மெய்மையின் மயக்கம்-26

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

சோதிப் பிரகாசம்


(சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து…)

கலைத் தரம்

:கார்க்கியின் ‘தாய் ‘ கதையை எத்தனை பேர் படித்து இருப்பார்கள் ? ஆனால், கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் அதை விட அதிகம் பேர் இருப்பார்கள். குரும்பூர் குப்புசாமியின் கதைகளைப் படித்தவர்களோ மிக மிக அதிகம்!

ஆனால், ஏன் இந்த வேறுபாடு ?

ஏனென்றால், மனிதருக்கு மனிதர்—-அவரவர்தம் உணர்ச்சி (எமோஷன்) மற்றும் உணர்மங்களின் (சென்றிமெண்ட்ஸ்) அனுபவ உணர்மைக்கு (எம்ப்ரிக்கல் கான்ஷியஸ்னெஸ்) ஏற்ப—-அவர்களின் கலைத் தரம் வேறு படுகிறது. மேல் தரம் என்றும் கீழ்த் தரம் என்றும் இந்தக் கலைத் தரத்தினை வகைப் படுத்திப் பார்ப்பது வீண் பெருமை மட்டும் அல்ல, அறியாமையும் ஆகும்!

ஏனென்றால், தனது சொந்த அனுபவத்தின் எல்லைக்குள் வைத்து ஒரு கதைஞன் வெளிப் படுத்திக் காட்டுகின்ற உணர்ச்சிகளையும் உணர்மங்களையும் தத்தம் சொந்த அனுபவங்களின் எல்லைக்குள் வைத்துதான் வாசகர்கள் புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் கலைத் தரம் என்பதன் பொருள் ஆகும்! தங்கள் சொந்த எல்லைகளுக்குள்—-இன்றைய அறிவாண்மைத் தனமான போன்மைப் பாணியில் கூறுவது என்றால், சட்டகங்களுக்குள்—-அடக்கிட முடியாத கதைகளை அவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள், அவ்வளவுதான்!

ஒரு சில கலை அனுபவங்களை—-வாழ்க்கை அனுபவங்களின் விளைவுகள்தாம் அவை என்பதால்—-இங்கே சற்று நாம் நோக்குவோம்.

கலை அனுபவங்கள்

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை, தேவி திரை அரங்கில் ‘:தோரஹா ‘ என்று ஒரு ஹிந்திப் படம் ஓடிக் கொண்டு இருந்தது. மிகவும் அதிகமான நாட்கள் அது ஓடிக் கொண்டு இருந்தது என்பதுதான் இங்கே முக்கியம்; பெண்கள் யாரும் பார்த்திட விரும்பாத ஒரு படமாக அது இருந்தது என்பதுவோ அதனையும் விட முக்கியம்!

அந்தப் படத்தினது வெற்றியின் கரசியம் என்ன தெரியுமா ? அதில் வருகின்ற ஒரு கற்பழிப்புக் காட்சி!

கற்பின் அழிப்பு என்பது இழிவான ஒரு குற்றம் என்பது எல்லோருக்கும் தெரியும். இழிவு நிறைந்த ஒரு குற்றம் மட்டும்தானா, தனி மனித உரிமையின் ஒரு மீறல் அது; மனித மானத்தினைக் களங்கப் படுத்துகின்ற ஓர் அவ மானம் அது; மனித மாண்பின் மீது திணிக்கப் படுகின்ற ஒரு வன் கொடுமை அது!

எனினும், கூட்டம் கூட்டமாகச் சென்று அந்தப் படத்தினை ஆண்கள் சுவனித்துக் கொண்டு வந்தார்கள்; இன்னும் ‘நன்றாக ‘வும் அதிக நேரமும் அந்தக் கற்பழிப்புக் காட்சி காட்டப் பட்டு இருக்க வேண்டும் என்று குறை பட்டுக் கொண்டு இருந்தவர்களும் உண்டு.

ஆனால், தங்கள் கண் எதிரில் மட்டும் இப்படி ஒரு மெய்மை நிகழ்ச்சி நடந்து இருக்கக் கூடும் என்றால், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் முன் வந்து இருந்து இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால், ஏன் இந்த மயக்கம்—-மெய்மையின் கலை மயக்கம் ?

சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை, அபிராமி திரை அரங்கில் ஓகோ என்று ஒரு படம் ஓடிக் கொண்டு இருந்தது—- ‘அவளும் ஒரு பெண்தான் ‘ என்பது மாதிரியான ஒரு பெயரில்! புரட்சிக் கதைகளினாலும் கவிதைகளினாலும் புரட்சியினையோ புரட்சிகரத் தேற்றங்களையோ யாரும் புரிந்து கொண்டு விட முடியாது என்று நான் வாதிடத் தொடங்கி இருந்த சமயம் அது!

அபிராமி திரை அரங்கில் ஆண்களின் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்த ஆண்கள் எல்லோரும் கரசியமாக அதனைச் சுவனித்துப் பாராட்டுவதற்குத் தவற வில்லை; வாய்ப்புக் கிடைத்த பொழுதுகளில் எல்லாம் கரசியமாக அது பற்றிக் கிசு-கிசுத்துக் கொண்டும் அவர்கள் வந்தார்கள்! ஏனென்றால், அது ஒரு கற்பழிப்புப் படம்!

தாங்கள் விரும்பிச் சுவனித்துக் கொண்டு வந்து இருந்த ஒரு படத்தை வெளிப் படையாக அவர்களால் பாராட்டிப் பேசிட முடிய வில்லையே, ஏன் ? அல்லது, வெளிப் படையாகத் தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காட்சியினைக் கரசியமாக அவர்களால் சுவனித்திட முடிந்து விடுகிறதே, எப்படி ?

கதையின் நாயகப் பாத்திரத்தினை மட்டும் இன்றி, சதிகாரப் பாத்திரத்தினையும் மகிழ்ச்சியாக மனிதர்கள் சுவனித்துக் கொண்டு வந்து இருக்கிறார்களே, அப்படி என்றால், ஒவ்வொரு மனிதனிடத்தும் ஒரு சதிகாரன் ஒளிந்து கிடந்து கொண்டு வருகிறானா ?

‘இரு மலர்கள் ‘ என்று ஒரு படம்! முதலில் ஒரு நாயகியை நாயகன் காதலிக்கிறான்; இடையில் தொடர்பு அறுபட்டுப் போய் விடுகிறது. அல்லல்களும் இன்னல்களும் சூழ்ந்த அந்த நேரத்தில் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டு வருகிறாள் இரண்டாம் நாயகி! அவளையே அவன் மண முடித்துக் கொள்கிறான்; மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழ்ந்து கொண்டும் அவன் வருகிறான். அவர்களுக்கு ஒரு மகளும் உண்டு!

பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நாள் முதல் நாயகியை நாயகன் சந்திக்கிறான்; அவளது பரிதாப நிலையைக் கண்டு பதறுகிறான்! பட்டுப் போன ஒரு மரத்தைப் போல இவனுக்கு அவள் தெரிகிறாள்; பட்ட மரம் மீண்டும் துளிர்த்திட வேண்டாமா ?

முதல் நாயகியைச் சுற்றிச் சுற்றி அவனது மனம் ஊசல் ஆடுகிறது; கற்பனை என்பது வேறு; மெய்மை என்பது முற்றிலும் வேறு; என்பதை அவனுக்குக் காட்டுவதற்கு முதல் நாயகி முற்படுகிறாள்; உன் மனைவியை விட்டு விட்டு என்னுடன் நீ வருவதாக இருந்தால் உன்னுடன் நான் வாழ்கிறேன் என்று அவனிடம் அவள் கூறுகிறாள்.

நாயகனின் கற்பனைகள் தவிடு-பொடி ஆகின்றன. நுண்மையான இயல்பு வேறு; திண்மையான இயல்பு வேறு; என்பதை அவன் உணர்ந்து கொள்கிறான்; தனியாக அவளை விட்டு விட்டுத் தனது மனைவி-மகளுடன் மகிழ்ச்சியாக அவன் வீடு திரும்புகிறான். இல்லை என்றால், செம் மீன் கதையைப் போல அவர்கள் செத்துப் போவதற்கு நேர்ந்து விட்டு இருந்து இருக்கலாம்! மெய்மை வாழ்க்கையிலோ இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் இருந்திடக் கூடும் என்பதில் ஐயம் இல்லை.

அப்படி என்றால், காதல் என்பது பொய்யா ? கிடைத்த உணவினைக் குழந்தைக்குக் கொடுக்காமல் தானே ஒரு தாய் உண்டு விடுகின்ற ஒரு கதையினைச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறாரே, அப்படி என்றால், பாசம் என்பது பொய்யா ?

இம் மாதிரியான கதைகளில் இருந்து மனிதர்கள் பெறுவது என்ன, அறிவா ? அல்லது ஆறுதலா ?

அறிவுதான் என்றால் அதன் ஆழம் என்ன ? ஆறுதல்தான் என்றால் அதன் தன்மை என்ன ?

கலைப் படம்

ஜாப்ஸன் என்று ஒரு கலைஞர்! தொழிற் சங்கப் போராட்டத்தில் ஈடு பட்டதற்காகப் பழி வாங்கப் பட்டு இருந்த ஓர் உழைப்பாளர் அவர்! ஹோமியோபதி மருத்துவமும் அவருக்குத் தெரியும்.

அவரது நகைச் சுவை உணர்வுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்; எனது நண்பர் காசி லிங்கத்திற்கும் அவரைப் பிடிக்கும். ‘உங்களைப் பார்த்துச் சிரிப்பது ஒரு பெண்ணாக இருந்தாலும் அது விற்பனை வரி அலுவலகமாக இருந்தால் மிகவும் எச்சரிக்கையாக நீங்கள் இருக்க வேண்டும் ‘ என்று ஒரு நாள் அவர் கூறியதைக் கேட்டு விழுந்து விழுந்து நாங்கள் சிரித்தோம். அரசு ஊழியர்களின் ஊழல் பற்றிய அவரது சித்தரிப்பு அது!

திடிர் என்று ஒரு நாள் மிகவும் பர-பரப்புடன் என் அறைக்குள் அவர் நுழைந்தார்; உடனடியாக ‘அன்னக் கிளி ‘ படத்தைப் போய் பாருங்கள் என்று கூறினார்; அந்தப் படத்தின் பாடல்களைப் பெரிதும் பாராட்டினார். சரி, படத்திற்குப் பணம் கொடுத்து விட்டுப் போங்கள் என்று காசிலிங்கம் கூறியதும் ஓடிப் போய் விட்டார். இப்படித்தான் இன்னொரு நாள் வந்து ’16 வயதினிலே ‘ படத்தைப் பற்றி அவர் பேசினார்; ‘கலைப் படம் ‘ என்றும் அதனை அவர் வருணித்தார்.

போதைப் பொருள்களாகக் கதை-கவிதைகளை நான் சித்தரித்துக் கொண்டு வந்து இருந்தது அவருக்குத் தெரியும். ‘கதை-கவிதைகள் என்ன, தத்துவமா ? தத்துவமாகத் தத்துவமும் கலைகளாகக் கதை-கவிதைகளும் இருக்க வேண்டும் ‘ என்பதுதான் அவரது வாதம்!

‘கலைப் படம் ‘ என்றால் என்ன ? என்பது பற்றிய நேர் முறையான கணிப்புகள் எவையும் அவரிடம் இருந்தது இல்லை. எனினும், ‘வணிகப் படம் ‘ என்பதற்கு எதிராகக் கலைப் படம் என்பதை நிறுத்தி அவர் பேசுவார்! ஆனால், வணிகப் படம் என்றால் என்ன ? என்பதையும் அவரால் நிலை நிறுத்திட முடிய வில்லை.

‘எதையும் வரையறுத்திட முடியாது ‘ என்கின்ற பின்-புதின வாதம் அப் பொழுது பிரபலம் ஆகி இருக்க வில்லை; இருந்து இருந்தால், அந்தப் பக்கத்திற்கு அவர் தாவி இருந்து இருக்கலாமோ, என்னவோ ? மூளை நோகாத ஞானம் என்பது எப் பொழுதும் ஒரு சுகம் ஆனதுதானே!

ஆனால், அஷ்வ கோஸ் உள்ளிட்ட அவரது எழுத்தாளர் நண்பர்களும் நானும் இது பற்றி விவாதித்திட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஒரு தொழிற் சங்கப் பணிக்காகத் திருவொற்றி யூருக்கு நான் சென்று இருந்த பொழுது ஒரு நாள் அஷ்வ கோஸின் இல்லத்திற்கு என்னை அவர் அழைத்துக் கொண்டும் சென்றார். வழியில் எங்களைச் சந்தித்த அஷ்வ கோஸ் ஏனோ நழுவி விட்டார்; ஸ்தாலினிசத்திற்கு எதிரான ஒரு தொழிற் சங்கத் தலைவராக நான் இருந்து கொண்டு வந்து இருந்தது அதற்குக் காரணமாக இருந்து இருக்கலாம்.

எப்படியும், கலைப் படம் x வணிகப் படம் என்னும் வேறுபாட்டிற்கு அடியில் வேறு ஏதேனும் ஒரு வேறுபாடு இருந்திட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

உணர்ச்சிகள்

தாய்-மகன், அண்ணன்-தங்கை, காதலன்-காதலி, கணவன்-மனைவி, முதலிய பிற உறவுகளின் இயக்கத்தில் ஊடாடிக் கொண்டு வந்து இருக்கின்ற உணர்ச்சிகளையும் உணர்மங்களையும் அனுபவித்துப் பார்த்திடாதவர் என்று நம்மில் யாரும் இருந்திட முடியாது என்பதற்குச் சான்றுகள் எவையும் தேவை இல்லை.

பஞ்சமன்-சூத்திரன்-பார்ப்பனன் என்னும் சாதி வேறுபாடுகளுக்கும் இந்து-இஸ்லாமியன்-கிறிஸ்தவன் என்கின்ற மத வேறுபாடுகளுக்கும் கறுப்பு-வெள்ளை-மஞ்சள்-கருஞ் சிவப்பு முதலான பந்தவ வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்ட நிகழ்ப்பாடுகள் இவை—-மனித உள்ளத்தின் நிகழ்ப்பாடுகள்!

இவர்களுள், அழுபவன்—-தவிப்பவன்—-துடிப்பவன்—-எவனாக இருந்த போதிலும்—-ஏழை-பணக்காரன், படித்தவன்-பாமரன் என்று யாராக இருந்த போதிலும்—-அவனுக்காக நாமும் கசிகிறோம்—-உணர்மப் படுகிறோம்—-உணர்ச்சி வசமும் ஆகி விடுகிறோம்.

‘படகோட்டி ‘யின் நாயகன் கண்ணீர் வடித்த பொழுது அவனது கண்ணீரைப் பணக்காரர்களும் பகிர்ந்து கொண்டார்களே, எப்படி ? ‘வசந்த மாளிகை ‘யின் நாயகனது கண்ணீரை ஏழை மக்களும் பகிர்ந்து கொண்டு வந்து இருந்தார்களே, எதற்காக ?

இந்தக் கண்ணீப் பகிர்வினால் மனிதர்கள் அடைந்து கொள்கின்ற பயன் என்ன ? என்ன மாயம், இந்தக் கலையின் மாயம் ?

பக்கத்து வீட்டுக் காரர்கள் பட்டினி கிடப்பதைப் பற்றிக் கூட கவலைப் படாமல் வயிறு புடைக்கத் தங்கள் உணவு வகைகளை விழுங்கி விடுகின்ற மனிதர்கள், ‘பசி ‘ படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறார்களே, இது கயமையா ? அல்லது கையறு நிலையா ?

சொந்தப் பிள்ளைகளின் காதலை மறுதலித்து விடுகின்ற தாயும் தகப்பனும், கதைகளின் காதலுக்காகக் கண்ணீர் வடிக்கிறார்களே, இது கவடத் தனமா ? அல்லது மெய்மையின் மயக்கமா ?

ஆழ் மனத்திற்குள் அடங்கிக் கிடந்து—-இப்படி எல்லாம் மனிதர்களின் உள்ளங்களைப் பிளந்து பிளந்து—-அவர்களை வதைத்துக் கொண்டு வருவது எது ? இந்த வதைகளுக்கு இடையே அவர்கள் தேடிக் கொண்டு வருவது எதனை ? அறிவினையா ? அல்லது போதையினையா ?

கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்சைப் புரிந்து கொள்வது தொடக்கத்தில் மிகவும் கடினமானதாக எனக்குத் தெரிந்தது. சொற்களின் பொருள்களைச் சரியாக வரையறுத்துக் கொள்ளாமல் மார்க்சியச் சிந்தனையின் நுனியைக் கூட நாம் தொட்டு விட முடியாது என்பதை நான் புரிந்து கொண்டேன்; எனவே, ஒவ்வொரு சொல்லின் பொருளையும் அறுதியாக வரையறுத்துக் கொண்டு மார்க்சின் முதலை நான் படித்துக் கொண்டு வந்து இருந்தேன்.

கருத்துப் பொருள், அது மெய்மைப் படுகின்ற பருமைப் பொருள்; இயல்புப் பொருள், அதன் அயன்மைப் பாட்டினால் விளைகின்ற நுண்மை மற்றும் திண்மைப் பொருள்கள்; உட்பொருள், அது புலப்படுகின்ற வெளிப் பொருள்; சாரம், அதன் வடிவம்; என்பன போன்ற பல கருத்தமைவுகளைத் தெளிவு படுத்திக் கொண்டும் நான் வந்து இருந்தேன்.

திரு. வி. க. வின் ‘நுண் பொருள் மற்றும் பருப் பொருள் ‘; குமர குருபரரின் ‘உருவும் அருவும் உருவருவும் ‘; அருணகிரி நாதரின் ‘பாழ் ‘; சமய இலக்கியங்களில் காணக் கிடக்கின்ற ‘அப்பாலைப் பொருள் ‘; ‘கட்டு, அதன் கட்டறுப்பு ‘ முதலிய தமிழ் மரபுச் சிந்தனைகள் அப் பொழுதுதான் எனக்குப் புரியத் தொடங்கின; மனிதர்களைப் பற்றிய இலக்கியங்கள்தாம் சமய இலக்கியங்கள் என்னும் தெளிவும் எனக்கு ஏற்பட்டது.

பணத்தின் வடிவத்தில் மெய்மைப் படுத்திக் கொள்ளப் படுகின்ற பொழுதுதான் சமுதாயத்தின் ஒப்பளிப்பினை ஒரு சரக்கின் மதிப்புப் பெறுகிறது என்று ‘சரக்குகளின் உறவு ‘ பற்றிக் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவார்; சரக்குகளின் உறவுகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டு கிடப்பது ‘மனிதர்களின் சமுதாய உறவு ‘தான் என்பதையும் அவர் சுட்டிக் காட்டுவார். இந்த வாதங்களுக்கு இடையில் வருகின்ற அவருடைய அடிக் குறிப்பு ஒன்று பின் வருமாறு:

‘ஒரு வகையில், சரக்குகள் இடத்து உள்ளது போல்தான் மனிதர்கள் இடத்தும் இது உள்ளது.

கையில் ஒரு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டோ அல்லது, ‘நானாக நான் இருக்கிறேன் ‘ என்பதே போதுமானதாக இருக்கின்ற ஒரு ஃபிக்டேய மெய்ப் பொருண்மை யாளனாகவோ, உலகத்தில் மனிதன் பிறந்து வருவது இல்லை! எனவே, மற்ற மனிதர்களில் தன்னை முதலில் அவன் காண்கிறான்; தனக்கு ஒப்பளித்தும் கொள்கிறான்.

ஒரே வகையான உயிரிகள் என்கின்ற வகையில், கண்ணனுடன் தன்னை முதலில் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதன் மூலமாகத்தான், ஒரு மனிதன் என்கின்ற தனது சொந்த அடையாளத்தை இளங்கோ நிலை நிறுத்துகிறான். இப்படித்தான், தனது சொந்த ஆளுமையுடன், இளங்கோவுக்குக் கண்ணனும் ஒரே வகையான மனிதனாக மாறுகிறான். ‘ (முதல், தொகுதி ஒன்று, மஸ்கோ ஆங்கிலப் பதிப்பு, பக். 59.)

மற்ற மனிதர்களின் மூலமாகத்தான் தானும் ஒரு மனிதன் என்பதை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ளுகிறான்; உறவுகள் இல்லாமல் மனிதன் இல்லை; என்று மட்டும்தான் மார்க்சின் இந்தக் கருத்தினை முதலில் நான் புரிந்து வைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், பழநி மலையில்தான் இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பழநி மலை

‘வாழ்க்கையின் கேள்விக ‘ளை எழுதிக் கொண்டு வந்து அதன் இறுதிக் கட்டத்தில் நான் நின்று கொண்டு இருந்த பொழுது, ஒரு வேலை நிமித்தமாகப் பழநிக்கு நான் சென்று இருந்தேன். ஒரு நாள், பழநி முருகனைத் தெரிசித்து வருவதற்காக நண்பர்களுடன் கோயில் வளாகத்திற்குள் நான் நுழைந்தேன்.

கடைகளையும் ஆரவாரங்களையும் பார்த்துக் கொண்டு வந்து இருந்த என் தலையில் திடிர் என்று ஒரு மயில் தோகைக் கட்டு சாய்ந்தது. தோகையை விலக்கிப் பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சி! இரண்டு கன்னங்களையும் துளைத்துக் கொண்டு நாக்கை அழுத்தி வாயை நிறைத்து இருந்த ஒரு கத்தியுடன் ஒரு மனிதன் என் முன்னால் நின்று கொண்டு இருந்தான்! ஒரு கையில் பிட்சைப் பாத்திரம்; மறு கையில் மயில் தோகை!

இப்படி ஒரு காட்சியினை அன்று வரை நான் கண்டது இல்லை; அதிர்ச்சியில் நான் உறைந்து போய் இருந்தேன் என்றால் அது மிகை ஆகாது. என் மேல் பரிதாபப் பட்டவனாக எனக்கு வழி விட்டு அந்த மனிதன் என்னை அனுப்பி வைத்தான்.

நாக்கில் ஓர் அலகினைக் குத்திக் கொண்டு தங்கள் நேர்ச்சைக் கடன்களை முருகனுக்குச் செலுத்திக் கொண்டு வந்து இருப்பவர்களை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால், இந்த மனிதனோ கத்தியால் தனது கன்னங்களைத் துளைத்துக் கொண்டு பிட்சை எடுத்துக் கொண்டு வருகிறான்.

‘மத முறையான துயரம் என்பது, மெய்மையான துயரத்தின் வெளிப்பாடும், அதே நேரத்தில், அதற்கு விடுக்கப் படுகின்ற எதிர்ப்பும்தான் ஆகும் ‘ (வரலாற்றின் முரண் இயக்கம்: பாகம் இரண்டு, பக்.201.) என்று கார்ல் மார்க்ஸ் கூறி இருந்தது அப் பொழுது என் நினைவிற்கு வந்தது.

கசைகளால் தங்களை அடித்துக் கொண்டு கடவுளின் பெயரால் தங்களைத் தாங்களே கொடுமைப் படுத்திக் கொள்கின்ற மனிதர்கள் இருக்கிறார்கள்!

பட்டினி கிடந்து கொண்டு தங்கள் நேர்ச்சைக் கடன்களை நிறைவேற்றிக் கொள்கின்ற மனிதர்களையும் நாம் பார்த்து இருக்கிறோம்.

தங்கள் மேல் திணிக்கப் படுகின்ற கொடுமைகளுக்கு மனிதர்கள் தெரிவித்துக் கொண்டு வந்து இருக்கின்ற எதிர்ப்புகள்தாம் இந்த மத முறையான துயரங்கள் என்பது கார்ல் மார்க்சின் கருத்து.

‘நீ என்ன, என்னைத் துன்புறுத்துவது ? இதோ நானே என்னைத் துன்புறுத்திக் கொள்கிறேன், பார்! ‘ என்று கடவுளுக்கு மனிதர்கள் தெரிவிக்கின்ற எதிர்ப்புகள்தாம் மத முறையான இந்தக் கொடுமைகள் என்பதுதான் இதற்குப் பொருளும் ஆகும்.

இந்த வகையில் பார்த்தால், தற் கொலை என்பது கூட ஓர் எதிர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். தன்னை—-தனது உணர்ச்சிகளை—-உணர்மங்களை—-சாகடித்துக் கொண்டு வருகின்ற இந்தச் சமுதாயச் சூழல்களை எதிர்க்கின்ற வகையில்தான், தன்னைத்தானே ஒரு மனிதன் சாகடித்துக் கொள்கிறான் என்பதுதான் இதன் பொருளும் ஆகும்.

அப்படி என்றால், பிரச்சனைகளை நேருக்கு நேர் சந்தித்து எதிர் கொள்ள முடியாத மனிதர்களின் கோழைத் தனமான ஓர் எதிர்ப்புதான் தற் கொலை என்று நாம் எடுத்துக் கொள்ளலாமா ?

ஆவிகள், பேய்கள், அவற்றின் பயங்கரங்கள், இவற்றினால் நம் மனத்தில் ஏற்படுகின்ற அதிர்ச்சிகள், திகில்கள், முதலிய வற்றைச் சித்தரித்துக் காட்டுகின்ற திகில் படங்களைக் கூட மனிதர்கள் சுவனித்துக் கொண்டு வருகிறார்களே, அப்படி என்றால், ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஒரு கொடுமைக் காரன்—-ஒரு பயங்கர வாதி—-ஒளிந்து கொண்டு கிடக்கிறானா ?

இப்படி எல்லாம் பல சிந்தனைகள் என்னுள் எழுந்தன. எனினும், என்னுள் அந்த மனிதன் எழுப்பி இருந்த தவிப்பு மட்டும் தீர்ந்த பாடு இல்லை. என் மனத்தை விட்டு அந்தக் காட்சி அகன்றிடவும் இல்லை.

உளைச்சலான இந்தச் சூழ் நிலையில்தான், ‘இன்னொரு மனிதனில்தான் தனது சொந்த அடையாளத்தை ஒரு மனிதன் காண்கிறான்; தனக்கு ஒப்பளித்தும் கொள்கிறான் ‘ என்னும் மார்க்சின் கருத்து மிகவும் நன்றாக எனக்குப் புரியத் தொடங்கியது.

மனித உறவுகள்

ஒரு தனி மனிதனாக ஒவ்வொரு மனிதனையும் முதலாண்மைச் சமுதாயம் நிலைப் படுத்திக் கொண்டு வருகிறது என்பது நமக்குத் தெரியும். ஒரு சாதியின் மனிதனாக—-குலத்தின் மனிதனாக—-பண்ணையத்தின் அடிமை மனிதனாக—-இருந்து கொண்டு வந்து இருக்கின்ற மனிதர்கள், தங்களது தனி மனித விடுதலையினை எய்துகின்ற வாய்ப்பினை முதலாண்மைச் சமுதாயம்தான் உருவாக்கிக் கொண்டு வந்து இருக்கிறது என்று இதற்குப் பொருள்.

முழுமையான ஒரு தனி மனித விடுதலை என்பது மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு பயங்கரம் என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திட முடியாது. ஏனென்றால், ‘உறவுகள் ‘ இல்லாமல் மனிதனுக்கு என்று ஒரு பருமை வாழ்க்கையோ அல்லது கருத்து வாழ்க்கையோ—-புறமை வயமான ஒரு வாழ்க்கையோ அல்லது அகமை வயமான ஒரு வாழ்க்கையோ—-இருந்திட முடியாது. இதனால்தான், பிற மனிதர்களின் உறவினை ஒவ்வொரு மனிதனும் நாடவும் செய்கிறான்.

இப்படி, தங்களுக்குள் மனிதர்கள் ஏற்படுத்திக் கொள்கின்ற உறவுகளின் சிக்கல்தான் மனித வாழ்க்கையின் முக்கியமான சிக்கல் ஆகும். இந்த முதலாண்மைச் சமுதாயத்தைப் பொறுத்த வரை, ஒரு கை மாற்று உறவாக—-கைமாறு கருதுகின்ற கடப்பாடுகளில் விரிகின்ற ஓர் உறவாக—-இந்த மனித உறவுகள் விரிகின்றன; தொடர்ந்து கொண்டும் வருகின்றன.

விடுதலையான தனி மனிதர்களின் விடுதலையான உறவுகளாக விரிந்திடுகின்ற ஒரு சமுதாயம் ஒரு நாள் உருவாகித்தான் தீரும் என்பது வேறு விசயம்.

இங்கே, ‘மனித உறவு ‘ என்றால் என்ன ? என்பதுதான் அடிப்படையும் பொதுப் படையும் ஆன ஒரு கேள்வி.

அதாவது, மற்ற மனிதர்களில்தான் தனது சொந்த அடையாளத்தை ஒரு மனிதன் கண்டு கொள்கிறான் என்று கார்ல் மார்க்ஸ் கூறுகிறாரே, அப்படி எந்த அடையாளத்தை மற்ற மனிதர்களில் மனிதன் காண்கிறான் ? என்பதுதான் இங்கே கேள்வி. கூடவே, ‘சொந்தம் என்னும் ஓர் உணர்மை ‘ மனிதனுக்குத் தேவை என்று—-ய சென்ஸ் ஆஃப் :பிலாங்கிங்க் (திருமதி மஞ்சுளா நவநீதனுக்கு நன்றி!) மனிதனுக்குத் தேவை என்று—-ஆங்கிலம் படித்தவர்கள் கூறுகிறார்களே, அதற்கு என்ன பொருள் ? என்பதும் கேள்வி.

இந்தக் கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டாக வேண்டும் என்றால், மனிதன் அல்லது மனித இயல்பு என்று ஒரு கருத்தமைவினை நாம் வகுத்துக் கொண்டு ஆக வேண்டும் என்பதில் ஐயம் இல்லை.

எனவே, மனித இயல்பு என்பது பற்றி இனி நாம் பார்ப்போம்.

25-10-2004

(தொடரும்

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்