கடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்!

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

இப்னு பஷீர்


பரிணாம கோட்பாட்டைப்பற்றிய நீலகண்டனின் கடித தலைப்பை பார்த்ததும், ?இதோ வந்து விட்டாரய்யா ஒரு மேதை, ஹாருன் யாஹ்யாவிற்கு பதிலடி கொடுக்க! ? என்று புளகாங்கிதமடைந்து மிக ஆவலாய் அந்த கடிதத்தை படித்தால், அடச்சே!, நீலகண்டனின் மற்றுமொரு மேற்கோள் விளையாட்டு!. இருந்தாலும் மனிதர் என்னை முழுதுமாக ஏமாற்றிவிடவில்லை. அவர் கடிதத்திலிருந்து பரிணாம கோட்பாட்டைப்பற்றிய ஒரு புது தகவலை அறிந்து கொள்ள முடிந்தது. தங்களது முன்னோர்கள் குரங்குகள் என்று பெருமிதமாக சொல்லி வந்த இந்த கோட்பாட்டுக்காரர்கள், இப்போது பன்றிகளும் தங்களின் தூரத்து சொந்தங்களே என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். இதை நான் சொல்லவில்லை அய்யா! திரு. எஸ் அரவிந்தன் நீலகண்டன் தான் சொல்கிறார். ஆதாரம்:

ஹாருன் யாஹ்யா தனது நூலில் 40 பக்கங்களில் 70 சான்றாதாரங்களை தந்திருக்கிறார் என்று நேர்மையாக ஒப்புக்கொண்ட நீலகண்டன் அவற்றில் ஒன்றிற்காவது பதிலளித்திருக்கலாம். அதை விடுத்து, ஹாருன் யாஹ்யா மேற்கோள் ஒன்றை முழுமையாக காட்டவில்லை என்று குற்றம் சுமத்தி அந்த மேற்கோளுக்கு முன்னால் ஒரு வரியையும் பின்னால் ஒரு வரியையும் இணைத்திருக்கிறார். நல்லவேளை, அந்த முழு அத்தியாயத்தையும் (காற்புள்ளி, அரைப்புள்ளி கூட தவறாமல்) மேற்கோள் காட்டினால்தான் ஒப்புக்கொள்வேன் என்று அவர் சொல்லவில்லை. அப்படி அவர் ‘முழுமைப்படுத்திய ‘ மேற்கோளையாவது சற்று விளங்கும்படி விளக்கியிருந்தால் என்னைப்போன்ற பாமரர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.

ஹாருன் யாஹ்யாவின் புத்தகத்தை நீலகண்டன் முழுதுமாக படித்தாரா என்பது தெரியவில்லை. அந்த புத்தகத்தில் பரிணாம கோட்பாட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஹாருன் யாஹ்யா முன்வைக்கும் ஆதாரங்கள் நீலகண்டனின் கண்களில் பட்டதா என்றும் தெரியவில்லை. அவருடைய வசதிக்காக ஹாருன் யாஹ்யா எழுப்பும் கேள்விகளில் ஒன்றை இங்கு முன்வைக்கிறேன். பரிணாம அறிவியலின் ( ? ?) மீது காதல் கொண்ட நீலகண்டன் அதற்கு விளக்கமளிப்பார் என்று நம்புகிறேன்.

பரிணாம கோட்பாட்டுக்காரர்களின் முன் வைக்கப்படும் முதல் கேள்வி ‘உலகில் முதல் உயிரினம் எப்படி தோன்றியது ? ‘ என்பதுதான். அதற்கு கோட்பாட்டுக்காரர்களின் பதில்: உலகம் முழுவதிலும் உயிரற்ற பொருட்களான கற்பாறைகள், மண், வாயு ஆகியவையே நிரம்பி இருந்தபோது, காற்று, மழை மற்றும் மின்னல் ஆகியவற்றின் விளைவால் தற்செயலாக தானாகவே உலகின் முதல் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும். அதாவது, உயிரற்ற பல பொருட்களின் கூட்டு விளைவால் ஒரு உயிரினம் தோன்றியது. இந்த விளக்கம் ‘ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும் ‘ என்ற அடிப்படை உயிரியல் கொள்கைக்கு மாற்றமாக இருக்கிறது. பரிணாம கோட்பாடு சொல்வது உண்மை என்று ஒப்புக்கொண்டால், இன்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உயிரியல் கொள்கை பொய்யாகி விடும். இதற்கு பரிணாம கோட்பாடும், அதன் காதலரான அரவிந்தன் நீலகண்டனும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் ?

இப்னு பஷீர்

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்