மா அரங்கநாதனின் சில பத்திக் கட்டுரைகள்

This entry is part [part not set] of 5 in the series 20000911_Issue


1

தவத்திரு சின்மயாநந்தர் ஒரு தடவை சொன்னது வருமாறு: ‘நீ எங்கு சென்றாலும் கண்ணனையே அழைத்துக் கொண்டு செல்கிறாய் ‘

நல்ல சொற்றொடர் – சிந்தித்துப் பார்க்க வேண்டிவொன்று. வேறொன்றும் ஞாபகத்துக்கு வந்தது.

‘நீ எங்கு சென்றாலும் உன்னையே அழைத்துக் கொண்டு செல்கிறாய் ‘

இது எமர்சன் சொன்னது. அவர் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவர் (1802-1883)

மேற்படி எமர்சனின் சொற்றொடரை காலஞ்சென்ற க.நா.சு அவர்கள் மிகவும் விரும்பியுள்ளார் என்று சொல்லலாம். தனது சில கட்டுரைகளிலும், ‘ஒரு நாள் ‘ – தாமஸ் வந்தார் போன்ற நாவல்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு நாள் நாவலில் எமர்சனின் பெயரைக் குறிப்பிட்டே சொல்கிறார். தாமஸ் வந்தார் நாவலில் வாதூலனின் படிக்காத அம்மா இதைச் சொல்வதாக வந்த போது ‘அப்படிப்பட்ட பெண்மணி இம்மாதிரிச் சிந்தனையைக் கொண்டிருக்க முடியுமா ? ‘ என்று கேட்டதும் ‘ஒரு வேளை இந்த சொற்றொடர் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததுதான் அதை எழுதியதற்கு காரணமாயிருக்கும் ‘ என்று க.நா.சு கூறினார்.

2

சமீபத்தில் காலமான ஆட்ரி ஹெப்பான் ஓர் ஒப்பற்ற நடிகை. ஓர் அனாதை போன்று தோற்றுவிக்கும் முகம். வெள்ளை நிறம் என்பதை மட்டும் மறந்துவிட்டால், ஓர் அழகிய சோமாலியா குழந்தை போன்ற தோற்றம். நடித்த படங்களின் குணச்சித்திரங்களும் அப்படியே. ‘Roman Holiday ‘ படத்தில் சலிப்புற்ற பிரிட்டிஷ் அரசி, ‘War and Peace ‘ நடாஷா, Nun ‘s Story ‘ படத்தில் காயமுற்ற எதிரி ஜெர்மன் ராணுவ வீரனை குணப்படுத்த வேண்டிய நர்ஸ், யாரைக் காதலிக்கிறோம் என்பதையே தெரிந்து கொள்ளாத பெண்பாத்திரம் Sabrina Fair, My Fair Lady எலிசா, தான் ஒரு சிவப்பிந்தியப் பெண்ணா அல்லது வெள்ளைக்காரப் பெண்ணா என்ற தீர்மானத்துக்கே வராத பெண் Unforgiven படத்தில். கடைசியாக நம்மூர் இயக்குனர்களைக்கவர்ந்த Wait Until Dark. அபாண்டமாக பழி சுமத்தப் பெற்றாலும் கம்பீரத்தைக் கைவிடாத Loudest Whisper படம். இத்தனைப் படங்களிலும் அவருக்கு ஏகதேசம் ஓர் அனாதை மனப்பான்மை கொண்ட பாத்திரங்கள்தாம். கடைசிக்காலத்தில் சோமாலியாக் குழந்தைகளுக்கு உதவி புரிய அவர் நியமனம் பெற்றது தற்செயல் அல்ல.

ஆட்ரி ஹெப்பரின் தமிழ் எழுத்தாளர் சுஜாதா கதையிலும் நடித்திருக்கிறார். படம் Charade. உடன் நடித்தவர் Cary Grant. சாதாரண மர்மக் கதைதான் என்றாலும் நடிப்பைப் பொறுத்தவரை விரல் மடக்க முடியாது. எதற்கும் தூண்டில் கதைகளைப் படித்து புதையலைக் கண்டுபிடிக்கலாம்.

3

நாட்டுப்பற்று மிக்க – சுதந்திரப் போராட்ட காலத்தில் பங்கெடுத்துக் கொண்டவருமான பதிப்பக நண்பர் பின் வருமாறு கூறினார்.

‘ராமன் கோயில் கட்டறது இருக்கட்டும். இந்த வட இந்தியருக்கு கோயில் கட்டவே தெரியாதே. கட்டினால் மசூதிக்கும் அதுக்கும் வித்தியாசமே இருக்காது- இதற்காகவா சண்டை ‘

4

Devil on the Cross கென்ய எழுத்தாளர் Ngugi எழுதிய நாவல். இவர் பெயரை ங்குகி என்று உச்சரிக்க வேண்டுமாம். நல்ல நாவல் தமிழ்நாட்டுச் சூழலில் எழுதப்பட்டது போலவும் தோன்றுகிறது. கடைசியில் விவரிக்கப்படும் சினிமாத்தனம் தவிர, நாவல் படிக்க வேண்டியதொன்று.

5

புதுமைப்பித்தன் கதைகள் என்று வெளிவந்த சாகித்ய அகாதமிப் புத்தகத்தில் சில பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. – அதுவும் ‘அன்று இரவு ‘ போன்ற கதைகளில். இவற்றிலெல்லாம் ஒரு சொல் குறைந்தாலும் தாங்க முடியாது. எதற்காக இந்த பம்மாத்து ? இந்த நூற்றாண்டின் சிறுகதை ஆசிரியனுக்குத் தெரிந்து செய்யப்படும் கொடுமைகளில் இது ஒன்று.

6

தொலைக்காட்சியில் காட்டப் பெற்ற பைபிள் படத்தின் தயாரிப்பாளர் கூறுகிறபடி, பைபிள் கதாபாத்திரங்களாக தென்னிந்தியர்கள் நடிக்க முடியாது. வட இந்தியரே பொருந்துவார்கள்.

விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் கவனிக்க வேண்டிய செய்தி.

7

ஷோபா டே என்னும் எழுத்தாளர் இந்தியன் எக்ஸ்பிரஸில் கோயமுத்தூர் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த நகரத்தில் யாருமே இந்தி பேசவில்லை என்பது அவருக்கு மிகுந்த வியப்பை அளித்திருக்கிறது. எழுத்தாளராக இருப்பவர்கூட நாட்டைப் பற்றிய விஷயங்களில் கிணற்றுத்தவளையாக இருப்பது அதிசயம்.

8

கிஷ்கிந்தாவாசிகள் முதன்முறையாக சீதையைப் பார்த்தவுடன் ‘என்னமோ சீதை பேரழகி அப்படியிப்படி என்று சொன்னார்களே, இவளுக்கு ஒரு வால் கூட இல்லையே ‘ என்று ஆதங்கப்பட்டார்களாம். நியாயந்தான்.

9

‘கால்முளைத்த மனம் ‘ வைத்தீசுவரனின் கதைத் தொகுதி. ஒரு கவிஞரின் கதைகள். அப்படிச் சொல்லியே அழகு பார்க்க வேண்டிய கதைகள். சிறுகதைகளும்கூட அனாசயமாக, கை கொடுத்திருக்கின்றன. போய்க்கொண்டே இருப்பதுதான் இது என்று நமது எண்ணத்திற்கெல்லாம் விடை கொடுத்துவிட்டு அதுவும் போய்விடுகிற பாங்கு. கேள்விகள் கூட அமுங்கி விடுகிற நிலை.

இந்த மணியான கதைகளுக்கு எழுதப்பட்டுள்ள முன்னுரை பற்றியும் சொல்லவேண்டும். அதில் ஆண்டன் செகாவ், ஹெமிங்வே மற்றும் பாக்னர் வில்லா காதர் எல்லோரும் வருகிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் நன்றாக வந்திருக்கிறது. மற்றப்படி ‘வெங்கலப்பாத்திரக்கடைக்குள் யானை புகுந்த மாதிரி ‘ என்ற சொலவடைதான் ஞாபகம் வருகிறது. அது தெற்கத்திச் சொல்வடை. வேண்டுமானால் வைத்தீசுவரன் கதையில் சொன்னதையே சொல்லலாம். ‘போதையால் தவறான காட்சிக்குள் வந்து குதித்து தடுமாறும் பீமன் மாதிரி ‘யான முன்னுரை.

***

 

 

  Thinnai 2000 September 11

திண்ணை

Series Navigation