விடுபட்டவைகள் -2 கல்யாணம் செஞ்சுக்கோங்கோ….

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

மதியழகன் சுப்பையா


இப்பொழுதெல்லாம் நண்பர்களை சந்திப்பதென்றால் கொஞ்சம் தயக்கமாகவே உள்ளது. ஏன் வீட்டை விட்டு வெளியே போகக் கூட தயக்கம் தான் . எல்லாவற்றையும் விட பல சமயங்களில் வீட்டிற்கு போகவே எரிச்சலாய்த்தாய் இருக்கிறது. கூடப் படித்தவர்கள், உடன் வேலைப்பார்ப்பவர்கள், பயண சினேகிதங்கள், கடைக்காரர்கள், ஓட்டல்காரர்கள் இப்படி என்னைத் தெரிந்தோர் எனக்குத் தெரிந்தோர் புதிதாய் அறிமுகமானோர் நிச்சயம் இனி அறிமுகம் ஆகப் போகிறவர் உட்பட எல்லோருமே சொல்லி வைத்தாற்போல் ஒரே கேள்விகளைத்தான் கேட்டு வைக்கிறார்கள். ‘கல்யாணம் எப்ப ? ‘, ‘கல்யாணம் எப்பன்டே ? ‘ ‘கல்யாணம் எப்பப்பா ? ‘ என்பதுதான் அக்கேள்வி.

‘ஏல, இப்பவெல்லாம் முன்னமாதிரி வேலை செய்ய முடியல. உட்கார்ந்து உட்கார்ந்து வீட்டு வேலைய செஞ்சிடுவேன் இந்தத் தண்ணீர் பிடிக்கத்தான் முடியல, குறுக்கெல்லாம் வலிக்குது ‘ என்று அம்மா துவங்க ‘ அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைங்கம்மா ‘ என தம்பியோ தங்கையோ முடித்து வைப்பார்கள். தண்ணீர் பிடிக்க ஆள் வேண்டுமாம் அதனால் கல்யாணமாம். இப்படி வீட்டார் எரிச்சல் படுத்துவது அவ்வப்போது என்றாலும் ‘ கல்யாணம் கில்யாணமுன்னு பேசாதீங்க ‘ என்று நான் கத்திவிட பேச்சு முற்றி சில நாட்களுக்கு அம்மாவோடு ‘டூ ‘ விட்டு அரைகுறையாய் சாப்பிடும்படியாகி விடும்.

இன்று நரை முடியைப் பற்றி சொல்லவே வேண்டாம். பத்து வயது பையனுக்குக் கூட நரைத்து விடுகிறது. நரையில்லாமைக்கு பிசிராந்தையார் என்னும் புலவர் சொன்ன காரணமோ இல்லை அறிவியல் அறிஞர்கள் சொல்லும் ஊட்டச் சத்துக்குறை காரணமோ எதுவானாலும் தலை மயிரைப் பற்றி அப்படி என்ன கவலை ? ஆனால் காதோரமாய் இரண்டு, உச்சியில் மூன்று அப்படியே அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் எனக் கொஞ்சம் நரைகள் தென் படவே ‘ டேய், தலை நரைச்சிட்டுடா சீக்கிரம் கல்யாணத்தை பண்ணித் தொலை ‘ என்பார்கள் கோரசாய். பாருங்கள் தலை மயிர் நரைத்தால் கல்யாணமாம். இப்பொழுதெல்லாம் மாதமிருமுறை சலூனுக்குச் சென்று சாயம் பூசிக் கொண்டு இவர்கள் வாயை அடைத்து வைக்க வேண்டியிருக்கிறது. பாருங்கள் என் பயத்தை.

அடுத்ததாக சர்வதேசிய அளவில் ஆண்கள் சந்திக்கும் மகா பிரச்சனை ‘ தொப்பை ‘ . செல்லாமாய் ஆரம்பித்து கிண்ணமாகி, சொம்பாகி, பானையாகி இப்படி வயிற்றின் வடிவங்கள் பரிணாம வளர்ச்சியடைந்து கொண்டே போகும். வார இறுதிகளில் மாத இறுதிகளில் வருட இறுதிகளில் என பல முறை எழுதியெழுதி சத்தியமெடுத்தும் நடவடிக்கைகள் நடைமுறைக்கு கொண்டுவர முடிவதில்லை. பயிற்சி துவங்கும் போது நண்பர் வந்து தொலைக்க வெட்கத்தில் அன்று விட நாளைநாளையென தொடர்ந்து பின் சத்தியமோ சபதமோ எடுத்துக் கொண்டு மேற்சொன்ன நிலைக்கே திரும்பத் வேண்டியதுதான். சிறுசோ பெரிசோ வயிறு வளர ஆரம்பித்து விட்டால் போதும் ‘நாலு புள்ளைக்கு அப்பன் மாதிரி இருக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்காப்பா ‘ என முழங்குவர். தொப்பையாம் அதனால கல்யாணம் பண்ணனுமாம் இப்பொழுதெல்லாம் பெல்ட் போட்டுக் கொள்வதை நிறுத்தி விட்டேன்.

சாலையில் ஏதேனும் பெண்ணைப் பார்த்து விடக் கூடாது. ‘என்னங்க அப்படிப் பார்வை பேசாம கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே ‘ என்பார்கள். இன்னைக்கு ஒரு பொண்ணப் பார்த்தேன் எவ்வளவு அழகாயிருந்தா தெரியுமா ? ‘ என்றால் போச்சு ‘யப்போ! அய்யாவுக்கு கல்யாண ஆசை வந்துட்டுப் போல வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்கோங்க! ‘ என்று பதில் வர மீண்டும் இப்படி அபிப்ராயங்களை தெரிவிப்பதில்லை என்று பல்லைக் கடித்துக் கொள்வதோடு சரி.

குழந்தைகள் என்றால் கொள்ளப் பிரியம் என்று தூக்கிக் கொஞ்ச முடிவதில்லை. ‘புள்ள பெத்துக்கனுமுன்னு ஆசை வந்திடுச்சி, கல்யாணம் பண்ணிட வேண்டியது தான் ‘ என்று உடனே முழங்கத் தொடங்கி விடுவர்.

சரி! தொப்பை வளர்ந்தால்தான் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் எலும்பும் தோலுமாய் இருக்கும் நண்பரைப் பார்த்து என்ன கல்யாண ஏக்கத்துல கரைஞ்சு போயிட்டியான்னு ‘ அதற்கும் கிண்டல்தான்.

மீண்டும் தலை மயிர் பிரச்சனை ஒன்று. நரைத்தால்தான் கல்யாணம் பண்ணச் சொல்கிறார்கள் என்றால் கருப்பு வெளுப்பு ஏதுவும் வேண்டாமென்று கொட்டி விட்டாலும் ‘ஏய்! தலையில வழுக்கை ஏறிக்கிட்டே போகுது சீக்கிரம் கல்யாணத்தை முடிப்பா ‘ என்றும் உசுப்பி விடுகின்றனர்.

இவ்வளவு நாள்தான் வேலையில்லாம இருந்த இப்பதான் வேலைக்குப் போறியே கல்யாணம் பண்ணிக்கோயேன் ‘ ‘புது வீடு வாங்கியாச்சு அடுத்தது என்ன கல்யாணம் தானே ? ‘ ‘ தங்கச்சி கல்யாணம் நல்லபடியாய் முடிஞ்சு போச்சு அடுத்து உன் கல்யாணம் தானே ? ‘ இப்படி என்ன நிகழ்ந்தாலும் கல்யாணம் எப்ப ? கல்யாணம் எப்ப ? என்ற கேள்விகள்தான் எதிரொலிக்கும். எதாவது பத்திரிக்கை கொடுக்க வருபவர்கள் உங்க கல்யாணப் பத்திரிக்கை எப்ப தருவீங்க ? என்று பத்திரிக்கைக்குப் பதில் பத்திரிக்கை கேட்பது நல்ல நகைச்சுவை.

