அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


சார்லஸ் டார்வின் ஓர் இயற்கையியல் அறிஞர் (naturalist); பரிணாம வளர்ச்சிக் கொள்கையை (Theory of Evolution) உலகுக்கு அளித்தவர். டார்வின் 1809 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள ஷ்ரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் தோன்றினார். அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். தன்னைப் போன்று மகன் சர்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி எடின்பரோ பல்கலைகழகத்தில் மகனைச் சேர்த்தார்; ஆனால் மருத்துவப் படிப்பில் சார்லஸ் டார்வின் ஆர்வம் கொள்ளவில்லை. படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது. இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை. தமது 22ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்ற டார்வின் கிருத்துவத் திருச்சபையில் உறுப்பினராகச் சேரவும் மறுத்துவிட்டார். இக்கட்டத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஜான் ஹென்ஸ்லோ என்ற தாவரவியல் பேராசிரியர் ஒருவரை டார்வின் சந்திக்க நேர்ந்தது. அவர் மூலமாக கப்பல் கேப்டன் ஃபிட்ஜ்ராய் என்பவரின் நட்பு டார்வினுக்குக் கிடைத்தது. இவ்விருவரும் இணைந்து தென் அமெரிக்கக் கடற்கரைப் பகுதியில் ஆய்வு செய்ய 1831ஆம் ஆண்டு கப்பல் பயணம் மேற்கொண்டனர். ஐந்தாண்டுகள் கழித்தே திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர்.

இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக்கண்டு டார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியம் என்று அவரூக்குத் தோன்றியது. “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன ?” – இவ்வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. எனவே இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். இவ்வாய்வின் பயனாக “பரிணம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர் வர நேர்ந்தது. அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் தமது கண்டுபிடிப்புகளையெல்லாம் ஆய்வுக்கட்டுரையாக எழுதி லண்டனில் வெளியிட்டார். 1839ஆம் ஆண்டு டார்வின் எம்மா வெட்ஜ்வுட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னரும், தமக்கு விருப்பமான இயற்கையியல் ஆய்வில் டார்வின் மிகுதியாக ஈடுபட்டார்.

இந்நிலையில் சார்லஸ் டார்வினுக்கும், ஆல்ஃபிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்ற மற்றொரு இயற்கையியல் அறிஞருக்கும் நட்பு உண்டாயிற்று. டார்வின் தாம் ஏற்கனவே அமெரிக்கக் கடற்கரையோரம் திரட்டிய சான்றுகளிலிருந்து உருவாக்கிய கொள்கைகளுக்கு மேலும் ஆதாரங்களைச் சேகரிப்பதில் நண்பருடன் சேர்ந்து ஈடுபட்டார். புதிய உயிரினங்கள் உருவாவதற்கான ஒழுங்கு மற்றும் விதிமுறைகள், அவ்வாறு உருவாகும் உயிரினங்களுள் சில பிரிவுகள் முழுமையாக மூல நிலையிலிருந்து மாறிவிடுவதற்கான போக்குகள் ஆகியவை பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் டார்வின் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். 1858ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், மேற்கூறிய டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. மேற்கொண்டு ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும்; 1859ஆம் ஆண்டு இக்கொள்கையை, “இயற்கையில் உயிரினங்களின் தோற்றம்” என்ற தலைப்பில் வெளியிட்டார். இக்கருத்துப்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் சாதகமான மாற்றங்கள் நிலைத்து நிற்கும்; பாதகமான மாற்றங்கள் அழிந்து போகும். இதை வேறுவகையாகக் கூறவேண்டுமெனில், உயிரினங்களில் தகுதியும் வலிமையும் உள்ளவை வாழும், அற்றவை வீழும் எனக் கூறலாம். இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

டார்வினின் இக்கருத்துகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன; வியப்போடும், ஆர்வத்தோடும் அவரது ஆய்வுகளை மக்கள் படித்தனர். இந்நிலவுலகில் வாழும் உயிரினங்களின் குறிப்பாக விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையோடு ஒன்றிப்போகின்றவை பாதுகாப்போடு வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் அறிந்து மக்கள் பெரிதும் வியப்படைந்தனர்.

டார்வினின் கொள்கைகளை பெரும்பாலான இயற்கையியலார் வரவேற்றனர். ஆனால் அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பும், மாறுபாடும் இல்லாமலில்லை. டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும். டார்வினின் “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” என்னும் நூல் இன்றும் விவாதத்திற்குரிய, கருத்துமாறுபாடுகளுக்கு இடம்தரும் நூலாக இருக்கிறது என்பது உண்மையே; ஆனால் தனிமனிதர் என்ற முறையில், சார்லஸ் டார்வின் அனைவரின் போற்றுதலுக்கும் உரியவராக விளங்கினார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆம், டார்வின் மிகச் சிறந்த மாமனிதராக விளங்கியவர்; தம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவை பற்றிய ஆய்வில் மிகுந்த ஆர்வம் காட்டினார்; இயற்கையின் ஆற்றலையும், ஒழுங்கு முறையான ஒத்துழைப்பையும் கண்டு பெரிதும் வியப்படைந்தார்.

சார்லஸ் டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்பிரல் 19ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அனைவராலும் போற்றப்பட்ட ஓர் இயற்கையியல் அறிஞரின் புகழ் அவரது கோட்பாடான “பரிணாம வளர்ச்சிக் கொள்கை”யால் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அதில் மிகையேதுமில்லை.

=====================

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித்துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

***

E Mail: ragha2193van@yahoo.com

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர