ஓர் இனிய மாலைப் பொழுது இயக்குனர் சேரனுடன்…

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

மயிலாடுதுறை சிவா


வாசிங்டன், செப்டம்பர் மாதம், சென்ற வாரம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்

இயக்குனர் திரு சேரனை வரவேற்று, வாழ்த்தி, பாராட்டி கெளரவித்தது. தமிழ் நாட்டில்

இருந்து வரும் எல்லாவிதமான விருந்தினர்களையும், வாய்ப்புக் கிடைக்கும் பொழுது

எல்லாம் வாசிங்டன் தமிழ்ச் சங்கம் அவர்களை வரவழைத்து, பாராட்டி, கலை நிகழ்ச்சிகள்

ஏற்பாடுச் செய்து, வாசிங்டன் வட்டார தமிழ்ர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இதற்கு

ஒரு வாரம் முன்பே மின் அஞ்சலில் தகவல் தெரிவிப்பார்கள். அமெரிக்க பரபரப்பான

வேலைக்கு நடுவே தமிழ் மக்கள் கலந்துக் கொண்டுச் சிறப்பிப்பது வழக்கம். சில சமயம்

எதிர்பார்த்த கூட்டம் வராது, அதற்க்காக நாம் யாரையும் கோபித்துக் கொள்ளவும்

முடியாது. ஆனால் இயக்குனர் சேரனுடன் ஓர் கலந்து உரையாடல் என்று மின் அஞ்சல்

அனுப்பியவுடன், நிறைய நபர்கள் தங்களது விருப்பத்தையும், ஆர்வத்தையும் தெரிவித்தார்கள்.

அதற்கு காரணம், சேரனின் தற்பொழைதய மாபெரும் வெற்றிப் படமான ‘ஆட்டோகிராப் ‘,

மற்றும் தமிழ்த் திரை உலகில் இதுவரை எடுத்த தரமான திரைப்படங்கள்.

வாசிங்டன் முருகன் ஆலயத்தில் உள்ள, கலை அரங்கில் இயக்குனர் சேரனோடு

மாலை 7.30 மணிமுதல், இரவு 11.00 மணிவரை அவரோடு இருந்து, அருகில் பழகும் வாய்ப்பு

ஏற்பட்டது. பார்பதற்கும், பழகுவதற்கும் மிக மிக எளிமையாக இருந்தார். அனைவரோடும்

மிக அன்பாக பழகினார். எல்லோருக்கும் அவரிடம் மிகப் பிடித்த விசயம் அவரது எளிமை.

இதை நான் இங்கு குறிப்பிடவதற்கு காரணம், நம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை

திரைத் துறை என்பது மிக சக்தி வாய்ந்த சாதனம், மற்றும் தொழில். அத்துறையில்

சேரனுக்கு என்று தனி இடம் மற்றும் தன்னுடைய தனித் தன்மையை ஆழமாக நிருபித்து

கொண்டு வருபவர். இத்தனைச் சிறப்புகள் இருந்தும் மிக அமைதியாக எளிமையாக

இருந்தார்.

இதுவரை பாரதிகண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடிகட்டு, பொற்காலம், பாண்டவர்

பூமி மற்றும் ஆட்டோகிராப் என்றத் திரைப் படங்களை எடுத்து பல விருதுகளையும்,

குறிப்பாக வெற்றிக் கொடிகட்டுத் திரைப்படத்திற்கு மத்திய அரசின் தேசிய விருதைப்

பெற்றவர் இயக்குனர் சேரன். முதல் ஐந்து படங்கள் மூலம் கிடைக்காத புகழ்,

ஆட்டோகிராப் மூலம் கிடைத்தற்க்கு காரணம், அந்தப் படத்தில் நடித்ததுதான் காரணம்

என்றார். தமிழில் முன்ணணி சில காதநாயகர்களிடம் கேட்டும் யாரும் தேதிகள்

ஒதுக்கவில்லை, ஆகையால் அவரே நடிக்கும் படி ஆனது என்றார். மேலும் இயக்குனராகவே

தொடர விருப்புவதாக சொன்னார்.

சேரனுடன் கலந்து உரையாடலில் அவர் அனைத்து கேள்விகளுக்கும் மிக அருமையாக

பதில் அளித்தமட்டும் அல்ல, சில பதில்கள் சிந்திக்கும் படியும் இருந்தது. மனம் திறந்து

தன்னுடைய உண்மையான உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துக் கொண்டார். அமெரிக்க

தமிழ் மக்களோடு உரையாடுவது மனதிற்கு பெரும் மனம் நிறைவை தருகிறது என்றார்.

தமிழ் மக்கள் திரைப்படத்தை இன்னமும் மிகப் பெரிய பொழுதுப் போக்கு என்ற

கண்ணோட்டோத்தில்தான் பார்க்கிறார்கள், ஆனால் நான் போழுது போக்குடன் கூடிய

சமூக விழிப்புணர்வோடு மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லப் பிரியப்படுகிறேன்

என்றார். நானும் மிக சாதரண ஆள்தான், என்னுடைய தொழில் சினிமா என்றும்,

இத்துறை மூலம் நான் மக்களுக்கு நிச்சயம் தரமான, குடும்பத்தோடு பார்க்க கூடிய

திரைப் படங்களை எடுப்பேன் என்றார். அதேப் போல் உங்களது துறை மூலம் நீங்களும்

நம் தமிழ் மக்களுக்கு நல்லது பண்ணுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ் திரைப்படங்களை பார்க்கும் பொழுது, கதை என்ன ? இந்த கதையை இயக்குனர்

எப்படி சொல்லி இருக்கிறார் ? அது சமுதாய கருத்துகளை பிரதிபலிக்கிறதா ? மக்களின்

உணர்வுகளை சொல்லப் பட்டு இருக்கிறதா ? என்று பார்க்க கேட்டுக்கொண்டார். திரைப்

படத்தின் கதாநாயகன் யார் என்பதில் முக்கியத்துவம் இல்லை என்றார். திரைப் படத்தின்

மீது உள்ள நமது கண்ணோட்டம் மாற வேண்டும் என்றார். நமது சிந்தனைகள் மாற மாற

திரைப் படம் தயாரிப்பவர்களும் நல்ல தரமான திரைப் படங்களை தருவார்கள் என்று

உறுதி அளித்தார். நம் தமிழ் சமுதாயம் சீக்கரம் மாறப் போகிறது என்றும், முழுக்க

முழுக்க இளைஞர்களின் கையில் வரப் போகிறது என்றும் அதற்கு நமது பங்களிப்பு

முக்கியம் என்றார்.

நான் அவரிடம் உங்களின் மனம் கவர்ந்த இயக்குனர் யார் என்றும், ஆங்கில படங்கள்

பார்க்கும் பழக்கம் உண்டா என்றும் கேட்டேன். அதற்கு அவர் ஆங்கில நல்ல படங்களை

எப்போழதாவது பார்ப்பேன் என்றும், subtitile இருந்தால்தான் பார்ப்பதற்கு வசதி என்றும்

சொன்னார். அவருக்கு தமிழ் திரைப் படத்தில் தரமான படங்களை கொடுத்த அனைத்து

இயக்குனர்களையும் பிடிக்கும் என்றும், பாச மலர் எடுத்த ‘பீம்சிங் ‘, உதிரீ பூக்கள் எடுத்த

‘மகேந்திரன் ‘ மூன்றாம் பிறை எடுத்த ‘பாலு மகேந்திரா ‘, பிதாமகன் எடுத்த ‘பாலா ‘

இதுப் போல் பலர் அவரை கவர்ந்தாகச் சொன்னார்.

இளைஞர்கள் பலர் வெளிநாடு செல்வதில் தவறு இல்லை எனவும், ஆனால் ஓர் குறிப்பிட்ட

காலத்திற்க்குப் பிறகு அவசியம் தமிழ்நாடு வந்து விடுங்கள் என்றார். தமிழ்நாட்டில் அம்மா,

அப்பா, சகோதரன், சகோதிரி, பெரியப்பா, சித்தப்பா, மாமா, அத்தை இப்படி குடும்ப

உறவுகளோடு வாழ்வது ஓர் சுகம் அல்லாவா என்றார்.

அவரின் பாண்டவர் பூமியை பார்த்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள ஓர் தமிழர் ஓருவர்

அவரின் இந்தத் திரைப் படம் அவரை வெகுவாக பாதித்தது என்றும், அப்படத்தில்

வருவதுப் போலவே புதுக்கோட்டை அருகே அவரும் வீடு கட்ட போவதாக மின் அஞ்சல்

அனுப்பி இருந்தராம். அந்த நண்பர் அமெரிக்கா வந்த இயக்குனர் சேரனிடம் தன்னை

அறிமுகப் படித்து கொண்டவுடன், சேரன் உடனே அவரின் மின் அஞ்சல் பற்றியும், அவரைப்

பற்றியும் சொன்னவுடன் அந்த நண்பர் வியந்துப் போனார்.

‘ஆட்டோகிராப் ‘ படத்திற்கு ஏன் தமிழில் பெயர் வைக்கவில்லை என, அவரே எளிமையாக

விளக்கினார். அதாவது இந்தப் படத்திற்க்கு ‘ஞாபக திரட்டு ‘ அல்லது ‘ நினைவுகள் ‘ அல்லது

‘நினைவோடை ‘ இப்படி பெயர் வைத்து இருந்தால் இளைஞர்கள் வந்து இருக்க மாட்டார்கள்

என்றும், தன்னுடைய மற்ற படத்திற்கு இளைஞர்கள் அவ்வளவாக வரவில்லை என்றும், இந்த

தலைப்பே இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது என்றார். ஆனால் அதே சமயத்தில் நான் தமிழ்க்கு

எதிரி அல்ல என்றும் விளக்கினார். என்னுடைய தாய் மொழி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும்

நான் என்றும் கடமைப் பட்டவன் என்றார். அவரின் இந்த வெற்றிக்கு பங்கஜ் தாயாரிப்பாளர்

ஹென்றி, திரைப்பட தொழிலை கற்று கொடுத்த இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரையும்,

நடிகர் விஜயகுமார் அனைவருக்கும் எனது நன்றிகள் பல என்றார்.

மொத்ததில் அவருடன் இருந்த ஓர் மாலைப் போழுது ஓர் இனிய மறக்க முடியாத மாலை.

அவரின் எளிமை, அவரின் திரைப் பட வாழ்க்கையின் ஓர் அர்த்தம், அவரின் சிந்தனை,

அவரின் சமுதாய பொறுப்பு எல்லாம் ஓர் நல்ல மன நிறைவை தந்தது. இயக்குனர்

சேரன் மேலும் மேலும் வெற்றி அடைய அமெரிக்கா வாழ் தமிழர்கள் சார்பாக

வாழ்த்துவோம்.

நன்றி.

மயிலாடுதுறை சிவா…

mpsiva23@yahoo.com

mpsiva@hotmail.com

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா