கடித இலக்கியம் – 24

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

வே. சபாநாயகம்


கடிதம் – 24

நாகராஜம்பட்டி
12-12-80

அன்புள்ள சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தங்கள் கடிதம் கிடைத்தது. Slideகள் அனைத்தும் பத்திரமாகக் கிடைத்தன. அவை கிடைத்த அன்றே, 8ஆம் தேதி திங்கள் இரவே தங்களுக்குக் கடிதம் எழுத நினைத்தேன். வேலைகள் இழுத்துக் கொண்டு விட்டன. இங்கே, புறக்கடை வாசற் படிக்கு வடக்குப்புறம் ஒரு சிறு கொட்டகை விழுந்துள்ளது. அதில் மகாலக்ஷ்மி என்று ஓர் எட்டுமாதக் கன்றுக் குட்டி இப்போது படுத்து அசை போட்டுக் கொண்டிருக்கிறது.

Slideகள் அனைத்தும் மிக அழகாக இருந்தன. எல்லோரும் ஒரு குழந்தையின் உற்சாகத்தோடும் ஆவலோடும் அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டோம். அன்றே, நகரத்துக்கு எடுத்துச் சென்று வீட்டில் அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா எல்லோருக்கும் காட்டினோம். எல்லோருக்கும் பெருமையாய் இருந்தது. நீங்கள் நமது ஞாபகார்த்தங்களை ரொம்ப rich ஆக அலங்கரித்திருக்கிறீர்கள். மற்ற slideகளையும் தங்கள் காமிரா வண்ணம் பூராவையும் காண ஆசை. மற்றவற்றை நேரில் பார்ப்போம்.

தங்களுக்கு நான் முன்பு எழுதியது, நான் எழுத நினைத்த கடிதத்தில் கால்பாகம் தான். மலையனுபவம் பற்றி ஒன்று, எழுத்து சம்பந்தமாக ஒன்று, JK பற்றி ஒன்று – என்று தொடர்ந்து பகுதி பகுதியாகக் கடிதங்கள் எழுதலாம் என்று நினைத்தேன். அந்த ஒரு கடிதம்தான் எழுத முடிந்தது.

துணைவியாரும் குழந்தைகளும் நீங்கள் இங்கு எடுத்த போட்டோக்களைப் பார்த்து என்ன சொன்னார்கள்? மலையில் எடுத்த காட்சிகள், தங்கள் காமிராவுக்குக் கொள்ளை வேட்டையாய் இருந்திருக்குமே! ஆர்வத்துடன் பார்த்தார்களா? ஜவ்வாது மலையைப் பற்றி ஒரு சுமாரான சித்திரம் அவர்களுக்குக் கிடைத்ததா?

நாம் லாரியில் போனோமே, அப்போது சில எடுத்திருக்க வேண்டும். தாங்கள் பிரின்ஸ்நீலுடன் பேசிக் கொண்டிருந்ததில், கொஞ்சம் சுற்றிலும் கூர்மையாகக் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். பசுமை நிறமான ஒரு சொர்க்கத்தில் நாம் அப்போது சஞ்சாரம் செய்து கொண்டிருந்தோம். காவலூர் கோபுர உச்சியில் எடுத்தவை எப்படி உள்ளன?

மத்தியில், நான், JK ரஷ்யாவிலிருந்து திரும்பிய புதுசில் மறுபடியும் ஒருமுறை சென்னை சென்று வந்தேன். அந்தமுறை பத்து நாட்கள் அங்கு தங்கினேன்.

போன நவம்பர் – 27ல், வெள்ளக்குட்டை உயர்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்றத் துவக்க விழாவிற்குப் போய் பேசினேன். பள்ளி மாணவர்களிடம் பேசுவது சிரமமாய்த்தான் உள்ளது. நம், வகுப்பு மாணவர்களிடம் பேசுவது மிக எளிது; வெகு ஆனந்தம். பள்ளி மாணவர்கள் என்கிற போது, மாணவர்களுக்குள்ளேயே இருக்கும் வயசு வித்தியாசங்கள், அந்த வித்தியாசங்களுக்கேற்ற மாறுபாடான சுவைகளை வரிசையாக நமக்கு நேர்கிற நிர்ப்பந்தம், அதன் தவிப்பு, நமக்கும் அவர்களுக்குமே உள்ள வயசு வித்தியாசம் – இவை கலந்த அனுபவம் சிரமமாகத் தான் தெரிந்தது.

ஜனவரியில் பாரதி விழாவிற்கா அழைக்கிறீர்கள்? பள்ளி மாணவர்களிடம் தானே பேச வேண்டும்? அவர்களும் அதிகம் எதிர்பாராதிருக்க, நீங்களும் எதிர்பாராதிருக்க வேண்டுகிறேன். ஒத்திப் போட்டால் மகிழ்ச்சியே.

ஆனால், உங்களையெல்லாம் பார்ப்பது என்பது தெவிட்டாத மகிழ்ச்சி தருகிற விஷயம். அந்த மகிழ்ச்சியின் பொருட்டு எதுவானாலும் நடக்கட்டும்!

வெள்ளக்குட்டையில் ஆறுமுகம் குடும்பத்தினர்க்கு, தங்கள் மின்னல் வேக visit பற்றிக் குறைதான். ஓரிரு நாட்கள் அங்கு தங்கியிருந்தால், அவர்கள் மகிழ்ந்து போனதற்கு எல்லை இருந்திருக்காது. எல்லா வீடுகளுக்கும் எத்தனையோ விருந்தினர் கள் வருகிறார்கள். ஆனால் தங்களின் அன்னியத் தன்மை அழிந்து, மிக அன்னியோன்யமாக ஒரு வீட்டின் அங்கத்தினர்கள் அனைவராலும் மதிக்கப்பட்டும் நேசிக்கப்பட்டும் எடுத்துக் கொள்ளப் படுகிற மனிதர்கள் அபூர்வமான எண்ணிக்கையில் உள்ளவரே ஆவர். அடுத்தமுறை நீங்கள், வெள்ளக்குட்டையில் வாசலில் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து நாள்பூரா பேசிக் கொண்டிருக்க வேண்டும். அந்த மாதிரி வரவேண்டும்.

இந்தப்பக்கம் மழை மிகவும் ஏமாற்றி விட்டது. கால்நடைகளின் தீவனத்துக்கே பெரும்பாடு. இந்தக் காலத்தில் நான் கன்று வாங்கியுள்ளேன். ஆனால், தவறாமல் அதன் வயிற்றை நிரப்புகிறேன். நானே மேய்க்கிறேன். நானே போய்ப் புல் பிடுங்கி வருகிறேன். புல்லில் எத்தனை ஜாதிகள் இருக்கின்றன தெரியுமா? ஓ, மறந்து போனேன், நீங்கள் காவிரிக்கரை ஊரில் பிறந்தவராயிற்றே! கொல்லன் தெருவில் ஊசி விற்கப் பார்க்கிறேன்.

கன்றுக்குட்டி சம்பந்தமான அனுபவங்கள் பற்றி ஒரு தனிக்கடிதம் எழுதுகிறேன்.

தங்கள் கடிதம் மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அடடா! இந்த மாதிரி, அன்பான மனிதர்களின் சந்திப்புகளோடும், அந்தச் சந்திப்பின் மகிழ்ச்சியின் நல்லடையாளங்களோடும் நிரம்பி நிரம்பிச் சென்று கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

– பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்