அக்கினிப் பூக்கள் !

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

சி. ஜெயபாரதன், கனடா


படைப்போன் இல்லாது
படைப்பே கிடையாது !
முட்டையை முன்னே தேடு !
கோழியைப் பின்னே தேடு
ஞானத் தங்கமே !

ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம் !
நுனிப் புல் மேய்ந்து
வனத்தை அறிவதோ
ஞானத் தங்கமே ?

வந்த சண்டைக்கு நழுவு !
வராத சண்டைக்குத் தழுவு !
சண்டைகள் வந்து விட்டாலும்
சகோதரராய்க் கைகொடு
ஞானத் தங்கமே !

குருடனுக் குதவ செவிடன் !
செவிடனுக் குதவ நொண்டி !
நொண்டிக் குதவக் குருடன் !
மண்டுக் குதவ எவன்
ஞானத் தங்கமே ?

போர் வாள்களை நெளித்து
ஏர் முனையாய் ஆக்கு !
போர்கள் ஊரை உழுதால்
வேர்கள் எங்கே முளைக்கும்
ஞானத் தங்கமே ?

தூரத்துப் பச்சை
கண்ணுக்கு இச்சை !
கிட்டப் பார்வை குள்ளனுக்கு
எட்ட ஏணி இருக்குதா
ஞானத் தங்கமே ?

காணாத நாணயம் தேடக்
கைவிளக்கில் திரியில்லை !
திரியிடப் போய் எண்ணை சிந்தியது !
வழுக்கி விழாது தூக்க வருவாயா
ஞானத் தங்கமே ?

உன்னைப் பற்றி நான் அறியேன் !
என்னைப் பற்றி நீ அறியாய் !
இல்லறக் கூரையில் இருவரும்
உல்லாசத் தீ வைப்போம்
ஞானத் தங்கமே !

ஜன்னல் உள்ள இடத்தில்
கண்ணாடியை வை !
கண்ணாடி இருக்கும் இடத்தில்
ஜன்னலை வை
ஞானத் தங்கமே !

பாதிப்பேர் மூடர் என்றேன்
பளாரென அறை விழுந்தது அவ்வூரில் !
மீதிப்பேர் அறிஞர் என்றேன் !
மேல் விழுந்தது மலர் மாலை
ஞானத் தங்கமே !


S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 21, 2007

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா