அனுபவங்களும் ஆற்றாமைகளும் – இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள்- பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

வளவ.துரையன்


பட்ட அனுபவங்கள் பட்டென்று வெடித்துக் கிளம்புவதே படைப்பு. படைப்பாளனின் அனுபவத்தை படைப்பின் வழியே வாசகன் உணர்ந்து ஒன்றுவதே படைப்பின் வெற்றி. இதில் உள்ள பதினேழு படைப்புகளும் பாவண்ணன் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு தளங்களில் அனுபவித்த சூழல்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளன.

இவற்றில் பெரும்பாலும் பாவண்ணனும் அவரது துணைவியாரும் மகனும் இடம்பெறுகிறார்கள். ஆனால் இவற்றை அவர்களுடைய கதைகளாக மட்டுமே கருத முடியாது. ஒரு நிமித்தமாகமட்டுமே இவர்கள் இடம்பெறுகிறார்கள். எல்லாச் சம்பவங்களுமே ஏதோ ஒருவகையில் வாழ்வின் புதிர்களைப் புரிந்துகொள்ளும் திசையைநோக்கி நம்மை அழைத்துச் சென்றுவிடுகின்றன. உறைகிணறுகள் போல ஒவ்வொரு சம்பவத்தின் ஊடாகவும் பல உண்மைகள் உறைந்துகிடப்பதை வாழ்வனுபவத்தை முன்வைத் து விளங்கிக்கொள்ளும் முயற்சிகளாக இப்படைப்புகள் காணப்படுகின்றன. இந்தப் பயிற்சி நம்மையும் நம் வாழ்வில் நடந்தேறிய சம்பவங்களை முன்வைத்து அசைபோடவும் உண்மைகளைக் கண்டடையவும் உதவிசெய்கின்றது. ஒரு வாசகனை அந்நிலையிலிருந்து படைப்பாளி என்கிற நிலைக்கும் பிறகு உண்மையைக் கண்டடைய விழையும் தத்துவ நாட்டம் கொண்டவன் என்கிற நிலைக்கும் உயர்த்தும்வகையில் பாவண்ணன் எழுதியுள்ள இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. எனவே, கட்டுரைத்தன்மையும் சிறுகதைத்தன்மையும் கலந்த இப்படைப்புகளைப்பற்றி பாவண்ணன் தன் முன்னுரையில் கட்டுரைகள் என்றே குறிப்பிட்டாலும் அவற்றின் பரிமாணங்கள் வெவ்வேறு தன்மை உடையவை என்றே சொல்லவேண்டும்.

தான் எழுதிய தாலாட்டுப்பாட்டைத் தேடி அது எழுதப்பட்ட குறிப்பேடு எந்த அட்டைப்பெட்டியில் இருக்கிறதோ என்று சோகப் பெருமூச்சுவிடும் “இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள்” என்னும் முதல் படைப்பிலிருந்து கலைஉணர்வே இல்லாத கணவனைத் திருமணம் செய்துகொண்ட பெண் படும் சோகத்தைக் கூறும் “அகமும் புறமும்” கடைசிப் படைப்புவரை எல்லாவற்றிலும் ஒருவித துன்பஇழை ஊடாடுவதை உணரமுடிகிறது. நினைத்த வாழ்க்கை அமையவில்லையே என்னும் துன்பம். அமைந்த வாழ்க்கையை இனிமையாக வடிவமைத்துக்கொள்ள முடியவில்லையே என்னும் துன்பம்.

உலகம் வணிகமயமாக மாறிவருகிறது. நுகர்வுக் கலாச்சாரம் விபரீதப் பாதையை விரித்து வாவாவென்று அழைக்கிறது. மழைநீரில் காகிதப்படகு விடுவதும் முருங்கைக்கீரை கேழ்வரகு மாவு உண்பதும் ஏரிகளில் மீன்பிடிக்கும் விளையாட்டும் கொக்குகளின் அணிவகுப்பும் கால ஓட்டத்தில் எங்கோ கண்காணாமல் மறைந்துவிட்டன. “வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டு ரசிக்கப் பார்வையாளர்கள் இல்லாததால் யாருக்குமே மகிழ்ச்சியைத் தராத அல்லது யாராலும் திரும்பிக்கூடப் பார்க்கப்படாத ஒன்றை வீணாக எதற்குப் படைக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் இயற்கை வண்ணத்துப்பூச்சிகளை உருவாக்கவில்லை” என்கிறார் பாவண்ணன். “கடைவிரித்தேன், கொள்வாரில்லை” என்று இயற்கையும் தன் படைப்புகளை மடைமாற்றிச் சுருக்கிக்கொண்டால் என்ன ஆகும் என்று யோசிக்கவைக்கும் இந்தப் புதிய பார்வை இனிமேலாவது நம்மை எழுப்பவேண்டும்.

சுனாமியால் மரணம், மரண தூதர்கள் வருகை, மரண தண்டனைக் கைதி, ஒரு நண்பரின் மரணம், தன் தோழியிடம் தன் கணவன் அன்பு செலுத்தி வாழவேண்டுமென விரும்பும் மனைவி மேற்கொள்ளும் மரணம் என்று விரித்துரைக்கப்படும் பல்வேறு இழப்புகள் எல்லாம் சோகத்தை மனத்தில் பதியவைத்து அவற்றின் நினைவுகளை வடுக்களாகப் பதியவைத்துச் செல்கின்றன.

ஒவ்வொருவரும் புத்தகம் வாங்கவேண்டும், வாங்கியதைப் படித்தபின் பாதுகாக்கவேண்டும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு முடிந்தமட்டும் உதவவேண்டும் என்ற செய்திகளை தம் அனுபவங்களோடு இணைத்துக் கதையைப்போல களைப்பின்றிப் படிக்கும்வகையில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியுள்ளார் பாவண்ணன். துளி தவறினாலும் முழுக்கப் பிரச்சாரமாக சரிந்துபோய்விடும் ஆபத்தைப் பாவண்ணன் வெகு லாவகமாக கடந்துள்ளார்.

இராவணன் சடாயுவை வீழ்த்தும் ஓவியம் இராவணனுடைய சரிவையும் இயேசுவின் கடைசி விருந்து ஓவியம் ஒரு மாமனிதன் தன்னையே பலியாக வழங்குவதையும், குதிரைமீது வலம்வரும் நிர்வாண அழகியின் ஓவியம் அவளுடைய தியாகத்தையும் சுட்டிக்காட்டும் விதங்களை பாவண்ணன் தனக்கே உரியமுறையில் ஊடுருவிப் பார்ப்பது அவருடைய வித்தியாசமான பார்வைக்கு விளக்கமளிக்கிறது. குறுந்தொகையின் குப்பைக்கோழியார் பாடல், மனத்தில் தைப்பதுபோன்ற திருக்குறள் வரிகள், வியப்பூட்டும் புறநானு¡ற்றுக்காட்சிகள் என மரபிலக்கியப் பக்கங்களிலிருந்து ஏராளமான சின்னச்சின்ன வரிகளுடன் பாவண்ணன் தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கும் விதமும் மனத்துக்கு நிறைவளிக்கிறது. “அழகியும் மிருகமும்” கதையைச் சொல்லத் தொடங்கும் படைப்பும் சாந்தலை நாவலைச் சொல்லித் தொடங்கும் படைப்பும் வாசகர்களுடைய எதிர்பார்ப்பை கட்டுப்படுத்திவைக்கின்றன. “ஒரு தப்பு மட்டுமே ஒருத்தவங்கள அளக்கற அளவுகோலா மாறிடக்கூடாது. நம் மனம் கடுமையான இரைச்சல்களுக்கு நடுவிலும் அமைதி கொள்ளவேண்டும். நாம பேதைன்னு நினைக்கிறவங்க பார்வையில நாமளும் பேதையா படலாம்” என்பனபோன்ற அனுபவ வரிகள் ஆங்காங்கே மின்னலிடும் இத்தொகுப்பு சமீபத்திய நூல்வரவுகளில் முக்கியமான ஒரு நிகழ்வாகும். புதுமைப்பித்தன் பதிப்பகம் இத்தொகுப்பை மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது.

( இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள்- கட்டுரைத் தொகுப்பு, பாவண்ணன். புதுமைப்பித்தன் பதிப்பகம், நியுடெக் வைபவ், 57ஏ,53வது தெரு, அசோக் நகர், சென்னை-83.விலை.ரூ70 )

valavathuraiyan2006@yahoo.co.in

Series Navigation

வளவ.துரையன்

வளவ.துரையன்