ஹிப்பாங்… ஜிப்பாங்

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

பாஸ்டன் பாலாஜி


ஹார்லிக்ஸ் குடித்த உற்சாகம் கிடைக்கிறது. பா ராகவனின் ‘புதையல் தீவு ‘ என்னும் சிறுவர் தொடரைப் படித்தவுடன் எனக்கு ‘ஹார்லிக்ஸ் ‘ ஞாபகம்தான் வருகிறது.

‘ஹார்லிக்ஸ் ‘ என்பது ‘புதையல் தீவு ‘. சிறுவர்களுக்கு சத்தான விஷயம்; அவர்களிடம் நாம் சொல்லவேண்டியதைக் கொண்டு செல்ல அமர்க்களமான தொடர்பு சாதனம்; பெரியவர்களும் மாறுதலுக்காக விரும்புவார்கள்.

பாரா-வே சொல்கிறார்:

மூளையைக் கழட்டிவைத்துவிட்டு மனத்துக்குள் ஒரு சிறுவனாகி, சிறுவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக மட்டும் யோசித்து எழுதிய நாவல் இது. துளியும் லாஜிக் கிடையாது என்பதே இக்கதையின் மிகப்பெரிய சிறப்பம்சமாக எனக்குத் தோன்றுகிறது. வாசிக்கும் குழந்தைகள் பரபரப்பும் சந்தோஷமும் ஆர்வமும் கொள்ளவேண்டும் என்பதை மட்டுமே இலக்காக வைத்து ஒரு சிறிய துப்பறியும் கதை முயற்சி.

ஹார்லிக்ஸின் (தற்போதைய) விளம்பரத்தில் வருவது போல் சிறுவர்கள் சீரியல் கில்லர்களைப் பிடித்துக் கொடுப்பதில்லை. ஆனால், மாசுபடாத அவர்களின் இதயத்தில் உயர்ந்த கொள்கைகளும் இலட்சியங்களும் அரசோச்சுவதை இந்தக் கதை சொல்கிறது.

‘சாதிக்க முடியாதது என்று ஏதாவது இருக்கிறதா என்ன ? சரியான முனைப்புதான் வேண்டும் ‘ என்பது போன்ற ஊட்ட மருந்துகளை போதையென்னும் கொழுப்பு எதுவும் இல்லாத பாலாடையில் ஃப்ரூட் சாலட் போட்டுக் கொடுத்திருக்கிறார் பாரா.

ஒரு நாள் இரவில் மூன்று பள்ளி நண்பர்கள் கயவர் கூட்டத்தை மடக்கிப் பிடிப்பதே கதை. கவர்ச்சிகரமான விளம்பரம் போல வெகுவிரைவிலேயே ஆழமான பிண்ணனியை அமைத்துக் கொடுக்கிறார். புதுமையான தகவல்களைக் கொண்டு சேர்ப்பதற்காக தண்ணீர் தேசம். உடல் பருமனானவன், பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்தியவன், அறிவு ஜீவியல்லாத மற்றுமொருவன் என்று சாதாரணர்களை முக்கிய நாயகர்களாக சம அந்தஸ்து கொடுத்து கதை மாந்தர்களுடன் நம்மை ஒன்ற வைக்கிறார்.

‘சப் குச் சலேகா ‘ என்னும் எண்ணம் வளர்ந்தவுடன் — திடாரென்று ஒட்டிக் கொள்கிறது. ஆனால், குழந்தையாக இருந்தபோதுதான் எவ்வளவு பிடிவாதம் இருந்தது. சாம்பார் சாதத்துடன் பொரியல் பட்டுவிடக் கூடாது என்பதில் ஆரம்பித்து ஸ்டிக்கர் கடனாக நண்பன் கொடுத்தாலும் பதிலுக்கு அவனுக்குப் பிடித்தமானதை செய்தே ஆக வேண்டும் என்பது போல் சின்னச் சின்ன முனைப்புகள். கோனே ஃபால்ஸ் சென்று ‘அருவியில் குளிக்காதே ‘ என்று சொன்னாலும் சிரமப்பட்டு பி.டி. மாஸ்டருக்குத் தெரியாமல் பாறைகளில் புகுந்து வருவது முதல் கல்சுரல்ஸ் தினங்களில் மேடையில் சொதப்பியதைக் கண்டு மனம் கலங்காமல் கடலை போடுவது வரை உள்ளக் கிடக்கைகளை செய்து பார்க்கும் ஆர்வங்கள்.

இந்தக் காலங்களிலும் காட்டு வழிகளில் பயணம் தொடர்கிறது. கையில் செல்பேசி, கூடவே பூமியில் எங்கே இருக்கிறோம் என்பதை சுட்டும் ஜி.பி.எஸ்., காட்டுப் பாதைகளின் விரிவான வரைபடங்கள், அபாய அறிவிப்பு காட்ட குறைந்தபட்சம் பத்து விதமான பொருட்கள், அப்படியும் மாலை ஆறு மணிக்குள் திரும்பாவிட்டால் காட்டிலாகவுக்கு தகவல் கொடுக்குமாறு கீழே இருப்போருக்கு அறிவுறுத்தல்கள் என்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாகி இருக்கிறேன்.

சிறுவர்களின் உலகம் அலாதியானது. தண்ணீருக்குள் குதி என்றால் குதித்து விடுவார்கள். நீரில் மிதக்க பாதுகாப்பு கவசம் இருக்கிறதா ? ஆழம் எவ்வளவு ? எப்படி நீந்தத் தெரியாமல் குதிப்பேன் ? நீ காப்பாற்றுவாயா ? உனக்கு நீந்தத் தெரியுமா ? எப்பொழுது தூக்கி விடுவாய் ? எனக்கு ஆபத்து உண்டா ? தண்ணீர் உட்கொள்வேனா ? உட்கொண்டால் ஜலதோஷம் வருமா ? என்றெல்லாம் கேள்வி கேட்காமல் செய்து முடிக்கத் துடிப்பவர்கள். பிரகலாதர்களையும் பார்க்கலாம். ஆதிமூலமே என்றெல்லாம் கத்தாத கஜேந்திரர்களையும் இங்கு உணரலாம்.

அங்காங்கே திருக்குறளின் வாய்மை, தீயவன் என்பவன் யார், கொண்ட கருத்தைப் பதமாக எடுத்து வைப்பது, வயதில் பெரியோரிடமும் இதமாக தர்க்கம் செய்வது, போதைக்கு அடிமையாவது, வயதால் மட்டுமே பெரியவர்கள், செயல்களால் உயர்ந்தவர்கள் என்று மெஸேஜ் மயமாக தாக்கினாலும் குறுநாவலுக்கு வேண்டிய பரபரப்பையும் அத்தியாய முடிவுகளில் கொடுக்கும் அதிரடி திருப்பத்தையும் உரிய அளவில் மிக்ஸ் செய்திருப்பதால் பக்கங்களை வேகமாக புரட்டவைக்கிறது.

அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது என்பதை பருமனான கதாநயகன் மூலமே புலம்ப வைப்பது, மீனவ மாணவனின் சமயோசிதமும் உலக அறிவும் எவ்வாறு பள்ளி அறிவுக்கு மாற்றான நிகருடையது, பெற்றோர்களின் நம்பிக்கை, நண்பர்களின் பலம் என்று சமூகத்தின் சூட்சுமங்களைத் தொட்டுச் செல்லும் அதே வேகத்தில், சுற்றுப்புறச் சூழல், கறுப்பு சந்தை, எரிபொருளின் அனர்த்தமான பயன்கள், கடல் குறிப்புகள் என்று தகவல் ரீதியாகவும் அடர்த்தியாக நகர்கிறது.

குழந்தைகளுக்கு எழுதுவது அமெரிக்க தூதரகத்தில் விசா படிவத்தை நிரப்புவது போல் சிரமமானது. அதிகமாக விவரித்தால் ‘வளவளா ‘ என்று விட்டுவிடுவார்கள். எதையாவது சொல்லாமல் விட்டு விட்டு, ‘குறிப்பால் உணர்ந்து கொள் ‘, ‘பூடகமாகப் புரிந்து கொள் ‘ என்றால், எக்குத்தப்பாக புரிந்து வைத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. சொல்வதைச் சுருங்க சொல்ல வேண்டும். முழுமையாகவும் இருக்க வேண்டும். சரியானதாகவும் அமைய வேண்டும். ‘புதையல் தீவு ‘ குழந்தைகளுக்கு நிறைய செல்வங்களையும் கூடவே கொண்டிருக்கிறது.

‘எதைச் செய்தாலும் நேர்த்தியுடன் செய்யும்போதுதான் சிறக்கிறது ‘ என்று கதையில் பாலு வியப்பதை போல் நானும் இந்த கோகுலத்தில் வெளிவந்த தொடரை முடித்தவுடன் சொல்ல நினைத்தேன்.

Series Navigation

பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி