நலந்தானா அண்ணா?: பாட்டால் நலம் விசாரித்த கண்ணதாசன்

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

மலர் மன்னன்



ஜூலை 11, 2008 வெள்ளிக் கிழமை.

வழக்கத்திற்கு மாறாகப் பிற்பகலிலேயே வீடு திரும்பி வழக்கத்திற்கு மாறாகவே தொலைக் காட்சிப் பெட்டியையும் இயக்கியபோது கேடிவியில் “தில்லானா மோகனாம்பாள்’ ஓடிக் கொண்டிருந்தது. நல்ல வேளை, “நலந்தானா’ பாடல் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொண்டு படம் பார்க்க உட்கார்ந்து விட்டேன். அந்தப் பாடலுக்கென்று ஒரு தனிச் சிறப்பிருப்பது சிலருக்குத்தான் தெரியும்.

“தில்லானா மோகனாம்பாள்’ 1968ல் வெளிவந்த படம்.

அந்த வருடம் செப்டம்பர் 15.

அண்ணா முதலமைச்சரான பிறகு வந்த இரண்டாவது பிறந்த நாள். 1967ன் செப்டம்பர் 15 மிகவும் உற்சாகமாகவே கழிந்தது. ஆனால் 1968 செப்டம்பர் 15ல் அந்த மகிழ்ச்சி இல்லை. அண்ணா உடல் நலிந்து, நலம் கெட்டுப் போய் விட்டிருந்தார்கள்.

1968ல் அண்ணாவுக்குப் பிராயம் 59 நிறைந்திருந்தது. பிறந்த நாளுக்கு உடுத்திக் கொள்ளப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை. பட்டு மேல் துண்டு என்று வாங்கி வைத்திருந்தது. பகட்டை விரும்பாத அண்ணா, ஆடை அலங்காரங்கள் என்றாலே கூச்சமடையும் அண்ணா, முதலமைச்சர் ஆன பிறகு மட்டுமே, அந்தப் பதவிக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டுமே என்கிற பொறுப்புணர்ந்து, தினமும் சங்கடத்துடன் முகத்தை மழித்துக் கொள்ளவும், கசங்காத வேட்டி சட்டை அணியவும் தொடங்கியிருந்த எம் அண்ணா, தமக்காக வைக்கப் பட்டிருந்த பட்டாடைகளை முகத்தில் வியப்புக் குறியுடன் பார்த்தார்கள். அறுபதாம் ஆண்டு வருகிறது என்கிற சம்பிரதாயத்தைச் சொன்ன பிறகு, பிடிவாதம் பிடிக்காமல் மற்றவர்களின் திருப்திக்காக அவற்றை அணிந்து கொண்டு வெளியே வந்தார்கள்.

திரைப் படங்கள் பார்ப்பதில் விருப்பம் உள்ள அண்ணா, ஏற்கனவே தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்துவிட்டிருந்தார்கள். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, பட்டு மேல்துண்டு அணிந்த கோலத்தில் நடு வீட்டிற்கு வந்து நின்ற அண்ணா, கன்னங்களை உப்ப வைத்துக் கொண்டு கைகளால் நாதசுரம் வாசிப்பதுபோல சைகை காட்டி அனைவரையும் மகிழ்வித்தார்கள்.

தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிக்கல் சண்முக சுந்தரம் என்கிற நாதசுர வித்வானாக சிவாஜி கணேசனும் மோகனாம்பாள் என்கிற பரத நாட்டியக் கலைஞராகப் பத்மினியும் நடித்திருந்தார்கள். “கலைமணி’ என்கிறப் புனைப் பெயரில் கொத்த மங்கலம் சுப்பு ஆனந்த விகடனில் தொடராக எழுதி ஏராளமான வாசகர்களைக் கவர்ந்து விட்டிருந்த கதைக்கு ஏ.பி. நாகராஜன் திரைக்கதை செய்து, படத்தை இயக்கியிருந்தார். இசை அமைத்தவர் கர்நாடக இசையின் நுட்பங்களையெல்லாம் நன்கறிந்த கே.வி. மகாதேவன். பாடல்கள், வேறு யார், கண்ணதாசன்.
2

தில்லானா மோகனாம்பாள் படத்தில் சண்முக சுந்தரம் கையில் வெட்டுக் காயம் பட்ட நிலையில் நாதசுரம் வாசிக்க, அதற்கு மோகனாம்பாள் ஆடுகிற மாதிரி வரும் காட்சிக்கு ஏற்றாற்போல் கண்ணதாசன் எழுதிய பாடல் “நலந்தானா?’ பின்னணி பாடியவர் பி.சுசீலா.

அண்ணா படம் பார்த்தபோது, அந்தக் காட்சி முடிவடைந்ததும் லேசான புன்னகையுடன், “இது கண்ணதாசன் எனக்காக எழுதிய பாட்டு’ என்று மெல்லிய குரலில் சொன்னார்கள்.

ஆமாம், அண்ணாவின் கட்சியிலிருந்து விலகிப் போய் காங்கிரசில் சேர்ந்துவிட்டிருந்த போதிலும், அண்ணா மீதான பாசத்தை இழக்க இயலாத கண்ணதாசன், உடல் நிலை மிகவும் சீர்குலையத் தொடங்கிவிட்டிருந்த அண்ணாவிடம் நலம் விசாரிப்பது போல எழுதிய பாடல் அது.

கண்ணதாசன் காங்கிரஸ் கட்சியில் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த கால கட்டம் அது. முன்போல அவரால் அண்ணாவிடம் வந்து உறவாட இயலாத நிர்ப்பந்தம். நினைத்த மாத்திரத்தில் நுங்கம்பாக்கம் அவென்யு சாலைக்கு ஒடி வந்து அண்ணா, அண்ணா என்று உரிமையுடன் சுற்றி வர முடியாத இக்கட்டு.

அண்ணாவுக்கும் கண்ணதாசனிடம் அபரிமிதமான அன்பும் அபிமானமும் இருந்த போதிலும் வெளிப்படையாக அவருடன் உறவாடும் காலம் கடந்து விட்டிருந்தது. இந்த இரு தரப்பு ஆதங்கங்களும் பாடலில் பொங்கி வழிந்தன.

“நலந்தானா… நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா

நலம் பெற வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு

நலந்தானா…

இலை மறை காய் போல் பொருள்கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று’

அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபோது கட்சி வேறுபாடு இன்றி, கொள்கை, கோட்பாடு என்கிற பிரக்ஞையின்றி அனைவருமே மகிழ்ச்சியடைந்தார்கள். “இந்த மனிதர் நல்ல சுபாவம் உள்ளவர். எவர் மீதும் துவேஷம் பாராட்டாதவர். தவறுகளுக்கு இடமளிக்காதவர். நிர்வாகத்தை நேர்மையாக நடத்தக் கூடியவர். ஏனென்றால் பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர்’ என்று அனைவருக்குமே அவர் மீது நம்பிக்கை இருந்தது.

“சிலர் பதவியால் பெருமை அடைவார்கள். சிலரோ, தாம் வகிப்பதாலேயே அந்தப் பதவியைப் பெருமைப் படுத்துவார்கள். திரு. அண்ணாதுரை இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்’ என்று “தி மெயில்’ நாளிதழ் தலையங்கம் எழுதியது. இவ்வளவுக்கும் அது சிம்சன் குழுமத்தைச் சேர்ந்த பத்திரிகை. பாலக் காட்டு பிராமணரான அதன் தலைவர் அனந்த நாராயணன் காமராஜர் சொல்லுக்குக் கட்டுப் பட்டவர். 1967ல் நடந்த பொதுத் தேர்தலில்
3

தென் சென்னை மக்களைவைத் தொகுதியில் அண்ணா போட்டியிட்டபோது, அவருக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப் பட்டவர் சிம்சன் தொழிற் சங்கத் தலைவர் குரு மூர்த்திதான். இதையெல்லாம் நினைவூட்டக் காரணம் அப்படியொரு ஆரோக்கியமான போக்கு அரசியலில் மீண்டும் வரலாகாதா என்கிற ஆதங்கம்தான்.

அண்ணா முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தபோது உள்ளூர அகமகிழ்ந்தவர்கள் எல்லாத் தரப்புகளிலும் இருந்தார்கள். அவர்களில் கண்ணதாசனும் ஒருவராக இருந்தார்.

“(என்) கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்’

என்று அந்த உணர்வை அவர் தன் பாடலில் வெளியிட்டார்.

“புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப் பெண்பட்ட பாட்டை யாரறிவார்’

என்று கண்ணதாசன் அரற்றினார், பாடலில்.

அண்ணா அவர்கள் உணவுக் குழாயில் புற்று நோய் கண்டு அவதிப் படுகிறார்கள் என்று கேள்யியுற்றபோது தங்களுக்கே அப்படியொரு நோய் வந்துவிட்டதாய் புழுப் போலத் துடிதுடித்தவர்கள் பலர். அப்படிப்பட்டவர்கள் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே அல்ல.

“சண்முக சுந்தரம் புண் பட்டதை மோகனாம்பாள் நேரிலேயே பார்த்தாள். சேதி கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. கண்ணதாசனுக்குத்தான் என் தொண்டைக்குள் புண் பட்டுப் போனது சேதியாய்த் தெரிய வந்தது. பொருத்தமாகத்தான் எழுதியிருக்கிறான்’ என்று அண்ணா அவர்கள் புன்சிரிப்புடன் மேலும் சொன்னார்கள்.

“நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
கட்டுண்டோம் காலம் மாறும்
சந்திப்போம்’

என்று அந்தப் பாடல் முடிவடையும். அதைக் கேட்டபோது அண்ணா மேலும் மென்மையாகச் சிரித்துக் கொண்டார்கள். ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்னர்தான்
கண்ணதாசன் தி.மு. க. ஆட்சிக்குக் கண்டனம் தெரிவிக்கும் அடையாளமாக ஒரு கறுப்புத் துணிப் பேரணியை மவுண்ட் ரோடில் நடத்தினார். அப்போது அங்கு அண்ணாவுக்குச் சிலை நிறுவப் பட்டுவிட்டிருந்தது. அந்தச் சிலையைப் பேரணி கடந்து செல்லும்போது, கண்ணதாசன் என்ன நினைத்தாரோ, தமது கையில் இருந்த கறுப்புத் துணியைச் சிலையின் முன் வீசிவிட்டுச் சென்றார். அதைப் பார்த்துப் பேரணியில் கலந்துகொண்ட மற்றவர்களும் அவரவர் கையிலிருந்த கறுப்புத் துண்டை அண்ணா சிலையின் முன் எறிந்துவிட்டுப் போனார்கள்.

4

அந்தச் சம்பவம் அண்ணாவின் காதுக்கு எட்டிய போது, “பரவாயில்லை. நான் இறக்கும்போது கண்ணதாசன் எப்படி துக்கம் அனுசரிப்பார் என்பதை இப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது. இதற்காவது அந்தச் சிலை பயன்பட்டதே ‘ என்று தமக்கே வழக்கமான குறும்புப் புன்சிரிப்புடன் கூறினார்கள்.

அண்ணா அவ்வாறு சொன்னதாகக் கேள்வியுற்ற கண்ணதாசன், மிகவும் மிருதுவான மனம் படைத்திருந்தமையால் அந்தச் சொல் கேட்கத் தாளாமல் கதறி அழுதார்.

1968 செப்டம்பர் 15 ல் நாதசுரம் வாசிப்பதுபோல் ஜாடை காட்டி ” நலந்தானா’ பாடலை நினைவூட்டிக் கூடியிருந்தோரின் கண்களில் நீர் கசியச் செய்த அண்ணா, 1969 செப்டம்பர் 15ல் நம்மோடு இல்லை. அந்த ஆண்டு பிப்ரவரி 3 ஆம் நாள் பொழுது விடியு முன்னரே காலமாகிவிட்டிருந்தார்கள்.

“நலந்தானா’ பாடலைக் கேட்க நேரும்போதெல்லாம் இந்த நினைவுகள் எழுவது ஒரு தவிர்க்க முடியாத சடங்கு மாதிரியாகிவிட்டது. கண்கள் கலங்கி, நீர் வழிவதையும் தவிர்த்துக் கொள்ள முடிவதில்லை.

தில்லானா மோகனாம்பாள் திரைப் படம் அண்ணாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. நுண் கலைகளை ரசிக்கத் தெரிந்தவரான அண்ணா, நமது பாரம்பரியக் கலைகளான நாதசுர இசையும் பரதமும் பிரதானமாக இடம் பெற்ற அந்தப் படத்தை விரும்பிப் பார்த்தார்கள்.
அண்ணாவுக்குப் பொதுவாகவே நமது பாரம்பரியக் கலைகளில் நாட்டம் அதிகம். இலக்கியம் உள்ளிட்ட அவை யாவும் நமது சமயம், கலாசாரம் ஆகியவற்றைச்
சார்ந்திருப்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். மலர் அலங்காரம், தேர் திருவிழா செய் நேர்த்தி, பல்லக்கு ஜோடனைகள் என எதை எடுத்துக் கொண்டாலும் அவை நமது சமயம் சார்ந்தனவாகவே இருப்பதையும் அவர் அறிந்திருந்தார். நமது சமயம் அழிய நேர்ந்தால் அவை எல்லாமே அழிந்து போய் விடும் என்பது அவருக்குப் புரிந்திருந்தது. என்னதான் முயற்சி செய்தாலும் சமயச் சார்பற்ற படைப்புகளால் அந்த வெற்றிடத்தை நிரப்ப இயலாது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.

நாட்டுப் புறக் கலைகளையும் அண்ணா மிகவும் நேசித்தார்கள். பெரும்பாலும் இரவு நேரங்களில் சாலை வழிப் பயணங்களையே தேர்வு செய்யும் அண்ணா, போகும் வழியில் கிராமப் புறங்களில் தெருக் கூத்து எதையேனும் காண நேர்ந்தால் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்திச் சிறிது நேரம் வண்டியில் இருந்தவாறே ரசித்துவிட்டுத்தான் தொடர்வார்கள். “பாரதம் இல்லாட்டி தெருக் கூத்தே இல்லாமப் போக வேண்டியதுதான்’ என மகாபாரதம் பாரத தேசத்தின் பாமரர் நெஞ்சிலும் வேரோõடிக் கிடப்பதை மனதார உணர்ந்து சொல்வார்கள். போகிற வழியில் எதாவது கீற்றுக் கொட்டகையில் தியாகராஜ பாகவதரோ, பி.யூ. சின்னப்பாவோ நடித்த படம் ஓடிக் கொண்டிருந்தால் மிகவும் ஆசையுடன் பயணத்தை நிறுத்திக் கொட்டகைக்குள் நுழைய ஆயத்தமாகிவிடுவார்கள். அவையெல்லாம் அநேகமாக பக்திப் படங்கள்தாம். அதில் அவருக்குப் பிரச்சினை இருந்ததில்லை. ஆனால் தாம் வந்திருப்பது தெரிந்தால் இடையூறாகிவிடும் என்று துண்டால் தலைப்பாகை கட்டிக் கொண்டு எவருக்கும் தெரியாமல் உள்ளே செல்வார்கள்.
கொட்டகை சொந்தக்காரர்களோ, தங்கள் ஆர்வத்தை அடக்கிக் கொள்ள மாட்டாதவர்களாக,

5
அவசரம் அவசரமாக, ” எமது திரை அரங்கிற்கு வருகை தந்து பெருமைப் படுத்தும் அறிஞர் அண்ணா அவர்களுக்கு நன்றி’ என்று சிலைடு எழுதித் திரையில் காட்டிவிடுவாரகள்.
அவ்வளவுதான். படம் பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டம் முழுவதும் கொல்லென்று எழுந்துவிடும். “எங்கே அண்ணா, எங்கே அண்ணா’ என்று பரபரப்புடன் தேடும். அண்ணாவுக்கு மிகவும் சங்கடமாகிப் போகும். அதற்குள் படம் நிறுத்தப் பட்டு, ஒற்றை விளக்கு எரியத் தொடங்கும். அந்த வெளிச்சத்தில் அண்ணாவின் முகத்தைத் தேடிக் கண்டு பிடித்துவிடும் கூட்டம், “அண்ணா வாழ்க, அண்ணா வாழ்க’ என்று ஆர்ப்பரிக்கும். மிகவும் சிரமப்பட்டுத்தான் மீண்டும் படத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். இதற்குமேல் அங்கு இருப்பது சாத்தியமில்லை என்று இருளோடு இருளாக அண்ணா கொட்டகையிலிருந்து வெளியேறிப் பயணத்தைத் தொடர்வார்கள்.

ரசனையில் அண்ணாவுக்குப் பொருத்தமானவர்தான் கண்ணதாசனும். திராவிட இயக்கங்களுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத சிறந்த எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான தி.ஜ.ர. எழும்பூரில் வசித்த நாட்களில் ஒரு தடவை அந்த வட்டாரத்தில் பொதுக் கூட்டம் பேச வந்த கண்ணதாசன், வீட்டு வாசலில் தி.ஜ. ர. நிற்பதை எதேச்சையாகப் பார்த்து ஒடோடி வந்து சிறிதும் தயக்கமின்றிக் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டுப் போனார். தி.ஜ.ர உள்பட அனைவருக்குமே ஆச்சரியம். “மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ என்று அண்ணா சொன்னதும் மனதார உணர்ந்துதான், வெறும் சொல் அலங்காரத்திற்காக அல்ல.

அண்ணாவின் மேடைப் பேச்சில் முத்திரைகள் மாதிரி சில சொற்றொடர்கள் அழகாக வந்து விழும். அவற்றையெல்லாம் கண்ணதாசன் பாடல் வரிகளாக்கிக் கொள்வார்.

சிவாஜி கணேசன் கட்டபொம்மன் நாடகத்தை நடத்தி வந்தபோது ஒரு முறை அண்ணாவைத் தலைமை தாங்க அழைத்திருந்தார். அந்தச் சமயம் கணேசன் தி.மு.க.விலிருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்து காமராஜரின் தொண்டராகத் தம்மை அடையாளம் காட்டத் தொடங்கிவிட்டிருந்தார். இருப்பினும், ஒவ்வொருநாள் கட்டபொம்மன் நாடகம் நடைபெறும் பொழுதும் ஒரு தலைவரையோ முக்கிய பிரமுகரையோ அழைத்துத் தலைமை வகிக்கச் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படித்தான் ஒரு நாள் நாடகத்திற்கு அண்ணாவையும் கணேசன் அழைத்திருந்தார். நாடகத்தையும் கணேசனின் நடிப்பையும் பாராட்டிப் பேசிய அண்ணா, மிகுந்த பொருள் பொதிந்த சூட்சுமத்துடன் ” நீ எங்கிருந்தாலும் வாழ்க’ என்று கணேசனை வாழ்த்தித் தமது பேச்சை முடித்தார். அந்த சொற்றொடரைத்தான் பிறகு கண்ணதாசன் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்’ என்ற படத்திற்கு எழுதிக் கொடுத்த ஒரு பாடலுக்கு மிகவும் பொருத்தமாகப் பயன்படுத்திக் கொண்டார், இந்நாள் இன்னொருவன் மனைவியாகிவிட்ட தனது முன்னாள் காதலியைப் பார்த்து, ஒரு காதலன் “எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாடுவதாக. யோசிக்க யோசிக்க, இப்படி நிறையப் பாடல் வரிகள் அண்ணாவின் பேச்சிலிருந்து கண்ணதாசனால் உரிமையுடன் எடுத்தாளப்பட்டிருப்பது தெரிய வரும்.
(கட்டுரை ஆசிரியர் சிறிது காலம் அண்ணாவுடன் இருக்கும் வாய்ப்பைப் பெற்றவர்.)


Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்