இறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

நாகூர் ரூமி


====

பாரசீக மூலம் : இறைநேசர் ஃபரீதுத்தீன் அத்தார் அவர்களின் ‘தத்கிரதுல் அவ்லியா ‘ என்ற பிரசித்தி பெற்ற நூல். (இந்த நூல் பல முக்கியமான இறை நேசர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய உபதேசங்கள் மற்றும் அற்புதங்களையும் பற்றிய நூல். அதிலிருந்து இமாம் ஜாஃபர் சாதிக் பற்றிய கட்டுரை மட்டும் இங்கு தரப்படுகிறது).

உர்துவிலிருந்து தமிழில் விரிவாக : நாகூர் ரூமி

அறிமுகம்

இமாமவர்களின் மரியாதைக்குரிய பெயர் ஜாஃபர் சாதிக். குடும்பப்பெயர் அல்லது பாரம்பரிய கெளரவப் பெயர் அபூமுஹம்மது. அவர்களின் சிறப்புக்களையும் நிகழ்த்திய அற்புதங்களையும் பற்றி இதுவரை எழுதப்பட்டவை யாவும் மிகவும் குறைவுதான்.

பெருமானார்(ஸல்) அவர்களுடைய உம்மத்துக்கள் மத்தியிலே இமாமவர்கள் ஒரு பாதுஷாவைப் போலவும், நபித்துவம் பற்றிய விவாதங்களிலே ஆதாரங்களை அள்ளித் தந்து (தெளிவை ஏற்படுத்தும்) ஒளியாகவும் திகழ்கிறார்கள். மேலும், உண்மையாகிய ‘ஹக் ‘கைத் தேடி, அதை இலக்காக வைத்து செயல் புரிந்த கண்ணியத்திற்குரிய இறைநேசர்களின் தோட்டத்துப் பழம் அவர்கள். ஏன், பெருமானாரின் (கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, நன்றி செலுத்தி) இதயத்தில் இடம் பிடித்துக் கொண்டவர்களில் இமாமவர்களை நபியின் வாரிசு என்றே சொல்லலாம். அவர்களுடைய அருமை பெருமைகளையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் சொன்ன எதையுமே ஒத்துக்கொள்ள முடியாதது என்று நாம் சொல்ல முடியாது.

இமாமவர்களுடைய அந்தஸ்து கண்ணியத்திற்குரிய சஹாபாக்களுக்கு அடுத்தபடியானது. எனினும் பெருமானாரின் குடும்பத்தில் வந்தவர்களாதலால், தரீக்கா, ஹதீது என எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஒரு சிலதை மட்டும் இங்கே எடுத்துரைக்கிறோம்.

இமாமவர்கள் அற்புதங்களின் குவியலாகவும் புனிதர்களின் தலைவராகவும் மட்டும் இருக்கவில்லை. அன்பு கொண்டவர்களுக்கும் ஆன்மீகப் பாதையில் ஈடுபட்டவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள். இறைத்தன்மையின் மர்மங்களைப் பற்றிய பல விஷயங்களை அவர்கள் அனேக எழுத்துக்களில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.

அஹ்லெசுன்னத்தார்கள் (பெருமானாரின் வழிமுறையப் பின்பற்றுபவர்கள்) அஹ்லெபைத்துகள்(பெருமானாரின் குடும்பத்தார்)மீது எதிர்ப்பும் வெறுப்பும் கொண்டுள்ளனர் என்று ஒரு முட்டாள்தனமான கருத்து உள்ளது. உண்மையில், பெருமானாரின் குடும்பத்தார்மீது அஹ்லெசுன்னத்தார்கள்தான் அதிக பாசமும் நேசமும் கொண்டிருக்கிறார்கள் என்றும், எனவே இறைவனுக்கும் அவனுடைய இறுதித்தூதருக்கும் அடுத்தபடியாக பெருமானாரின் குடும்பத்தார்மீது பிரியம் வைப்பது இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் அவசியமாகிறது என்றும் இமாமவர்கள் கூறுகிறார்கள்.

இமாம் ஷாஃபிஇ ஒரு ஷியா(சிந்தனை கொண்டவர்) என்ற குற்றச்சாட்டு

அஹ்லெபைத்துகள்மீது கொண்ட பிரியத்தின் காரணமாக, இமாம் ஷாஃபிஇ அவர்களுக்கு ஷியா என்ற பட்டம் கொடுக்கப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். இதைப்பற்றி இமாமவர்கள் தங்கள் கவிதை ஒன்றில்

பெருமானார் குடும்பத்தார்மீது பிரியம் வைப்பதன் பெயர் ஷியாத்தனம் என்றால்

நானும் ஒரு ஷியா என்றே இந்த உலகம் முழுவதும் சாட்சி சொல்ல வேண்டிவரும்

என்று குறிப்பிடுகிறார்கள்.

அஹ்லெபைத்துகள் மற்றும் சஹாபாக்கள்மீது பிரியம் வைக்கவேண்டும் என்பது ஈமானின் அடிப்படைகளில் ஒன்று என்று வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும்கூட, அப்படிப் பிரியம் வைப்பதிலோ அல்லது அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலோ தயக்கமோ தவறோ என்ன இருக்க முடியும் ? எனவே பெருமானாரைப் பற்றியும் அவர்களுடைய சிறப்பான அந்தஸ்துகளைப் பற்றியும் தெரிந்து கொள்வது ஒவ்வொரு ஈமான் கொண்ட முஸ்லிமுக்கும் எப்படி அவசியமாகிறதோ அதேபோல, நேர்வழி காட்டப்பட்ட கலீஃபாக்கள், சஹாபாக்கள் மற்றும் அஹ்லெபைத்துகள் பற்றிய செய்திகளையும் அருமைபெருமைகளையும் பற்றி அறிந்து கொள்வதும் எண்ணிப் பார்ப்பதும் அவசியமாகிறது.

கலீஃபா மன்ஸூரின் சபையிலே

ஒரு நாள் இரவு கலீஃபா மன்ஸூர் தன் தளபதியை அழைத்து, ‘ஜாஃபர் சாதிக்கை என் முன் கொண்டு வாரும். நான் அவரைக்கொல்ல வேண்டும் ‘ என்றார்.

அதற்கு தளபதி, ‘இந்த உலக வாழ்வைத்துறந்து ஆன்மீக வாழ்வில் லயித்துவிட்ட ஜாஃபர் சாதிக் போன்ற ஞானிகளைக் கொல்வது சரியானதல்ல ‘ என்று சொல்ல, கலீஃபா மிகவும் கோபமாக, ‘என் உத்தரவை நிறைவேற்ற வேண்டியதுதான் உமது கடமை ‘ என்றார். வேறு வழியின்றி தளபதியும் இமாமவர்களை அழைத்துவரச் சென்றார்.

அவர் போனவுடன் கலீஃபா தன் சேவகர்களுக்கு இப்படி உத்தரவிட்டார் : ‘என் தலையிலிருந்து என் கிரீடத்தை நான் எடுப்பேன். அதுவே உங்களுக்கான குறிப்பு. நீங்கள் உடனே ஜாஃபர் சாதிக்கைக் கொன்றுவிட வேண்டும். ‘

ஆனால் தளபதியுடன் இமாமவர்கள் வந்தவுடன் நிலைமை வேறுவிதமாக மாறியது. இமாமவர்களின் சிறப்பும் மேன்மையும் வலிமையும் கலீஃபாவுக்குப் புரியுமாறு நிகழ்ச்சிகள் நடந்தேறின.

ஆக்ரோஷமாக இருந்த கலீஃபா இமாமவர்களைக் கண்டவுடன் அமைதியாக எழுந்து நின்று வரவேற்றார். தனது இருக்கையில் இமாமவர்களை அமரவைத்தது மட்டுமின்றி, தானும் அவர்களுக்குப் பக்கத்தில் கீழே அமர்ந்து கொண்டார்!

‘உங்களுடைய ஆசைகள், தேவைகளைச் சொல்லுங்கள் நிறைவேற்றித் தருகிறேன் ‘ என்றும் கூறினார்.

அதற்கு இமாம், ‘எனது ஆசை, தேவை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது இனிமேல் உங்களுடைய சபைக்கு நீங்கள் என்னை அழைக்காமல் இருப்பதுதான். நீங்கள் இதைமட்டும் செய்வீர்களேயானால் எனது இறைவணக்கம் மற்றும் பயிற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படாமலிருக்கும் ‘ என்றார்கள்.

‘அப்படியே ஆகட்டும் ‘ என்று வாக்குறுதி கொடுத்து மரியாதையுடன் வழியனுப்பி வைத்த மன்னர் பிறகு மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் பிரக்கினையற்றுக் கிடந்தார். வேறுசில கூற்றின்படி, மூன்று வேளைத் தொழுகை ‘களா ‘ ஆகும்படி மயங்கிக் கிடந்தார் என்றும் கூறப்படுகிறது.

கலீஃபாவின் இந்த நிலை கண்டு ஆச்சரியமுற்று, காரணம் என்னவென்று தளபதியும் சேவகர்களும் விசாரித்தபோது கலீஃபா சொன்னார் :

‘இமாம் ஜாஃபர் சாதிக் என் பக்கத்தில் வந்தபோது நீங்கள் அவரை மட்டும்தான் கண்டார்கள். ஆனால் அவரோடு சேர்ந்து ஒரு மிகப்பெரிய பாம்பு இருந்தது. அது தனது பாஷையில் என்னிடம், ‘ நீ உன் திமிரை கொஞ்சம் காட்டினால்கூட , உன்னை நீ அமர்ந்திருக்கும் இடத்தோடு சேர்த்து விழுங்கிவிடுவேன் ‘ என்றது. அந்த பயங்கரம்தான் என்னை மயக்கமுறச் செய்தது. மேலும் இமாமிடம் மன்னிப்பும் கேட்கவைத்தது ‘ என்றார் கலீஃபா.

ஈடேற்றம் பெற வழி

ஒருமுறை ஹஸ்ரத் தாவூத் தாயீ இமாமவர்களிடம் வந்து, ‘நீங்கள் பெருமானாரின் பரம்பரையில் வருபவர். எனவே எனக்கு ஏதாகிலும் நல்லுபதேசம் செய்யுங்கள் ‘ என்று கேட்டார். அதற்கு இமாம் மெளனமாக இருந்தார்கள்.

‘பெருமானார் பரம்பரையில் வருகின்ற பெரும் பேற்றினை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அந்த சிறப்பின் பொருட்டு, எனக்கு உபதேசிக்க வேண்டியது உங்கள் கடமை ‘ என்று மறுபடியும் கேட்டார்.

அதுகேட்ட இமாம், ‘அதுதான் எனக்கும் பயமாக உள்ளது. மறுமை நாளில் பெருமானார் என் கரம் பற்றி, என் வழியை நீ ஏன் பின்பற்றி நடக்கவில்லை என்று கேட்டுவிட்டால் என்னசெய்வது என்று தெரியவில்லை. எனவே ஈடேற்றம் பெறுவதென்பது நல்ல அமல்கள் புரிவதைக் கொண்டு உள்ளதே தவிர, பாரம்பரியப் பெருமை காரணமாக கிடைப்பதல்ல என்பது தெளிவு ‘ என்று பதிலிறுத்தார்கள்.

நயவஞ்சகத்தை வெறுத்தல்

உலகத் தொடர்பை துண்டித்து தனிமை தியான வாழ்வை இமாம் மேற்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் ஹஸ்ரத் அபூசுஃப்யான் சவ்ரி வந்து, ‘இம்மாதிரி நீங்கள் தனித்து வாழ்வதால், மக்களுக்கு உங்களால் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமல்லவா ? ‘ என்று கேட்டார். அதற்கு பதிலாக இரண்டு கவிதைகளை இமாம் சொன்னார்கள் :

போகின்றவர்களோடு போகின்றது நம்பிக்கையும்

தத்தம் நினைவுகளில் மூழ்குகின்றனர் மக்கள்

ஒருவருக்கொருவர் தனது அன்பையும் நம்பிக்கையையும்

வெளிப்படையாகப் பிரகடனப்படுத்துகின்றனர்

ஆனால் அவர்கள் இதயங்கள் முழுவதும் விஷம் நிறைந்துள்ளது

வெளிப்படையானதும் மறைவானதும்

ஒருமுறை இமாமவர்கள் விலையுயர்ந்த ஆடையொன்றை அணிந்திருப்பதைக் கண்ட ஒருவர், ‘அஹ்லெபைத்துகள் இப்படி ஆடம்பரமாக அணிவது பொருத்தமானதல்லவே ‘ என்றார். உடனே இமாம் அவருடைய கையைப் பற்றி, தங்களுடைய (ஜிப்பா போன்ற நீள அங்கியின்) சட்டைக்கையின் மேல் வைத்து (அதன் உட்புறம்) திருப்பிக்காட்டினார்கள். அதன் உள் பக்கமானது சாதாரண சாக்குத்துணியைவிட மோசமாக இருந்தது.

அப்போது இமாம், ‘மக்களைப் பொறுத்தவரை இது உயர்வான, ஆடம்பரமான ஆடை. ஆனால் இறைவனுக்கோ இது மோசமான ஆடை ‘ என்ற பொருள்படும்படி,

இதுதான் ஹல்க்(வெளிப்பக்கம்), இதுதான் ஹக்(உள்பக்கம் அல்லது உண்மை)

என்றார்கள்.

அறிவாளி யார் ?

ஒருமுறை இமாம் அபூஹனீஃபாவிடம், ‘அறிவாளியின் இலக்கணம் என்ன ? ‘ என்று ஜாஃபர் சாதிக் கேட்டார்கள்.

‘யார் நல்லது கெட்டதைப்பிரித்துப் புரிந்து கொள்கிறார்களோ அவர்களே அறிவாளி ‘ என்று அபூஹனீஃபா பதில் சொன்னார்கள்.

அதற்கு இமாம், ‘இதை மிருகம்கூடத்தான் அறிந்து வைத்துள்ளது. யாராவது அதற்குச் சேவை செய்தால், அப்படிச் செய்பவர்களுக்கு அந்த மிருகத்தினால் துன்பம் ஏதும் நிகழ்வதில்லை. மாறாக, தன்னைத் துன்புறுத்துபவர்களையே மிருகம் காயப்படுத்துகிறது ‘ என்றார்கள்.

‘அப்படியானால் உங்கள் கருத்துப்படி அறிவாளியின் அடையாளம் என்ன ? ‘ என்று அபூஹனிஃபா கேட்க,

‘யார் இரண்டு நல்லவைகளில் சிறந்ததைத் தேர்வு செய்கின்றாரோ, மேலும் இரண்டு கெட்டவைகளில் குறைந்த கெடுதி உள்ளதை (வேறுவழியின்றி) செய்கிறாரோ அவரே அறிவாளி ‘ என்றார்கள் இமாம்.

கொடுத்ததை வாங்குவதில்லை

தன்னுடைய தீனார் பணப்பை களவு போய்விட்டது எனவும் அதை இமாம்தான் எடுத்ததாகவும் ஒருவன் குற்றம் சாட்டினான். அதில் எவ்வளவு பணமிருந்தது என்று கேட்டு, இரண்டாயிரம் தீனார்கள் என்று அவன் சொல்லவும், உடனே அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று அப்பணத்தைக் கொடுத்தனுப்பினார்கள் இமாம்.

பின்னர் அவனுடைய பணப்பை வேறொரு இடத்தில் கிடைத்தது. உடனே அவன் விஷயத்தை இமாமிடம் சொல்லி, மன்னிப்புக் கேட்டு, அவர்கள் தந்த பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி வேண்டினான். ஆனால் கொடுத்ததை ஒருபோதும் திரும்பப் பெறுவதில்லை என்று இமாம் அப்பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்.

பின்னர் அம்மனிதன் இமாமின் உயர்வினைப் பற்றி மக்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, தன் தவறுக்காக வருந்தியவனாகவே இருந்தான்.

இறைவனைக் காண வழி

ஒருவர் இமாமிடம் வந்து எனக்கு இறைவனைக் காட்டுங்கள் என்றார். அதற்கு இமாம், ‘இறைவன் மூஸா அவர்களுக்கு லன் தரானீ (நீர் என்னைக் கண்ணால் காண்பது ஒருக்காலும் இயலாது) என்று சொன்னானே அது உமக்குத் தெரியாதா ? ‘ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘இது எனக்கும் தெரியும். ஆனால் முஹம்மதுடைய உம்மத்துகள் என் இறைவனை என் இதயத்தினுள் கண்டேன் எனவும், எந்த இறைவன் எனக்குக் காட்சி தரவில்லையோ, அந்த இறைவனை நான் வணங்கவில்லை என்றும் சொன்னதாக சொல்லப்படுகிறதே ? ‘ என்று வாதம் செய்தார்.

அது கேட்ட இமாம், ‘இவரை இந்த தஜ்லா (ஈராக் நாட்டிலுள்ள டைக்ரிஸ்) நதியினுள் கைகால்களைக் கட்டித் தூக்கிப் போடுங்கள் ‘ என உத்தரவு பிறப்பித்தார்கள்.

உடனே அவ்வாறு செய்யப்பட்டது. நீரினுள் மூழ்கி மூழ்கி அவர் மேலே வந்தபோதெல்லாம் தன்னைக் காப்பாற்றும்படி இமாமிடம் முறையிட்டார். ஆனால் இமாமோ நன்கு மேலேயும் கீழேயும் மூச்சுத்திணரும்படி அவரை மூழ்கடிக்கும்படி தண்ணீருக்கு உத்தரவிட்டார்கள். பலமுறை அவ்வாறே செய்யப்பட்டார் அவர்.

இறந்துவிடுவோம் என்ற நிலை வந்தவுடன் அவர் அல்லாஹ்விடம் உதவி கோரினார். உடனே இமாம் அவரை ஆற்றிலிருந்து வெளியே கொண்டுவரச் செய்தார்கள்.

நினைவு திரும்பியவுடன், ‘என்ன, இப்போது இறைவனைப் பார்த்துவிட்டார்கள் அல்லவா ? அவனோடு பேசினீர்கள் போலுள்ளதே ? ‘ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், ‘நான் எதுவரை அடுத்த மனிதனிடம் உதவி கோருபவனாக இருந்தேனோ அதுவரை எனக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு திரை இருந்தது. இறைவனிடம் உதவி கோரியவுடன் என் இதயத்தில் ஒரு வழி உண்டானது. முதலில் தோன்றிய மனக்கலக்கம், குழப்பமெல்லாம் மறைந்தது. யார் ஆசையாக அழைப்பாரோ, அவர் அழைப்புக்கு பதில் தருவேன் என்று இறைவனும் கூறுகின்றானல்லாவா ‘ என்றார்.

‘உண்மையாளனாகிய இறைவனை அழைக்கும்வரை நீங்கள் உண்மையாளரல்ல. உங்கள் இதயத்தில் தோன்றிய ஒளியை இனியாவது பாதுகாத்துக் கொள்ளுங்கள் ‘ என்று இமாம் கூறினார்கள்.

(இதையொத்த கதைகள் வேறுவேறு இறைநேசர்கள் மற்றும் பிரபலமான தத்துவவாதிகளின் வாழ்விலும் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், நிகழ்ச்சி உணர்த்த வரும் உண்மையை மட்டும் எடுத்துக்கொள்வதே பயனுள்ளது — மொழிபெயர்ப்பாளர்).

பொன்மொழிகள்

இறைவன் ஒரு குறிப்பிட்ட பொருளில் இருக்கிறான் என்றோ, ஒரு குறிப்பிட்ட பொருளில் அவன் நிலைப்படுவான் என்றோ யாராவதொருவர் சொன்னால், அவர் காஃபிராவார்.

ஒரு பாவத்தைச் செய்வதற்கு முன்பே மனிதனுக்கு பயம் ஏற்பட்டு, அதன் காரணமாக அவன் பாவமன்னிப்புக் கோருவானாகில் அவனுக்கு இறைவனின் நெருக்கம் கிடைக்கும்.

தனது இறைவணக்கங்களையொட்டி ஒருவன் பெருமை கொண்டால் அவன் பாபியாவான்.

செய்த பாவத்தை எண்ணி மனவருத்தத்தை வெளிப்படுத்துபவர்களே இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்கள்.

பொறுமை அனுஷ்டிக்கும் ஏழை, நன்றி செலுத்தும் வசதி படைத்தவன் – இருவரில் சிறந்தவர் முன்னவரே. காரணம், செல்வந்தரின் நேரம் முழுவதும் தனது செல்வத்தைப் பற்றிய கவலைகளில் கழிந்துவிடுகிறது. ஆனால் ஏழைக்கோ, இறைவனைப் பற்றிய சிந்தனை மட்டுமே உள்ளது.

‘யஹ்தஸ்ஸு பிரஹ்மத்திஹி மன்யஷாஉ ‘ என்ற இறைவசனத்திற்கு விளக்கம் தருகையில் இமாம் இப்படிக்கூறினார்கள்:

அதாவது, இறைவன் தான் விரும்புகின்றவர்களை (சிலரை) மட்டும் தனது பிரத்தியேக அருட்கொடைகளுக்கு (பாத்திரமானவர்கள்) என்று தெரிவு செய்து வைத்துள்ளான். அதாவது, (இப்படி இறைவனால் தேர்வு செய்யப்பட்ட சிலரைப் பொறுத்த மட்டில்) இன்ன காரணங்களால் இன்ன விளைவுகள் (ஏற்படும்) என்பதெல்லாம் முடிந்துவிடுகின்றன. ஏனெனில் (இவர்களுக்கு) இறைவனின் அருட்கொடை எனும் பரிசு நேரடியாகக் கிடைக்கிறது. மறைமுகமாக அல்ல.

(அவ்லியா எனப்படும் இறை நேசர்களைப்பற்றித்தான் இங்கு இமாம் பேசுகிறார்கள். இறைவனின் நட்பு எனும் அருட்கொடையைப் பெற்றுக்கொண்ட அவர்கள் சாதாரண மனிதர்களைப் போலல்லாது cause and effect என்ற விதிக்குக்கட்டுப் படாதவர்கள். உதாரணமாக நெருப்பு சுடும் என்பது விதியானால், தேவைப்பட்டால் அது அவர்களைச் சுடாமல் பார்த்துக்கொள்ள முடியும், இபுராஹீம் நபிக்கு அல்லது ஹஸன் பஸரிக்கு நடந்ததைப் போல – மொழிபெயர்ப்பாளர்)

நப்ஸாகிய கீழ்மனதின் இச்சைகளை எதிர்த்து போராடி வெல்பவரே மூமின் ஆவார்.

யார் இறைவனுடைய சேவையில், அவன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலில் முழுமையாக தன் உடலையும் மனதையும் உட்படுத்துகிறாரோ அவரே ஆரிஃபாவார்.

தங்கள் உண்மையான இயற்கைத் தன்மையை (தெய்வீகத்தை) காப்பாற்றிக் கொள்ள தன் நப்ஸோடு போரிடத் தயாராக உள்ளவர்களே அற்புதங்கள் நிகழ்த்தவல்லவர்கள். ஏனெனில் மனதோடு போரிடுவதானது இறைவனிடம் நம்மைச் சேர்ப்பதற்கும் காரணமாக உள்ளது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்குணங்களில் இல்ஹாம் எனப்படும் இறையுதிப்பும் ஒன்று. அதை ஆதாரமற்றதென வாதிட்டு மறுப்பவர்கள் சன்மார்க்கத்தில் உள்ளவரல்ல.

ஒரு கறுப்புக்கல் மீது ஊர்கின்ற கறுப்புச் சிற்றெறும்பு எப்படி கண்களுக்குத் தெரிவதில்லையோ அதைவிட மறைவாக தனது அடியார்களிடத்தில் உள்ளான் இறைவன்.

எப்போது என்னிடத்தில் இறை ரகசியங்கள் வெளிப்பட ஆரம்பித்தனவோ அப்போது நான் என்னை இழந்தவனாகிவிட்டேன்.

பகைவர்களது தொடர்பை விட்டுவிடுவதும் அறிவார்ந்த கொடுத்து வைத்தவர்களின் அடையாளமாகும்.

ஐந்து பேருடைய உறவிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.

1. பொய்யன். ஏனெனில் அவனது கயமையில் நமக்கும் பங்கு கொடுத்துவிடுவான்.

2. மூடன். ஏனெனில் அவனைக் கொண்டு எந்த அளவுக்கு நன்மை வந்து சேருமோ அந்த அளவுக்கு நஷ்டமும் வந்து சேரும்.

3. கஞ்சன். ஏனெனில் இவனுடைய உறவால் நமது பொன்னான நேரம் பாழாகிப்போகும்.

4. கோழை. ஏனெனில் நேரம் பார்த்து இவன் நம்மை விட்டுவிட்டுப் போய்விடுவான். 5. (பிறன்மனை நாடுதல் போன்ற) பெருங்குற்றம் புரிபவன். ஒரு கவளம் சோற்றுக்காக நம்மைக் காட்டிக்கொடுத்து வேதனையில் மாட்டிவிடுவான்.

