கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

நல்லடியார்


“நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது” என்பது நமது நீதிமுறையின் தாரக மந்திரம்! கோவை குண்டு வெடிப்பு வழக்குகளின் தீர்ப்புகள் கடந்த ஆகஸ்ட் -1ஆம் தேதி முதல், தவணை முறையில் வெளிவரத் தொடங்கியுள்ளன.
கோவை போக்குவரத்துக் காவலர் செல்வராஜை முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலர் அடவாடியாகக் கொலை செய்தனர். இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே ! சககாவலர் கொல்லப் பட்டதற்காகக் கோவை நகர காவல் (காக்கிப்) படையும் காவிப்படையும் கைகோர்த்து கோவை முஸ்லிம்கள்மீது கொலைவெறியாட்டம் போட்டனர் .
மீரட், பாகல்பூர் என வடமாநிலங்களில் மட்டுமே அறிந்திருந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை அமைதிப் பூங்காவான தமிழகம் கண்டு அதிர்ச்சியில் உறைந்த நிகழ்வு அது ! குஜராத் இனச்சுத்திகரிப்புகளுக்கு முன்னோட்டமாக, காவலர் செல்வராஜ் கொலையில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராகக் காக்கி மற்றும் காவிப்படைகளால் நடத்தப்பட்ட வன்முறைகளுக்குப் பழிவாங்கும் விதமாகவே கோவை குண்டு வெடிப்புகள் நடந்ததாகச் சொல்லப்படுகிறது .
போர்க்களத்தில்கூட, “போரில் ஈடுபடாத முதியவர்கள் , பெண்கள், குழந்தைகள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் எக்காரணம் கொண்டும் தாக்கப்படக்கூடாது” என்று உலகிற்கே முன் மாதிரியான போர் தர்மங்களை வகுத்து , எதிரிகளைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும் அப்பாவிகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதைச் சொன்ன மார்க்கம்தான் இஸ்லாம்! ஆக, முஸ்லிம்களுக்கு எதிரானத் தாக்குதல்களுக்கு எதிர்வினையாகச் சொல்லப்படும் கோவை குண்டு வெடிப்புகள் இஸ்லாத்தின் பார்வையில் வரம்பு மீறியச் செயலே; “வரம்பு மீறுபவர்களுடன் அதே அளவேயன்றிக் கூடுதலாக வரம்பு மீறாதீர்கள்” என்கிறது திருக்குர்ஆன்.

இவ்வழக்கில் செய்யாத குற்றத்திற்காகக் கடந்த ஒன்பது வருடங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டு, சாதாரணக் குடிமகனுக்குரிய அடிப்படை உரிமைகளும் மனிதாபிமான உதவிகளும் கூட மறுக்கப்பட்டு , ஏறத்தாழ மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டுள்ளார் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த அப்துல் நாசர் மஹ்தனி. அவருடன் விடுதலையான பலருக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான் .

மஹ்தனிக்கு மனிதாபிமான மருத்துவ உதவிகள் செய்ய தமிழக அரசுக்கு ஆட்சேபனையில்லை என்று தனது அதிகாரத்திற்குட்பட்டுச் செயல்பட்ட முன்னாள் உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதா, அன்றைய அதிமுக அரசினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் .

மஹ்தனி – ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில், கேரளா மற்றும் தமிழகத்தில் அவருக்காகச் சில இயக்கங்கள் முன்னின்று வாதாடின. முனீர்ஹோதா , அரசு அலுவலர் தீர்ப்பாயம் மூலமாகத் தனது தரப்பைச் சொல்லி, முந்தைய அதிமுக அரசின் அடாவடித்தனத்தால் இழந்த பதவியை, சட்டரீதியில் திரும்பப் பெற்று , தற்போது ஆளும் தி.மு.க அரசில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். அரசியல் செல்வாக்கு இருந்தால் மட்டுமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து சட்டரீதியில் விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலையில்தான் நம்முடைய நீதித்துறை உள்ளது !

ஆனால், செய்யாத குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்ட பலர், தங்கள் இளமைப் பருவத்தைச் சிறையிலேயே கழித்துள்ளனர். (மூத்த)மகன்(கள்) சிறைக்குச் சென்றதால் மன உளைச்சலில் நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள், தடைபட்ட சகோதரிகளின் திருமணங்கள் , இழந்த கல்வி எனப் பல்வேறு இழப்புகளைச் சுமந்து கொண்டு தற்போது ஜாமீனில் வெளிவர அனுமதிக்கப் பட்டிருகிறார்கள்.
என்ன அநியாயம்! குற்றத்தைச் செய்திருந்தால் சட்டப்படி கிடைத்திருக்கக் கூடிய தண்டனைக்காலத்தை விட அதிகமாகவே அவர்கள் தம் வாழ்க்கையைச் சிறையில் தொலைத்துள்ளார்கள்! அவர்களை அநியாயமாகக் குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தக் காவல்துறை அதிகாரிகள், எவ்விதத் தண்டனையும் பெறாமல் இன்றும் பாதுகாப்பான பதவிகளில் பணி/பதவி உயர்வுகளுடன் வலம் வருகின்றனர் !

குற்றம் செய்யாமலேயே தண்டிக்கப்பட்ட அப்பாவிகள் ஒருபக்கம்! வீண்பழி சுமத்தி அவர்களைக் குற்றவாளிகளாக்க முயன்ற அதிகாரிகள் இன்னொரு பக்கம்! செய்யாத குற்றங்களுக்குத் தண்டித்தச் சட்டங்கள் , வீண்பழி சுமத்திச் சிறையில் அடைத்த அதிகாரிகளைக் கண்டுகொள்ளாமல்/கண்டிக்காமல் இருப்பது ஏன்? குறைந்தபட்சம் பொய்யான வழக்குகளை ஜோடித்துப் பெற்ற பதவி உயர்வுகளையாவது ரத்து செய்யலாம்தானே?

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கின் முக்கியக் குற்றவாளி(அத்வானி)யிடமே அக்குற்றச்சாட்டைப் பதிவு செய்த சி.பி. ஐ இலாவைக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகத்தைக் கொடுத்து அழகு பார்த்தவர்களல்லவா நாம்! ஜனநாயக இந்தியாவில்தான் குற்றவாளியே தீர்ப்பு எழுத முடியும்! குஜராத் இனச்சுத்திகரிப்புகளை நியாயப்படுத்தி , குற்றவாளிகளுக்கு உதவிய நரேந்திர மோடியை இருமுறை மாநில முதல்வராக்கிய தேசத்தவர்கள் அல்லவா நாம்!வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்வோம் – “ வாய்மையே வெல்லும்” என்று.

குண்டு வெடிப்புகளுக்கு முன்னர் நடந்த முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக விசாரித்து, குற்றவாளிகளை உடனடியாகத் தண்டித்திருந்தால் கோவை குண்டு வெடிப்புகளைத் தவிர்த்திருக்கலாம் . குண்டு வெடிப்பு நடந்தது உண்மை; ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதி எனில் குண்டு வெடிப்பைக் காரணம் சொல்லி முஸ்லிம்களை மட்டுமே வழக்கில் சேர்த்து உண்மையான குற்றவாளிகள் தப்புவதற்கு வழி செய்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை காத்திருக்கிறது ?
குண்டு வெடிப்பைக் காரணம் வைத்து, தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில், “பர்தாவுக்குள் வெடிகுண்டை ஒளித்து வைத்திருக்கிறாளா என்று பார் !” எனச்சொல்லி நடுவீதியில் எமது முஸ்லிம் சகோதரிகளை அவமானப்படுத்திய காவல்துறைக்கும் மொத்த முஸ்லிம்களையும் குற்றப்பரம்பரையாக்கி, அண்டை வீட்டுக்காரனும் சந்தேகப்படும்படி வெறுப்பை வளர்த்த ஊடகங்களுக்கும் ஏதேனும் தண்டனை உண்டா? குண்டு வெடிப்புகளால் முஸ்லிம்கள்மீது பதிந்துவிட்ட வெறுப்பியல் எச்சங்களைத் துடைக்க இவர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?

நிரபராதிகளைத் தண்டித்து, குற்றவாளிகளை வாழவைக்கும் சட்டங்களால் குற்றங்கள் ஒருபோதும் குறையாது. குண்டு வெடித்தால் அதைச் செய்தவன் முஸ்லிமாகத்தான் இருக்கும் , உலகில் எங்காவது குண்டுவெடிப்பு நடந்தால் அதற்கு அல்காயிதா என்றும், வடநாட்டில் நடந்தால் லஷ்கரேதோய்பா என்றும், தமிழகத்தில் நடந்தால் ஏதாவது முஸ்லிம் இயக்கம்தான் நடத்தி இருக்கும் என்றும் , முதல்கட்ட விசாரனை அறிக்கை வரும் முன்னரே அவசர அவசரமாக அறிக்கை விட்டு உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கை வகைசெய்யும் அதிகாரிகளும் இனியாவது திருந்த வேண்டும்.

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் சட்டங்கள் மறுபரிசீலனைச் செய்யப்பட வேண்டும். குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு அநீதி இழைக்கப் பட்ட அப்பாவிகளுக்கு அவர்களைச் சிறையிடலடைத்த தமிழக அரசே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் . இவற்றைச் செய்யாதவரை, முதல் பத்தியில் சொல்லியுள்ளது போல் “நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும்,ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது“ என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்றே கருதப்படும்!


Series Navigation

நல்லடியார்

நல்லடியார்