ச.சுரேந்திர பாபுவின் ‘தமிழகத்தில் பாரதப்போர் ‘நூலில் இருந்து….ஆய்வுப் பான்மை

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

சோதிப் பிரகாசம்


தமிழகத்தில் பாரதப் போர்!

எனது இள நிலை வழக்கறிஞர் ச.சுரேந்திர பாபு எழுதி இருக்கின்ற ஒரு நூல் இது; எனவே, எனது மகிழ்ச்சி இயல்பானது!

எனினும், இந் நூல் பற்றி எதையும் இங்கே நான் பேசப் போவது இல்லை. மோசூர் தி. அருளப்பனின் அணிந்துரையே இதற்குப் போதுமானதும் ஆகும்.

தமிழகத்தில்தான் பாரதப் போர் நடை பெற்று இருந்து இருக்க வேண்டும் என்று ச.சுரேந்திர பாபு எழுதி இருப்பதைப் படித்த பொழுது நான் வியப்பு அடைந்தேன்; அதே நேரத்தில், மகிழ்ச்சியும் அடைந்தேன். மிகவும் அவசியமான ஒரு சிந்தனையாகவும் எனக்கு இது தெரிந்தது.

தமிழா ? சம்ஸ்க்ருதமா ?

தமிழா ? சம்ஸ்க்ருதமா ? என்னும் கேள்வி பல காலமாக இங்கே எழுப்பப் பட்டு வந்து இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால், தேவையற்ற இந்தக் கேள்விதான் நமது சிந்தனைகளைத் திசை-திருப்பிக் கொண்டும் வந்து இருக்கிறது.

தமிழ் இயல் ஆய்வுகளுக்கும் சம்ஸ்க்ருதத்திற்கும் இடையே அப்படி என்ன ஒரு தொடர்பு இருந்திட முடியும் ? திரவிடர் வரலாற்றினை நேரடியாக ஆய்ந்திட முடியாது என்கின்ற அளவுக்கு, திரவிடர்தம் வரலாற்றிற்கும் ஆரியர்தம் வரலாற்றிற்கும் இடையே அப்படி என்ன ஒரு சம்பந்தம் ?

எதுவும் இல்லை!

எனினும், தலையாய ஒரு கேள்வியாக இந்தக் கேள்விதான் நம் இடையே எழுப்பப் பட்டு வந்து இருக்கிறது; திசை-திருப்பப் பட்டும் நாம் வந்து இருக்கிறோம்.

பழைமையா ? புதுமையா ? என்னும் வாதங்களை நாம் நிகழ்த்தலாம். அரசு-முதலாண்மையா ? அல்லது சமுகாண்மையா ? என்னும் விவாதங்களிலும் நாம் ஈடு படலாம்.

நமது வாழ்க்கையைப் பற்றிய கேள்விகள்தாம் இவை என்பதால் இதில் திசை-திருப்பம் என்று எதுவும் இல்லை.

ஆனால், சம்ஸ்க்ருதமா ? தமிழா ? என்னும் கேள்வி தமிழர்களுக்கு எதற்கு ?

எனினும், இந்தக் கேள்வியைக் கடந்து சென்றிடாமல் வேறு கேள்விகளுக்குள் நாம் நுழைந்திட முடியாது என்கின்ற வகையில் நம் மீது இந்தக் கேள்வி திணிக்கப் பட்டு வந்து இருக்கிறது.

திரவிடர்களை வெற்றி கொண்டவர்கள் ஆரியர்கள்; சம்ஸ்க்ருதத்தைச் சாராமல் தமிழின் வளர்ச்சி இருந்திட முடியாது; என்பன போன்ற மாயைகள்தாம் இதற்குக் காரணம்!

சும்மாய்ச் சொல்லக் கூடாது—-சம்ஸ்க்ருத வாணர்கள்தாம் எவ்வளவு புத்தி சாலிகளாக விளங்கிக் கொண்டு வந்து இருக்கிறார்கள்! வெறும் மாயைகளுக்கு எதிரான போராட்டமாக அல்லவா, தமிழ் இயல் ஆய்வுகள் திசை-திருப்பப் பட்டும் வந்து இருக்கின்றன!

வரலாற்றின் நகைப்பு என்றுதான் இதனை நாம் குறிப்பிட்டு ஆக வேண்டும்.

அதே நேரத்தில், இந்த மாயைகளுக்குப் பின்னால் வரலாற்றுக் காரணங்கள் என்றோ, அல்லது மொழி இயல் காரணங்கள் என்றோ எவையும் இல்லை என்பதுதான் இதில் வேடிக்கை!

ஏனென்றால், ஆரியர் என்று ஒரு பந்தவம் உலகில் எங்கும் என்றும் இருந்தது இல்லை.

எனினும், அனைத்துப் பந்தவங்களிலும் உயர்வான ஒரு பந்தவமாக அது புனையப் பட்டு வந்து இருக்கிறது.

இந்தோ-ஈரோப்பிய மொழிகள் என்னும் வகைப் பாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை.

எனினும், இல்லாத ஆரியர்களின் இந்தோ-ஈரோப்பிய மொழிகள்தாம் உயர்வான மொழிகளாகச் சித்தரிக்கப் பட்டு வந்து இருக்கின்றன.

அடடா, எவ்வளவு வெண்மை வாய்ந்தவர்களாக நமது புலவர்கள் விளங்கிக் கொண்டு வந்து இருக்கிறார்கள்! ஆனால், தமிழ் மக்களுக்கு இதில் எந்தப் பங்கும் இருந்தது இல்லை என்பதுதான் இங்கே நமக்கு முக்கியம்!

நமது புலவர் மரபினைக் கொஞ்சம் நாம் எண்ணிப் பார்ப்போம்.

புரவலர்களின் முன்னால் கை கட்டி நின்று கொண்டு, அவர்களின் கருணைக்காகக் காத்துக் கிடந்து கொண்டு வந்து இருந்த ஒரு மரபுதான் நமது புலவர்களின் மரபு!

காசு-பணம் வேண்டும் என்றால் மட்டும் அல்ல, போதையில் மயங்கிப் போவதற்குக் கூட மன்னர்களை நாடிச் சென்று கொண்டு இருந்தவர்கள் அவர்கள்!

குடிப்பதற்குக் கொஞ்சம் கள் வார்த்தால் போதும், கொடுங் கோலர்களைக் கூட வள்ளல்கள் என்று அவர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டு வந்து இருந்தார்கள்.

எனினும், இவர்களது தற் பெருமைகளுக்கு மட்டும் எந்த ஓர் அளவும் இருந்தது இல்லை

—-இன்றும் கூடத்தான்!

அரசியல் காரர்களின் பாதங்களில் தஞ்சம் புகுந்து விடுகின்ற நமது புலவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகிக் கொண்டு வந்திட வில்லையா ?

ஆய்வாளர்கள் அனைவரும் வெட்கப் படக் கூடிய இவர்களது பான்மைகளோ வீண் பெருமைகளாகத் தரம் இழந்து போய்க் கொண்டு இருக்கின்றன.

இந்த வீண் பெருமைகளுக்கு ஒரு முடிவு கட்டாமல், நம் இடையே ஆய்வுப் பான்மை வளர்ந்திடப் போவது இல்லை; பர-பரப்புப் பான்மை வீழ்ந்திடப் போவதும் இல்லை!

இதனால்தான், தமிழ் இயல் ஆய்வுகளில் ஈடு படுவது தமிழர்கள் அனைவருக்கும் உரிய ஒரு பொறுப்பாக மாறுகிறது. அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் தமிழ் இயல் ஆய்வுகளில் ஈடு பட வேண்டியது கடமையும் ஆகிறது.

சம்ஸ்க்ருதத்தை ஒத்த ஒரு சிறந்த மொழியாகத் தமிழ் மொழியை நமது புலவர்கள் சித்தரித்துக் கொண்டு வந்து இருந்தார்களே, எந்த அடிப்படையில் ?

ஆரியர்கள் வந்தார்கள்; திரவிடர்களை வென்றார்கள்; என்று எல்லாம் நமது வரலாற்றினைத் திசை-திருப்பிக் கொண்டும் அவர்கள் வந்து இருந்தார்களே, இதற்கு எல்லாம் என்ன ஆதாரம் ?

தென் மொழியாம் தமிழ்! வட மொழியாம் சம்ஸ்க்ருதம்!

அப்படி என்றால், வடக்ககத்தில் தமிழ் மொழி இருந்தது இல்லையா ?

தொன்று முதல் இன்று வரை வாழ்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் வந்து இருக்கின்ற தமிழ் மொழிக்கும் சம்ஸ்க்ருதத்திற்கும் இடையே அப்படி என்னதான் ஓர் ஒப்பீடு இருந்திடவும் முடியும் ?

எங்கு தோன்றியது ? எப்படி வளர்ந்தது ? என்று ஏதேனும் வரலாறு சம்ஸ்க்ருதத்திற்கு உண்டா ? அப்படி உண்டு என்றால் அந்த வரலாறுதான் என்ன ?

இப்படி எந்தக் கேள்விக்கும் எந்த ஒரு விடையும் சம்ஸ்க்ருதத்தில் இல்லை.

எனினும், நம் தமிழ் அறிஞர்கள் கூறிக் கொண்டு வந்து இருக்கிறார்கள்—-சம்ஸ்க்ருதத்திற்கு இணையான ஒரு மொழிதான் தமிழ் மொழி என்று!

இப்படி எல்லாம் தமிழுக்கு இழிவு கற்பித்துக் கொண்டு வருபவர்கள்தாம் பலவான நமது தமிழ் அறிஞர்கள் என்றால் அது மிகை ஆகாது. நமது ஆய்வுப் பான்மை அன்றி அடிமைப் பான்மைதான் இதற்குக் காரணமும் ஆகும். இந்த அடிமைப் பான்மைக்கு அடிப்படையாக இருந்தது கூட வெறும் மாய்மைப் பான்மைதான் என்பதுதான் இதில் வேடிக்கை!

அப்படி என்ன ஒரு பெருமை சம்ஸ்க்ருதத்திற்கு! இதற்கு மொழி இயல் காரணங்கள் எவையேனும் உண்டா ? நிச்சயமாக இல்லை! சமுதாயத்தின் ஆதிக்கத் திறல்கள் விதைத்துக் கொண்டு வந்து இருந்த மாய்மைகள் மட்டும்தாம் உண்டு.

இப்படி, மொழி இயல் காரணங்கள் எவையும் இன்றி, சம்ஸ்க்ருதத்திற்குக் கற்பிக்கப் பட்டு வந்து இருக்கின்ற உயர்வுதான் சம்ஸ்க்ருத மாயை என்பதும் ஆகும்.

சரி, மக்கள் பேசுகின்ற மொழியாக என்றாவது எங்காவது சம்ஸ்க்ருதம் இருந்ததா ? என்றால் அதுவும் இல்லை; தமிழகத்தில் இல்லவே இல்லை!

எனினும், தமிழ் அறிஞர்களின் நெஞ்சங்களில் சம்ஸ்க்ருதம்தான் கோலோச்சிக் கொண்டு வந்து இருக்கிறது. இதனால்தான், இதனைச் சுட்டிக் காட்டுவதற்கு நமக்கு ஓர் இரா:பெர்ட் கால்டுவெல் தேவைப் பட்டும் இருந்தார்.

சம்ஸ்க்ருதத்தை வியந்து பாராட்டிக் கொண்டு வந்து இருந்த அறிஞர் பெரு மக்களிடம் இருந்து முற்றிலும் வேறு பட்ட வகையில், தமிழைப் பேசிக் கொண்டு வந்து இருந்த மக்களைத் தென் பாண்டி மண்டலத்தில் அவர் கண்டார்; அதுவும், கலப்படம் இல்லாத தமிழை!

இதனால்தான், சம்ஸ்க்ருத மாயையை வீழ்த்துகின்ற முதல் ஆயுதமாகத் திகழ்ந்திடத் தக்க வாய்ப்பு அவரது ஒப்பாய்வுக்குக் கிடைத்தது.

அதற்குப் பின்னர் வந்த பி. :டி. சீனிவாசனாரோ, சம்ஸ்க்ருதத்தின் அடித் தளத்தினையே அசைப்பதற்கு முற் பட்டு இருந்தார். சம்ஸ்க்ருதத்தில் இருந்து தமிழ் அல்ல—-தமிழில் இருந்து சம்ஸ்க்ருதம்—-கடனாகச் சொற்களை பெற்றுக் கொண்டு இருந்தது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அதன் பின்னரோ, தமிழ் இயல் ஆய்வுகளில் தொய்வுகள் ஏற்படத் தொடங்கி விட்டு இருந்தன. ஆனால், ஆய்வுகளில் ஓர் எழுச்சி ஏற்பட்டு இருந்து இருக்க வேண்டிய காலம் அது!

தமிழ் இயல் ஆய்வாளர்கள் இடையே அப் பொழுது உருவாகி இருந்த ஒரு பர-பரப்புப் பான்மைதான் இதற்குக் காரணம் என்றால் அது பிழையும் ஆகாது!

இரா:பெர்ட் கால்டுவெல்

புலவர்களின் மொழியாகச் சம்ஸ்க்ருதம் திகழ்ந்து கொண்டு வந்து இருந்த ஒரு காலத்தில் தமது மொழி இயல் ஆய்வுகளை மேற் கொண்டு வந்து இருந்தவர் இரா:பெர்ட் கால்டுவெல்!

கற்றவர் இடையே செல்வாக்குச் செலுத்திக் கொண்டு வந்து இருந்த ஒரு மொழியாக மட்டும் அல்ல, செல்வாக்குப் படைத்து இருந்த மனிதர்களின் மொழியாகவும் அப் பொழுது சம்ஸ்க்ருதம் விளங்கிக் கொண்டு வந்து இருந்தது; ஒரு தேவ மொழியாகவும் கருதப் பட்டு அது வந்து இருந்தது.

இப்படி, சமுதாயத்தின் மேல் தட்டு மக்களிடம் மட்டும்—-அவர்கள்தம் வாசிப்புகளில் மட்டும்—-சம்ஸ்க்ருதம் வழங்கிக் கொண்டு வந்து இருந்தது என்றால், தமிழ் மொழியோ அனைத்து மக்களினதும் பேச்சு மொழியாகவும் கீழ்த் தட்டு மக்களின் ஒரே மொழியாகவும் விளங்கிக் கொண்டு வந்து இருந்தது.

உண்மையில், சம்ஸ்க்ருதத்தின் செல்வாக்கிற்கு இரா:பெர்ட் கால்டுவெலாரும் ஆட் பட்டு இருந்து இருக்க வேண்டும். ஆனால், கீழ்த் தட்டு மக்களிடம் அவர் பணியாற்றிக் கொண்டு வந்து இருந்ததால் அவரைத் தமிழின் உயிர்த் துடிப்புக் கவர்ந்திடத் தவற வில்லை.

தன்னில்தானே சிறந்தும் தனித்து நின்று உயிர் வாழ்ந்து கொண்டும் வந்து இருந்த தமிழ் மொழி, ஒரு தனி மொழி என்பதனை அவர் கண்டு அறிந்தார். தமிழின் சிறப்பினை மூடி மறைத்துக் கொண்டு இருந்த சம்ஸ்க்ருத மாயையையும் அவர் வீழ்த்தினார்.

அதே நேரத்தில், மேற்கு ஆசியப் பகுதிகளில் இருந்து வந்து திரவிடத்தில் குடியேறி இருந்தவர்கள்தாம் திரவிடர்கள் என்னும் கொள்கையும் அவரிடம் காணப் பட்டது. மேற்கு ஆசிய மொழிகளுடனும் தெற்கு ஈரோப்பிய மொழிகளுடனும் தமிழ் மொழிக்கு இருந்து கொண்டு வந்து இருந்த தொடர்புகளை அவர் கண்டு அறிந்து இருந்ததுதான் இதற்குக் காரணம்.

ஆக, இரா:பெர்ட் கால்டுவெல்லின் சாதனைகளாகப் பின் வருவனவற்றை நாம் வரையறுக்கலாம்:

(1) தனிச் சிறந்த ஒரு மொழி தமிழ் மொழி!

(2) திரவிடக் குடும்பத்து மொழிகள் வேறு; சம்ஸ்க்ருதம் வேறு!

(3) உலகின் பல் வேறு மொழிகளுடனும் தமிழ் மொழிக்குத் தொடர்புகள் இருந்தன!

இரா:பெர்ட் கால்டுவெலாரின் இத் தகு சாதனைகளின் தொடர்ச்சியாகத்தான் பி. :டி. சீனிவாசனாரின் சாதனைகளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

பி. :டி. சீனிவாசனார்

நகை ததும்புகின்ற நடையில் மிகவும் தெளிவாக எழுதிடக் கூடியவர் பி. :டி. சீனிவாசனார்! பல தரப் பட்ட ஆய்வாளர்களின் நூல்களைப் படிப்பதிலும் ஆழமாக அவற்றை ஆய்ந்து பார்ப்பதிலும் இவர் வல்லவர்!

இவரது ஆய்வு முடிபுகளைப் பின் வருமாறு நாம் வரையறுக்கலாம்:

(1) பல் வேறு சொற்களையும் சம்ஸ்க்ருதத்திற்கு வழங்கிக் கொண்டு வந்து இருக்கின்ற ஒரு தனி மொழி, தமிழ் மொழி!

(2) நாகரிகத்திலும் செல்வச் செழிப்பிலும் ஏற்கனவே சிறந்து விளங்கிக் கொண்டு வந்து இருந்தவர்கள் திரவிடர்கள்! இவர்களை ஆரியர்கள் அடிமைப் படுத்தி இருந்தனர் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது!

(3) ஆரியர் என்று ஒரு பந்தவம் உலகில் என்றும் இருந்தது இல்லை. ஆரியம் என்பது ஒரு வழி பாட்டு முறை மட்டும்தான் ஆகும்.

(4) உலகு எங்கிலும் தங்கள் நாகரிகத்தை எடுத்துச் சென்று இருந்தவர்கள் திரவிடர்கள்!

(5) கி. மு. 5000 ஆண்டுகள் வாக்கில் இரும்புக் கால நாகரிகத்திற்குள் திரவிடர்கள் அடி எடுத்து வைத்து இருந்தார்கள்.

இப்படி, தமிழ் மொழியின் சிறப்பினை மட்டும் இன்றி, பண்டைத் திரவிடர்தம் நாகரிகத்தின் சிறப்பினையும் உலகுக்கு எடுத்துக் காட்டி இருந்தவர் பி. :டி. சீனிவாசனார்! இவரது காலத்திற்குப் பின்னர்தான் தமிழ் இயல் ஆய்வுகளில் ஒரு பர-பரப்புப் பான்மை உருவாகிடத் தொடங்கி இருந்தது.

பர-பரப்புப் பான்மை

மொழி ஆய்வில் தனிச் சிறந்த முத்திரைகளைப் பதித்து இருந்தவர் ஞா. தேவநேயனார்! இவரது மாணவரான இரா. மதிவாணனாரோ சிந்து வெளி எழுத்துகளைப் படித்து அறிந்தவர்!

சொல் ஆய்வில் ஈடு பட்டுக் கொண்டு வந்து இருந்த ஞா. தேவநேயனார், மாக்ஸ் முல்லரின் மொழி இயல் கொள்கைகளை எதிர் கொண்டு வீழ்த்தி இருக்க வேண்டும். ஆனால், மாக்ஸ் முல்லரின் இந்தோ-ஈரோப்பிய மொழிகள் என்னும் வகைப் பாட்டினை அவரோ முழுமையாக ஏற்றுக் கொண்டு இருந்தார்.

உலகின் முதல் மொழி என்று தமிழை நிலை நிறுத்திக் காட்டுகின்ற இவரது ஆய்வுகளில் வரலாற்று நோக்குப் பின்னுக்குத் தள்ளப் பட்டு ஒரு வகையான பர-பரப்புப் பான்மை முன்னணியில் நிறுத்தப் பட்டு இருந்தது.

(1) தமிழை ஒத்த ஒரு சிறந்த மொழியாகச் சம்ஸ்க்ருதத்தை இவர் ஏற்றுக் கொண்டு இருந்தார்.

(2) பெரிதாக எதையும் எடுத்துக் கொள்கின்ற ஒரு பர-பரப்புப் பான்மை இவரிடமும் இவரது மாணவர்களிடமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வந்து இருந்தது.

(3) வரலாற்று நோக்குப் புறக் கணிக்கப் பட்டு ஆரியர் என்னும் பந்தவக் கொள்கைக்கு இவரது ஆய்வுகளில் முதல் இடம் கொடுக்கப் பட்டு இருந்தது.

(4) ஆரியர்களையும் சம்ஸ்க்ருதத்தையும் வசை-பாடுகின்ற ஓர் உத்தியில் ஆய்வுகள் பின்னுக்குத் தள்ளப் பட்டு இருந்தன.

(5) அதே நேரத்தில், உலகின் முதல் மொழி தமிழ் மொழி என்பதை நிலை நிறுத்திக் காட்டுகின்ற முயற்சிகளில் சொல் ஆய்வுகள் செழித்து வளர்ந்து கொண்டு வந்தன.

(6) சங்கக் காலத்து வளர்ச்சிகளுக்கு அப்பால் தமிழ் மொழி வளர்ந்திடத் தேவை இல்லை என்னும் ஒரு பழைமைப் பான்மையும் தமிழ் மக்களின் தொடர்பினால் தமிழ் மொழிக்குத் தீட்டு ஏற்பட்டு விடலாம் என்னும் ஓர் அறிஞர் பான்மையும், ஆய்வுப் பான்மையின் முனைப்பினை மழுக்கி விடுகின்ற ஒரு பெருமிதப் பான்மையாக இக் காலத்தில் மாற்றம் அடைந்து இருந்தன.

(7) சம்ஸ்க்ருதச் சொற்களாக ஏராளமான தமிழ்ச் சொற்கள் ஒதுக்கித் தள்ளப் பட்டன.

(8) உலகத்தை விட்டு ஒதுங்கிய ஒரு குட்டித் தீவிற்குள் தனித்து வளர்கின்ற ஒரு மொழியாகத் தமிழ் மொழியின் வளர்ச்சி குறுக்கப் பட்டு இருந்தது.

(9) மொழி இயல் துறைக்கு அப்பால் தமிழுக்குப் பயன்பாடு எதுவும் இல்லை என்கின்ற பான்மையில் காரண அறிவு முறையான தமிழின் வளர்ச்சி புறக் கணிக்கப் பட்டு வந்தது.

(10) அரசியல் காரர்களை அண்டி நிற்கின்ற அடிமைப் பான்மை தமிழ்ப் புலவர்கள் இடையே வளர்ந்தது.

இப்படி, தமிழ் இயல் ஆய்வுகளின் வளர்ச்சியில் ஒரு தொய்வு ஏற்பட்டு இருந்த காலமாக ஞா. தேவநேயனாரின் காலத்தை நாம் வரையறுக்கலாம்.

அப்படி என்றால், இனி நாம் செய்திட வேண்டியது என்ன ? என்னும் கேள்வி இங்கே எழுகிறது.

செய்ய வேண்டியன என்ன ?

தமிழ் மொழியின் வளர்ச்சியினைத் தமிழ்ப் புலவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நாம் ஒதுங்கிக் கொள்கின்ற நமது பான்மையினை உடனடியாக நாம் கை விட்டாக வேண்டும்.

அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் தமிழ் இயல் ஆய்வுகளில் ஈடு படுவதற்கு முன் வந்தாக வேண்டும்.

பெரிதாக எதையும் எடுத்துக் கொள்கின்ற பர-பரப்புப் பான்மைக்கு ஒரு முற்றுப் புள்ளியினை நாம் வைத்தாக வேண்டும். நமது பர-பரப்புப் பான்மைக்கு நமது தற் பெருமையும் வீண் பெருமையும்தாம் காரணமும் ஆகும்.

அறிவு இயங்கு இயலின் அடிப்படை கூட தெரியாமல் சொல் ஆய்வுகளில் ஈடு படுவது பந்தத் தனமானது என்பதால், அறிவு இயங்கு இயல், முரண் இயக்கம், முதலிய மெய்ப் பொருண்மை ஆய்வுகளுக்குள் முழுவதுமாக நாம் இறங்கியாக வேண்டும்.

இந்த வகையிலும் பிற வகையிலும் நமக்குப் பயன் படத் தக்கது மார்க்சியம்!

வரலாற்று இயல், சமுக வியல், தொழில் நுட்ப வியல், மொழி இயல், முதலிய அனைத்தும் கலந்த ஆய்வுகளாகத் தமிழ் இயல் ஆய்வுகள் மேற் கொள்ளப் பட்டு ஆக வேண்டும்.

தமிழ் வாழ்க! என்று முழங்குவதை விட, தமிழின் வளர்ச்சிக்கு நமது பங்களிப்பு என்ன ? என்பதுதான் தமிழர்களுக்கு முக்கியம்!

இந்த வகையில், பி. :டி. சீனிவாசனாரின் ஆய்வுகளில் இருந்து தமிழ் இயல் ஆய்வுகளை மீண்டும் நாம் தொடர்ந்திட வேண்டியது அவசியம்!

புலவர் தமிழும் மக்கள் தமிழும்

புலவர்களின் தமிழுக்கும் மக்களின் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் நமக்குத் தெரியும்.

பாமரர்கள் யாரும் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே எழுதுபவர்கள் புலவர்கள்; ஒரு கடவுளைப் போல விண்ணில் நின்று கொண்டு ஏளனத்துடன் மக்களைப் பார்ப்பவர்கள்!

ஆனால் இவர்களுக்கோ, ‘உணர்வு ‘க்கும் ‘உணர்மை ‘க்கும் இடையே உள்ள வேறுபாடு கூட தெரிவது இல்லை.

மக்கள் புரிந்து கொள்ள முடியாத பழைமைத் தமிழில் இவர்கள் எழுதுவதற்கு இவர்களின் புலமைதான் காரணம் என்று நாம் நினைத்துக் கொண்டு இருந்தால் அதுதான் மிகப் பெரிய தவறு!

ஏனென்றால், மக்கள் புரிந்து கொள்ள முடியாத இவர்களது தமிழ் நடைக்குக் காரணம் இவர்களது பழைமைப் பற்று அல்ல, மாறாக, குழப்பம்—-தெளிவு இன்மை!

ஓர் உலக மொழியாக அன்று வளர்ந்து கொண்டு வந்து இருந்த தமிழ் மொழியை—-நாளைய உலகத்தின் மொழியாக உயர்ந்திட வேண்டிய தமிழ் மொழியை—-தனித்து ஒதுங்கிய தமிழ் நாட்டிற்குள் அடைத்து வைத்து விட்டால் போதும் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

உலகச் சந்தையின் பந்தயங்களில் அல்ல, குண்டுச் சட்டிகளுக்குள் குதிரை ஓட்டுவதில்தான் இவர்களுக்குப் பெரு விருப்பு!

ஜ, ஷ, ஸ, முதலிய எழுத்துகள் தமிழ் மொழிக்குத் தேவை இல்லை என்ற போதிலும், தமிழின் உலகத் தொடர்புகளுக்கு இன்று இவை தேவை என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திட முடியாது. ஆனால், இவ் எழுத்துகளைக் கண்டாலே நம் புலவர்கள் நடுங்கிப் போய் விடுகிறார்கள்!

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டும் இவர்கள் பிறந்து இருந்தால், தமிழின் வளர்ச்சியினை முடக்கி வைப்பதற்கு அந்தக் காலத்திலேயே இவர்கள் முயன்று இருந்து இருப்பார்கள் என்பது நிச்சயம்!

சங்கக் காலத்து இலக்கியங்களில் எத்தனை சொற்கள் இன்று காணப் படுகின்றனவோ, அத்தனை சொற்களுக்கும் அதிகமாக அக் காலத்துத் தமிழில் சொற்கள் இருந்து இருக்க முடியாது என்று முடிவு கட்டி விடுபவர்கள் இவர்கள்!

உலகத் தொடர்புகளைக் கண்டு இவர்கள் அஞ்சுவதுதான் இவற்றிற்கு எல்லாம் காரணம்! மாக்ஸ் முல்லரை எதிர் கொண்டு வீழ்த்துவதற்கு ஞா. தேவநேயனார் மட்டும் அல்லர், இன்று வரை அவரது மாணவர்களும் முயன்றது இல்லை என்பது கண் கூடு!

இவை போன்ற அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய வற்றை உதறி எறிந்து விட்டு ‘இந்தோ-ஈரோப்பிய மொழிகள் ‘ என்னும் ஆரிய மாயையினை உடைத்து எறிவதற்கு இவர்கள் முன் வருவார்களா ?

‘உசத்தி ‘ என்பதை ‘ஒஸ்தி ‘ என்று உச்சரித்துக் கொண்டு வருகின்ற தமிழனைக் கண்டு தலை தெறிக்க ஓடிக் கொண்டு இருப்பதை விட, அவனைப் புரிந்து கொள்வதற்கு நாம் முயன்றிட வேண்டும் என்று இவர்களுக்குத் தோன்றுவதே இல்லை.

மத மரபுகள்

பழம் தமிழ் இலக்கியங்களில் காணப் படுகின்ற மத முறையான மாயக் கதைகளைத் தமிழ் இயல் ஆய்வாளர்கள் பெரும்பாலும் புறக் கணித்துக் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

கடவுள் நம்பிக்கை இல்லாத மறுப்பு வாதிகளாகவோ அல்லது மறுப்பு வாதிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்களாகவோ நமது புலவர் பெரு மக்கள் திகழ்ந்து கொண்டு வந்து இருப்பதுதான் இதற்குக் காரணம் என்றால் அது பிழையும் ஆகாது.

‘உண்டு ‘ என்றும் ‘இல்லை ‘ என்றும் இல்லாத ஒன்றைப் பற்றி வாதிட்டுக் கொண்டு வந்து இருக்கின்ற இருப்பு வாதத்தையும் மறுப்பு வாதத்தையும் கடந்து மார்க்சியத்திற்குள் நுழைந்து விடுகின்ற மனித வாதிகளுக்கு இது ஒரு பொருட்டே அல்ல!

ஏனென்றால், மூட நம்பிக்கைகளை அவசியப் படுத்துகின்ற சமுதாய நிலவரங்களை ஒழித்துக் கட்டாமல், மூட நம்பிக்கைகளை ஒழித்திட முடியாது; எனவே, மண்ணைப் பற்றிய விள்ளனமாக விண்ணைப் பற்றிய விள்ளனம் மாறியாக வேண்டும்; என்பதுதான் மார்க்சியம், அல்லது மனித வாதம்!

சமயக் கருத்துகளிலும் மத முறையான மாயக் கதைகளிலும் மார்க்சிய வாதிகள் காண்பது கடவுளை அல்ல; மாறாக, மனிதர்களை—-அவ் வக் காலத்து மனித உறவுகளின் விளைவான நம்பிக்கைகளை!

இம் மாதிரியான மாயக் கதைகள் நமது பழம் தமிழ் இலக்கியங்களில் ஏராளமாகக் காணக் கிடக்கின்றன. இவற்றை ஆராய்ந்து அவ் வக் காலத்து வரலாற்றினை நிலை நிறுத்துவது தமிழர்தம் வரலாற்றினை நாம் புரிந்து கொள்வதற்கு அவசியம்!

இந்த வகையில், மிகவும் சிறப்பான ஒரு முயற்சியினை ச. சுரேந்திர பாபு தொடங்கி வைத்து உள்ளார் எனலாம். இது போன்ற ஆய்வுகள் மென் மேலும் வளர்ந்திட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

ஆக, புலவர்களின் மொழியாகத் தமிழ் மொழி சீரழிந்து போய் விடாத வகையில்—-ஒரு மக்களின் மொழியாக உலகில் தமிழ் மொழி உயர்ந்து நிற்கின்ற வகையில்—-தமிழ் இயல் ஆய்வுகளில் ஈடு படுவதற்கு அனைத்துத் துறையினரும் முன் வந்திட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்