‘கவிஞர் மாலதி’ – ஓர் அஞ்சலி.

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

தாஜ்



கவிஞர் மாலதி, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு / தொடர்ச்சியான மருத்துவம் பலனளிக்காமல் 27.03.2007 அன்று மாலை இயற்கையெய்தினார். மறு நாள் அவருடைய பெங்களூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பெங்களூர் இலக்கிய நண்பர்களும், அலுவலக நண்பர்களும் அஞ்சலி செலுத்தினர். அன்று நண்பகல் அவருடைய உடல் எரியூட்டப்பட்டது. கவிஞர் மாலதியின் மரணசெய்தி அறிந்து மிகுந்த மனவலி!

March 29, 2007 திண்ணையில் பாவாண்ணன், அவர்கள் ‘மாலதி மறைவு’ குறித்து எழுதியிருந்ததை முதலில் வாசிக்காது தவற விட்டேன். பின்னர் அபிதீன் செய்த தகவல் செய்தார். கஷ்டமாக இருந்தது. மனவலி! நிஜத்தை எதிர் கொள்ள முடியவில்லை!

கவிஞர் மாலதியை நான் சந்தித்தது இல்லை. அவரது இறப்பு குறித்த திண்ணைத் தகவலில், மாலதியின் புகைப்படத்தை பாவா ண்ணன் பிரசுரித்திருந்தார். முதன் முதலில் அவரை அடையாளம் கண்டுகொண்ட நேரம் அதுதான்! ஆனால், அவர் இல்லை! காலமும், யதார்த்தமும் நம்மிடையே ஜாலம் காட்டுவதை விடவேவிடாது.

கவிஞர் மாலதியின் கவிதைகளும், கட்டுரைகளும் எனக்குப் பிடிக்கும். என்னுடைய எழுத்துகளும், கவிதைகளும் அவருக்கும் பிடிக்கும். என் மெயில் முகவரியில் அவர் பரிமாறிக்கொண்ட சில கடிதங்கள் அதை மட்டுமே பேசுபவை அல்ல. இலக்கியம் குறித்த உரத்த சிந்தனைகள் அவரது கடிதத்தின் ஆக்ரமிப்பாக இருக்கும்!

நம் கவிஞர்களில், எனக்கு பிரம்மராஜனை பிடிக்கும் அதே அளவுகோலில் கவிஞர் மாலதிக்கும் அவரைப் பிடிக்கும்! ஆபிதீனின் எழுத்தில் நான் ஈர்ப்பு கொண்டவன் என்றால் அவரும் அப்படிதான்! சரியாகச்சொன்னால், அது இன்னும் கூடுதல். இலக்கிய அரசியல் எனக்கும் ஆகாதது மாதிரியே அவருக்கும் ஆகாது.

நான் மதித்த என் சமகாலக் கவிதைக் கலைஞர்களில் அவரும் ஒருவர். பெண் கவிஞர்கள் வரிசையில் மாலதியை தவிர்க்கவே முடியாது. நட்சத்திர ஆளுமைக் கொண்டவர். அவரது கலைநுட்ப விஸ்தீரணம் மலைப்பை நிகழ்த்துவதாகவும் இருக்கும்!

விடுதலை எப்பவுமே கவிஞர்களுக்கு இஷ்டமான ஒன்று. இன்னும், கடல், மலை, வனம், வானம், நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் என்று தேடி திரிவதில் ஆர்வமும் கொண்டவர்கள். இயற்கையின் ஊடே பயணிப்பதில் அவர்களுக்கு அப்படி யொரு விடுதலைக் கொள்ளும் ஆர்வம்! அந்த வேகத்தில் அவர்கள் இல்லாத உலகத்தைக்கூட விட்டு வைக்கமாட்டார்கள்! கவிஞர் மாலதி புறப்பட்டுவிட்டார்! இன்றைக்கு அப்படியொரு பயணமாக!!

****

கவிஞர் மாலதியின் நினைவைப் போற்றுமுகமாகவும், அவருக்கு அஞ்சலி செய்யும் விதமாகவும் கீழே அவரது கவிதை ஒன்றை
பிரசுரித்திருக்கிறேன். நிலைக்கட்டும் அவரது கலை நுட்பமும். எழுத்தும்.

வலி
———-
மாலதி

யோசனைகளே முடிந்துபோன
வேலையில்லா அவஸ்தையில்
கடமைகளின் சிடுக்குகளில்
சக்களத்தி அறையின்
கிளுகிளுப்புகளில்
தூரங்களில் விலகிப்போன
ஈரங்களில் சமூக சோகங்களில்
போலி வேஷங்களில்
உடல் நலிவு அதிர்வுகளில்
காற்றுக்காய் நீருக்காய்
தேட்டைகளில்
பணவேட்டைகளில்
நல்லவரும் மிதித்து விட்ட
விபத்துகளில்
சுகம் நீ
வலிக்கூற்றின் அணுஅணுவே
நீ சுகம்
எலும்புக்குள் மஞ்ஞைக்குள்
சில்லிட்டு அறிவுத் திப்பிகளில்
புரையோடவிட்டு
வரும் வலியே நீ சுகம்.

***********
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்