ஆசையின் ஊற்று (எனக்குப் பிடித்த கதைகள் – 24 -காண்டேகரின் ‘மறைந்த அன்பு ‘)

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

பாவண்ணன்


மூத்த தலைமுறையைச் சேர்ந்த பள்ளியாசிரியர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். பார்த்துப் பல ஆண்டுகள் கழிந்திருந்ததால் ஏதேதோ பழைய விஷயங்களைப் பேசினோம். தற்செயலாக அருகிலிருந்த செய்தித்தாளைப் புரட்டிய நண்பர் அதில் வெளியாகியிருந்த செய்தியைக் கண்டு வெறுப்பைப் புலப்படுத்தினார். நாற்பத்தைந்து வயதான ஒருவர் இருபதுகளையொட்டிய வயதுடைய இளம்பெண் ஒருத்தியைக் காதலித்து மணந்து கொண்ட ஒருவரைப் பற்றிய செய்தி அது. அந்த வயது வித்தியாசம் அவரை உறுத்தியது. ‘மகளுடைய வயதை ஒத்த ஒரு பெண்ணுடன் ஒரு ஆணால் எப்படி குடும்பம் நடத்த முடியும், அதற்கு இவர்களுக்கெல்லாம் எப்படி மனம் வருகிறது ? புகழின் வெளிச்சத்திலும் திறமையின் உச்சத்திலும் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்து விடலாமா ? ‘ என்று பொரிந்து தள்ளினார். ‘இருவரிடையே பிறக்கும் ஆசையை எப்படித் தடுக்க முடியும் ? ஊற்றுப் போல தானாகப் பொங்கி வருவதல்லவா ஆசையும் அன்பும் ‘ என்றேன் நான். ‘ஆசைக்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. வரைமுறை இல்லாத ஆசை விஷத்துக்குச் சமம் ‘ என்று பதற்றம் கொண்டார் அவர். ‘ஆசை உருவாகும் கணம் எந்த வரைமுறையையும் யோசிப்பதில்லை நண்பரே ‘ என்றேன் மெதுவாக.

‘நல்ல அந்தஸ்தும் வசதியும் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மனைவியாக கண்ணகி வாய்த்திருந்தும் கோவலனுடைய மனம் மாதவியை நாடியதை எப்படி எடுத்துக் கொள்வது ? மண்டோதரி போல அன்பான மனைவியும் ஆட்சி செய்யப் பரந்த ராஜ்ஜியமும் சிவபக்தன் என்கிற பேரும் புகழுமாக வாழ்ந்திருந்த ராவணனை சீதையின்பால் ஈர்த்தது எது ? மறுபடியும் சொல்கிறேன். ஆசை உருவாகும் கணம் எந்த வரைமுறையையும் யோசிப்பதில்லை நண்பரே ‘ என்று நிறுத்தி விட்டு அவர் முகத்தை ஏறிட்டேன். ‘வரம்பு மீறி ஆசைப்பட்டதால்தான் வாழ்வு முழுக்க நன்றாக அனுபவித்தார்கள். அதைப் பார்த்தும் படித்தும் கூட நமக்குப் புத்தி வரவில்லையென்றால் என்ன சொல்வது ? ‘ என்று சீற்றத்துடன் சொன்னார் அவர். ‘ஆசை உருவாகும் அந்த முதல் கணத்தைப் பற்றித்தான் பேச்சு. அது எதையும் பொருட்படுத்துவதில்லை. கல்வி, மானம், செல்வம், வயது, அந்தஸ்து, மரபு, விதிகள், ச்மூகம், சாதி, மதம் எதுவுமே அந்த முதல் கணத்தில் முக்கியமில்லை. மலர் மொட்டவிழ்கிற மாதிரி மனம் திறக்கும் அக்கணம் மட்டுமே முக்கியம். எந்தக் காற்றின் தீண்டலால் அந்த மொட்டு அவிழ்கிறது என்பது மட்டுமே முக்கியம் ‘ என்றேன். உடனே கோபத்தோடு ‘அப்படியென்றால் இப்படிப்பட்ட பொருந்தாத உறவுகளை எல்லாம் நீங்கள் ஆதரிக்கிறீர்களா ? ‘ என்று ஆவேசமானார்.