சுவர்க்கம் நரகம் இரண்டிற்குமே இந்த உலகத்திலேயே இறைவன் முன் மாதிரிகளைக் கொடுத்துள்ளான். எளிமையே சொர்க்கம். கஷ்டமே நரகம். யார் தம் அனைத்துக் காரியங்களையும் இறைவனிடம் ஒப்படைத்துவிடுகின்றாரோ அவரே சொர்க்கத்துக்கு சொந்தக்காரர். நப்ஸின் இச்சைகளிடம் தன்னை ஒப்படைத்து விடுபவருக்கு நரகம்தான் விதி.

கெட்டவர்களின் சகவாசத்தின் மூலமாக இறைநேசர்களுக்குக் கெடுதி நேர முடியுமெனில், ஃபிர்அவ்ன் மூலமாக அவன் மனைவி ஆஸியாவையும் கெடுதி சென்று சேர்ந்திருக்கும். மேலும் இறைநேசர்களுடைய நட்பினால் இறைப்பகைவர்கள் நன்மையடைய முடியும் எனில், எல்லோருக்கும் முதலில் நூஹ், லூத் இவர்களுடைய மனைவிமார்களைத்தான் நன்மை சென்றடைந்திருக்கும். ஆனால் பிடி இறைவனிடம் உள்ளது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதே உண்மை.

பெருமானாரோடு உறவு வைத்தவர்களுடைய சிறப்புக்களையும் பெருமைகளையும் யார் மறுக்கவில்லையோ அவரே உண்மையில் அஹ்லெசுன்னத்தைச் சேர்ந்தவராவார்.

பின்னுரை

இமாம் ஜாஃபர் சாதிக் (ரலி) அவர்கள் மதினாவில் ஹிஜ்ரி 83-ல் (ஏப்ரல் 20, கி.பி.702) திங்கட் கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 17-ல் பிறந்து, அங்கேயே ஹிஜ்ரி 148 ரஜப் பிறை 15-ல், தமது 65ஆவது வயதில் மறைந்தார்கள். தாய் வழியில் அபூபக்கர்(ரலி) அவர்களோடும் தந்தை வழியில் அலீ(ரலி) அவர்களோடும் சேர்கிறார்கள். அலியாருடைய மகனார் இமாம் ஹுஸைனுடைய மகனார் ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய மகனார் முஹம்மது பாகிர் அவர்களுடைய மகன் தான் இமாம் ஜாஃபர் சாதிக் அவர்கள். அதாவது பெருமானார்(ஸல்) அவர்களுடைய பேரருடய பேரருடைய மகனாவார்கள்.

ஷியாக்கள் தங்கள் 12 இமாம்களில் ஆறாவது இமாமாக இவர்களை ஏற்றுக்கொண்டிருந்தாலும், தான் ஒரு ஷியா அல்ல என்று இவர்கள் திட்டவட்டமாக மறுத்திருப்பது கவனத்திற்குரியது.

இமாம் அவர்களுக்கு திராட்சைக் கனிகள் என்றால் மிகவும் உவப்பு. மதினாவில் இருந்த கவர்னர் மூலமாக அவற்றில் விஷம் வைத்துத்தான் அவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் பூரியான் என்றழைக்கப்படும் இனிப்புப் பண்டம் பற்றி அவர்கள் அறிந்திருந்தார்களா என்று எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. எனினும், பூரியான் ஃபாத்திஹா என்றும் கீர்பூரி ஃபாத்திஹா என்றும் ஒரு ஃபாத்திஹா ரஜப் பிறை 22-ல் இமாமவர்கள் பெயரால் தமிழகத்தின் தெற்குப்பகுதியில் வாழும் முஸ்லிம்களால் பயபக்தியுடன் ஓதப்படுகிறது என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.

அப்பாசிய கலீஃபாவான மன்ஸூர் தன் ஆட்சிக்கு இமாமவர்களால் ஆபத்து வரும் என்று எண்ணியே அவர்களைக் கொல்ல முயன்று அதில் வெற்றியும் கண்டார். ஆனால் இந்தக் காரணம் இறைநேசர் ஃபரீதுத்தீன் அத்தார் அவர்களின் மூலக்கட்டுரையில் சொல்லப்படவில்லை.

இறை நேசராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும், கவிஞராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்த இமாமவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மனப்பண்புகள் ஏராளம் உண்டு. அதற்கு வழி செய்யும் முகமாகத்தான் இந்த கட்டுரை உர்துவிலிருந்து விரிவாக தமிழாக்கமாகச் செய்யப்பட்டது.


Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி