குலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

வெங்கட் சாமிநாதன்


கிரீஷ் காஸரவல்லியின் சமீபத்திய படம், குலாபி தியேட்டர், லோக் சபா தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது ஆச்சரியம் தான். சாதாரணமாக திரையரங்குகளில் இரண்டு மூன்று சுற்று பயணம் முடிந்த பிறகு, ஒன்றிரண்டு வருஷங்கள் ஆனபிறகு தான் தொலைக்காட்சிக்குக் கொடுக்கப்படும். நான் இவ்வளவு சீக்கிரம் காஸரவல்லியின் படம் எனக்குப் பார்க்கக் கிடைக்கும் என்று எண்ணிக் கூடப் பார்த்ததில்லை. கிரீஷ் காஸரவல்லி எனக்கு மிக முக்கியமான கலைஞர். இந்திய திரைப்பட உலகில் ஒரு பத்து பதினைந்து பேரை தேர்ந்தெடுத்தால் அதில் கிரீஷ் காஸரவல்லி கட்டாயம் இடம் பெறுவார். அதிகம் பேசப்படும், அதிகம் பிரபலமுமான இன்னொரு கன்னடிகரும் கிரீஷ¥மான கர்நாடை விட காஸரவல்லி எனக்கு முக்கியமானவர். காஸரவல்லி தனது முப்பது வருட கால இதுகாறுமான திரையுலக வாழ்வில் பத்து பதினைந்து படங்களே இயக்கியிருப்பார் என்று தெரிகிறது. அதில் நான் பார்த்துள்ளது, இப்போது பார்த்த குலாபி தியேட்டரையும் சேர்த்தால் மூன்றே முன்று தான். அவரது முதல் படம் கட ஷ்ராத்தா எழுபதுகளில் வெளிவந்தது. மிகவும் மனத்தை உலுக்கி எடுத்த படம். நாம், நமது ஆசாரங்களையும், நம்பிக்கைகளையும் வைத்துக்கொண்டு எவ்வளவு நம்மையும் சக மனிதர்களையும், நம் உறவுகளையே கூட கொடுமைக்குள்ளாக்குகிறோம் என்று நினைத்தால், கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆசாரங்கள நம்பிக்கைகள ஒரு பரிமாணத்தில், நம் வாழ்க்கையை ஒழுங்கு படுத்துகின்றன, கட்டுப் பாட்டுக்குள் வைத்து சிறப்பிக்கின்றன. ஆனால் அவை இன்னொரு பரிமாணத்தில், அவற்றின் ஆதார ஸ்ருதியும் தாத்பர்யமும் புரிந்து கொள்ளப்படாது, யாந்திரீகமான குருட்டு வழிபாட்டில் கொடுமைப்படுத்துவனவாக மாறிவிடுகின்றன.

கட ஸ்ராத்தா படம் பார்க்கும் அந்த இரண்டு மணி நேரமும் ஒரு அழுத்து வதைக்கும் உணர்விலேயே கழிகிறது. ஒரு நிமிடங்கூட நம் நெற்றிச் சுருங்கங்களும், மன வலியும் மறைந்து புன்னகைக்கும் சந்தர்ப்பம் தரும் ஒரு நிமிடம் கூட நமக்கு அந்த இரண்டு மணிநேரத்தில் கிடைப்பதில்லை. ஆனால், வாழ்க்கை அம்மாதிரி இருந்தால், நம் நம்பிக்கைகளும் ஆசாரங்களும் அப்படி அர்த்தப்படுத்தப்பட்டால், என்ன செய்வது?

கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முந்திய கர்நாடகத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பிராமண குடும்பத்தின் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கிறது. அது ஆசாரங்களாலும், ஏழ்மையினாலும், வழி வழியாகப் புகட்டப்பட்ட நம்பிக்கைகளால் ஆனது. அந்த நம்பிக்கைகளும் ஆசாரங்களும் ஒழுங்காகப் பராமரிக்கப்படுவதற்கு அக்குடும்பம் சார்ந்த கிராமமும் பிராமண சமூகமுமே அரண். ஒரு ஏழை பிராமணன். பள்ளி ஆசிரியர். வீட்டில் இளமையிலேயே விதவையாகிவிட்ட இளம் மகள். பழகிவிட்ட இன்னொரு ஆசிரியரால் அவளது கன்னிமையும் வைதவ்யமும் பங்கப்படுகின்றன. என்ன நடந்துவிட்டது, அதன் பயங்கரம் என்னவென்றே தெரியாது நாட்களை ஓட்டும் பெண் அவள். ஆனால் அதன் பயங்கரம் என்னவென்று அவர்கள் வாழும் சமூகம் சொல்ல அதிக நாள் ஆகவில்லை. தெரிந்ததும் அந்த பயங்கரத்திலிருந்து அவள் தந்தையின் பாசம் கூட அவளைக் காப்பாற்ற முடிவதில்லை.

சமூக நிந்தனையிலிருந்தும், தனக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள தன் ஒரே பெண்ணை ஒழுக்கம் கெட்டுவிட்டவளை வீட்டில் வைத்திருக்க முடியுமா? இனி அவள் தனக்கு மகளே இல்லையென்று எப்படி சமூகத்துக்குச் சொல்வது. தன்னைப் பொருத்த வரையில் அவள் இறந்து விட்டாள் என்று சொல்ல அவளுக்கு சிராத்தம் செய்து வீட்டை விட்டு வெளியேற்றவேண்டும். தந்தை செய்கிறார். தன் சமூகம் சொல்கிறது. தான் வளர்ந்த பிராம்மண ஆசாரங்கள், அனுஷ்டானங்கள் சொல்கின்றன.

இது ஒரு காலகட்ட பிராமண சமூகத்தின், கிராமத்து வாழ்க்கையின் தர்மம். நியதி. தன்னையும் வருத்திக்கொண்டு, தன் மகளையும் அவமானப்படுத்தி நிர்கதியாக வீட்டை விட்டு விரட்டுவதை விட வேறு வழியில்லை. இன்று இது போல் நிகழாது தான். சமூகம் அதிலிருந்து வெகுவாக தள்ளி வந்து விட்டது. இந்தக் கதையை எழுதியவரும் இதைத் தான் தன் முதல் படமாக எடுக்கத் தேர்ந்தவரும் அதே சமூகத்திலிருந்து வந்தவர்கள் தான். ஒரு நூற்றாண்டுக்கு முந்திய கடந்து விட்ட வாழ்க்கை தான். ஆரம்பத்திலிருந்து கடைசி •ப்ரேம் வரை ஒரே சோகம் தான். இருந்த போதிலும், 70-க்களின் கடைசியில் தில்லியில் இந்தப் படத்தைப் பார்த்த போது, இனி கிரீஷ் காஸரவல்லி கட்டாயம் கவனிக்கப்படவேண்டிய ஒரு கலை ஆளுமை என்பது என்னில் தீர்மானமாயிற்று. பிழிந்தெடுக்கும் சோகம் எனபதல்ல விஷயம். இது வாழ்க்கையின் தீர்க்கமான பார்வையும் விமர்சனமும் ஆகும், பிடிக்காததைக் காண மறுத்து அதைத் தாண்டிச் செல்ல இயலாது.

அறுபதுகளில் பார்த்த ஒரு •ப்ரெஞ்சு படம் ஒன்று. மூஷே. யார் டைரக்டர் என்று ஞாபகமில்லை. ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கை. அது அழுவதில்லை. முகம் சிணுங்குவதில்லை. அது முகம் மலர்ந்து நாம் ஒரு •ப்ரேமில் கூட காணமுடியாது. அது படும் துயரங்களையெல்லாம், சகித்துக்கொண்டு வாழும். இது தான் தனக்கு விதிக்கப்பட்டதென்று. ஐம்பது வருடஙகளாகிவிட்டன. அந்த முகத்தை மறக்க முடியாது. கிட்டத்தில் நம்மூரிலேயே ரத்த உறவு என்ற ஒரு நாவல் யூமா வாசுகி எழுதியது. அவர் சிறுவனாக இருந்த போது, தானும் தன் அக்காவும் அம்மாவும், குடிகார அப்பாவாலும், பாட்டியாலும் இன்னும் மற்ற எல்லா உறவினராலும் இழைக்கப்பட்ட கொடுமை நிறைந்த வாழ்க்கையைச் சொல்கிறது அந்த நாவல். இன்றைய தமிழின் மிக முக்கியமான நாவல் என்று எனக்குப் படுகிறது. இவை எதுவும் சுவாரஸ்யத்துக்க்காகப் படிக்கப்படுவதில்லை. எழுதப்படுவதில்லை. வாழ்க்கையின் நிதர்சனங்களிலிருந்து நாம் ஒதுங்கிச் செல்லமுடியாது.

கிரீஷ் காஸரவல்லி இயக்கிய அடுத்த படம் எனக்குப் பார்க்கக் கிடைத்ததும் சமீபத்தில் தான். லோக் சபா சானலில். நாயி நிரலு. நாயின் நிழல் என்று அர்த்தம் என்று ஹரன் பிரசன்னா சொன்னார். கன்னட மொழியின் சந்தர்ப்பத்தில் இது என்ன அர்த்தம் கொள்வதாக இருக்குமோ!. தமிழில் ‘நாய் படும் பாடு’ என்று தானே சொல்கிறோம். ஒரு கால கட்டத்தில் இந்து சமூகத்தில் விதவையின் வாழ்க்கை நாய் படும் பாடுதான். மறுபடியும் இதில் மையப்படுத்தப்படுவது ஒரு விதவை தான். இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்ட விதவை. ஆற்றில் மூழ்கி இறந்து விடுகிறான். கணவன் இறந்த பிறகு, தன் மாமியார், மாமனாரின் பராமரிப்பிலேயே அவள் இருந்து வருகிறாள். படம் ஆரம்பிக்கும்போதே இறந்து விட்ட தன் மகன் எங்கோ மறு பிறப்பில் வாழ்கிறான், தன் கடந்த ஜன்மத்தின் பெற்றோர் இன்னார் என்று சொல்கிறான் என்ற செய்தி கேட்டதிலிருந்து அவனை அழைத்து வரச்சொல்லி தன் கணவரைக் கட்டாயப்படுத்துகிறாள் தாயார். வந்தவனைத் தன் மகனாகவே நினைத்து பாசம் கொள்கிறாள். தன் மகன் ஆசைப்படுகிறான் என்று தன் மருமகளை கலர் புடவை அணியக் கட்டயப் படுத்தி வந்தவனின் முன் நிறுத்தி அவனைச் சந்தோஷப்பட வைக்கிறாள். முதலில் அவனை வெறுத்த மருமகளுக்குப் பின் அவனோடு பிணைப்பு ஏற்படுகிறது. அவள் கர்ப்பமடைகிறாள். இந்த விபரீதங்கள் எல்லாம் தன் பிடிவாதத்தினால் விளைந்தது என்பதை எண்ண மறுக்கும் மாமியார் இப்போது தன் மருமகளை நடத்தை கெட்டவள் என வெறுக்கிறாள். மாமனாரால் அப்படி இருக்க முடிவதில்லை. ஏன் இவனை தன் மனைவியின் கட்டாயத்திற்குப் பணிந்து அழைத்து வந்தோம் என்று தன்னையே நொந்து கொள்கிறார். இப்படிப் போகிறது அந்தக் கதை. இது வரை பட்டது போதாதென்று இன்னம் நிறைய கஷ்டங்கள் பட இருக்கிறாள் அந்த விதவை. அந்தக் காலத்துப் படங்களில் பசுபு லேடி கண்ணாம்பா, அரிச்சந்திரா படத்தில், ஒண்ணாம் மாதம், இரண்டாம் மாதம் என்று பத்து மாதம் லோகிதாசனைச் சுமந்த கஷ்டத்தை ஒயாது ஒப்பாரி வைப்பது போல் விதவையின் துயரங்கள் நீள்கின்றன.

புனர் ஜன்மம் ஒரு நம்பிக்கையாக இருக்கும் வரை தொந்திரவு இல்லை. ஆனால் அதை வாழ்க்கையின் நடைமுறையாகக் கற்பனை செய்வதும் அதை முகாந்திரமாகக் கொண்டு பிராமண சமூகத்தில் ஒரு இளம் விதவையின் அவல வாழ்க்கையை, அது ஏற்கனவே அவலம், இன்னம் அதீதமாக்கிக் காட்டுவது அவசியமற்றவை. கற்பனை கட்டற்றுத் தான் பாய்ந்து ஓடுகிறது.

ஆனால் கிரீஷ் காஸரவல்லி இதை எவ்வளவு தூரம் ஒரு நம்பகமான சித்திரமாக ஆக்கிக் காட்ட முடியுமோ அவ்வளவுக்கு அடக்கியே கையாண்டுள்ளார். மறு ஜன்மம் என்பது தான் நம்மை உறுத்துமே தவிர, அவன் வந்து சேர்ந்த பிறகு நிகழ்பவை எல்லாம் இயல்பாகத் தொனிக்கச் செய்கிறார் காஸரவல்லி. வெகு கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் படமாக நாயி நிரலு படம் பார்த்த போது, காஸரவல்லிக்கு சந்தோஷப்பட, சமூகத்தில் ஒன்றுமே கிடைப்பதில்லையோ, எல்லாமே ஒரே சோகமயக் கதைகளையே இவர் தேர்ந்தெடுக்கிறாரே என்று எண்ணத் தோன்றியது. கொஞ்சம் பழம் காலத்தை மறந்துவிட்டு சமகாலத்தில் கால் வைக்கலாமே என்றும் தோன்றியது. சம காலத்தில் பெண்ணீய வாதிகளைத் தவிர மற்ற பெண்களின் கதி அப்படி ஒன்றும் அதிகம் மாறிவிடவில்லை.

சமீபத்திய, பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்ற குலாபி தியேட்டர் 1990களில் மேற்குக் கடற்கரையோர மீனவ சமூகத்தில் நிகழும் மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறது. இந்தியா முழுதும் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே சுமுக உறவு முறிந்து பதட்டம் நிலவுகிறது. அதோடு டிவி கிராமப் புறங்களிலும் நுழைந்து ஆக்கிரமித்துக் கொள்கிறது. அவ்வளவு தான் காஸரவல்லி நிகழ் காலத் துக்கு வரமுடியும். மற்றபடி, இந்தப் படத்திலும் மையப் பாத்திரமாக வருவது ஒரு பெண் தான். கணவனால் கைவிடப்பட்ட மத்திம வயது ஸ்த்ரீ. முஸ்லீம். கைவிட்டுப் போன கணவன் இன்னொரு இளம் பெண்ணோடு பக்கத்திலேயே இன்னொரு குடிசையில். அவனுக்கு ஒரு பையன். அந்தப் பையனிடம் குலாபிக்கு மிகுந்த பாசம். ஆனால் கைவிட்ட கணவனும் அவனது இரண்டாம் மனைவியும் குலாபியை வெறுத்தே ஒதுக்குகின்றனர். இவர்கள் எல்லோரும் வாழ்வது கடற்கரையோரம். எல்லோரும் மீனவர்கள். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமம் அது. குலாபி வீட்டு வேலை செய்து பிழைக்கிறவள். அதோடு பிள்ளைப் பேறுக்கு உதவும் அங்கிருக்கும் ஒரே மருத்துவச்சியும் கூட. ராசியானவள். தினம் மாலை ஆறு மணிக்கு சினிமா பார்க்கப் போய்விடுவாள். சினிமா தியேட்டரிலிருந்து அவசரமாக குழந்தைப் பேறுக்காக அழைக்க அவள் மறுக்க அவளுக்கு டிவி பரிசாகத் தருவதாகச் சொல்லி அழைத்து வரப்படுகிறாள். அவளுக்கு டிவி யும் கிடைக்கிறது. இனி அவள் சினிமா பார்க்க வெளியே போகவேண்டாம். சினிமாவும் சீரியலும் பார்க்க அவள் குடிசைக்கு வரும் கூட்டம் பெருக, அவள் மிகவும் வேண்டப்பட்டவள் ஆகிறாள். அவள் குடிசை யைத் தவிர வாசன்னா என்னும் முதலாளி வீட்டில் தான் டிவி உண்டு. அவள் குடிசையிலும் வெளியிலும் டிவி சீரியல் பற்றித்தான் பெண்களே தம்மிடையே பேசிக்கொள்ளும் ஆண் பெண் உறவுப் பேச்சுக்களும் கேளிக்கைகளும். (எனக்குத் தெரிந்து காஸரவல்லியின் படத்தில் தமாஷ¤ம் கேளிக்கைகளும் முதல் தடவையாக நுழைகின்றன) எல்லார் வீட்டு நடப்புகளும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. அட்டு ( குலாபியின் சக்களத்தி மகன்) டிவி பார்க்க குலாபி குடிசைக்கு வருகிறான். அட்டுவைத் தேடி வந்த் குலாபியின் கணவன் தானும் டிவி பார்க்க உட்கார்ந்துவிடுகிறான். மற்ற பெண்கள் குடிசையை விட்டு வெளியே வந்து விடுகிறார்கள். ஒரு பெண், இது தான் சமயம் என்று கைவிட்ட கணவனைத் திரும்ப பெறுவதற்கு யுக்திகள் சொல்லிப் போகிறாள். கணவன் அங்கேயே முகாம் போட்டு விடுகிறான். அவனோடு சண்டை போட வந்த இரண்டாம் பெண்டாட்டியை, ‘நான் எங்கே வேணுமானாலும் இருப்பேன். அவளும் என் பெண்டாட்டி தான், அவளை நான் இன்னும் தலாக் செய்துவிடவில்லையே, என்று விரட்டி விடுகிறான்.

குலாபியிடம் மிக நெருக்கமாக இருக்கும் ஒரு பெண், நெத்ரூ ஓடிப் போய் விடுகிறாள். அதே சமயம் குலாபியின் கணவனும் காணாமல் போகிறான். எல்லோரும் நெத்ரூவை குலாபியின் கணவன் தான் கடத்திச் சென்றுவிட்டான் என்று சந்தேகப் படுகின்றனர். ஒரு ஹிந்துப் பெண்ணை முஸ்லீம் கடத்திவிட்டுச் சென்றுவிட்டான் என்றால் ஹிந்து முஸ்லீம் சமூகத்தினரிடையே மதக் கலவரத்துக்கு இட்டுச் செல்லும் சமாசாரம். இதற்குச் சற்று முன் சுலேமான் என்னும் பணக்கார மீனவன் இவர்கள் மீன் பிடிக்கும் இடத்தில் தன் ஸ்டீம் போட்டைக் கொண்டு வந்து கிடைக்கும் மீனையெல்லாம் அள்ளிச் சென்றுவிடுகிறான் என்று ஒரு உரசல். மேலும் ஹிந்து மீனவர்களையும் அவன் வேலைக்கு இழுத்துக்கொள்கிறான் என்று வேறு ஒரு புகைச்சல். வரசன்னா சுலேமானுக்கு போட்டியான இன்னொரு பணக்கார மீனவன். அவனுக்கு சுலேமானிடம் விரோதம். மீனவர்களுக்கிடையேயான தம் பிழைப்புக்கான போட்டி மத விரோதமாக உருவெடுக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் குலாபியின் கணவன் ஒரு ஹிந்துப் பெண்ணைக் கடத்தி விட்டான் என்று ஒரு செய்தி பரவ, குலாபியை விசாரிக்க அவள் தனக்கு எதுவும் தெரியாது எனச் சொல்ல, அவள் சுற்றியிருக்கும் எல்லோராலும் ஒதுக்கப் படுகிறாள். கலவரம் வெடிக்கும் என, முஸ்லீம் குடும்பங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுகின்றன. முஸ்லீம்களுக்கு முஸ்லீம்களிடையே தான் பாதுகாப்பு என்று குலாபியையும் தம்முடன் அழைக்கிறார்கள். குலாபிக்கு தான் வாழும் சமூகத்தை விட்டு வர மனமில்லை. அவர்கள் தன்னைக் கைவிடமாட்டார்கள் என்று நம்புகிறாள். ஆனால், வரசன்னா அவள் வீட்டு சாமான்களை வெளியே எறிந்து அவளையும் குண்டுக் கட்டாகக் கட்டி படகில் வைத்து கிராமத்தை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள்.

இதனிடையே, சுலேமானின் ஸ்டீம் போட் மாத்திரமல்ல, வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களே இங்குவந்து மீன் பிடிக்க அரசாங்கம் அனுமதி தந்துவிட்டது என்ற செய்தி பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி அவர்களை நிலை குலையச் செய்கிறது.

இரு சமூகங்களிடையே ஏதேனும் ஒரு காரணத்தால் ஒரு பிளவு ஏற்படுமாயின், அல்லது, எந்த ஒரு சமூகத்தையும் சேர்ந்த ஒரு செல்வாக்குள்ளவனின் அத்து மீறிய செய்கை அந்த சமூகத்தின் விரோத செய்கையாக உருவெடுத்து விடுகிறது. அதில் ஹிந்துக்களிடையே கருத்து பேதம் ஏற்படலாம். ஆனால் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனின் அத்து மீறிய செய்கை ஜமாத்தின் கௌரவ பிரச்சினையாக்கப் பட்டு மதக் கலவரத்திற்கு வழி வகுத்துவிடுகிறது. இதில் குலாபி போன்றவர்களின் இயல்பான நல்ல குணங்களுக்கு ஏதும் மதிப்பு இருப்பதில்லை. இந்தப் படத்தில் குலாபியாக நடிக்கும் உமாஸ்ரீக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. மிகவும் அமைதியாக, அடங்கிய வெளிப்பாட்டில் நன்றாகவே உமாஸ்ரீ நடித்துள்ளார், அவர் ஒரு பாப்புலர் சினிமாவைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், என்றால், அதற்கு அவர் திறமைமட்டுமல்ல காஸரவல்லியும் காரணம் என்று சொல்ல வேண்டும். எனக்கு நாயி நிரலுவில் மாமனாரக வருபவர் மிகச் சிறந்த நடிப்பிற்கு உதாரணம் என்று சொல்லத் தோன்றுகிறது.

நாயி நிரலுவை விட குலாபி ஒரு நிகழ் கால சமூக மாற்றத்தை குரல் எழுப்பாமல், அதன் நுன்ணிய சிக்கல்களை மறைக்காமல், அதே சமயம் தடித்த கோடுகளால் தீட்டாமல், சித்தரிப்பது மிக முக்கியமான பதிவு என்று சொல்லவேண்டும்.

கடைசியாக ஒரு விஷயம். கன்னட சமூகத்தில் ராஜ்குமாரும் இருக்கிறார்கள் தான். அவரை தெய்வமாக்கிய கன்னட சினிமாவும் சினிமா ரசிகர்களும் உண்டு தான். அவர்களுக்கு கன்னட அரசியல் தலைமையும் தலை வணங்குகிறார்கள் தான். ஆனால் இங்கு கிரீஸ் காஸரவல்லிக்கும் இடம் இருக்கிறது. பி.வி. காரந்துக்கும், கே.வி.சுப்பண்ணாவுக்கு இடம் இருக்கிறது. ஆனால் இங்கு அம்மாதிரி யாருக்குமே இடம் இருப்பதில்லையே. நமக்கு ரஜனிகாந்தும்,, கமலஹாசனுமே, எல்லாமாக, காஸரவல்லியிம், ராஜ்குமாருமாக இருக்கிறார்களே. எத்தகைய கலாசாரத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம்? காஸரவல்லியின் குடும்பம் யக்ஷகானாவுடன் நெருங்கிய உறவு கொண்டது. கே.வி.சுப்பண்ணாவும் காஸரவல்லியின் உறவினர் தான். ஆனால் காஸரவல்லியோ, கே.வி.சுப்பண்ணாவோ, யக்ஷகாணா தான் நவீன கன்னட நாடகத்திற்கும் சினிமாவுக்கும் உறபத்தி ஸ்தானம், யக்ஷகானாவை பிரதி செய்து கோமாளித்தனம் பண்ணுவது தான் எங்கள் பணி என்று கிளம்பவில்லையே. ஏன், நாம் மட்டும் இப்படி……சினிமா என்றால் எல்லாவற்றிலும் ஒரே ரகம், சினிமா என்றால் ஒரே கோமாளித்தனமான சினிமா, நாடகம் என்றால் ஒரே கோமாளித்தனமான நவீன நாடகம்….கோமாளித்தனங்களும் இருக்கட்டும். கொஞ்சம் ஆரோக்கியமானதும் இருக்கலாமே..

வெங்கட் சாமிநாதன்/’18.11.09

.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்