அகத்தின் அழகு

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

ரம்யா நாகேஸ்வரன்


“அமரர் கல்கி நினைவுச் சிறுகதை 2004” போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை

“நாளைக்கு பெங்களூர் போகணும் ரேகா! வர நாலு நாள் ஆகும்னு நினைக்கறேன்” என்று தன் மனைவியிடம் சொன்னான் கிஷோர்.

“என்ன கிஷோர் ? நாளைக்கு ராத்திரி லோகு வரானே ? மறந்துபோயிடுத்தா ? மூணு நாள் இங்கே தானே தங்கப் போறான்!” என்றாள் ரேகா.

ரேகாவின் அத்தை மகன் லோகு என்ற லோகேஷ். பல குடும்பங்களில் நடப்பது போல் ரேகாவிற்கும் லோகுவிற்கும் திருமணம் செய்யலாம் என்ற எண்ணம் இரு குடும்பங்களிலும் லேசாக இருந்தது. அது அரசல் புரசலாக வெளிப்படவும் செய்தது. ரேகா காலேஜில் படித்துக் கொண்டிருந்த பொழுது லோகேஷ் எம். பி. ஏ படிப்பை முடித்து விட்டு ரேகாவிற்காக சென்னையில் வேலை தேடிக் கொண்டான். ஓரு புகழ் பெற்ற விளம்பர நிறுவனத்தில் நல்ல வேலைக் கிடைத்தது. இயல்பாகவே கலகலப்பாகப் பழகுவான். ஏதாவது ஜோக்கடித்துக் கொண்டே இருப்பான். நேர்த்தியாகவும் சற்று ஆடம்பரமாகவும் உடை உடுத்துவான். ஒரு நாள் வீட்டில் தங்கி விட்டுப் போனால் இரண்டு நாட்கள் அவனுடைய டியோடெரெண்டின் வாசனை அந்த அறையைச் சுற்றும். ரேகாவின் மனம் அவனைச் சுற்றியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்! இருவர் வீட்டிலும் சற்றுப் பழமைவாதிகள் இருந்ததாலும், அதிகாரப்பூர்வமாக சம்மதம் கிடைக்காததாலும் சந்திப்புக்களும் பழக்கமும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இருந்தன.

ரேகாவின் படிப்பு முடிந்ததும் ஜாதகத்தை கையில் எடுத்த பெரியவர்கள் முதலில் லோகுவின் ஜாதகத்தோடு தான் ஒப்பிட்டார்கள். துளிக்கூட சேரவில்லை! தாம்பத்தியம் நீடிப்பது மிகவும் கஷ்டம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் ஜோசியர். மனம் உடைந்துப் போனான் லோகு. அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள் ரேகா. “ஜோசியத்தை நம்பாம திருமணம் செஞ்சுப்போம்னு தீவிரமா இருந்தீங்கன்னா நாங்க குறுக்க நிக்கலை. ஆனால் நாளைக்கு ஒரு கஷ்டம்னா எங்க கிட்டே வந்து கண்ணைக் கசக்காதே” என்று திட்ட வட்டமாக சொல்லிவிட்டார் ரேகாவின் அப்பா. இருவருக்கும் குடும்ப ஜோசியரிடம் நம்பிக்கை இருந்ததால் இந்த விஷப் பரீட்சையில் இறங்க அவர்களிடம் தைரியம் இல்லை. சில மாதங்களில் யதார்த்தத்தை ஒப்புக் கொண்டுவிட்டனர் இருவரும். ரேகாவிற்கு கிஷோருடன் திருமணம் நடந்த இரண்டு மாதத்திற்குள் லோகுவிற்கு அனிதாவுடன் திருமணம் நடந்தது. உடனே லோகுவிற்கு மும்பைக்கு மாற்றமும் வந்தது.

கிஷோர் எந்தவிதத்திலும் லோகுவிற்கு குறைந்தவனில்லை. ஆனால் சுபாவத்தில் நேர் எதிர்! அமைதியானவன், ஆழமானவன். சுலபத்தில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக விஷயங்களை அலசக்கூடியவன். தன் காதலைப் பற்றி யாராவது உறவினர் மூலம் கேள்விப்படுவதை விட நாமே சொல்லிவிடுவது தான் நியாயம் என்று நினைத்த ரேகா, கல்யாணத்திற்கு முன்பாகவே கிஷோரிடம் தன் தோற்றுவிட்ட காதல் கதையை சொல்லிவிட்டாள்.

“ஸாரி டு ஹியர் தட் ரேகா. நீ என்னை கல்யாணம் செஞ்சுண்டா எந்த விதமான ஏமாற்றத்தையோ, வருத்தத்தையோ சந்திக்காம இருக்க என்னாலான எல்லா முயற்ச்சிகளையும் பண்றேன்,” என்று பண்போடு பதிலளித்தான். அதற்கு மேல் துருவித் துருவி ஒன்றும் கேட்கவும் இல்லை. லோகுவின் கல்யாணத்திலும் உற்சாகமாக கலந்து கொண்டான். இதுவே ரேகாவிற்கு அவன் மேல் ஒரு மரியாதை கலந்த காதல் உருவாக அஸ்திவாரமாக இருந்தது.

இப்பொழுது இரண்டு வருடம் கழித்து லோகு வரப்போகிறான். ஆனால், கிஷோர் ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை!

“நான் இல்லேன்னா என்ன ரேகா ? உங்க ரெண்டு பேருக்கும் தான் பேச நிறைய விஷயம் இருக்குமே! நான் அடுத்த தடவை மீட் பண்ணா போச்சு!” என்றான் கிஷோர்.

கிஷோரை கொஞ்சம் சீண்டிப் பார்க்க நினைத்தாள் ரேகா, அந்த வலையில் தானே விழப் போவது தெரியாமல். “என்ன கிஷோர் ? லோகு யாருன்னு மறந்து போயிடுத்தா ? என் முன்னால் காதலனோட நான் மூணு தான் தனியா இருக்கிறதுலே ஆட்சேபம் ஒண்ணும் இல்லியா ?” என்றாள் குறும்பாக சிரித்தபடி.

“லோகு யாருன்னு நன்னா ஞாபகம் இருக்கு ரேகா. ஒரு விதத்துலே நான் ஊர்லே இல்லாதது நல்லது தான்னு நினைக்கறேன்” என்று சொல்லி நிறுத்தினான் கிஷோர்.

ரேகாவின் முகம் சிவக்க ஆரம்பித்தது. “நான் சும்மா தமாஷ் பண்ணா நீ என்ன உளர்றே ?” என்று சீறினாள்.

“கோபப்படாதே ரேகா. சொல்ல வந்ததை முழுக்க கேளு. இந்த சந்திப்பு உன் ஆழ் மனசுலே இருக்கிற சில உணர்ச்சிகளை நீ நேருக்கு நேர் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு” என்றான்.

குழம்பிய முகத்தோடு பார்த்தவள், “புரியலை” என்றாள்.

“நீ என்னை கணவனா பரிபூர்ணமா ஏத்துண்டாலும் லோகு மேலே ஒரு சின்ன கவர்ச்சி பாக்கி இருக்கு இல்லையா ?” அவள் கண்களை நேராக பார்த்தபடி கேட்டான் கிஷோர்.

சடாரேன்று தலையை குனிந்து கொண்டாள் ரேகா. எல்லா விஷயங்களையும் ஆழமாக புரிந்து கொள்ளும் தன் கணவனின் இந்தக் குணம் அவளுக்கு பரிச்சியம் தான். ஆனால் தான் கையும் களவுமாக பிடிபடுவோம் என்று அவள் நினைக்கவில்லை. அவனை நேருக்கு நேர் பார்க்க கூச்சமாக இருந்தது. தன் உணர்வுகளை மறுத்து கிஷோரை ஏமாற்ற அவள் விரும்பவில்லை.

“ஆமாம் கிஷோர். நான் அதை மறைக்க விரும்பலை. ஆனால் அதை நினைச்சு வெட்கப்படறேன். உன் முன்னாலே கூனிக் குறுகி ஒப்புக்கறேன். என்னோட உள் மனசுலே இருக்கிறதே எப்படி கண்டுபிடிச்சே கிஷோர் ?” பாதி நேரம் தரையை பார்த்தபடி பேசி முடித்தாள் ரேகா.

“ரொம்ப சுலபம். சாதாரணமாவே ஒருத்தரை புரிஞ்சுக்க எனக்கு அதிக நேரம் தேவைப் படாது. அதுவும் தவிர உன் கண்கள் எவ்வளவு எக்ஸ்ப்ரஸிவ்னு நான் பல தடவை வர்ணிச்சுருக்கேன். அதை வைச்சே உன் உணர்ச்சிகளை நான் கண்டுபிடிச்சுடுவேன். லோகுவை பத்தி பேசும் பொழுதேல்லாம் உன் கண்கள்லே ஒரு பிரகாசம். அவன் கல்யாணம் நடந்த பொழுது அவன் மனைவி உன்னை விட பெரிசா அழகுலேயோ படிப்பிலேயோ உசத்தி ஜல்லைன்னு நீயா முடிவு பண்ணி சந்தோஷப்பட்டுண்டே. உன் அம்மாவோட பேசும் பொழுதும் சரி, மும்பைலே இருக்கிற உங்க ரெண்டு பேரோட இன்னோரு கஸினோட பேசும் பொழுதும் சரி லோகுவை பத்தி விசாரிக்காம இருக்க மாட்டே. என்னை ஏமாத்தறதா நினைச்சு குரலை மட்டும் அசுவாரஸ்யமா மாத்திப்பே. என்னோட வேலையிலே எனக்கு கிடைக்கிற வளர்ச்சியையும், நம்ம வாழ்க்கை முறையிலே ஏற்ப்படற வளர்ச்சியையும் லோகுவோட வாழ் நிலையோட ஒப்பிட இந்த சம்பாஷணைகள் உனக்கு உதவியா இருந்ததுன்னு எனக்கு தெரியும். இத்தனை க்ளூஸ் போறாதா ரேகா உனக்கு இன்னும் கொஞ்சம் கவர்ச்சி பாக்கி இருக்குனு முடிவு பண்ண ?” என்ற கிஷோர் தொடர்ந்தான், “இதிலே வெட்கப்படவோ, வருத்தப்படவோ ஒண்ணுமே இல்லை ரேகா. ஒரு நல்ல ஸ்வீட் சாப்பிட்டா அதோட சுவை கொஞ்ச நேரம் நாக்குலே தங்கறதில்லையா ? அதே மாதிரி உன்னை உண்மையா நேசிச்ச ஒருவனோட அன்பு உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.”

“ஒரு பக்கம் நான் இவ்வளவு ட்ரான்ஸ்பெரண்டாவா இருந்திருக்கேன்னு நினைச்சு அவமானமா இருக்கு. இன்னோரு பக்கம் என் கணவன் என்னை இவ்வளவு தெளிவா புரிஞ்சு வைச்சுருக்கிறதை நினைச்சு பெருமையா இருக்கு. உனக்கு கோவமோ, பொறாமையோ வரலையா ?”

“இரண்டுமே ஆக்கப்பூர்வமான உணர்ச்சிகள் இல்லையே! உன் உணர்ச்சிகள் நிஜம். அதை முதல்லே நாம ஒப்புக்கணும். அக்ஸெப்டண்ஸ் தான் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கிற முயற்ச்சியின் முதல் படி. அடுத்தது பிரச்சனையை தைரியமா எதிர் கொள்ளணும். அதைத் தான் நாம இப்ப பண்ணறோம். நான் கோபபட்டிருந்தா நீ உன் பீலிங்ஸை அமுக்கி மனசோட ஒரு மூலைக்கு தள்ளியிருப்பே. ஆனா அது இருந்துகிட்டு தான் இருக்கும். அது சரியான தீர்வில்லையே ? முதல்லே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா தீவிரமா யோசிச்சு பார்த்தப்போ நீ என் மேல மனப்பூர்வமா அன்பு செலுத்தறதுலே எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. லோகு மாதிரி நான் வெளித் தோற்றத்துலே கொஞ்சம் ஆடம்பரமா இல்லைங்கறது தான் உன்னோட குறைன்னு எனக்கு புரிஞ்சுது. இதை நீ மறைமுகமா எனக்கு பல தடவை உணர்த்தியிருக்கே. உனக்காக நான் ஓரளவு மாறினாலும் லோகுவை காபி அடிக்கறதுலே எனக்கு உடன்பாடு இல்லை. வெளித் தோற்றத்துலே மயங்கறது மனித இயல்பு ரேகா. எவ்வளவோ பேரு மாதவன் போட்டோவையும், சிம்ரன் போஸ்டரையும் வீட்லே வைச்சுக்கறது இல்லையா ? அதுக்காக எல்லா கணவனும் மாதவனாக முடியுமா இல்லை மனைவி தான் ஆல் தோட்டா பூபதி டான்ஸ் ஆட முடியுமா ?” என்று சிரித்தான் கிஷோர்.

ரேகாவால் சிரிக்க முடியவில்லை. கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. “என் எதிர்பார்ப்புகளை உன் மேலே திணிக்க முயற்சி செஞ்சு என்னை அறியாம உன்னை காயப்படுத்தியிருக்கேன் இல்லை ?” என்றாள்.

“சீ! பைத்தியம். எதுக்கு அழறே ? எதிர்பார்க்கறதுலே என்ன தப்பு ? என்ன எதிர்ப்பார்க்கிறோம்ங்கறது தான் முக்கியம். இப்போ நாம ஒரு நண்பர் வீட்டுக்கு சாப்பிட போறோம். அவர் மனைவி அருமையா சமைச்சுருக்காங்க. ரேகா இவ்வளவு நன்னா சமைச்சா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்க்கறது தப்பில்லை. ஆனால் இவங்க எனக்கு மனைவியா இருந்திருந்தா எப்படி இருக்கும்னு நான் நினைச்சா, அது நம்ம மண வாழ்க்கையோட தோல்வி! அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்க்கிற விஷயம்.”

“எனக்கு புரியறது கிஷோர். நான் இப்ப என்ன செய்யணும் ?”

“நாளைக்கு லோகுவைப் பார்க்கும் பொழுது தைரியமா உன் உணர்ச்சிகளை முழுமையா சந்திச்சு, இந்தக் கவர்ச்சி வாழ் நாள் முழுக்க நீடிக்க போறதா இல்லை நீ இதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு ஆக்கப்பூர்வமான உணர்ச்சியா மாத்திக்க போறியான்னு முடிவு பண்ணிக்க. குட் லக்!” என்று சொல்லிவிட்டு ஆபிஸ் போய்விட்டான் கிஷோர்.

அடுத்த நாள் மாலை வாசல் மணி ஒலித்தது. லோகுவோடு உள்ளே நுழைந்தாள் அனிதா. சம்பிரதாய பேச்சுக்களும் பரஸ்பர விசாரிப்புகளும் முடிந்தன. அனிதா பாத்ரூமில் நுழைந்ததும், “நீ மட்டும் தானே office விஷயமா வரதா இருந்தே….” என்றாள் ரேகா.

“நேத்திக்கு சாயங்காலம் போன்லே பேசும் பொழுது நீ கிஷோர் ஊருலே இல்லைன்னு சொன்னே இல்லையா ? அனிதாவுக்கு நம்ம காதல் விஷயத்தை சொல்லியிருக்கேன். அதான், அடம் பிடிச்சு கடைசி நேரத்துலே என் கூட வந்துட்டா. நான் அவளை உண்மையா நேசிக்கறேன் ரேகா இருந்தாலும் எப்பப் பார்த்தாலும் சந்தேகம்…” என்று சோகமாக இழுத்தான் லோகு. அவன் முகத்தில் இருக்கும் சந்தோஷமும் உற்சாகமும் வடிந்து ஆயாசமும் அயர்ச்சியும் தான் தெரிந்தது.

லோகுவைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. மனதில் ஒரு மூலையில் இருந்த உணர்ச்சிகளுக்கு விடுதலை அளித்து மனத்தை விசாலப் படுத்திய கிஷோர் எங்கே ? இல்லாததை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு மனத்தை குறுகலாக்கி கொண்டிருக்கும் அனிதா எங்கே ?

“கவலைப்படாதே லோகு. இன்னும் ஒரு ரெண்டு நாள் கூட தங்கிட்டுப் போ. கிஷோர் வந்ததும் நானும் அவரும் அனிதாவோட பக்குவமா பேசி அவ மனசை மாத்த எல்லா முயற்சியும் செய்யறோம். உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்,” என்று ஆறுதலாக சொல்லிவிட்டு தெளிந்த மனத்துடன் கிஷோரின் வருகையை ஆவலுடன் எதிர் நோக்கினாள் ரேகா.

—-

ramyanags@gmail.com

“அமரர் கல்கி நினைவுச் சிறுகதை 2004” போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை

Series Navigation