் அவருக்கு ஒரு லட்சுமி விக்கிரகத்தை கொடுக்கிறார். பையன் சாகிறான். அந்த தையல்காரர் பிறகு ஒரு மந்திரவாதியிடம் செல்கிறார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஆனாலும் அவர் அந்த சித்தபுருஷர் படத்தை வழிபடுகிறார். ஏன் ? இந்தச் சிறுகதையின் கதைத்தளம் இப்படிச் செல்கிறது.
இந்தக் கதையில் சில உத்திகள் கையாளப்படுகின்றன. நடை மிகவும் எளியது. அதே சமயம் மிக நுட்பமானதும் கூடு. முதலில் கதை ஆசிரியரால் சொல்லப்படவில்லை. அந்த தையல்காரர் பேச்சில்தான் நிகழ்கிறது. இங்கு மூன்று அல்லது நான்கு பாத்திரங்கள். அந்தச் சித்தபுருஷர் தரும் லட்சுமி விக்கிரகம். அது ஒரு உள் வியாபகமான படிமமா ? இல்லை ஒரு தகவல் மட்டும் தானா ? தையல்காரர் வாழ்க்கையில் வெற்றிக்குக் காரணம் அவருடைய நாணயமும் தொழில்திறனும்தான், எனவே அவர் தன் மகன் மரணப்படுக்கையில் இருக்கும்போது நான்கு பெக் மது அருந்தி ஸ்கூட்டரில் வெகு வேகமாக ஒரு வித விபத்துமின்றி போகிறார். இந்த நம்பிக்கை பிராந்தியின் விளைவா தற்செயலா அல்லது அந்த சைதன்ய பிரபுவின் அருளா ? அந்தக் கதை சொல்லி அந்தப் படத்தை ஐந்து முறை பார்க்கிறார் ஏன் ? நம்பிக்கையா நம்பிக்கையின்மையா ? ‘நம்பிக்கை ‘ என்பது தலைப்பு. நம்பிக்கை! யார்மீது ? இதற்கு துல்லியமான விடை என்ன ?
ஐராவதம், மா அரங்கநாதன் கதை பற்றிக் கூறும்போது அதில் ஒரு புதிர்த்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். இக்கதையிலும் அதே போல ஒரு புதிர் உள்ளது. நம்பிக்கையின் விளைநிலம் என்ன ? மனிதன், கடவுள் அல்லது ? இந்த மாதிரி சொல்லாமலேயே சொல்வதில்தான் ஒரு சிறுகதையின் கலை ஒருமை உள்ளது. வாழ்க்கை என்ற புதிரை கலைத்து ஒவ்வொரு வாசகனும் தன் மனவார்ப்புக்கு ஏற்பப் பார்க்கையில் கதையின் தளம் வெவ்வேறு திசையில் நகர்கிறது. இவ்வாறு நமது மரபு சார்ந்த அணுகல்களைக் கலைத்து ஒவ்வொரு வாசகனும் தன் இயல்புக்கேற்ப வாசிக்கும்படி கதை செல்கிறது. அவருடைய இத்தன்மை மூலமே அசோகமித்திரன் சிறந்த கலைஞராக நமக்கு பிடிபடுகிறார். ஒரு சில தகவல்கள் உதாரணமாக. மனம் அதிக அளவு அவதிப்படும்போது உறக்கம் வருகிறது என்ற ஒரு கட்டம். கா. நா. சு. வின் ஒரு கதையிலும் இதற்கிணையான ஒரு கட்டம் உண்டு.
எந்த ஒரு கதை தன் தளங்களைத் தாங்கி அதையும் மீறிச் செல்கிறதோ அப்போதுதான் அது கலையாக மாறுகிறது. இக்கதை எனக்கு ‘செகாவ் ‘ எழுதிய ‘தி டார்லிங் ‘ என்ற கதை ஞாபகம் வருகிறது. இன்றைய மொழியியல் விமரிசன ரீதிகள் கலையை ஒரு பெயர்ச்சொல்லாக பார்க்காமல் வினைச்சொல்லாகவே பார்க்கின்றன. இந்த அம்சத்தையும் இக்கதையின் வாசிப்பைப்பற்றி பேசும்போது குறிப்பிடலாம்.
***
கனவு இதழ் 21 1993
***
திண்ணை நவம்பர் 14, 1999
***
Thinnai 1999 December 3
திண்ணை
|