சம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

தேவமைந்தன்


“சம்பங்கி பற்றி ஒரு பத்து வரிகள் எழுதிக் கொடுங்களேன்!” – கேட்டாலும் கேட்டார் நண்பர் கமலநாதன், அஞ்சல் துறையில் பணிபுரிபவர். சம்பங்கி என்ற சொல் தெலுங்குச் சொல்லோ என்று ஓர் ஐயம் எனக்கு முன்பிருந்தே இருந்துவந்தது. ஏனென்றால், இதைத் தெலுங்கில் ‘சம்பங்கிப் புவ்வு’ என்றழைப்பர்கள். பிரெஞ்சு மொழியில் ‘ஷம்பக்’(champac) என்றும் ஆங்கிலத்தில் ‘ஷம்பா’ (champa) எனவும் சமஸ்கிருதத்தில் ‘ஷம்பகா, குஸூமா, ஸூவர்ணா’ என்றும் அழைக்கப்பெறும் தமிழ்ச் சண்பகப் பூ, ஹிந்தி, பெங்காலி, மகாராஷ்டிரம் ஆகியவற்றில் ‘ஷம்ப்பா’ என்றும் சொல்லப்படுகிறதாம். ஏன் இவ்வளவு ஆராய்ச்சி என்கிறீர்களா?

எழுத்தாளர் ப.ரா.கலாவதி சொன்னார்: “திரு கமலநாதன் கேட்டது சண்பக மரத்தையோ பூவைப் பற்றியோ என்று எனக்குத் தோன்றவில்லை. சம்பங்கி என்றுதானே சொன்னார். சம்பங்கி என்று சொன்னால் அது சம்பங்கிப் பூங்கொடிதான். சம்பங்கிக் கொடிப்பூக்கள் பழுப்பு மஞ்சளும் இலேசான பச்சையும் கலந்த சின்னச் சின்னப் பூக்கள், கொத்தாகப் பூக்கும். கமகம என்று ஆளைத் தூக்கும் வாசனை உடையது சம்பங்கி. அதன் வாசனையை முகர்ந்து பொறாமைப்பட்டே, “சம்பங்கிக் கொடி வளர்க்காதீர்கள், நல்ல பாம்பு தேடி வரும்!” என்று நம் புண்ணியவான்கள் வீடுகளின்மேல் செழித்துப் படரும் சம்பங்கிக் கொடியைப் பிடுங்க வைத்துவிடுவான்’கள்!” என்று.

குடும்ப மருத்துவர் டாக்டர் தமிழவேங்கையிடம் போய்க் கேட்டேன். ‘‘மிஷேலியா சம்பகா’[Michelia Champaca] என்று இதைச் சொல்வார்கள். ‘ம்யூரேன்டியாக்கா’ என்ற மருந்து இதிலிருந்து செய்யப்படுகிறது. சம்பங்கி என்பது சண்பகம் என்று சொல்லப்படும் மரம்தான் இது. நம்ம ஊர்போல் அல்லாமல், நேபாளத்திலும் வங்காளத்திலும் அசாமிலும் மியான்மாரிலும் மிக உயரமாக வளர்வதுடன் ஆண்டு முழுவதும் பசுமையாகவே காட்சியளிக்கும். இதன் வேர், வேர்ப்பட்டை, பட்டை(bark), இலைகள், பூக்கள், பழங்கள், இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் எல்லாமே மருந்து செய்யப் பயன்படுபவை, முறைக்காய்ச்சல் முதலான பல்வேறு நோய்களைப்போக்கப் பயன்படுபவை” என்று கூறினார்.

சண்பகராஜன் கதை என்று கிராமத்தில் சொல்வார்கள். அருமையான கதை.

மஞ்சுளா என்ற பெண், இளவரசி. அவளுக்கு ஏழு அண்ணன்மார். சிறிய வயதிலேயே பெற்றோரை இழக்கிறார்கள். கடவுளருளால் அவர்கள் மிக நல்லபடி வளர்ந்து, வல்லவர்களாகி விடுகிறார்கள். ஏழு அண்ணன்மாரும் திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள். அண்ணிமார்கள், அரண்மனை இல்லத்துக்கு வருகிறார்கள். கடைசி அண்ணியைத் தவிர்த்து மற்ற ஆறு அண்ணிகளும் இவள்மேல் வெறுப்பைக் கக்குகிறார்கள். ஒருநாள், அண்ணன்மார் இல்லாதபொழுது அந்த முதல் ஆறு அண்ணிகளும் மஞ்சுளாவின்மேல் அடாப்பழிபோட்டு அரண்மனை இல்லத்தைவிட்டே விரட்டி விடுகிறாற்கள். “முடிந்தால் சண்பகராஜனைக் கல்யாணம் செய்து கொள்; பிறகு வீட்டுக்கு வா! கல்யாண ஏற்பாடுகள் நடக்கும் பொழுது, எங்களை வரவழைத்து மனைக்கட்டைகளில் அமர வை; உன்னிடம் அன்பு செலுத்திய கடைசி அண்ணியை, மணிகளால் ஆன மனைக்கட்டையில் உட்கார வை; அப்பொழுது உன்னை ஏற்றுக்கொள்கிறோம்!” என்று வேறு சொல்லி விடுகிறார்கள். கடைசி அண்ணியின் மறைமுகமான உதவியுடன் எப்படி சண்பகராஜனை மஞ்சுளா மணந்துகொண்டு, கொடிய ஆறு அண்ணிகள் போட்ட நிபந்தனையை நிறைவேற்றி, தன் கடைசி அண்ணியைக் கவுரவித்து, முதல் ஆறு அண்ணிகளுக்கு, அன்பு என்றால் என்ன என்ற பாடம் புகட்டுவது இனிய நீண்ட அருமையான கதை. கிராமத்துக் கதைசொல்லிகள் சொல்லக் கேட்க வேண்டும். அடாடா! என்று இருக்கும். இந்த ‘சண்பகராஜன் கதை’யினையே ‘சந்தனராஜன் கதை’ என்று பண்டித நடேச சாஸ்திரி அவர்கள் தம் ‘திராவிட நாட்டுக் கதைகள்’ என்ற 1865ஆம் ஆண்டு சென்னையில் வெளியிடப்பெற்ற தொகுப்பில் சேர்த்திருந்ததாக ஆ.சிங்காரவேலு முதலியார் அவர்கள் தம் அபிதான சிந்தாமணி(1910ஆம் ஆண்டு முதற்பதிப்பு) தொடர்பான கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

சண்பகராஜன் கதையில் உள்ள மிக முக்கியமான போதனைகள் இரண்டு:
1. எவ்விதமான மாயையும்[மாயைகள் 2. ஜெகமாயை,சுய/ஸ்வய மாயை] அன்பு கொண்டவர்கள் முன் வெல்லாது.
2. வஞ்சகம் மிக்கவர்கள், தங்களைத்தாமே காத்துக் கொள்ளவேண்டும். உள்ளன்புடன் மற்றவர்களுக்கு உதவுபர்களை ‘அறியாதது’ (The Unknown) காக்கும்.[இந்த வலியுறுத்தலை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘அறிந்ததனின்று விடுதலை’/Freedom From The Known என்ற புத்தகத்தில் மட்டுமே காணமுடியும். இந்தப் புத்தகத்தின் ஓரியண்ட் லாங்மன்ஸ் மொழிபெயர்ப்பு, ராஜம் என்பவர் மொழியாக்கம் செய்தது, மொழியாக்கம் என்பதற்கே ஓர் உன்னதமான உதாரணம். பெங்களூர் மகாத்மா காந்தி வீதியில் வாங்கிய இந்த அரிய மொழியாக்கத்தை நோட்டமிட்டு ‘புத்தக உடைமை விரும்பி’ யாரோ ‘சுட்டு விட்டார்கள்.’ நல்லவேளையாக நூல்வயணத்தைக் குறித்து வைத்திருந்தேன்..]
****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்