‘ஒற்றைப்படையாக ஒன்றை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ நல்லதல்ல நண்பரே ‘ என்று மெதுவாகச் சொன்னேன். அவர் முறைத்தார். பேசவில்லை. மறுபடியும் நானே ‘நிலவு எழுந்து வருவது மாதிரி, சூரியன் முளைத்து வருவது மாதிரி, ஆசை உருவாவதும் இயற்கையான நிகழ்ச்சி. அதன் விளைவுகள் எப்படி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் விளைவுகளால் எடைபோடத் தக்கதல்ல ஆசை. அது ஓர் இயல்பான உணர்வு. காலம் காலமாக, நம் ரத்தத்தில் கலந்து ஓடுகிற உணர்வு ‘ என்றேன். ‘ரத்தம் என்று சொல்லாதீர்கள், சாக்கடை என்று சொல்லுங்கள் ‘ என்றார் கசப்புடன் நண்பர். ‘ஆசையைப் புரிந்து கொள்ள ஒழுக்க விதிகள் என்னும் அளவுகோல் பயன்படாது. அதைக் கனிவாலும் காதலாலும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் ‘ என்றேன். கோபத்துடன் எழுந்த நண்பர் அடுத்த அறைக்குச் சென்று விட்டார்.

இப்படிப்பட்ட பல தருணங்கள் வாழ்வில் நேர்ந்து விட்டன. பலரும் ஆசையையும் ஒழுக்கத்தையும் இணைத்தே பார்த்துப் பழகியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் மனம் தொடக்கத்திலேயே ஒரு முடிவை வரையறுத்துக் கொள்கிறது. அதன் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் உரசிக் பார்க்கிறது. அப்படிப்பட்ட தருணத்தில் தவறாமல் மனத்தில் உதிர்க்கும் சிறுகதை காண்டேகரின் ‘மறைந்த அன்பு ‘. வழக்கமான பொன்மொழிகளால் நிறைந்த கதையென்றாலும் ஆதாரமான முரணைச் சிதைக்காத அளவுக்கு இக்கதையின் கரு கச்சிதமாகவே கையாளப் பட்டிருக்கிறது.

முக்கியமான ஒரு நாளில் கதை தொடங்குகிறது. சகோதரர்கள் தம் சகோதரிகளின் வீடுகளுக்குச் சென்று பரிசளித்துப் பேசிவிட்டு வரும் நாள். கதையில் ஓர் இளைஞன் இடம்பெறுகிறான். எப்போதும் சகோதரர்களே ஏன் தம் சகோதரிகளுக்குப் பரிசளிக்க வேண்டும் ? சகோதரிகள் தமக்குள் பரிசுகளைப் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் ஏன் இருப்பதில்லை என்று நண்பர்களிடம் தம் கேள்வியை முன்வைக்கிறான். யாரிடமும் பதில் இல்லை. வீட்டுக்குத் திரும்பி தன் தாயிடம் அதே கேள்வியைக் கேட்கிறான். அவளுக்கு ஒரு சகோதரி இருந்ததுண்டு. ஆனால் அவள் இறக்கும் வரை உறவு சீராக இருந்ததில்லை. பதில் தேடும் உற்சாகத்தில் தாயைப் புண்படுத்தி விட்டோமோ என்று மனம் வருந்துகிறான் இளைஞன். சிறிது நேர இடைவெளிகளுக்குப் பிறகு, சகோதரிகளுக்குள்ளும் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்படுவதுண்டு எனச் சொன்னபடி பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் சகோதரி கொடுத்த ஒரு பரிசுப்பெட்டியைக் கொண்டு வந்து மகன் முன்னிலையில் வைக்கிறாள்.

கதையின் முடிச்சே அந்தப் பெட்டியில்தான் இருக்கிறது. அம்மாவின் இளம் விதவைச் சகோதரியின் படமும் இரு கடித உறைகளும் மட்டுமே அப்பெட்டியில் இருந்தன. ஒரு கடிதம் அந்த இளைஞனுடைய தந்தையார் அவளுக்கு எழுதியது. மற்றொரு கடிதம் அவள் தம் சகோதரிக்கு எழுதியது. தந்தையின் கடிதம் வழக்கமான காதல் கடிதம். தன்னால் கொழுந்தியான அவள் மீது பெருகும் ஆசையைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதைத் தெரிவிக்கிறது. சித்தியின் கடிதம் விதவையாகி வறண்ட தம் வாழ்வில் இனிய ஊற்றாக அமைந்த அத்தானின் அன்பைப் பற்றிப் பேசுகிறது. தன் மனஇருளை நீக்க முளைத்த சந்திரனாக அந்த அன்பு கிடைத்ததாகச் சொல்கிறாள். இரு குறும்புக்காரக் குழந்தைகள், ஒருவர் தைரியத்தினால் மற்றவர் சேர்ந்து, அடர்ந்த காட்டுக்குள் சென்றதைப் போல தமக்குள்ளான இணைப்பு நிகழ்ந்து விட்டதாகக் குறிப்பிடுகிறாள். தாயற்ற தன்னைத் தாயாக இருந்து வளர்த்த சகோதரிக்கு இழைக்கும் துரோகம் என்று தெரிந்திருந்தும் மனம் துாண்டிய ஆசைக்கு இணங்காமல் இருக்க முடிந்ததில்லை என்கிறாள். ஆறு மாதங்கள் அந்த உறவு நீடிக்கிறது. ஒருநாள் மாலை இருவருமே மணம் செய்து கொள்ளலாம் எனத் திட்டமிடுகிறார்கள். நெடுநேரம் உலவிவிட்டுத் திரும்பும்போதுதான் வழியில் வீடுகளெங்கும் நடக்கும் கொண்டாட்டத்தைக் கவனிக்கிறாள். அன்றும் அதே திருநாள். சகோதரர்கள் தம் சகோதரிகளுக்குப் பரிசளிக்கும் நாள். சட்டென அவளுக்குள் ஓர் எண்ணம் எழுகிறது. தான் சகோதரனாக இருந்தால் சகோதரி என்ன பரிசைத் தன்னிடம் கேட்பாள் என்று விளையாட்டாக யோசிக்கிறாள். ‘எனக்கு வேறொன்றும் வேண்டாம், ஒரு மோகினி என் கணவரை மயக்கியிருக்கிறாள், அவர் எனக்கு மறுபடியும் கிடைக்குமாறு செய் ‘ என்று கேட்கக் கூடுமோ என்று எண்ணங்கள் எழுகின்றன. எந்த மனம் அக்காவுடைய கணவரின்பால் ஆசையைத் துாண்டியதோ, அதே மனம் அக்கா விரும்பும் பரிசைத் தந்துவிடவும் துாண்டுகிறது. வேகத்தில் அன்று அவள் கிடுகிடுவென்று எழுதிய கடிதம்தான் அது.

காலம் காலமாக, ஆசையைச் சுரக்க வைத்துக் கொண்டிருப்பது மனம்தான். ஒழுக்க விதிகள் அல்ல.

*

அறுபதுகளில் தமிழ் எழுத்தாளராகவே நினைக்கப்பட்டு படிக்கப்பட்ட முக்கியமான மராத்தி எழுத்தாளர் வி.ஸ.காண்டேகர். அவருடைய எழுத்துகளைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யும் இவருடைய புகழுக்கு ஒரு காரணம். 1964 ஆம் ஆண்டில் மங்கள நுாலகம் வெளியீடாக வந்த ‘கவியும் கனியும் ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பில் ‘மறைந்த அன்பு ‘ என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ளது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்