ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

ஆசாரகீனன்


ஃபூகோவின் பார்வை முதலாளியத்தின் ஒரு கட்டத்தின் அறிவியல் பார்வை என்று சொல்லும் போது, அது அறிவியல்தான் என்று சொல்ல முயலவில்லை. ஃபூகோ தம் ஆய்வு முறைகளை அறிவியலாக ஆக்க முயன்றார் என்றும் சொல்லவில்லை. இங்கு ‘அறிவியல் பார்வை ‘ என்பதே அறிவியல் முறைகளைப் பின்பற்றும் சமூக ஆய்வுப் பார்வை என்பது கருத்து. இது குறித்து அதிகம் எழுதி இக் கட்டுரையின் மையப் பாதையை விட்டு விலக முயலவில்லை. ஆனால் சில அடிப்படைகளை இங்கு காண வேண்டி இருக்கிறது.

இங்கு கவனிக்க வேண்டியது – தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தன்னிலைக்கு வருவதற்குப் பெரும் பாடுபடும் பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் அறிவியல், பொறியியல், மருத்துவம், பகுத்தறிவு போன்ற பல பெரிய சொற்கள், மறு நிர்மாணத்தின் துவக்க கட்டத்தில் மக்கள் மீது தொடர்ந்து பொழியப்படும். ஏற்கனவே ஒரு நூறாண்டு போலக் காலனியாளர்களின் கூலிகளாக வேலை செய்த சில கூட்டங்களும், உள் நாட்டு முதலாளிகளில் ஒரு சாராரும், மதப் (கிருஸ்தவ) பள்ளிகளில் பயிற்சி பெற்று, உள் நாட்டுப் பண்பாட்டை முற்றிலும் குப்பை என்று கருதக் கற்றுக் கொள்ளும் ‘படித்த ‘ மக்களும், ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, டச்சு இத்தியாதி ஐரோப்பிய மொழிகளில் தம் தாய் மொழிகளை விட அதிகப் பயிற்சி பெற்று, அந்த இலக்கியங்களையே தேடிப் படித்து, தம்மை அன்றாடம் சூழும் பண்பாட்டை மேலைக் கண் கொண்டு பார்ப்பதை இயல்பாக்கிக் கொண்டவரும், மேலும் மார்க்சியத்தால் மூளை சலவை செய்யப்பட்டு உலக வரலாற்றையே துல்லியமாகப் புரிந்து கொள்ளவும், எதிர்கால வரலாற்றை வழி நடத்தவும் வழி செய்யும், தவறவே தவறாத பெரும் சக்தியுள்ள கருவியைத் தாம் கைப்பற்றி விட்டதாகப் பிரமையில் ஆழ்ந்த ஒரு கூட்டமும், இவர்களின் கலக்கலான கூட்டத்தின் கையில் அகப்பட்ட ஊடகங்களும் கை கோர்த்துக் கொண்டு – தமக்குள் ஏகப்பட்ட முரண்கள் இருந்தாலும் – இந்த புது சத்தியத்தைக் கடைபிடிப்பதில், பரப்புவதில் தீவிரக் கவனம் செலுத்துவர்.

அதாவது அறிவியல், …. இத்தியாதி – மேலே சொன்ன பட்டியலைக் காண்க – வழியைக் கடைப் பிடித்தால், தம் நாடும் மேலை நாடுகளுக்கு இணையாக உயரும், இல்லையேல் கடும் வறுமையில் ஆழ்ந்து பின் தங்கிப் போய் காட்டு மிராண்டிகளாக உலவ வேண்டியது தான் என்றெல்லாம் தொடர்ந்து தம்பட்டமடிப்பர்.

இதை உண்மை என நம்பி இந்த கானல் நீரைத் துரத்தும் பல முன்னாள் காலனிகளை உலகெங்கும் காணலாம். இதைக் கானல் நீர் என்று ஏன் சொல்கிறேன் என்பது இன்னொரு நீண்ட கட்டுரையாக விரிய வேண்டி இருக்கிறது. அறிவியல், பொறியியல், மருத்துவம், மக்கள் திரளுக்குக் கல்வி அறிவித்தல் போன்ற நவீனத்துவத்தின் மையக் கருத்தாக்கங்களையோ, அவை மக்களுக்குத் தேவை என்பதையோ முற்றிலும் மறுதலிக்கிறேன் என்று கருதத் தேவை இல்லை. ஆனால் அவைதான் ஒரே யதார்த்தம், ஒரே உண்மை, ஒரே எதிர்காலப் பாதை என்று ஆணித்தரமாக வாதிட்டு, முந்தைய பண்பாடுகளைத் தாழ்த்தி அல்லது அவற்றிற்கு எதிராகத் தொடர்ந்து இழி பிரசாரம் செய்து, மக்களைத் தமது நீண்டகால வரலாற்று அனுபவங்களின் வண்டலை, அதன் வளங்களை அடையவிடாமல் செய்து, அவற்றின் கசடுகளைத் தம் நாகரிகத்தின் கருதுகோள்கள் மூலம் விமர்சிப்பதை அறியாமல் செய்து, மக்களைத் தலை முறை தலை முறையாகத் தொடர்ந்து மேலை நாகரிகத்தின் தொலை தூரக் காலாட்படையாக மாற்றுவது என்னும் பிரும்மாண்டமான கட்டுமானப் பணியையே இக் கூட்டணி தொடர்ந்து செய்யும். ஓர் அரை நூற்றாண்டிற்குப் பிறகு தனது இலக்கியம், மொழி, மதிப்பீடுகள் ஆகியன ஏன் தேக்கமுற்றும், சாதாரண மக்களிடம் இருந்து பிரிந்து போய் தன்னளவில் வளர இயலாத சவலையாக இருப்பதும் ஏன் என்று பிரமித்து நிற்க நேரும். அப்போதும் எதையாவது உருப்படியாகக் கற்பாரா என்றால், அனேகமாக இராது. இதற்குள் ஒரு தலை முறை அறிவு ஜீவிகள் தமது முன்னாள் காலனியாளரின் மைய நாடுகளில் வேலை தேடிப் போய், உலக முதலாளியம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நெருக்கத்தில் சற்று மேலான பதவியில் அதாவது சிறு தானைத் தலைவர்களாகவே கூட உரு மாறி இருப்பர். இவர்களுக்குத் தாய் நாட்டில் பெரும் புகழும், மதிப்பும் இருக்குமாதலால் அவ்வப்போது நாடு திரும்பி உள் நாட்டில் அடுத்தடுத்த தலை முறைகளில் புதுக் கருத்தாக்கங்கள் வாழ்வனுபவத்தில் இருந்து துளிர்த்து வருவதை முளையிலேயே கருக்கடிக்கும் வீண் வேலையைச் செய்து போவர். இப்படித்தான் காலனி ஆதிக்கம் நெடு நாட்களுக்கு தன் வீச்சைத் தொடர்கிறது.

இவை எல்லாம் மொத்தமாகப் பல தலைமுறையினர் காலனியாதிக்கத்திலிருந்து விடுபடுவதற்குச் செய்த பெரு முயற்சிகளை எல்லாம் வீணடிக்கும். மீண்டும் மீண்டும் வளர்ச்சிக்கும், வளமைக்கும் மேலை நாடுகளின் கருத்துக் கருவூலங்களையே நாடும் தரித்திரர்களாக நம்மை ஆக்கி வைக்கும். இக் கருத்துகள் எல்லாம் பல விதங்களில் கீழ்க்கண்ட நீண்ட முன்னாள் காலனிகளின் எழுத்தாளர்கள் பட்டியலில் உள்ள பல எழுத்தாளர்களால் பல இடங்களில், பல நூல்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. பார்க்க:

http://www.scholars.nus.edu.sg/landow/post/misc/authors.html

சரிதான், இருக்கட்டும், இதற்கும் ஃபூகோவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். அறிவியல், பகுத்தறிவு என்பதெல்லாமே ஒரு வகை ஆளும் மனப்பான்மை கொண்ட கருத்தாக்கங்கள். அவை உண்மை என்பது தமது தனிச் சொத்து என்று தொடர்ந்து சாதிப்பதை, பெரும் மக்கள் கூட்டங்களை நம்ப வைத்து அதிகாரத்தைத் தம் கை வசம் எதிர்ப்பின்றிப் பற்றிக் கொள்வதைக் கண்டோமானால் எப்படி இந்த அதிகாரக் கைப்பற்றல் நடந்தது, எப்படி சாதாரண மக்கள் அரசர்களின் குரங்குப் பிடியில் இருந்து தப்ப மேற்கொண்ட முயற்சிகள் அவர்களை முதலில் மத குருமார்கள் + சரக்கு முதலாளிகள் + இயந்திர அதிபர்கள் + சட்ட வல்லுனர்கள் + காவல் துறையினர் + அரைக் குருட்டு எழுத்தர்கள் (அரசாங்க ஒட்டுண்ணிகள்) + ராணுவம் ஆகியோரின் பேரணியின் கைதிகளாக மாற்றின என்பது தெளிவாகத் தெரியும் என்று ஃபூகோ சொல்லிப் போகிறார். அவரது இந்தக் கருத்தாக்கத்தை இங்கு பயன்படுத்தி இருக்கிறேன் அவ்வளவுதான்.

உங்களுக்கென்று ஒரு பெரும் கருத்துப் பரப்பு, ஆளவோ, போட்டி போடவோ ஆட்களில்லாமல் தரிசாகக் கிடக்கிறதே அதை கையகப் படுத்துங்களேன்.

இதோ ஓர் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவிலிருந்துதான் வெளிவருகிறது. இதில் முற்போக்கு, பிற்போக்கு எல்லாப் போக்குகளும் எழுதுகிறார்கள். ஏதோ காரணத்தால் இந்தியப் பார்வையைத் தாமும் கைக்கொள்வோம் என்று பிடிவாதம் பிடிக்கும் மேலை நாட்டாரும் எழுதுகிறார்கள். அங்கு போய் எழுதி, படித்து, விவாதித்து ஏதும் செய்யலாமே ? அல்லது அது போன்ற வேலைகளைத் தமிழில் செய்யலாமே ?

http://www.samvadindia.com/evam/main.php ?evsue=2

ரிச்சர்ட் ப்ரெளன், இலிசபெத் மலோனுடன் சேர்ந்து எழுதிய கட்டுரை [கு1] ஒன்றில் அவர்கள் வாதிடுவது சரியாகப்படுகிறது. அவர்கள் சொல்வது –

அறிவியலுக்கும் அரசியலுக்கும் இடையே நிறைய பரிமாற்றங்கள், பரஸ்பரம் ஒட்டுக் கொடுத்தல் உண்டு. ஆனால் இரண்டும் ஒன்றே என்று நவீனக் கடப்பு வாதிகள் (Post modernist) பலர் வாதிடுவது வெறும் குழப்படி. அறிதிறனுக்கு பிடிபடுவதையும், சமூகத்தால் (சமூக வாழ்வின் ஓட்டங்களால் என்று படிக்கலாம்) தெரிவிக்கப்படுவதையும் இவர்கள் ஒன்றாகப் பார்க்கிறார்கள். மனிதரின் அகத் தெளிவுக்கான தேடலையும், புறத் தேவைகளுக்கான தேடலையும் ஒன்றாக்குகிறார்கள். அதாவது அறிவியல் செயல்களையும், அரசியல் செயல்களையும் ஒன்றெனக் கருதுகிறார்கள். இது வெறும் சொல்-பொருள் குழப்பத்தை மட்டுமல்ல, சமூக நடவடிக்கை அளவிலும் குழப்பம் விளைவிக்கிறது. அதாவது, சாதாரண மக்களை அறிவியல் என்பது அதிகாரத் தேட்டைதான், அடிப்படையில் அது ஒரு தந்திரம் என்று கூடக் கருத வைக்க முயல்கிறது.

ஆனால், அன்றாட வாழ்வில் அறிவியலின் விளை பொருட்களை எந்தக் குழப்பமும் இன்றி, அவை அறிவியலின் விளைவுகள் என்பதைத் தெளிவாகக் கருதாமலேயே மக்கள் பயன்படுத்தும்போது, அது அதிகார அரசியல் என்று அவர்கள் அப் பொருட்களில் இருந்து விலகி நிற்பதில்லை. வெகு சில நேரங்களிலேயே அவர்கள் இந்த விலகலை மேற்கொள்கிறார்கள். உப்பு சத்தியாக்கிரகம், கதர் நூற்பது, மேலை இயந்திர உற்பத்தி ஆடைகளை மறுப்பது போன்றன காலனிய வாழ்விலிருந்து உதாரணங்கள். சமீபத்தில் உயிரணு மாற்ற முறையில் விதைகளை மாற்றுவதை எதிர்ப்பதில் இந்திய விவசாயிகள் ஒரு கலப்படியான நிலையைக் காட்டுகிறார்கள். உணவுப் பொருட்களில் இப்படி மாற்றப்பட்ட விதைகளை எதிர்க்கக் கூடியவர்கள், பருத்தி போன்ற இதர உணவு அல்லாத விளைபொருட்களில் உயிரணு மாற்ற முறையை எதிர்க்கவில்லை. ஆனாலும் பருத்தியும் கால்நடைகளின் தீவனமாகப் பயன்படுவதன் மூலம் மக்களின் உடல்களுக்குள் நுழையவே செய்கிறது என்பதை அவர்கள் அதிகம் கருதவில்லை. ஆனால், சாதாரண மக்கள் அனுபவம் மூலம் எதை எதிர்ப்பது, எதை ஒப்புவது என்பதை அறிகிறார்கள் என்பதால் இதில் முன் பின் இயக்கம் இருக்கும். சில நேரம் பல ஆயிரம் மக்களின் வாழ்வை நொறுக்கிய பின்னேயே இந்த வகைத் தெளிவு கிட்டுகிறது என்பது அறிவியல் மாறுதல்களில் அரசியல் இருக்கும் என்பதைச் சுட்டுகிறது.

இந்தக் கட்டுரை ஆசிரியர்களின் கருத்தில் அறிவியல் என்பது இறுதியில் தீர்மானமாக அரசியலாகத் தான் சுருக்கப்படுவதை எதிர்த்து நின்று தன் இருப்பை உறுதி செய்வதில் வெற்றி பெறுகிறது.

அதே நேரம், அறிவியல் என்பதையே அறிவுத் தேட்டையாக மட்டும் பார்க்காமல் ஒரு சமூக நடத்தையாகப் பார்க்கும்போது அது ஓர் அரசியலாகத் தெளிவாகவே புரிந்து கொள்ளப்படுகிறது என்கிறார் ஃபிரெஞ்சு சமுகவியலாளரான போர்ட்யு (Bourdieu, 1990). ஒரு துறையாக காணப்படும்போது அது அறிவுத் தேட்டைக்கான ஒரு வெளியாகவோ அல்லது தன் போக்கில் இயங்கி மனித குலத்தை மேம்படுத்த உதவும் அறிவுத் துறையாகவோ பார்க்கப் படுவதில்லை. மாறாக மக்கள், அரசு ஆகியவற்றின் கட்டுப்பாட்டை மீறிய, மக்களிடம் பிரதிநிதித்துவம் மூலம் தன் இருப்பிற்கு நியாயம் பெறும் அவசியம் இல்லாத, ஆனால் அதிகார இழுபறிகள் உள்ள ஒரு துறையாக அறியப்படுகிறது என்கிறார் போர்ட்யு. இக் கருத்து மேலை நாட்டு அறிவியலுக்குப் பொருந்தலாம். காலனியம் கடந்த சமூகங்களுக்குப் பொருந்தும் என்று சொல்ல முடியாது. இங்கு அனேக துறைகளும் முதல் பல பத்தாண்டுகளுக்குப் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றிய சமூகக் குழுக்களின் கட்டுப்பாட்டில் தான் பெரும்பாலும் இருக்கின்றன – இதற்குக் காரணங்கள் பல.

ஆக, அறிவியல் துறை என்பது பற்றிய பொதுப்பட்ட முடிவுகளுக்கு நாம் எளிதில் வரமுடியாமல் இருக்கிறோம். அதே நேரம் அறிவியலாக்கப்பட்ட சமூக ஆய்வியல் துறைகள் பெரும்பாலும் ஆளும் குழுக்களுக்கும், முதலை ஆள்பவருக்கும் சுலபமாகவே அடிபணிந்து போகின்றன என்று போர்ட்யு கருதுகிறார். மேற் சொன்ன இரு கட்டுரை ஆசிரியர்களும் இதே முடிவுக்கு வருகின்றனர். மூவரும் சுட்டுவது – இதில் கூட அறிவியல் துறை வல்லுனர்கள் ஒப்பீட்டில் கூடுதலான சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். சமூக ஆய்வாளர்கள் கூடுதலாகக் கட்டுப்படுத்தப்படக் கூடியவர்களாகவும், அதிகாரத்துக்குத் துணை போகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது. உதாரணமாக சர்வாதிகாரிகள் அல்லது கொடுங்கோலர்கள் முதலில் வாயைக் கட்டுவது சமூகவியல் அறிஞர்களையே, அறிவியல் துறையாளர்களை அல்ல என்று சுட்டுகிறார் போர்ட்யு.

அதிகாரம் என்ற கருத்தாக்கத்தையும், அதிகாரம் அமைப்புகளில், வரலாற்றில், மனித உறவுகளில் செயல்படுவதையும், அதன் சமமற்ற பரவல் என்னென்ன விதங்களில் வாழ்வையும், அறிமுறைகளையும், அறிதிறனையும், அறிவு உற்பத்தியையும், அறிவுத் திரட்டுகளையும் பாதிக்கிறது என்பதையுமே நமது ஆய்வுணர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய கருதுகோள்களாக மாற்றிய ஃபூகோவை அறிவியல் பார்வையால் பாதிக்கப்பட்டவர் என்றோ, அதன் வழி சிந்திப்பவர் என்றோ சுலபத்தில் சொல்லி விட முடியாது.

என்றாலும், ஃபூகோவின் கருத்தாக்கங்களை அவர் மீதே செலுத்தினால், நமக்கு சில முடிவுகள் கிட்டலாம். பெரும்பாலும் பிளவுகள், வெடிப்புகள், முரண்கள், எதிர்பார்க்காத விளைவுகள் ஆகியவற்றால் வரலாறு செல்கிறதாகப் பார்த்தவர் அவர். முன் செல்லுதல், விடுதலை என்பதெல்லாம் வெறும் சொல்லாடல்கள் என்றவர் அவர். ஆனாலும் தொடர்ந்த மனித எதிர்ப்பும், யத்தனங்களும், தமது சுதந்திரத்துக்காக மனிதர்கள் எழுப்பும் கோரிக்கைகளும் தற்காலிகமாகவாவது மனித வாழ்வில் சுதந்திரத்தைச் சிறிதாவது சுவாசிக்க வைக்கின்றன என்றும் கருதியதால் அதிகார மையங்களை எதிர்ப்பதை ஆதரித்தவர். தொலை நோக்குத் திட்டங்களை கைவசம் வைத்துக் கொண்டு எதிர்ப்பை நடத்தினால், அது பிற்பாடு தொலை நோக்குத் திட்டங்களின் அடிமையாக மனிதரை ஆக்குகிறது என்று சுலபமாகவே புரிய வைக்கிறார் ஃபூகோ. அவரது அறிவியல் அணுகலை விலக்கிய விருப்பத்தை முன்வைத்துப் படிக்கப்பட்ட வரலாற்று விளக்கம், ஒரு கோணத்தில் பார்த்தால் முதலாளிய அறிவியலின் பரிமாண வளர்ச்சியையே பின்புலத்தில் கொண்டு இருக்கிறது என்று தோன்றுகிறது. அதாவது எதை விலக்குகிறாரோ அதுவே நிழலில் தொடர்ந்து அவரோடு உலவுகிறது.

வரலாறு திருகு கோணல்களாலும், உடைப்புகளாலும், ஏறுமாறான அமைவுகளாலும் செலுத்தப்படுகிறது, அதில், மார்க்சியம் கருதுவது போல முன்னேற்றம் என்னும் தேவதை இயந்திரத்தின் உள்ளிருந்து இயக்கப்படுவதல்ல வரலாறு என்று ஃபூகோ கருதுகிறார். இதை யதார்த்தத்தை யதார்த்தமாகப் புரிந்துகொள்வது என்று கருதலாம். விமர்சன பூர்வமாக யதார்த்தத்தை அறிவதாக மார்க்சியரும் இதர விமர்சன யதார்த்த ஆய்வாளரும் கருதினாலும் அத்தகைய கருதலில் தொடக்கத்திலேயே இடையூறு உண்டு. தாம் விரும்புவதை முன்னிறுத்தி அதை உலகின் தேவையாகப் பொதுமைப்படுத்தி அத் தேவையை எது பூர்த்தி செய்கிறதோ அவ் வழிகளை மட்டிலும் வரலாற்றில் சாதகமானதாகவும், இதர ஊற்றுகளை, ஆற்றுப் படுதல்களை எதிரிடை அல்லது விரயமானதாகவும் கருதும் அபத்தம் இந்த இரு வழிகளிலும் நிறையவே உண்டு.

ஆனால், ஃபூகோ வரலாற்றில் சுய விருப்பை ஊடுருவிப் படிப்பதை வெளிப்படையாக அதிகாரத் தேட்டைக்காகச் செய்யாமல், அதிகாரப் பரவலை ஒரு நோய்க் கூறாகக் கருதும் மருத்துவனைப் போலப் படிக்க வேண்டும் என்கிறார். ராபினெளவின் பேட்டியில் ஓரிடத்தில் ஃபூகோ தான் நெடுங்காலத்துக்கு பிரபலமாக இருக்க வேண்டும் என்றோ அல்லது தம் கருத்துகள் மிகப் பரவலாக உலகெங்கும் அறியப்பட்டு பேசப்பட்டு ஆய்வுகள் அதன் வழி நடத்தப்பட வேண்டும் என்றோ விரும்பவில்லை என்கிறார். ஆனால் ஓர் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரின் கையருகே இருக்கும் சஸ்திர சிகிச்சைக்கான கருவிகளைப் போல அவை ஆக வேண்டும், அவசியமான கருவிகளாக, ஆனால் தனிப்பட்ட முறையில் ஆடம்பரமாக அறியப்படாமல் இருக்க வேண்டும் என்கிறார். கருத்து என்னவென்றால், அவை பெரும் மனிதரின் கருத்துக் குவியலாக அறியப்படாமல் சகஜமாகப் பயன்படுத்தப்படும் கருவிகளைப் போல ஆவது மேலானது என்பது அவரது விருப்பம். அதிகார மையமாகவோ, அதிகாரத்துக்கு ஒரு வழியாகவோ தன் கருத்துகள் ஆகிவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு அவருக்கு இருக்கிறது என்பது புரிகிறது. ஆனாலும் அனேகக் கருவிகள் தமது பயணத்தில் சிலருக்கு அதிகாரத்தைச் சேர்த்துத் தருவனவாகவே இருக்கின்றன என்பது அவருக்கும் புரிந்துதான் இருக்கும். அறுவை சிகிச்சைக் கருவிகள் எல்லாருக்கும் கிட்டுவன அல்ல. எவரும் விருப்பப்பட்டால் அவற்றைப் பயன்படுத்துவதும் இயலாது. மனிதர் தன் விருப்பப்படி வரலாறைப் படைக்க முடியாது, ஆனால் அவர் வரலாறைப் படைக்கிறார் என்று மார்க்ஸ் சொன்னது இங்கு பின் புலத்தில் உலவுவது போலப் தோன்றுகிறது.

அவரது கருத்துகள் முதலாளிய சமுதாயங்களின் மையத்தில் இருந்து எழுகின்றபடியால், முதலாளிய முறையில் வாழ்வை அறிவதைப் பெரிதும் விலக்கி ஃபூகோவின் அறிதல் முறை அமைய முடியவில்லை. இங்கு மார்க்சியத் தத்துவாசிரியர் லூகாக்ஸ் சொன்னதை நாம் நினைவு கூரலாம் – ‘எவ்வளவு நம்பகமானவராகவும், குறிப்பிடத்தக்கவராகவும் ஒரு தத்துவாசிரியர் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் தனது காலத்தின் சிசுவாகவே இருப்பார்… ‘. இது மார்க்சுக்கும் பொருந்தும், ஃபூகோவுக்கும் கூடப் பொருந்தும். ஆனால் இருவரும் தம் காலத்தின் எஜமானராக இருந்த ஓர் இயத்தை எதிர்ப்பவராகவோ, கட்டுடைத்து அல்லது தோலுரித்துக் காட்டுபவராகவோதான் இருந்தனர். அப்படியே அறியப்பட்டனர், அப்படியே பிற்காலத்திலும் கருதப்படுவர் என்பது வரலாறின் ஒரு நகை முரண்.

(தொடரும்)

[கு1] Richard Harvey Brown and Elizabeth L.Malone, ‘Reason, Politics and the Politics of Truth: How Science is both Autonomous and Dependent ‘ – p106-122, Sociological Theory22:1, March 2004

aacharakeen@yahoo.com

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)

அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை

Series Navigation