ஆசை பற்றி அறையலுறும் வாசகப் பூனையெழுப்பும் ஓசைகள் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யரின் கம்பராமயண உரைத் தொகுப்புகளுக்கு அறிமுகம்)

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

பி.கே. சிவகுமார்


மிலிட்டிரி பச்சை கலரில் பைண்டு செய்யப்பட்ட தடிப்பான அட்டை. அட்டையின் முன்னும் பின்னும் எதுவும் பிரசுரிக்கப்படவில்லை. அல்லது, பிரசுரிக்கப்பட்டிருந்து காலப்போக்கில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதா ? இரண்டு அட்டைகளையும் இணைக்கும் இடைவெளியில்

—-

கம்பராமாயணம்

பால

காண்டம்

உரையுடன்

—-

என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இதில் பால காண்டம் மட்டும் அளவில் பெரிய எழுத்துகளில். கீழே வந்தால், Rs. 5-0-0 என்று ஒரு வரி.

அட்டை புத்தகத்திலிருந்து பிரிந்து வந்திருக்கிறது. புத்தகம் ஊரில் அவன் வீட்டில் இருக்கிற அவன் தாத்தாவின் புத்தக அறையான திண்ணை கொட்டடியின் வாசத்தைக் கடல் கடந்து வந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ஊரில் அவன் வீட்டின் முன்னால் இரண்டு பெரிய திண்ணைகள். விருந்தினர் வரும்போது அவர்களில் ஆண்கள் படுத்துறங்கவும், கோடை காலத்தில் வீட்டில் உள்ள ஆண்கள் படுத்து உறங்கவும், பகற்பொழுதுகளில் குழந்தைகள் ஏறிக் குதித்து விளையாடவும் அந்தத் திண்ணைகள் வெகுவாகப் பயன்பட்டன. இரண்டு திண்ணைக்கும் இடையில் உள்ள நடையில் ஒரு நாற்காலி போட்டு தாத்தா மாலை வேளைகளில் உட்காருவதும் வழக்கம். ஒரு திண்ணையின் முடிவில் இருந்த அறை திண்ணை கொட்டடி என்றழைக்கப்பட்டே அவன் சிறுவயதிலிருந்து கேள்விப்பட்டிருக்கிறான். அந்தக் காலத்தில் அது தாத்தாவின் ஸ்டடி ரூமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனுள் அமர்ந்து தாத்தா படித்தோ வேலை செய்தோ அவன் பார்த்ததில்லை. இவனுக்கு நினைவு தெரிந்தபோது தாத்தா ரிடையர் ஆகிவிட்டார். அவர் வேலையில் இருந்த காலத்தில் அந்த அறையை அவர் பயன்படுத்தியிருக்கலாம். அதனுள் கண்ணாடிக் கதவுகள் இட்ட ஒரு பெரிய ஆளுயரத்தைவிட அதிக உயரமான பீரோ முழுவதும் புத்தகங்கள் வைத்திருந்தார் தாத்தா. இந்தப் புத்தகமும் அந்தப் பீரோவினுள் வாசம் செய்ததுதான்.

கண்ணாடி பீரோ இல்லாமல், பீரோவுக்கு வெளியே கட்டுகட்டாய் கட்டப்பட்ட பழைய பஞ்சாங்கங்கள், பிற முக்கியம் குறைந்த புத்தகங்கள் என்று அந்தச் சிறிய அறை நிரம்பிக் கிடக்கும். ஒரு பக்கத்தில் இரண்டு டிரங்க் பெட்டிகள். அவற்றுள் திருப்பதி உண்டியல்கள் இருக்கும். இரண்டு உண்டியல்கள். உண்டியல் என்றால் ஒரு சொம்பின் வாய்க்கு மஞ்சள் துணி கட்டி ஓட்டை போட்டு வைத்திருக்கும். அவ்வளவுதான். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு புரட்டாசி சனிக்கு அந்த உண்டியலில் பாட்டியோடு சேர்ந்து அவனும் காசு போட்டிருக்கிறான். உண்டியல் எப்போதும் கனமாகவே இருக்கும். பல வருடங்கள் சேர்த்த உண்டியல் அது. தாத்தா தன்னுடைய ஷேவிங் செட் முதலிய உபகரணங்களையும் அந்தக் கொட்டடியினுள்ளே உள்ள சிறு அலமாரியில் வைத்திருப்பார். அந்த அலமாரியில் நிறைய பென்சில்களும் இருக்கும். ஷேவிங் செட் எடுக்கவும் வைக்கவும் போகும்போதெல்லாம் புத்தகங்கள் செல்லரிக்காமலும் பூச்சி அரிக்காமலும் இருக்கின்றனவா என்றும் தாத்தா பார்த்துக் கொண்டார் என்று பின்னாளில் தெரிந்தது. அந்த அறையில் ஒரு சிறு மேசையும், நாற்காலியும்கூட இருக்கும். அந்த அறைக்குப் போகும்போதெல்லாம் அந்த நாற்காலியில் உட்கார்ந்து சந்தோஷப்பட்டிருக்கிறான். படிப்பதுபோல கையில் கிடைப்பதை எடுத்து வைத்துக் கொண்டு ஒயில் காட்டியிருக்கிறான்.

தாத்தா இல்லாத நேரங்களில் திண்ணை கொட்டடியை அவசியத்துக்குத் திறக்கவும் மற்றவர்கள் – பாட்டி உட்பட – யோசிப்பார்கள். இவன் அதனுள் போகும்போதெல்லாம் ‘எதையும் கலைத்துப் போடாதே தாத்தா கோபிச்சுக்குவார் ‘ என்று இவனை எச்சரிப்பார்கள். தாத்தா அவனை இப்படி எதுவும் சொன்னதில்லை. சிவப்பு கலரில் எழுதுகிற பென்சில்கள் நிறைய வைத்திருப்பார் அவர். அவற்றைப் பரீட்சை பேப்பர்கள் திருத்தி மார்க் போடப் பயன்படுத்துவார். அவன் கேட்கிற கறுப்பு, சிவப்பு என்று பல வண்ணங்களில் எழுதும் பென்சில்களை எடுத்துக் கொள்ளச் சொல்வார். ஆனால், அவனைப் பென்சில் சீவ விடமாட்டார். ப்ளேடு ஷார்ப்பாக இருந்து பேரன் விரலை வெட்டிவிடுமென்ற கவலை. தான் ஷேவிங் செய்து முடித்ததும் பென்சில் சீவ என்று சேமித்து வைத்துள்ள ப்ளேடுகளில் ஒன்றை எடுத்து பென்சிலைத் தானே சீவித் தருவார். அவர் பென்சில் சீவுவது பார்க்க அழகாக இருக்கும். முதலில் எந்த இடத்தில் இருந்து சீவ ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த இடத்திலிருந்து பென்சிலைச் சுற்றி ப்ளேடால் ஒரு வட்டம் போட்டுக் கொள்வார். பின்னர் சீராக பென்சிலின் எல்லாப் பக்கங்களையும் அந்தக் கோட்டிலிருந்து ஆரம்பித்துச் சீவுவார். எதைச் செய்தாலும் தாத்தாவுக்கு அதில் ஒரு நேர்த்தி இருந்தது. புத்தகத்தைக் கையில் எடுத்ததுமே தாத்தாவின் நினைவுகள் மனதில் அலையடிக்க ஆரம்பித்து விட்டன அவனுக்கு.

திண்ணை கொட்டடிக்குத் தாத்தாவின் வாசமா, தாத்தாவுக்குத் திண்ணை கொட்டடியின் வாசமா என்று அவன் பால்யகாலத்தில் தன்னைக் கேட்டுக் கொண்டதுண்டு. அந்த வாசத்துக்கு ஒற்றை நிறமோ குணமோ இல்லை. குறிஞ்சி நிலப் பெண்கள் இடிக்கிற வாசனைப் பொடி, குங்குமப் பூ, கோஷ்டம், ஏலம், சந்தனம், சிந்தூரம், நரந்தம், சுரபுன்னை, கொன்றைப்பூ, வேங்கைப் பூ, கோங்கிலவம், பச்சிலை, கண்டில், வெண்ணெய்ப் பூண்டு, மலைத்தேன் ஆகியவற்றுடன் கூடிய நறுமணம் வீசுகிற தன்மையுடையது என்று சரயு நதியைப் பற்றிக் கம்பன் பாடினானே, அப்படி – அந்த வாசம் பல வாசங்களுக்குள் தாத்தாவின் ஆளுமையையும் அடக்கிக் கொண்டதாய் இருக்கிறது. தாத்தா போய்ச் சேர்ந்தபின்னும் அவர் நினைவாக நின்றுவிட்ட வாசம் திண்ணைக் கொட்டடியில் இன்னமும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. தாத்தாவுக்குப் பின்னும் நிலைக்கிற வாசமென்பதால் திண்ணை கொட்டடியின் வாசமே தாத்தாவின் மீதும் படிந்திருந்ததாக அவன் பின்னாளில் முடிவு செய்து கொண்டான். புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தான். நிறைய பக்கங்கள் தனித்தனியே வந்தும், முனைகளில் உதிர்ந்தும் பக்கங்கள் உடைந்தும் போயிருக்கின்றன. உடைந்து போன அப்பளம் ஞாபகம் வருகிறது. பக்கங்கள் அடர்த்தியான பழுப்பு நிறமேறியிருக்கின்றன. காகிதத்தின் ஒரிஜினல் நிறமே அதுதானா அல்லது காலப் போக்கில் தாள்கள் மக்கிப் போய் ஏறிய பழுப்பா என்று தெரியவில்லை.

உடைந்தும் கிழிந்தும் போனவற்றை அவற்றுக்குரிய பக்கங்களில் பத்திரமாகச் சேகரித்து வைத்திருக்கிறார் தாத்தா. முதல் பக்கத்தில் தமிழில் தாத்தா இட்டிருக்கிற கையெழுத்தைப் பார்க்கிறான். எந்தப் புத்தகம் வாங்கினாலும் அதன் முதல் பக்கத்தில் பெயர் எழுதிவிடுகிற தன் வழக்கம் தாத்தாவிடமிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறான்.

முதல் பக்கத்தைத் தாண்டி உள்ளே போனால், இரண்டாம் பக்கத்தில் ஓர் அட்சய ஆண்டு கார்த்திகை மாதம் புத்தகம் வெளியிடப்பட்டதை அறிய நேர்கிறது. கையில் பஞ்சாங்கம் இருந்தால் அந்த அட்சய ஆண்டு ஆங்கில வருடத்தில் எந்த வருடம் என்று பார்த்து விடலாமே என்ற எண்ணம் ஓடுகிறது. பஞ்சாங்கம் வைத்துக் கொள்கிற பஞ்சாங்கமாக இங்கே வாழ்க்கை இல்லை என்று சொல்லிக் கொள்கிறான். ஆனாலும், பஞ்சாங்கத்துக்கு இந்த மாதிரி பலன்களும் இருக்கின்றனவே என்றும் தோன்றுகிறது. தமிழ் வருடங்களை அறியப் பஞ்சாங்கம் எதற்கு ? இண்டர்நெட்டிலேயே கூட அவை இருக்கின்றனவே என்ற கேள்வியும் ஓடுகிறது. வருடாவருடம் தாத்தா மறக்காமல் வாங்கிய ஆனந்தபோதினி பஞ்சாங்கமும் ( ‘ஆனந்த போதினி பின்னர் வாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம் என்று பெயர் மாறியதா ? வாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம் பின்னர் ஆனந்தபோதினி பஞ்சாங்கம் ஆனதா ? ‘), குமார விகடன் காலண்டரும் அடிமனதில் தங்கிப் போய் தனக்குள் பஞ்சாங்கத்தின் நினைவை இந்த இடத்தில் எழுப்பியிருக்கிறது என்று அந்த நினைவைப் பகுத்தாய்ந்து கொள்கிறான்.

தாத்தா நீதிகட்சியின் சார்பாக அந்தக் காலத்தில் உள்ளூர் தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர். பின்னர் – திராவிட இயக்கங்கள் மீது அபிமானம் உடையவராக இருந்தவர். அபிமானம் என்றால் எப்படிப்பட்ட அபிமானம் ? 1960-களில் அவன் தந்தையார் வீட்டு திண்ணையில் நண்பர்களுடன் சேர்ந்து, இரவு நேரத்தில் நேருவின் சோசலிஸக் கொள்கைகளைப் பாராட்டிப் பேசுவாராம். தாத்தாவுக்கோ திராவிட இயக்க அபிமானம். அவன் தந்தையார் அப்படி சோஷலிஸம், இடதுசாரியம் என்று பாராட்டிப் பேசுவதைக் கண்டு பொறுக்க முடியாமல், ஒருநாள் இரவு அவன் தந்தையார் திண்ணையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, விறுவிறுவென்று வந்து ஒன்றும் சொல்லாமல் திண்ணையில் எரிந்து கொண்டிருந்த பல்பைக் கழட்டிக் கொண்டு போய்விட்டாராம். அப்படிப்பட்ட அபிமானம். ஆனாலும் தாத்தா தொடர்ந்து பஞ்சாங்கத்தை வாங்கியதற்கு என்ன காரணம் ? தாத்தாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. வேலை வணங்குவது எமக்கு வேலை என்று உழைப்பையும் வேலையும் குறிக்கிற வாசகத்தை அவர் தன் பெயர் போட்ட போஸ்ட் கார்டுகளில் அச்சடித்து வைத்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அவர் தமிழ் படித்த இடமும் ஊரில் அப்போது இருந்த வேல் கோயில்தான். அதனாலும் வேலின் மீது அபிமானமாக இருக்கலாம். வேல் கோயில் பெயர்கூட அவன் பிறப்பதற்கு முன்னரே மாறிப்போய், மேடையில் வேலாக நின்றிருந்த கடவுள் தண்டபாணி சுவாமிகளாகக் கோயில், பிரகாரம் என்று ஏகப்பட்ட வசதிகளுடன் அவதாரம் எடுத்து விட்டிருந்தார். ஆனால், தாத்தா தன் கடவுள் நம்பிக்கையை அதிகம் வெளிப்படையாகக் காட்டி அவன் பார்த்ததில்லை. அவர் பஞ்சாங்கத்தை அடிக்கடிப் பயன்படுத்தியும் அவன் பார்த்ததில்லை. பாட்டிதான் பெரிய பக்தை. சோமவாரத்திலிருந்து எல்லா விரதமும் இருந்தவர். நாள் நட்சத்திரம் என்று பார்த்தவர். அடிக்கடி பஞ்சாங்கத்தையும் அவர் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததை அவன் பார்த்திருக்கிறான். எனவே, பாட்டிக்காக வாங்கினாரோ என்று தோன்றுகிறது. தாத்தாவின் அரசியல் சார்பு எப்படியிருந்தபோதிலும், அவற்றை இலக்கியத்துள் கொண்டு வராமல், கம்பராமாயணத்தையும் பக்தி இலக்கியங்களையும் மதிக்கிற, ரசிக்கிற முதிர்ச்சியை அவருக்குத் தந்தது அவரின் முறையான தமிழ்க் கல்வியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறான். பரம்பொருள் ஒன்றாயிருப்பதுபோல சரயு நதியின் வெள்ளம் ஒன்றாக இருந்தாலும், பல சமயத்தவர் தத்தம் வசதிக்கு ஏற்ப பரம்பொருளைப் பலவாகச் சொல்வதுபோல, சரயுவும் ஏரி தடாகம் என்று பல இடங்களில் பொருந்திப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது என்று கம்பன் சொன்னதுபோல, பரம்பொருள் உண்டென்றும் அது ஒன்றென்றும் அறிய தாத்தாவுக்குத் தமிழ் உதவியது என்கிற நினைப்பு அவனுக்கு ஆனந்தம் தருவதாக இருக்கிறது.

தாத்தா தமிழ் வித்வானாக இருந்தவர். தமிழ்ப் பண்டிட் என்றால் வேலை கிடைக்கும் என்பதற்காகப் படித்தவர் இல்லை. சொந்தத் தொழில் செய்து கொண்டு சும்மா இருக்கிற நேரத்தில் ஆர்வத்தில் படித்துப் பண்டிதர் பரீட்சையையில் தேறியவர். தொழில் நசித்துப் போய் குடும்பம் வறுமையிலும் கடனிலும் உழன்றபோது, அவர் பெற்ற வித்வான் பட்டமே அவருக்குத் தமிழாசிரியர் வேலை வாங்கித் தந்தது. உயர்நிலைப் பள்ளி ஒன்றின் தமிழாசிரியராக ரிடையர் ஆனார் தாத்தா. அவருடைய புத்தகம்தான் இது. அவர் ஞாபகமாக மட்டும் இதை அவன் எடுத்து வந்து வைத்திருக்கவில்லை. இந்தக் கம்பராமாயண உரையெழுதிய வை.மு. கோபால கிருஷ்ணமாசர்யர் பற்றி அவன் சிறுவயதில் தாத்தாவும் தந்தையாரும் சொல்லக் கேட்டிருப்பதும் இந்தப் புத்தகத்தை இப்படிப் பேணிக் காப்பதற்குக் காரணம். இடையில் பல ஆண்டுகள் இந்தப் புத்தகம் மறுபதிப்பு செய்யப்படாமலேயே போயிருந்ததையும் அவன் அறிவான். இந்த வை.மு. கோபால கிருஷ்ணமாசார்யர், தமிழின் அந்தக் கால நாவலாசிரியர் வை.மு. கோதைநாயகி அவர்களின் சகோதரர் என்றும் பின்னாளில் அவன் அறிந்தான். ‘வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் வடமொழியும் தமிழும் வல்ல பண்டிதர் ‘ என்று வையாபுரிப் பிள்ளை எழுதுதியது அவன் நினைவுக்கு வருகிறது.

அந்தக் காலத்தில் ராஜாஜியின் வியாசர் விருந்தை விழுந்து விழுந்து படிக்கிற – முக்கியமாக அந்தப் பதினெட்டு நாள் போர்க் காட்சிகளை விரிந்த கண்களுடன் வியப்பாகப் படிக்கிற – மாயாஜால உலகில் வாழ்கிற ஒரு குழந்தையாக அவன் இருந்தான். இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது ராஜாஜியின் மிகப்பெரிய சமூகப் பங்களிப்பு அந்தப் புத்தகமே என்று அவனுக்குத் தோன்றுகிறது. வியாசர் விருந்தை அவன் படிப்பதைப் பார்த்த அவன் தந்தையார் சக்ரவர்த்தித் திருமகனையும் படிக்கச் சொன்னார். அந்த ஏழாவது எட்டாவது படிக்கிற மாணவனுக்கு ஏனோ சக்ரவர்த்தித் திருமகன் அவ்வளவாக ஈர்க்கவில்லை. அப்போது – ஊரில் தாத்தாவின் திண்ணை கொட்டடியில் வில்லிபுத்துரார் பாரதத்துக்கான உரையும், கம்பராமாயணத்துக்கான நல்ல உரையும் இருக்கிறதாகவும் அவற்றைப் படித்தே தான் வளர்ந்ததாகவும் தந்தையார் சொல்லியது ஒரு செய்தியாக அந்த உயர்நிலைப் பள்ளி மாணவனுக்குத் தோன்றியது. அந்தப் புத்தகங்களை எடுத்துப் படித்துப் பார்க்கிற ஆர்வத்தை அது ஏனோ அப்போது அவனுக்கு ஏற்படுத்தவில்லை.

பின்னர் ஒன்பதாம் வகுப்போ பத்தாம் வகுப்போ படிக்கும்போது – கம்பரின் உலகம் யாவும் தாமுளவாக்கலும் என்ற பாடல் கடவுள் வாழ்த்துப் பாடலாகத் தமிழ்ப் பாடத்தில் இருந்தது. வெறும் கடவுள் வாழ்த்துப் பாடலாக மட்டும் இருந்திருந்தால் போகிற போக்கில் படித்துவிட்டுப் போயிருக்கலாம். தேர்வில் நான்கு மதிப்பெண்களைப் பெற்றுத் தருகிற மனப்பாடச் செய்யுளாகவும் அது இருந்ததால், வீட்டில் அந்தப் பாடலை சத்தமாகப் படித்து நெட்டுரு போட வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்பட்டான். ‘அன்னவர்க்கே சரணா ங்களே ‘ என்ற அந்தப் பாடலில் இறுதி அடியை அவன் மனப்பாடம் செய்வதைக் கேட்ட தாத்தா, அந்த அடிக்கு, சரண் நாங்களே என்றும் சரண் ஆங்களே (ஆகுங்களேன்) என்றும் இருபொருள் கொள்ள முடியும் என்பதைச் சொல்லித் தந்தார். பள்ளிக்கூடத்தில் அவனுடைய ஆதர்ச தமிழ் வாத்தியாராக இருந்தவர் கூட சரண் நாங்களே என்று பொருள் சொல்லிவிட்டு, கம்பர் கடவுளின் பெயர் எதையும் குறிப்பிடாமல் இதை எழுதியிருப்பதைச் சொல்லித் தந்ததோடு நின்றுவிட்டது புரிந்தது. அவர் மறந்து போயிருக்கக் கூடும் என்று அப்போது நினைத்துக் கொண்டன். அந்தத் தமிழாசிரியரும் தமிழார்வத்தில் குறைந்தவர் இல்லை. அவன் ஊரில் நடக்கிற கம்பன் விழா மலரை தயாரிக்கிற பொறுப்பை ஒவ்வொரு வருடமும் எடுத்துக் கொண்டவர். கம்பராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய ஒரு சிறுகதை பிரபல தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றில் முத்திரைக் கதையாக அந்தக் காலத்தில் வெளிவந்தது – கோபுலுவின் ஓவியத்துடன். ஆகையால், அடுத்த நாள் தமிழ் வகுப்பில், மறக்காமல் சரண் ஆங்களே என்ற இன்னொரு பொருளை ஆசிரியர் முன்னிலையில் எல்லார்க்கும் சொல்லி முகம் பூரித்துக் கொண்டான்.

அப்புறம் பள்ளிக் கல்வியிலேயே, ‘இந்த இப்பிறவிக்கிரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய் ‘ என்று சீதா பிராட்டி அனுமனிடம் சொல்லிச் சூடாமணியைத் தந்த சுந்தர காண்டத்தின் பகுதியையும் கற்றான். உள்ளங்கை நெல்லிக்கனி என்ற உவமையையும் அப்போது கம்பர் ஒரு பாடலில் சொல்லித் தந்தார். பின்னாளில், வையாபுரிப் பிள்ளை, அந்த இந்த ஆகிய சொற்கள் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் இல்லை, கம்பனில் இருக்கின்றன என்பது போன்ற ஆராய்ச்சி உண்மைகளைச் சொல்லித் தந்தார்.

கல்லூரிக்கு வந்த பிறகு அந்த ஊர் கம்பன் கழகம் நடத்துகிற பேச்சுப் போட்டிகளில் கல்லூரி சார்பாகக் கலந்து கொள்கிற வாய்ப்பு ஏற்பட்டது. போட்டிக்கான தலைப்புகள் கடைசி நேரத்தில் தரப்படும். அப்போது போட்டிக்குத் தயார் செய்து கொள்ள, தாத்தா வைத்திருந்த இந்தப் புத்தகங்கள் அருகில் இருந்தால் நல்லதாக இருந்திருக்குமே என்று தோன்றியிருக்கிறது. ஆனாலும், கம்பராமாயணத்தின் ஒவ்வொரு காண்டத்துக்கான உரையையும் ஊரிலிருந்து பல மணி நேர தொலைவில் இருக்கும் கல்லூரி விடுதிக்குச் சுமந்து கொண்டு வருவதில் இருக்கிற நடைமுறைச் சிரமங்கள் அந்த ஆசையை சாத்தியமில்லாமல் ஆக்கின. ஆனாலும் அந்தக் காலத்தில் படித்த நீதிபதி எம்.எம். இஸ்மாயில், அ.ச.ஞா ஆகியோரின் கம்பனைப் பற்றிய கட்டுரைகளும், வெகுஜன கைதட்டலுக்கிடையே ஆங்காங்கே நல்முத்துகள் தெளிக்கும் கம்பன் கழகப் பேச்சாளர்களின் பேச்சுகளும் கம்பனைப் பற்றிய அவன் அறிவை விசாலமாக்கின. பேராசிரியர்கள் ராதாகிருஷ்ணன், சத்தியமூர்த்தி, அறிவொளி, ஞான சுந்தரம் போன்றவர்களும் புலவர் அருணகிரி, சுதா சேஷய்யன், ராமலிங்கம் போன்றவர்களும் கம்பன் விழாவில் பேசும்போது கம்பன் கவி மீதிருக்கிற அபிமானத்தாலும் பார்வையாளர்களின் அங்கீகாரத்துக்கும் கம்பன் பாடல்களுக்குப் பல தற்குறிப்புகளை ஏற்றிச் சொல்வதாக அவனுக்குத் தோன்றியபோதும், கம்பராமாயணத்தின் எல்லாக் காண்டங்களிலும் இருக்கிற முக்கியப் பாடல்களை அவன் இப்படிப்பட்டவர்கள் மூலமே அறிந்து கொண்டான்.

பின்னர் வேலை கிடைத்து வாழ்க்கையில் செட்டிலான பின்னர் அதுவும் கடல் கடந்து வெளிநாட்டுக்கு வந்து ஜீவனோபாயத்தைப் பற்றிய கவலைகள் இல்லாத சூழ்நிலையில் மனம் கலை இலக்கிய ஆர்வத்தை மீண்டும் தோண்டியெடுத்தது. இணையத்தில் ஹரிகிருஷ்ணன் கம்பராமாயணம் பற்றி எழுதிய பல கட்டுரைகளைப் படிக்கிற வாய்ப்பு கிடைத்தது. கம்பனில் இருந்த ஆர்வத்தையும் கம்பனைப் பற்றிய தன் அறிவு எவ்வளவு குறைபட்டது என்ற உண்மையையும் அப்போது அவன் உணர்ந்தான். தாத்தாவிடமிருந்த கம்பராமாயண உரைகளை கையோடு கொண்டுவந்து வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை பிறந்தது. தந்தையிடம் சொல்லி பால காண்டத்தையும், சுந்தர காண்டத்தையும் மட்டும் நண்பர் மூலம் வரவழைத்துக் கொண்டான். ‘எல்லா காண்டங்களையும் நீயெடுத்துக் கொண்டு போய்விட்டால், தாத்தா ஞாபகமாக என்னிடம் ஒன்றும் இருக்காது ‘ என்று இரண்டு காண்டங்களை மட்டும் தந்தையார் கொடுத்தனுப்பினார். இந்த இரண்டு காண்டங்களும் படித்து முடித்துவிட்டு மற்றவற்றைப் பற்றி யோசிக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். தேவையான பாடல்களைத் தேடுவதற்கும், நேரம் கிடைக்கும்போது ஏதாவது ஒரு பக்கத்தைத் திறந்து அங்கிருக்கிற பாடலின் நயத்தை அனுபவிப்பதற்கும் இந்தப் புத்தகங்கள் அவனுக்கு மிகவும் உதவி வருகின்றன. அதுவும் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் தாத்தா அதில் செய்து வைத்திருக்கிற அடிக்கோடுகளும் (underlines) (எல்லா அடிக்கோடுகளையும் பென்சிலில் செய்திருக்கிறார்.), அவரை அந்தப் பதத்தை அல்லது தொடரை அடிக்கோடிடத் தூண்டியது எதுவாக இருக்கும் என்று கண்டுபிடிக்கிற மனதின் விளையாட்டும் இந்தப் புத்தகத்தை அவனுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக்கின.

ஒரு தேவைக்காகக் கலைஞன் பதிப்பகத்தின் புத்தகப் பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பதிப்பகம் வை.மு.கோ.வின் கம்பராமாயண உரைகளை மறுபதிப்பு செய்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தான். இத்தகைய நல்ல உரைகள் மீண்டும் பதிப்பு பெற்றால் மட்டும் போதாது, நமது செவ்வியல் இலக்கியங்களை எதிர்காலத் தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ள உதவுகிற இத்தகைய புத்தகங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தையாவது எழுத வேண்டும் என்று அவன் பலமுறை எண்ணியதுண்டு. அந்தப் புத்தகத்தைப் பற்றிய சிறுகுறிப்பை எழுதக்கூட, ஒருமுறையாவது ஒரு காண்டத்தையாவது மீண்டும் முழுமையாகப் படிப்பது அவசியம் என்று நினைத்துக் கொள்வான்.

கம்பனைப் பற்றி அவன் நிறைய கேட்டும் படித்தும் விட்டான். கம்பனை விமர்சித்து எழுதியவர்களின் கருத்துகளையும் அவன் படித்திருக்கிறான். படித்துவிட்டு அவர்களின் ரசனையையும் முதிர்ச்சியையும் அவை காட்டுகின்றன என்ற முடிவுக்கு வந்தான். ‘பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ ‘ என்ற கம்பனின் வாக்கிற்கேற்ப அத்தகைய விமர்சனங்களை அவன் மனம் ஒதுக்கியது. (பித்தர்கள் மனத்தெளிவு இல்லாதவர்களாகவும், பேதையர் பகுத்தறிவு இல்லாதவர்களாகவும், பக்தர்கள் பரவசமாக இருப்பவர்களாகவும் இருபதால் அவர்கள் சொல்வதிலுள்ள குற்றநற்றங்களை ஆராய்தல் ஆகாது.)

‘இலக்கணக் கவிஞர்சொல் இன்பம் தேடுவர்;

மலக்குசொல் தேடுவர்வன்க ணாளர்கள்

நிலத்துறும் கமலத்தை நேடும் வண்டதீ

தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல ‘

(வண்டு உலகத்தில் உள்ள தாமரைப்பூவை நாடிச் செல்லும். அதைப் போல, பாட்டின் இலக்கணம் அறிந்த கவிஞர்கள் அதிலே அமைந்துள்ள சொல், பொருள், நயம் ஆகியவற்றைத் தேடுவர். மலத்தைத் தேடிச் செல்கிற இயல்புடையது ஈ. அதுபோல, கொடியவர்கள் கலக்கம் தரக்கூடிய சொற்களை நாடி அடைவர்.)

– என்று ஒளவையார் இவர்களுக்காகத்தான் பாடி வைத்தார் போல என்று பின்னாளில் நினைத்துக் கொண்டான்.

‘கிரேக்க மொழியிலுள்ள கதைகளை உண்மையென்று சொல்லுவாரில்லை. என்றாலும், அக்கதைகள் ஐரோப்பிய இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டு, அவைகளுக்கு அழகு தந்து நிற்கின்றன. இக்கதைகளை அறியாதவர்கள் ஐரோப்பிய இலக்கியங்களை அறிந்து கொள்ள முடியாது. அதுபோலவேதான் நமது புராண இதிகாசக் கதைகள். நமது வாழ்விலே இக்கதைகள் ஊறிவிட்டன. நமது இலக்கியங்களிலே இக்கதைகள் நிரம்பியுள்ளன. எனவே, இவைகள் ‘நம் அறிவுக்குப் பொருத்தமற்றன, ஆதலால் இவைகளை நமது மாணவர்கள் படிக்கக் கூடாது ‘ என்று சொல்லுவது சிறிதும் பொருத்தமாக மாட்டாது ‘ என்று தமிழைச் சரியாகப் புரிந்து கொண்ட தமிழறிஞரான வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, ரசிகமணி டி.கே.சி, ரா.இராகவையங்கார், பெ.நா. அப்புஸ்வாமி உள்ளிட்டப் பலரும் அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்பது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர்கள் கொளுத்திவிட்டால் அப்புறம் படிக்க முடியாதே என்று தான் அவசர அவசரமாகக் கம்பராமாயணத்தைக் கற்றதையும், பல ஊர்களிலும் கம்பன் கழகங்கள் புதிதாகத் தோன்றவும் கம்பன் புகழ் இன்னும் பரவவும் கம்பராமாயணத்தைக் கொளுத்தச் சொன்னவர்கள் மறைமுகமாக உதவினார்கள் என்கிற வரலாற்று உண்மையையும் அவன் மதிக்கிற ஓர் எழுத்தாளர் ஒரு கூட்டத்தில் சொல்லக் கேட்டிருந்தான். இந்த நினைவோடு 1923-ன் ஆரம்பத்தில் திருநெல்வேலியில் கம்பர் கழகம் நிறுவப்பட்ட செய்தியைப் படித்த நினைவும் சேர்ந்து எழுகிறது. அதுதான் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட கம்பர் கழகமா, இல்லை, அதற்கு முன்னரே நிறுவப்பட்ட கம்பர் கழகங்கள் பிற ஊர்களில் இருந்தனவா என்பதை எப்படி அறிந்து கொள்வது ?

கம்பராமயாணத்தைப் பற்றிப் பேசும்போதே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிற அளவுக்கு அதில் லயித்துப் போன கிறித்துவரான பேராசிரியர் ஜேசுதாசனும் (புத்தம் வீடு எழுதிய ஹெப்சிபா ஜேசுதாஸின் கணவர்), கம்பராமாயணத்தைப் பற்றிப் பேசுவதையே தன் ஆர்வமாகக் கொண்டிருந்த இஸ்லாமியரான நீதிபதி எம்.எம். இஸ்மாயிலும், கம்பராமாயணம் மதங்கள் கடந்த, தமிழர் கொண்டாட வேண்டிய செவ்வியல் இலக்கியத்தின் வடிவம் என்பதை அவனுக்கு உணர்த்திய நிஜ வாழ்வின் உதாரணங்கள். பெ.நா. அப்புஸ்வாமி பழுத்த நாத்திகர். ஆனாலும் கம்பராமாயணத்தின் மீதும் சங்க இலக்கியங்களின் மீதும் அவருக்கிருந்த அபரிதமான மதிப்பையும் புலமையையும் அறிந்தபோது, இலக்கியத்தை நுகர நாத்திகமோ ஆத்திகமோ மதமோ அரசியலோ தடையில்லை என்று அவனால் உணர முடிந்திருக்கிறது. ‘மாதர் அற்பின் (அன்பின்) நின்றன அறங்கள் ‘, என்று அன்பை அறத்துக்கும் மறத்துக்கும் துணையாக்குகிற தெளிவு, ‘பெருந்த டங்கட் பிறைநுதர்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் ‘ என்றும், ‘கல்லாது நிற்பார் பிறர் இன்மையிற் கல்வி முற்ற வல்லாரும் இல்லை ‘ என்றும் பெண்களைக் கல்வியும் செல்வமும் மிக்கவர்களாகக் காட்டுகிற விழைவு, ‘வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா ‘ என்று இறைவனைப் பற்றிய கதையில் மானுடத்தின் சிறப்பு, நின்னொடும் ஐவரானோம், அறுவரானோம், எழுவரானோமென்று பிரபஞ்சம் தழுவிய சகோதரத்துவம், கண்ணோடு கண்கள் கவ்வுவதும் ஒன்றையொன்று உண்ணுவதும் மட்டுமில்லாமல் உணர்வும் ஒன்றிட நோக்குவதே காதலென்று காதலுக்கு விளக்கம், காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள் என்று புதிய உவமைகள் உருவகங்கள் என்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் நல்முத்துகளை விதைத்துக் கொண்டே போகிற கம்பனைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா ?

விருத்தம் என்கிற பாடல்வகையைச் சீவக சிந்தாமணி எழுதிய திருத்தக்க தேவர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார் என்று அவன் படித்திருக்கிறான். ஆனால், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வந்த கம்பன்தான் (கம்பன் காலத்தைப் பற்றி இருக்கிற பலவிதமான அனுமானங்கள் இருப்பதை அவன் அறிவான்; கம்பன் என்ற பெயர் பற்றியும் அனுமானங்கள் உண்டு. அவற்றைக் குறித்தும் வை.மு.கோ. தன் உரையில் எழுதியிருக்கிறார் என்றும் இந்தப் புத்தகத்தில் பார்க்கிறான். ஆனாலும், பன்னிரண்டாம் நூற்றாண்டே கம்பனின் காலம் என்கிற கூற்றை அவன் மனம் வை.மு.கோ.வைப் போல நம்புகிறான்) விருத்தத்தில் சிகரங்களைத் தொட்டவன். அந்தக் காரணத்தினாலேயே – விருத்த மென்னுமொண்பாவி லுயர்கம்பன் என்ற பெயர் பெற்றான். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை தமிழ் இலக்கிய உலகை மரபுச் செய்யுள்களே ஆட்சி செய்தன. இந்த இடைப்பட்ட பல நூற்றாண்டுகளில் கம்பனைப் புறம்தள்ளக் கூடிய இன்னொரு விருத்தக்கவி தமிழில் தோன்றவில்லை என்பது கம்பனின் பெருமையை உணர்த்துகிறது என்றெல்லாம அவன் பலமுறை சிந்தித்தது உண்டு.

கவியென்றால் கம்பன் எப்படிப்பட்ட கவி ? கோதாவரியை வர்ணிக்கும்போது,

புவியினுக்கு அணியாய் ஆன்ற

….பொருள் தந்து புலத்திற்றாகி

அவியகத் துறைகள் தாங்கி

….ஐந்திணை நெறிஅ ளாவி

சவியுறத் தெளிந்து தண்ணென்று

….ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்

கவியெனக் கிடந்த கோதா

….வரியினை வீரர் கண்டார்

என்று ஆரண்ய காண்டத்தில் கவிதைக்குரிய நல்லியல்புகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்டிருந்தது கோதாவரி என்று எழுதுகிறானே, அத்தகைய நல்லியல்புகள் மிக்க கவிதைகளை நாளுக்கு எழுநூறாக – அதுவும் பகற்பொழுதில் மட்டும் கவிதையெழுதுகிற வேலை; இராப்பொழுதுகளில் வேதியர்களுடன் சேர்ந்து வால்மீகி ராமாயணத்தை ஆராய்கிற பணி – படைக்கிற திறன் கொண்ட கவிச்சக்ரவர்த்தி. கம்பர் மீது பகைமையும் புலமைக் காய்ச்சலும்மிக்க கம்பனின் சமகாலத்துப் புலவரான ஒட்டக்கூத்தர் – கம்பர் இறந்த நாளைக் கலைமகள் தாலி அறுத்த நாள் என்று பாடினார். அத்தகைய கீர்த்தி கம்பருடையது.

யாரோ வேகமாக மேலேறி நடந்து வருகிற சத்தம் கேட்கிறது. நடையெழுப்பும் சத்தத்தைக் கவனிக்கும்போது குழந்தைகளில் ஒருவராக இருக்க வேண்டும்.

‘அப்பா, வாட் ஆர் யூ டூயிங் ‘ – அறையினுள் நுழைந்த நான்கரை வயது மகள் கேட்கிறாள்.

‘புக் படிக்கிறேன்மா ‘

‘வாட் புக் டாடி ‘

‘ராமாயணம் ‘

‘வாட், யூ டோண்ட் நோ ராமாயணா! ‘ – விரிந்த கண்களின் ஆச்சரியத்துடன் மகள் கேட்பதைப் பார்க்கும்போது அவனுக்குள் முறுவல் பிறக்கிறது.

‘டாடி, டாடி, ஐ நோ ராமாயணா. இட்ஸ் த ஸ்டோரி ஆப் ராமா, சீதா அண்ட் ராவணா. மாமி ரெட் இட் பார் மீ ‘ என்று குழந்தை ஆர்வத்துடன் தொடர்கிறாள்.

‘வாவ். அப்படியா. வெரிகுட் ‘ என்கிறான் அவன்.

அவன் கையிலிருக்கிற புத்தகத்தைப் பார்க்கிற குழந்தை, ‘டாடி டாடி, மை ராமாயணா புக் ஈஸ் ஸ்மாலர். யூ கேன் ரீட் இட். யூ கேன் பினிஷ் இட் பாஸ்டர் ‘ என்கிறது.

‘சரிமா, இந்தப் புக்கைப் படிச்சிட்டு அதையும் படிக்கிறேன். ‘

‘இப் யூ ஆர் ரீடிங் ராமாயணா வொய் ஆர் யூ கீப்பிங் யுவர் கம்ப்யூட்டர் ஆன் டாடி ? யூ வாண்ட் டூ நோ த மீனிங் ஆப் சம் வேர்ட்ஸ் ? ‘

‘இல்லைமா, படிக்கறதைப் பத்தி உடனே எழுதறேன். அதுக்குதான் கம்ப்யூட்டர் ‘

‘வாட், யூ ரீட் அண்ட் ரைட் அட் த சேம் டைம் ‘ என்று ஆச்சரியத்துடன் கேட்கிறாள்.

‘ஆமாம்மா ‘

‘யூ ஆர் ஃபன்னி டாடி. மாமி டோல்ட் மீ டூ டு ஒன்திங் அட் அ டைம் ‘ என்கிறது குழந்தை.

இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. திடாரென்று என்ன நினைத்துக் கொண்டதோ, மறுபடியும் அறையை விட்டு, ‘மாமி மாமி ‘ என்றழைத்தபடியே ஓடுகிறாள்.

‘படிக்கட்டில் ஓடாதே. பார்த்து மெதுவா இறங்கு ‘ என்று இங்கிருந்தபடியே கத்துகிறான்.

கீழே சென்ற குழந்தை அவன் மனைவியிடம், ‘மாமி, ஹவ் கம் டாடி ஒன்லி டஸ் டூ திங்ஸ் அட் அ டைம் ‘ என்று கேட்பது மெதுவாகக் கேட்கிறது. அடுத்தமுறை சாப்பிடும்போது டா.வி.யும் போட வேண்டும் என்று கேட்பதற்குக் குழந்தை அடிபோடுகிறாள் என்று நினைத்துச் சிரித்துக் கொள்கிறான்.

வை.மு.கோ.வின் இந்த உரை மீண்டும் கலாசாலைக்குச் சென்று கல்வி கற்கிற அனுபவத்தை அவனுக்கு ஏற்படுத்துகிறது. வடமொழியினர் நூல்களைப் பிரபுசம்மிதமென்றும், சுகிருத் சம்மிதமென்றும், காந்தா சம்மிதமென்றும் மூவகையாகப் பகுத்துள்ளனர். வேதம் போல்வன – அரசன் கட்டளையிடுவதுபோல கட்டளையிட்டு அதன்படி நடப்பார்க்கு நன்மையும் மற்றவர்க்குத் தீமையும் தருவன பிரபு சம்மிதமென்று அழைக்கப்படுகின்றன. புராணங்கள் – ஒருவரின் நல்வினைகளைப் புகழ்ந்தும் தீவினைகளை இகழ்ந்தும் படிப்போர்க்கு நேரிடையாக நல்வினை தீவினைகளைல் விருப்பு வெறுப்புகளை உருவாக்குவதால் – அவை சுகிருத் சம்மிதமென்று அழைக்கப்படுகின்றன. காப்பியங்கள் – இதைச் செய், அதைச் செய் என்று வாய் திறந்து சொல்லாமல் குறிப்பினால் உணர்த்துவதால் அவை காந்தா சம்மிதமென்றும் அழைக்கப்படுகின்றன என்று அடிக்குறிப்பாக ஒரு கட்டுரையளவுக்கு உரையாசிரியர் விரித்து எழுதிக் கொண்டு போவது அவனுக்குப் பரவசமாக இருக்கிறது. உடனடியாக, தொல்காப்பியத்திலும், நன்னூலிலும் நூல்களைப் பகுத்திருக்கிறார்களா, இருந்தால் எப்படிப் பகுத்துள்ளனர் என்று பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் குறித்துக் கொள்கிறான்.

பழைய இலக்கியங்களில் பரதம் பாடிய பெருந்தேவனார் பற்றியும், அப்போது பாடப்பட்ட இராமாயணம் பற்றியும் சில செய்யுள்கள் உண்டு என்பதை அவன் ஏற்கனவே அறிந்திருக்கிறான். பால காண்டம் உரையிலும் உரையாசிரியர் கம்பருக்கு முன்னிருந்த இராமாயணம் கம்பர் காலத்துக்கு முந்தியே இறந்தது போலும் என்று எழுதியிருப்பதைப் படிக்கிறான். அதனால் – தமிழில் முதல் காப்பியம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வெளிவந்த சிலப்பதிகாரம்தான் என்பது இன்றைய நிலை. இதைப் பற்றி யோசிக்கும்போது நம் இலக்கியங்களையும் வரலாற்றையும் பாதுகாக்கிற பொறுப்புணர்வு தமிழர்களிடம் குறைவாகவே இருந்திருக்கிறது என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அதற்கானச் சரியான காரணிகள்தான் அவனுக்கு இன்னமும் பிடிபடாமல் போகின்றன. காலத்தால் இறந்துபோகிற அளவுக்கு அழிந்துபோனவையும் சிறப்பானவைகளாக இல்லாமல் இருந்திருக்குமோ என்ற கேள்வியும் அவனுக்குள் ஓடுகிறது. வரலாறும் சான்றுகளும் முறையாக இல்லாவிட்டால் எத்தனை விதமான யூகங்களும் விளக்கங்களும் தோன்றுகின்றன!

கம்ப ராமாயணத்தில் கதலீ (நெல்) பாகம், திராட்சா (புல்) பாகம், நாரிகேள (கல்) பாகம் என்று மூவகை நடையும் அமைந்துள்ளன. அதனாலேயே இந்நூலைப் பெரியோர், ‘நெல் நாலாயிரம், புல் நாலாயிரம், கல் நாலாயிரம் ‘ எனக் கூறுவர் என்று உரையாசிரியர் எழுதும்போது, இந்நூல் அருஞ்சொற் பொருள் மற்றும் தெளிவுரைகளின் தொகுப்பு மட்டுமில்லை என்று அவனுக்குப் புலனாகிறது. தாத்தாவும் தந்தையாரும் சிலாகித்துச் சொன்னதன் காரணம் நான்கு பக்கங்களுக்குள் புரிந்து போகிறது. நெல்லென்பது வாழைப்பழம் தோலையுரித்தபின் சுவை தருவதுபோல வாசக மனம் சிறிது ஆராய்ச்சி செய்தபின் சுவை தருவது. திராட்சா பாகம் என்பது சுவைத்த மாத்திரத்தில் உள்ளும் புறமும் சுவை தருவது. அதன் மேலிருக்கும் கடினமான பட்டையையும் நாரையும் ஓட்டையும் நீக்கியபின் சுவை தருகிற தேங்காய் மாதிரியானது நாரிகேளபாகம் என்று விளக்குகிறார் உரையாசிரியர். இதைப் படித்தவுடன் அவனுக்கு தற்கால நவீன கவிதைகளில் பெரும்பாலானவற்றை நாரிகேளபாகத்தில் அடக்கிவிட முடியும் என்று தோன்றுகிறது. அப்படித் தோன்றியவுடன் அப்படிப்பட்ட நவீன கவிதைகளில் விழி பிதுங்கி முழிக்கிற தன்னைப் போன்றோர்க்காகத்தான் நாய் பெற்ற தெங்கம்பழம் என்ற சொலவடை வந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது கவிதைக்கு அழகுதான். ஆனால், அது கதலீபாகம் அளவுக்கு மட்டுமே நவீன கவிதைகளில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒரு பாமர வாசகனாக அவன் நினைத்துக் கொள்கிறான்.

‘அஞ்சிலே யொன்று பெற்றா னஞ்சிலே ஒன்றைத் தாவி ‘ என்று தொடங்குகிற அனுமன் காப்பு, சொற்பொருட்பின்வரு நிலையணி என்று குறிப்பு தருகிற உரையாசிரியர், அதற்குக் காரணமும் சொல்கிறார். சொல்லிவிட்டு, ஏந்தல்வண்ணம், சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும் என்ற தொல்காப்பிய வரிகளையும் சுட்டிக் காட்டுகிறார். அதுமட்டுமில்லாமல், இந்தப் பாடல் அறுசீராசிரிய விருத்தம் என்றும் குறிப்பு தருகிறார். மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் உதவுகிற அரிய குறிப்புகளை இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் உரையாசிரியர் தருவதை அவன் பார்க்கிறான்.

அவனிடத்திலே கம்பராமாயணத்துக்கு பிறர் எழுதிய உரையும் இருக்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கலாமே என்று வை.மு.கோ. உரையையும் அந்த உரையையும் அவன் சில குறிப்பிட்ட பாடல்களை ஒப்பிட்டுப் பார்க்கிறான். இன்னொரு உரையிலே சந்தி பிரித்து எழுதப்பட்டு, தெளிவுரை, சிறப்புரை என்று சுருக்கமாக உரை முடிந்து விடுகிறது. பாடலின் நயம், அருஞ்சொற் பொருள், பயின்றுவரும் அணிகள், பாவகை, அடிக்குறீப்புகள் என்று வை.மு.கோ.வின் உரைக்கு முன்னால் பிற உரைகள் உறைபோடக் காணாது என்று அப்போது அவன் அறிந்து கொள்கிறான். அதுவுமில்லாமல் வை.மு.கோ.வின் உரைத் தொகுப்பின் இறுதியிலே அரும்பவ அகராதி, செய்யுண் முதற்குறிப்பகராதி ஆகியன அமைந்து பாடல்களையும், சொற்களின் பொருள்களையும் சுலபமாகக் கண்டுபிடிக்கப் பேருதவியாக இருக்கின்றன. இவை அவனிடம் இருக்கிற இன்னோர் உரையிலே இல்லை.

அவனுடைய எழுத்திலே அவனறியாமலேயே நிகழ்ந்துவிடுகிற செயல் ஒருமை பன்மை மயக்கமாகும். இலக்கணம் மீறுவது அவனுக்கு உவப்பானதுதான். ஆனாலும், அறிந்தபின் இலக்கணத்தை மீறுவது நன்று என்ற ஞானமும் பெற்றவன். சில நேரங்களில் வீம்புக்காக இலக்கணங்களை அவன் மீறுவதும் உண்டு – கலகத்தின் குறியீடாக. ஆனால், பொதுவாக – இன்னும் இலக்கணங்களை முழுதாகக் கற்றுத் தேராததால், கற்றுத் தேருகிற வரைக்குமாவது முடிந்தவரை இலக்கணப்படி எழுத விழைகிறான். ‘விழுந்த நாயிறு வெழுவதன் முன்மறை வேதிய ருடனாராய்ந் / தெழுந்த ஞாயிறு விழுவதன் முன்கவி பாடின தெழுநூறே ‘ என்ற வரிகளைப் பற்றிச் சொல்லும்போது, உரையாசிரியர், ‘கவிபாடினது எழுநூறு ‘ என்பது ஒருமைபன்மை மயக்கம் என்று எழுதுகிறார். அதைப் படித்தபோது அவனுக்கு சற்று அல்ப சந்தோஷம் – நம்மை மாதிரி ஒருமை பன்மை மயக்கத்தை கவனிக்காமல் விட்டுவிட்டார் என்று – வருகிறது. பின்னர் – கவிஞர் அறிந்து செய்ததாக இது இருக்கலாம் என்றும் உறைக்கிறது.

கம்பர் தன் நூலுக்கு இராமவதாரம் என்றே பெயரிட்டார். பின்னர் கம்பரின் பெயரையும் சேர்த்து அது கம்ப ராமாயணம் என்று மக்களால் அறியப்பட்டது. ராமாயணம் என்ற சொல் வடமொழிச் சொல் என்று உரையாசிரியர் எழுதிப் போகிறார். ராம அயந என்ற இரண்டுமொழி சேர்ந்த தீர்க்க சந்தி என்றும் விளக்குகிறார். பின்னர் இரண்டும் எப்படி வடமொழியில் புணர்ந்து ராமாயணம் ஆயிற்று என்றும் சொல்கிறார். பின்னர் ராம என்ற சொல்லுக்குத் தன் நற்குணச் செய்கைகளினாலும் திருமேனியழகாலும் எல்லாரையும் மகிழ்விப்பவன் என்று பொருள் என்று சொல்லித் தருகிறார். அயநம் என்ற சொல்லுக்கு அறிவிப்பது என்ற பொருளைச் சுட்டுகிறார். இராமாயணம் என்றால், ராமனை விஷயமாகக் கொண்ட நூலென்று பொருள் என்றும் விளக்குகிறார். ‘நீ எழுதுவது என்ன பெரிய ராமாயணமா ‘ என்று மக்களிடையே புழங்கும் சாதாரண வாக்கியங்களுக்குக் கூட எவ்வளவு பொருளிருக்கிறது என்று அவன் நினைத்துக் கொள்கிறான். குழந்தைக்குச் சொல்வதுபோல் உரையாசிரியர் நூல் முழுவதும் தகவற் களஞ்சியங்களை நிறைத்துக் கொண்டே போவது அவனுக்கு ஆச்சரியமளிக்கிறது. இவ்வளவு தகவல்களில் எவ்வளவைத் தன் சிறுமூளை கிரகித்துக் கொள்ளப் போகிறதோ என்றும் அவன் யோசிக்கிறான். பின்னர் – உடலெங்கும் எண்ணெய் தடவிக் கொண்டு உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்ற சொலவடை நினைவுக்கு வர, ரசித்துப் படித்துக் கொண்டு போவோம், நினைவில் இருக்க வேண்டியவை இருக்கும் என்ற தீர்மானத்தில் தொடர்கிறான்.

‘பிறர் ஏளனம் செய்யவும், இது என்ன பாடல் என்று எனது பாடலைப் பிறர் பழித்துக் கூறவும் நான் இந்த ராமாயணம் பாடியது, நிழலின் அருமை வெயிலில் இருந்தவர்க்கே நன்கு தெரியும் என்பது போல, கல்வி கேள்விகளில் சிறந்து தெய்வ அநுக்கிரகம் பெற்ற பெரியோரின் பாடலின் மேன்மையை உலகிற்குத் தெரியச் செய்யும் பொருட்டே ‘ என்ற பாடலை அவன் படிக்கிறான். கம்ப ராமாயணம் குறித்த தன்னுடைய வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதும் இப்படித்தான் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு

பூசை முற்றவும் நக்குப் புக்கென

ஆசை பற்றி

– என்ற வரிகளைப் படிக்கும்போது – இந்த வரிகளை வைத்துப் பிச்சமூர்த்தியின் பாற்கடல் கவிதையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கிய ஞானக்கூத்தன் கட்டுரை நினைவுக்கு வருகிறது. அந்தக் காலத்து எழுத்தாளர்களும் கவிஞர்களும்தான் செவ்வியல் இலக்கியங்களிலும், மரபுசார் இலக்கியங்களிலும் எவ்வளவு புலமையுடன் இருந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது. ஒருவரி எழுதுவதற்கு முன் இனிமேல் 1000-வரிகளாவது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான். எங்கே முடிகிறது ?

இதற்குமேல் கம்பனைப் பற்றியும், கம்ப ராமாயணத்தைப் பற்றியுமான தன் சிற்றறிவை எழுதுவதென்பது, ‘மிகவும் இழிந்த சொற்களைக் கண்டு நூல் நெய்யத் தொடங்குவது போல ‘ என்று – கம்பன் கம்பராமாயணம் எழுத ஆரம்பித்தபோது உணர்ந்தைவிட பல ஆயிரம் மடங்கு அதிகமாக – உணர்கிறான்.

பேசாமல் புத்தகத்தைப் படிக்கலாம், கற்றார் முன் கீச்சு கீச்சென்று கத்தாமல் இருக்கிற கிளியாகலாம் என்ற முடிவுக்கு வருகிறான். ஆனால் – ‘அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல் ‘ என்ற வரிக்கு உதாரணமாய் வை.மு.கோ.வின் கம்பராமயண உரைத்தொகுப்பு அறிவார்ந்த தோழனாக வாசகர்க்கு இருப்பதை சில பக்கங்களிலேயே பிறரும் அறிந்து கொள்ள முடியும் என்று அவன் தீர்மானமாக நம்புகிறான்.

ஆற்றுப் படலம் ஆரம்பிக்கிறது. ஆற்றுப்படலம் – ஆற்றைப்பற்றிய படலம் என்று விரியும். இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்று இலக்கணக் குறிப்புடன் வரவேற்கிறார் உரையாசிரியர் வை.மு.கோ.

ஆச அலம்புரி யைம்பொறி வாளியுங்

காச லம்பு முலையவர் கண்ணெனும்

பூச லம்பு நெறியின் புறஞ்செலாக்

கோச லம்புனை யாற்றணி கூறுவாம்.

நிலத்தின் தன்மை நல்லொழுக்கத்திற்கும் தீயொழுக்கத்திற்கும் காரணம் என்ற நூற்கொள்கையா ? எந்த நூலில் இருக்கிறது அக்கொள்கை ? அவனுக்குள் கேள்விகள் விரிகின்றன.

ஓ.. இன்னமும் முரசு எடிட்டர் திறந்தே இருக்கிறதா ? பைல் – சேவ் – எக்ஸிட்.

pksivakumar@yahoo.com

படிக்க: http://360.yahoo.com/pksivakumar

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்