நிறைய தொல்லைப் பட்டுகொஞ்சம் ஆத்திரத்தோடு ‘ நான் கல்யாணம் பண்ணப் போறதில்லை ‘ என்றால் ‘டேய் ! இப்படி சொன்னவனெல்லாம் தான் சுவர் ஏறி குதிச்சு மாட்டிக்கிறான் ‘ பேசாம சீக்கிறம் கல்யாணத்தை முடி ‘ இப்படி ஊரெல்லாம் கல்யாணம் பண்ணச்சொல்லி நச்சரித்துத் திரிவதற்குக் காரணம் தெரியவில்லை. கல்யாணமானவர் வேண்டுமானால் ‘ நாமெல்லாம் கல்யாணத்த பண்ணிக்கிட்டு படாத பாடு படுறோம் இவன் மட்டும் இப்படி ஜாலியா இருக்கானே ‘ என்ற பொறாமையில் சொல்லலாம். ஆனால் இந்த கல்யாணமாகாத வாலிபர்களுக்கு என்னவாயிற்று எனக்குத் தெரிந்து கல்யாண உறவில் மாட்டிக் கொண்ட பின் நட்புறவுவில் விரிசல் ஏற்படுவது இயல்பு. நட்பு போய்விடுமே என்று ஏன் இவர்கள் அஞ்சுவதில்லை.

ஒட்டுமொத்த ஆண்வர்க்கம்தான் இப்படி கல்யாணம் பண்ணச்சொல்லி தொல்லை செய்கிறது என்றால் சில தோழிகள் இவர்களை மிஞ்சி விடுகிறார்கள். ‘ஆகா! உனக்கு இந்த சேலை ரொம்ப அழகாயிருக்கு ‘ என்றால் போதும் ‘ஏன் இப்படி அலையிற, பேசாம ஒரு நல்லப் பொண்ணப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே ‘ என்று கடித்துத் துப்பி விடுவார்கள்.

இப்பொழுதெல்லாம் எங்கும் வாய் திறப்பதில்லை. பேசுவது கூட துண்டு துண்டாய் தவனை முறையில் இல்லையேல் வல்லென நாய் போல் குரைத்து விடுவது. பெரும்பாலான சமயங்கள் தனிமையில் கழிக்கிறேன். இப்பொழுதாவது சும்மா இருப்பார்களா ? ‘ பாவம் அந்த பையனுக்கு கல்யாணம் முடியாம ஆளு கொஞ்சம் ஒரு மாதிரியாயிட்டான் ‘ என்று கொஞ்சம் கூட கூசாமல் சொல்லி விடுகிறார்கள். இன்னும் கொஞ்சம் உரிமையோடு ‘கல்யாணப் பைத்தியம் ‘ கல்யாணக் கிறுக்கு ‘ என்று கூட பிரபலப் படுத்தி விடுகிறார்கள்.

இனி எது நடந்தாலும் கல்யாணம் நடக்காததால் தான் இப்படி என்று கண்டிப்பாய் சொல்லி விடுவார்கள். இந்த புலம்பலை வாசித்து முடித்ததும். ‘ பாவம் ரொம்பத்தான் ஆதங்கப் பட்டிருக்கிறார் ‘ என்று வருத்தமோ அனுதாபமோ பட்டுவிட்டு, கொஞ்சம் அதிக பட்சமாக உச்சுக் கொட்டி விட்டு ‘சரி சரி கல்யாணம் எப்ப ? ‘ என்று கேட்டு வைக்காதீர்கள்.

மதியழகன் சுப்பையா

மும்பை

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா