சூஃபிக்களும் இஸ்லாமிஸ்டுகளும்

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

நேசகுமார்.


மு.மாலிக் என்பவர் கடந்த திண்ணையிதழில் எழுதியுள்ள கட்டுரை குறித்து சில எண்ணங்கள்:

சூஃபிகள் இஸ்லாமிஸ்டுகளாக இருக்கலாம், இஸ்லாமிஸ்டுகள் சூஃபிகளாக இருப்பதில்லை. ஒரு இஸ்லாமிஸ்ட் தன்னை சூஃபி என்று தவறாக கருதிக்கொள்ளலாம். சூஃபியிஸ ஆதரவாளர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டு சூஃபியிஸத்துடன் நேரெதிரான கருத்துக்களை கொண்டிருக்கும் பல அன்பர்களை தமிழிணையத்திலும் காணமுடிகிற நிலையில், இது மாலிக் அவர்களுக்கு புரியாமல் போனது வியப்பளிக்கவில்லை.

ஈஸாவஸ்யம் இதம் சர்வம் (காண்பன யாவும் இறையே), அஹம் பிரம்மாஸ்மி (இதுவே இறை) போன்ற கருத்துக்களை தத்தமது மொழியில், கலாச்சாரப் பிண்ணனி கொண்ட வார்த்தைகளில் கூறியிருக்கும் சூஃபிக்கள் இருக்கின்றனர். இப்னு அரபி முன்னதையும், மன்சூர் அல்ஹல்லாஜ் பின்னதையும் சொல்லியிருக்கின்றனர். இன்னும் நேரடியாக “ஊனாகி ஊனினுயி ராகியெவ் வுலகுமாய் ஒன்றா யிரண்டு மாகி” என்று குணங்குடி மஸ்தான் சாயிபு பாடியுள்ளார். இந்த ஒன்றானது இரண்டாதல், ஒன்றானது மூன்றாதல், ஒன்றானது ஐந்தாதல். அவை ஒவ்வொன்றுடன் இணைந்து விரிதல் என்பதை அடிப்படையாகக் கொண்டதே இந்து மரபில் உள்ள தெய்வங்களும், தத்துவங்களும். இதை நிராகரிப்பது ஆபிரகாமியம் என்பது மு.மாலிக்குக்கு தெரிந்திருக்கலாம். பீரப்பா பாடல்கள், குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள் போன்றவற்றில் இருந்து ஆயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூறலாம், ஆபிரகாமிய சட்டகத்திலிருந்து(abrahamic framework) இவர்கள் மாறியிருப்பதை.

இருப்பினும், சூஃபிக்கள் என்று தம்மை அழைத்துக் கொள்வோரில் பலர் ஆபிரகாமிய சட்டகத்துக்குள் அகப்பட்டுக் கொள்வதை நான் மறுக்கவில்லை. ஆயிரக்கணக்கான சூஃபிக்களுள் ஒரு சிலரே போலி சூஃபிகளாக இல்லாமலிருக்கிறார்கள். அவர்களுள் ஒரு சிலரே உண்மையான சூஃபிகளாக திகழ்கின்றனர்.

சூஃபிகளில் உள்ள குருமார்கள் பாரம்பரியத்திற்கும், சூஃபியல்லாதவர்களில் உள்ள கல்வி பாரம்பரியத்திற்கும் வித்தியாசம் உண்டு என்பதை மாலிக் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். குரானில் கடவுளுக்கும், முஹம்மதிற்கும் முஃமீன்கள் கட்டுப்பட வேண்டும் என்பதை சூஃபியிஸத்தில் நீட்டித்து, சூஃபி குருவுக்கு முழுக்க மாணாக்கர்கள் கட்டுப்பட்டு இருக்க வேண்டுமென்ற சம்பிரதாயம் இருக்கிறது. ஒரு சூஃபி குருவுக்கும்(ஷேக்/பீர்), அவரது சிஷ்யர்(ஃபகிர்)க்குமான பந்தமானது இறப்பிற்குப் பின்னும், சொர்க்கத்திலும் தொடரும் என்று கருதப்படுகிறது. சூஃபியல்லாத மார்க்கங்களில் இது முஹமதிற்கு இணைவைக்கும் செயலாக கருதப்படும், அதிலும் குறிப்பாக குரான்/சுன்னாஹ் ஆகியவற்றில் இல்லாத இது போன்ற ஒன்றை ஒரு ஆசிரியர் சொல்லும்போது அதற்கு கட்டுப்படுவது என்பது இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதற்கு சமானம் என்பது மாலிக் அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

ஆனால், சூஃபியிஸத்திலோ மீண்டும் மீண்டும் குரானையும், சுன்னாஹ்வையும் நிராகரிக்கும் பல அம்சங்களைக் காணலாம். நபிமார்களுக்கெல்லாம் தராத வரங்களை வலிமார்களுக்கு இறைவன் தந்துள்ளான் என்பது போன்ற கருத்துக்கள் நேரடியாக நபித்துவத்தை தாழ்த்தி, இஸ்லாத்திற்கு(முஹமதிற்கு) முந்தய பாரம்பரியங்களின் மேன்மையை சூஃபிக்களுக்குள் எடுத்துச் சொல்கின்றன. இது குறித்தெல்லாம் விரிவாக வஹ்ஹாபிகள் இணையமெங்கும் எழுதியிருக்கின்றார்கள், தமிழ் உட்பட என்பதால் அவற்றை நேரடியாகப் படித்துத் தெளியுமாறு மாலிக் அவர்களை வேண்டிக்கொள்கிறேன். வஹ்ஹாபிகளின் மூர்க்கத்தனத்தையும், முரட்டு பிடிவாதத்தையும் நான் அரக்கத்தனமென்று கருதினாலும், அவர்கள் சூஃபியிஸ ஆதரவாளர்களை விட நேர்மையாக தமது கருத்தை தெரியப்படுத்துகிறார்கள், இஸ்லாத்தின் அடிப்படை பற்றிய தெளிவும் தேர்ச்சியும் அவர்களிடையே இருக்கிறது என்பது இஸ்லாத்தை வெளியிலிருந்து அனுமானிக்கும் எவருக்கும் தெளிவாகத் தெரியக்கூடிய விஷயமாகும்.

சூஃபியிஸம் என்பது பல்வேறு தளங்களில் தக்கியா. இஸ்லாத்தை ஒத்துக்கொள்ளாமல், ஆனால், கரைபுரண்டோடும் மூர்க்கத்தனத்துடனும் போராட வலுவில்லாத, அல்லது போராட தேவையிருக்கிறது என்று எண்ணாத பலர் சூஃபியிஸத்தில் தமது பூர்வீக வழக்கங்களைத் தொடர்ந்தார்கள், சூஃபியிஸம் மூலமாக முஹம்மதின் நபித்துவத்தை, உன்னத நிலையை இஸ்லாத்திற்குள் நிராகரித்தார்கள். முதலில் தக்கியாவாக இதை ஏற்றவர்கள் பின்பு தாமே இதற்கு பலியாகி இஸ்லாமிஸ்டுகளானார்கள். இதே பாணியை பிறரும் பின்பற்ற தூண்டுகோலுமானார்கள். முஹமதை நிராகரித்து, அலியை தூக்கிப் பிடிக்கும் பாரம்பரியத்தின் சுவடுகள் சூஃபியிஸமெங்கும் நிறைந்திருப்பது இதனால் தான். பல்வேறு சூஃபி குழுக்களுக்கு அலியே ஆதிகுரு.

மாலிக் குறிப்பிட்டுள்ள இன்னொரு அம்சம் நான் ஆபிரகாமிய கல்டுகள் என்று மத்திய கிழக்கின் எல்லா குருமார் சம்பிரதாயங்களையும் குறிப்பிட்டுள்ளது. அது உண்மைதான். இஸ்லாத்தை ஆழ்ந்து நோக்கும்போது அது மீண்டும் மீண்டும் படமெடுத்து எழும் ஆபிரகாமியமே என்பதை கவனிக்கின்றேன். இஸ்லாத்தில் உள்ள எதுவும் முந்தய ஆபிரகாமிய கல்டுகளில் இல்லாமில்லை. ஒரு தனிமனிதரின் அளவிடற்கரிய மகோன்னதம், அவர் கடவுளுக்கும் மக்களுக்குமான இடைத்தரகர் எனவே அவருக்கு அடிமைப்பட வேண்டும், அவர் சொல்வதெல்லாம் வேதவாக்கு, அவரது செயல்களெல்லாம் கடவுளின் செயல்கள் என்பதுதான் ஈமான். ஈமான் என்பது ஏக இறைவனை ஏற்றுக்கொள்வதல்ல. அப்படி என்றால், யூதர்களைவிட ஏக இறைவனை ஏற்ற வேறு குடி எதுவும் முஹமதின் காலத்தய அரேபியாவில் இருந்திருக்கவில்லை. ஆனால், முஹமது தன்னுடைய குடியான சிலை வணங்கி குரேஷிகளிடம்(காஃபிர்களிடம்) காட்டிய மனிதாபிமானத்தைக் கூட யூதர்களிடம் காட்டவில்லை என்பது இதனால் தான்.

ஒரு மனிதரின் நபித்துவத்தை புறக்கணிப்போர் மீது புனிதப் போர் தொடுப்பது யூத குடிகளுள் ஒன்றிடையே தோன்றியது. இந்த தத்துவம் யூதர்கள் அடிமைகளாய் இருந்த காலகட்டங்களில் அவர்களிடையே வேரூன்றியது. இதுவே நபித்துவ நம்பிக்கையாய் தொடர்ந்து பல்கிப் பெருகியது. இதன் நீட்சியே இன்றைய கிறிஸ்துவமும், இஸ்லாமும், அவற்றின் பல்வேறு உட்பிரிவுகளும், பஹாய், காதியானி, ஷியா போன்ற கல்டுகளும். முஹமதின் காலத்திலேயே பலர் தம்மை நபி என்று அறிவித்துக் கொண்டதையும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குரானை(இறைவனிடமிருந்து இறங்கிய வசனங்கள் என்று கருதப்பட்ட நூல்கள்) வைத்துக் கொண்டு பிறர் மீது போர் தொடுத்ததையும் காணலாம். முஹமதின் காலத்திலும், முக்கியமாக அவருக்கு பின்னால் வந்த கலீஃபாக்கள் காலத்திலும் தந்திர உபாயங்களினாலும், சிறந்த போர் திட்டமிடல்களாலும் முஹமதின் ஆட்கள் பிறரை ஒழித்துக் கட்ட, முஸலமா, அல் அஸ்வது, துலைஹா போன்ற தம்மை நபியாக கூறிக்கொண்டவர்கள் எல்லாம் ஒழிந்துபோனார்கள். ஒரு வகையில் இது யூத சம்பிரதாயத்தை ஒட்டி அரேபிய இனக்குழுக்களுள் ஒரு இனம் மற்ற இனத்தை அழித்த கதையாகும். இந்த நபிமார்கள் எல்லாம் அந்தந்த அரேபிய இனக்குழுவால் ஆதரிக்கப் பட்டவர்கள் என்பதை கருத்தில் கொள்க. குரேஷி இனம் மற்ற இனங்களை தனக்கு கீழ் கொண்டுவந்தது. குரேஷியினத்தின் ஆளுமையே இதற்குக் காரணம். குரேஷிகளுக்குள் இருந்து உபஜாதிச் சண்டையே பின்னாளில், ஷியா – சுன்னி, அரபி அரபியல்லாதவர்கள் என்று விரிந்து இன்று வஹ்ஹாபி – வஹ்ஹாபியல்லாதோர் என்று வந்து நிற்கிறது.

இந்தப் பின்னணியிலேயே நான் ஆபிரகாமியச் சட்டகத்தையும், இது போன்ற தனிமனித வழிபாட்டையும் (நபித்துவம்) நிராகரிக்கின்றேன். கடவுள் என்பவர் ஒரு மனிதரிடம் மட்டுமே பேசமுடியும், அந்த மனிதர் சொல்வது கடவுளின் சட்டம், மனத்திட்டம் எனவே அந்த ஒரு மனிதருக்கு எல்லோரும் அடங்கி நடக்க வேண்டும். அந்த மனிதரின் நபித்துவத்தில் நம்பிக்கை வைப்போர் சொர்க்கம் செல்வர், அங்கே அவர்களுக்கு இனிய வாழ்வு, சுகங்கள் கிட்டும். நபி என்று ஏற்காதவர்கள் நரகம் போவர். அவர்களை எதிர்த்துப் போரிடுவது புனிதப் போர் என்பது போன்ற சித்தாந்தங்களை அபாயகரமானதாக கருதுகிறேன். ஒரு வகையில் பார்த்தால் மனித மனம் தனக்குள்ளேயே நிகழ்த்திக்கொள்ளும் சுதந்திரத்திற்கும் அடிமைத்தனத்திற்குமான போரின் புற பிரதிபலிப்பு இது என்றே கருதுகிறேன்.

மேலே சொன்னதெல்லாம் யூதமதத்திலும், கிறிஸ்துவத்திலும் உள்ளன. கிறிஸ்துவத்தின் நபித்துவப் புரட்சி தோற்றுப்போனதால், அது தக்கியாவாக இன்று நமக்கு வெளிப்படையாய் சொல்லப்படும் மென்மையான கிறிஸ்துவத்தை முன்வைத்தது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஆபிரகாமிய ஜிஹாத் கிறிஸ்துவத்திற்குள்ளிருந்தும் வெளிப்பட்டு பண்டைய கலாச்சாரங்களையும், பாகன் மரபுகளையும் அழித்தது. ஆனால், யூதமும் கிறிஸ்துவமும் தமது ஆபிரகாமிய சட்டகத்திலிருந்து நாளாவட்டத்தில் மென்மைப் பட்டுவிட்டன. இன்றைய சூழலில் ஓரளவுக்கு இவற்றின் கட்டுப்பாட்டை எதிர்ப்பது அவற்றின் உள்ளேயிருப்போருக்கும், வெளியே இருப்போருக்கும் எளிது. இஸ்லாத்தில் இது கடினம். இதுதான் இஸ்லாத்திற்கும் ஏனைய ஆபிரகாமிய கல்டுகளுக்கும் உள்ள வித்தியாசம். இன்னும் நீட்டித்து எழுதலாம் தான். இதே விஷயம் வேறு வடிவங்களில் இந்து சமுதாயத்திலும் இருந்திருப்பதையும் கண்ணுறுகிறேன். இஸ்லாம் மீது மட்டும் நான் விமர்சனங்களை முன்வைக்கிறேன் என்று சகோதரர் மாலிக் தவறாக எண்ணிட வேண்டாம். எல்லா மதங்களிலும் இந்த வன்முறை பல்வேறு படிநிலைகளில், பல்வேறு காலகட்டங்களில் உள்ளது. ஆனால், இவை குறித்து விரிவாக எழுத இப்போது வாய்ப்பில்லாததால், பிறிதொரு சந்தர்ப்பத்தில் எனது கருத்துக்களை இன்னும் விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்,

~ நேசகுமார்.

Series Navigation

நேச குமார்

நேச குமார்