சிறுவட்டம் தாண்டி….

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

நண்பன்


—-
குண்டுச்சட்டியில்
குதிரை ஓட்டிக் களைத்து வீழ்ந்த
நண்பர்கள்
விழிகளை வீசித் தேடினர்
சக குண்டு சட்டிகளை
குண்டுசட்டி சிறுவட்டம் வழி
வான்துண்டொன்று எட்டிப்பார்த்தது
மல்லாந்து கிடந்த நண்பர்களை
விண்வெளியின் விரிவே
ஒரு துண்டு வட்டமென்ற புரிதலில்
வாழ்வின் இன்பங்களைத் தேடி
வட்டமடி தொழிலில்
மீண்டும்
குதிரைகள் மீதேறி வலம்
முகமறியா ராசகுமாரன் வருகை தவத்தில்
துதிபாடலுடன் ஒருவர் பின் ஒருவராக
குண்டுசட்டியின் விரிந்த வயிற்றில்
பழகிய வட்டப்பாதையின்
வரிசைக் கிரம சுற்றுதலில்
நண்பர்கள்
குண்டுச் சட்டியின் தொப்பையினடியில்
குருதிப் பிதுக்கி வெளியேற்றும்
இந்திரியநாற்ற முகர்வில்
முகஞ்சுளித்து வலம் வந்த நண்பனுக்கு மட்டும்
வானம் தன் இருப்பை அறிவித்தது
சிறுவட்டமருகே வந்த பறவையொன்றினால்
குத்தித் தூக்கி வானில் மிதக்க வைத்து
வானின் விரிவுகளில்
பறவை சவாரி பிரும்மாண்டத்தில்
மீண்டுமொரு வட்டப்பாதை வாழ்க்கை
விரும்பா நண்பனோ
பறவையிடம் கூக்குரலிட்டான் –
சிறகுகள் தா
என்னைத் தூக்கிச் சுமக்காதே
தோளில் துளைத்த அலகில்
வலிக்க வலிக்க
பிய்ந்து தொங்கும் சதைகள்
வடிந்து உறையும் குருதியோட்டம்
உயிர் பிய்க்கும் பிரசவம்
தோள் கிழித்து வந்ததொரு உறுப்பு
கண்மூடி வலி தாங்கிக் கிடந்த மனம்
உலுப்பி விட்டது
பற பற
இறக்கை வீசி வீசி
பற பற
விட்டுப் போன இடத்திலிருந்து பற
பிறந்ததன் பொருளறிந்து பற
பற பற
இறக்கை வீசி வீசி
பற பற
அடிவானங்கள் தொட விரியும் இறக்கை
துருவங்கள் தொட நீளும் இறக்கை
பிரபஞ்ச வெடிப்பு தேடும் இறக்கை
வீசி வீசி
பற
வீசி வீசி
பற
புதிதாய் வந்த விடுதலையில்
பறந்து பறந்தே மரணம் வரை
பற
புவியீர்ப்பின் விசைக்கு
உடல் பணியும் வரை
பற.
பறந்து திரியும் வாழ்வறியா
குண்டுசட்டி குதிரை ஓட்டிகள்
தலைவன் துதியோதி
அதே
வட்ட பாதையில்
அதே
வாழ்க்கையில்.
அறிந்திருக்கவில்லை
அந்த அவர்கள்
குண்டுசட்டியின்
சிறுவட்டம் தாண்டி
விரிந்திருக்கும்
பிறிதொரு
வாழ்தலின் உன்னதம்.
அவர்கள்
என்றும் போல்
என்றும் போல்
என்றும் போல்
மூடராய்.

pmdshaji@gmail.com

Series Navigation

நண்பன்

நண்பன்