லினக்ஸ் இயக்குதளம் ஒரு அறிமுகமும், அழைப்பும்

This entry is part [part not set] of 7 in the series 20000917_Issue

வே. வெங்கடரமணன்


ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 2

அடுத்த கதைகளைப் பிறகு பார்ப்போம். முதலில் லினக்ஸில் என்னென்ன இருக்கின்றது. இது எப்படி பிற இயக்குதளங்களிலிருந்து மாறுபட்டது என்று தெரிந்து கொள்வோம். 1994 ஏப்ரிலில் முதல் வடிவம் 1.0 வெளிவந்ததாகச் சென்ற முறை பார்த்தோம். 1994 ஆகஸ்டில் நான் பெங்களுர் இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது அமெரிக்கா சென்று திரும்பிவந்த ஒரு பேராசிரியர் கையில் ஒரு குறுந்தகட்டுடன் (CD) திரும்ப வந்தார். வழக்கமாக வெளிநாடு சென்று திரும்பும் பேராசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு ‘ஆசையாக ‘ படிப்பதற்கு நிறைய ஆய்வுத் தாள்களையும், நாட்களைத் தூக்கமின்றி கழிக்க பிரபல பல்கலைகளின் அறிவியல் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கின்றது (நாம் எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளோம்) என்று செய்திகளையும், சில சமயங்களில் கணினி ஆணைநிரல்களையும் கொண்டு வருவார்கள். இதில் கடைசி சமாச்சாரத்தை பெரும்பாலான நாங்கள் ஆவலுடன் எதிர் நோக்குவோம், புதிய முன்னேறிய நிரல்கள் எங்கள் ஆய்வுச்சுமையைப் பெரிதும் குறைக்கும். எங்கள் ஆய்வுக்கட்டுரைகளை தரமிக்க வரைபடங்களுடனும் எழுத்துருக்களுடனும் அச்சிட அவை பெரிதும் உதவும். அந்தமுறை ஒற்றைக் குறுந்தகட்டைக் கண்ட எங்களுக்குப் பெரிதும் ஏமாற்றம். ஆனால் விரைவில் தெரியவந்தது – அதில் எங்களுக்குத் தேவையான எல்லாமும் இருக்கின்றன என்று.

அது ஒரு இயக்குதளம்; லினக்ஸ் 1.2 என்று பெயரிடப்பட்டது, நாங்கள் அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்தது. அதில் ஒரு சக்திவாய்ந்த க்னூ சி தொகுப்பி (GNU C compiler), லேடக்ஸ் (LaTeX) எனும் அறிவியல் ஆவணங்களை உயர்தரத்தில் அச்சிட ஏற்ற தொகுப்புச் செயலி, ஈமாக்ஸ் (emacs) எனும் சக்திவாய்ந்த இன்னுமொரு தொகுப்பி, வரைபடங்களை வரைய உதவும் எக்ஸ்பிஃக் (xfig) செயலி, இப்படி பலப்பல. குறிப்பாகச் சொல்லப்போனால் அன்றைய ஆய்வு மாணவனின் அணைந்து கணினி இயக்குதளம்/செயலி தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் பூட்டிய ‘ சமாச்சாரம். ஆனால், அன்றைக்கு ஆய்வகங்களை விட்டு வெளியே சென்று அதன் புராணங்களைப் (ஆமாம், அதன் சக்தியில் நாங்கள் மெய்சிலிர்த்துத்தான் போனோம்) பாடினால் ஒரு சராசரி வணிக நிறுவனத்தில் கணினி நிரலராக இருப்பவருக்குத் தூக்கம் வரும். அது ஆய்வகங்களைத் தவிர வெளியில் பயனற்ற ஒரு சமாச்சாராமாக இருந்தது. இவை எல்லாம் இணையத்திலிருந்து (web) தொகுக்கப்பட்டவை. (அப்பொழுது இணையம் என்ற வார்த்தையே இல்லை, வெற்று வலைதான் – பல பல்கலைகளை பிணைக்கும் ஒரு வலை. சில மாதங்களுக்குப் பின் அது ஊடுவலை (internet) என்று அழைக்கப்பட்டது. மிகவும் மெதுவானது. அதைப் பயன்படுத்த நிறையச் செலவாகும் – நீங்கள் ஒரு கணினிப் பொறியியல் மாணவராக இருக்க வேண்டும்.

அதன் நடைமுறைகளை எளிமைப்படுத்திய பின் அது இணையம் எனும் வடிவெடுத்துப் பிரபலமானது.)

அதன் விலை 10 அமெரிக்க டாலர்கள்; அன்றைய தினத்தில் ஒரு வெற்றுக் குறுந்தகட்டின் விலை 8 அமெரிக்க டாலர்கள். குறுந்தகடு எழுதும் சாதனம் எல்லா இடங்களிலும் இல்லை. இது இரண்டையும் கருத்தில் கொண்டால், அது முற்றிலும் இலவசமாகக் கிடைத்தது. மென்கலன்களை இலவசமாகத் தருவது (அவற்றைப் படைத்தவர் காப்புரிமையைத் தன்னிடமே வைத்துக் கொள்ளாது வெளியிடல்) எனும் கருத்து அப்பொழுதுதான் வேர்விடத் தொடங்கியிருந்தது. க்னூ சி, லேடக்ஸ், ஈமாக்ஸ் எல்லாம் தளையறு மென்கலன் நிறுவனம் (Free Software Foundation) எனும் தன்னார்வ அமைப்பின் வெளியீடுகள். லினக்சும் அதன் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. அதன் முக்கியக் கொள்கைகளில் ஒன்று செயலிகளை வெளியிடும்போது அதன் அடிப்படையாக உள்ள ஆணைக்குறியீடுகளையும் வெளியிடல் வேண்டும். இது அதனை பிறர் மாற்றி, திருத்தி மெருகேற்ற உதவும். இதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி பின்னர் ஒரு நாளில் பார்ப்போம்.

அந்த 1.2விலிருந்து இன்றைக்கு அது வெகுதூரம் பயணித்திருக்கின்றது. இன்றைக்கு அது எல்லாம் வல்ல ஒரு மாபெரும் சக்தியாக இருக்கின்றது. உங்களுடைய தேவை என்ன என்று சொல்லுங்கள் அது லினக்ஸால் அவசியம் நிறைவேற்ற முடியும் என்று காட்ட இயலும். இவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை; சில குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன். (நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – செயலை நிறைவேற்றும் அடிப்படைச் செயலிகளும் அதன் ஆணைக்குறியீடுகளும் எப்பொழுதுமே இலவசம்தான், அந்தக் குறியீடுகளை மாற்றியமைக்கக் கட்டுப்பாடு இல்லாததால் சில வணிக நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்துவோருக்கு எளிதான வகையில் மாற்றியமைத்துத் தங்கள் சேவைக்கு ஒரு ஊதியத்தைப் பெற்றுக் கொள்கின்றன.) உதாரணமாக நீங்கள் ஒரு இணையச் சேவை வழங்குபவர் (Internet Service Provider, ISP) என்று கொள்ளுவோம், நீங்கள் தெரிந்தெடுக்கும் இயக்குதளத்தில் பின்வரும் பயன்பாடுகள் இருத்தல் வேண்டும்;

இணைய இணைப்பு வசதி (connectivity)

பல்துறை, அழைப்புச் சேவை (multi-port, dial-up service)

பல்வேறு நடைவரைகளுக்கு உட்பட்ட சேவைகள் (various protocols, for e.g. PPP/SLIP)

மின்னஞ்சல் வசதி (e.mail service)

பயனர்வலை செய்திச் சேவை (usenet news)

இணையச் சேவை வழங்கல் (Web server)

இவையணைத்தும் லினக்ஸில் கிடைக்கும் – முற்றிலும் இலவசமாக.

நீங்கள் இதுபோன்ற சிறப்புச் சேவைகளைப்பற்றிக் கவலைப்படவில்லை, ஒரு சாதாரண இல்லத்தின் தேவைகளுக்கு லினக்ஸ் உதவுமா என்று கேட்கக்கூடும்; ஆம். உங்களுக்குத் தேவையான அணைத்துச் செயலிகளும் இதில் உடனடியாகக் கிடைக்கும்; கடிதங்கள், ஆவணங்கள் எழுதும் செயலி (wordprocessor), கணக்குக் குறிப்புகள் தேக்கும் செயலி (spreadsheet/database), முகவரிக் குறிப்பேடு (address book), இணையத்துடன் அழைப்பு இணைப்புச் செயலி (internet dial-up program), மின்னஞ்சல் அனுப்பும் வசதி, பல்லூடகச் செயலிகள் (multimedia controls), எல்லாம் இதில் உண்டு முற்றிலும் இலவசமாக.

இந்த ‘இலவசமாக ‘ எனும் வார்த்தையை நான் அடிக்கடிப் பயன்படுத்துவதைக் கண்டிருப்பீர்கள், ஏன் இதற்கு நான் முக்கியத்துவம் தர வேண்டும். இன்றைய நடைமுறையில் கணினிகளின் விலை மிகவும் குறைந்து விட்டது. இந்த நிலையில் செயலிகளின் விலை வன்கலன்களின் (hardware) விலையை எட்டிவிட்டது; விரைவில் இது அதையும் தாண்டக்கூடும். இந்த நிலையில் கணினியைத் தேர்ந்தெடுத்தலில் அதன் இயக்குதளத்தையும் செயலிகளையும் தேர்ந்தெடுப்பது முக்கியக்கூறாக மாறிவருகின்றது. அவற்றின் விலைகளும் தரங்களும் மிகுந்த கவலையைத் தரக்கூடியதாக இருக்கின்றன. உதாரணமாக, படங்கள் வரைய, மின்படங்களைக் காண, ஓவியங்கள் தீட்ட மைக்ரோஸாப்ட் இயக்குதளத்திற்கான சிறந்த செயலி எது என்று கேட்டால் விபரமறிந்தவர்கள் அடோப் எனும் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) எனும் செயலியைக் கூறுவார்கள்; இதன் விலை இந்தியாவில் உத்தேசமாக 6,000 ரூபாய்கள் இருக்கும். இதற்கு இணையான செயலி லினக்ஸ் இயக்குதளத்தில் கிம்ப் (GIMP, Gnu Image Manipulation Program) என்பது, இது இலவசம். இதேபோல் நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ், மின்னஞ்சல் செயலி, என்று ஒவ்வொன்றாகச் சேர்த்துக்கொண்டே போனால் அது உங்கள் கணினியின் விலையை எளிதில் தாண்டிவிடும். இப்படி சேர்த்துக்கொண்டே போக, முதலாவது செயலியின் அடுத்த முன்னேறிய வடிவம் சந்தைக்கு வந்துவிடும், அதற்கு அதிகப் பணம் தந்து வாங்க வேண்டும், இந்தப் புதிய செயலி பழைய மற்ற செயலிகளுடன் இணைந்து செயல்படாது, இப்படி இந்தக் கவலைகளுக்கு முடிவேயில்லை.

இந்தியாவில் பலர் இப்பொழுது இவை எல்லாவற்றையும் திருட்டுத்தனமாக நகலெடுத்து தங்கள் கணினிகளில் பயன்படுத்துகின்றார்கள், இதில் பல இடைஞ்சல்கள் உள்ளன; திருட்டுச் செயலிகளின் மூலமாக உங்கள் கணினி பாதிக்கப்படும், அவற்றால் வைரஸ்கள் எளிதில் பரவும், அவை திடாரெனச் செயல் இழக்கக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக திருட்டு திருட்டுதான், உங்கள் மனசாட்சியை அது உறுத்த வேண்டும். இந்த எல்லாக் கவலைகளையும் மறக்க தளையறு மென்கலன்களும், லினக்ஸ் இயக்குதளமும் ஒரு சிறந்த மாற்றாக உள்ளன. இன்றைக்கு இருக்கும் இயக்குதளங்களுக்குள்ளே மிகவும் சக்தி வாய்ந்ததும், மலிவானதும், லினக்ஸ்தான் இது வளர்ந்துவரும் நாடாகிய இந்தியாவின் நிலைமைக்கு ஏற்ற ஒரு நல்ல மாற்று.

அது சரி, லினக்ஸின் இந்தப் பரபரப்புக்கு அது இலவசமாகக் கிடைப்பதுதான் காரணமா ? என்னைக் கேட்டால் இல்லை என்பேன். எப்படி – அடுத்த வாரம்.

தோக்கியோ

15 செப்டம்பர் 2000

naadodi@hotmail.com

Series Navigation

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com

வே. வெங்கடரமணன் naadodi@hotmail.com