பேசும் செய்தி

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

பாஸ்டன் பாலாஜி


சில செய்திகளைப் படித்தாலே ‘இது நையாண்டியா அல்லது நிஜமான நிகழ்வா’ என்று சந்தேகம் எழும். அந்த செய்திகளை அச்சுப் பிசகாமல் அப்படியே கொடுத்து விடுவது உசிதம்.

சில செய்திகளைப் படித்தால் இரத்தம் கொதித்தாலும், வசூல்ராஜா எம்பிபிஎஸ்சில் வருவது போல் அழுத்தத்தைக் குறைக்க சிரிக்க வேண்டி வரும். அது அழுது கொண்டே சிரிக்கும் வகையை சேர்ந்தது. அந்த மாதிரி செய்திகளை சறுக்கி விடுவது உசிதம்.

சென்ற வார செய்திகளும் என்னுடைய சிறப்பு ஆய்வறிக்கைகளும்:

1. கள் குடித்தால் 10 கிலோ அரிசி இலவசம்: கள்ளுக்கடையில் நூதன அறிவிப்பு: சிக்குன் குனியாவால் குடிக்க காசு கிடைக்காமல் வீட்டிலேயே கூலித் தொழிலாளர்கள் முடங்கி விட்டார்கள். வியாபாரம் படுத்து விட்டது. அதன் பின் இன்று, ‘கல்லாப்பெட்டி பொங்கி வழியுமாறு மாறியதன் ரகசியம் என்ன?’ என்பதை அறிந்து கொள்ள கள்ளுக்கடை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் சாயா கடை போடலாமா என்று கள்ளுக்கடை யோசித்தபோது தமிழக அரசியல் இவருக்கு கை கொடுத்ததாக தெரிகிறது. தேர்தல் சமயத்தில் இலவச அரிசி வாக்குறுதி போல், சாராயம் ஊற்றிக் கொள்ள வருபவர்களுக்கு பத்து கிலோ அரிசி தருவதாக அறிவித்தவுடன் ஆட்சியைப் பிடித்த கட்சியாக கூட்டம் அலைமோதுகிறது.

2. பாகிஸ்தான் அதிபர் முஷாரப் :: நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு: ஜேம்ஸ் ஃப்ரே (James Frey) என்று ஒருவர் இருக்கிறார். “A Million Little Pieces” என்னும் நனவோடை எழுதினார். பால்ய காலத்தின் பாலியல் கொடுமைகளை புத்தகமாக்கினார். இணைய ஆய்வாளர்கள் அது அவருடைய சொந்தக் கதை அல்ல என்பதை பிட்டு வைத்தவுடன் ‘கண்டு / கேட்டு / தீர விசாரித்து’ கட்டியதை சொன்னவுடன், கட்டுரை பகுதியில் இருந்த புத்தகத்தை, ‘புனைவு’ என்று வகை செய்து மாற்றினார்கள்.

பாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப் எழுதி உள்ள புத்தகத்தில் கூறியருப்பதை சரிபார்க்க கூகிள் வழியாக ‘நியூக்ளியர்’ என்று இஸ்லாமாபத்தில் தேடியவர்களைக் கண்டுபிடித்து என் விசாரணையைத் துவக்கினேன். பாகிஸ்தான் நுட்பங்களை காப்பி அடித்து இந்திய அணுவிசை திட்டங்கள் உருவாக்கப்பட்டது என்பது கட்டுக்கதை என்பதை பாகிஸ்தானின் தொழில்நுட்பியலாளர் அப்போது தெரிவித்தார். மேலும் ‘கூகிள் அந்தக் காலத்தில் இல்லை’ என்று நினைவூட்டி ‘லெக்சிஸ்-நெக்சிஸ்’க்கு யுரேனியம் செறிவூட்டல் ப்ராஜெக்ட் நன்றிக்கடன் பட்டிருப்பதாக முடித்துக் கொண்டார்.

3. ஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழக விருது: ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச் செயலர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு இலக்கியப் பணிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. விழாவில் கலந்து கொண்ட நிருபர், ஆர்.எம்.வீரப்பனைக் குறித்து கம்பன் பாடவில்லையே என்று ஜெகத்ரட்சகனார் நெக்குருகி நின்றதை மனமுருகி வர்ணித்தார்.

மேலும், ‘வள்ளுவர் கோட்டம்’ என்பது எதுகையும் இல்லாமல் மோனையும் இல்லாமல் மொண்ணையாக இருப்பதால், ‘கம்பன் கோட்டம்’ என்று ஒன்றை அமைப்பதை டாக்டர் கலைஞரிடம் கோரிக்கை வைத்திருப்பதை உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார். ‘அகில உலக கம்பன் கழக விருது’ கொடுத்தால் கலைஞர் கருணாநிதியிடம் மனு வைக்க முடியும் என்று முழக்கத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்.

4. தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்வு: இணையத்தினாலும் உலகமயமாக்கலினாலும் நிகழும் சாபக்கேடாக பணவீக்கம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, சூடு மீட்டர் பொருத்திய ஆட்டோவாக எகிறுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் நமது நாட்டில் தங்கம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பர பொருள்களில் விலைகள் மட்டும் உயர்ந்து வந்தது.

தற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருப்பதை வலைவாசிகளிடம் விசாரித்தேன். ‘இணையத்தில் இப்போது தமிழில் மிகப் பலர் எழுத ஆரம்பித்திருக்கிறோம். அதன் நேரடிப் பலனாக விகடன் வாசகர் வட்டம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே #1 ஆனார்கள். குங்குமமோ போட்டி போட்டுக் கொண்டு சோப்பு, சீப்பு கொடுத்தாலும் சல்லிசாக இதழ் நடத்துகிறது. விற்பனையில் சாதனை புரிகிறது. இதெல்லாம் கூட வலையின் வீச்சினால்தான் சாத்தியப்படுகிறது. படிப்பவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு பயந்து, ப்ரிண்ட் புத்தகத்தை படிப்பதற்கு ஓடுவது சாதகமான உபாதைதானே!’ என்று எதிர் கேள்வி எழுப்பி முடித்துக் கொண்டார்.

5. ‘திரை உலகுக்கு கருணாநிதி அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு:”இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.” என்று ரஜினி பேசியதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தது. சிவாஜி பட ஷூட்டிங்கில் இடுப்பு வளையாததால் ஷங்கரிடம் திட்டு வாங்கி கடுப்பில் இருந்த சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‘கேயெஸ் ரவிக்குமாரா இருந்தால் விரலை மட்டும் “விஷ்க் விஷ்க்” என்று அசைக்க சொல்வான். இவன் ரொம்பப் படுத்தறான்’ என்று உடம்பின் நோவைப் பகிர்ந்தார். தொடர்ந்து, ‘நான் பேசியதை மாற்றி விட்டார்கள். கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம் கொடுத்த உமறுப்புலவர் விருது கிடைத்திருக்கிறது. மேலும் ஆழ்வார், ஆரெம்வீ என்று பலரும் பல பரிசுகளையும் பட்டங்களையும் கொடுக்கிறார்கள். ‘கருணாநிதிக்கு அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ என்று சொல்ல வேண்டியது, ஷங்கர்ஜி கொடுத்த டார்ச்சரில் நாகுழறி விட்டது’ என்றார்.

-பாஸ்டன் பாலாஜி


-Balaji
Alt. Email: bsubra@yahoo.com
Visit: http://www.bsubra.blogspot.com

Series Navigation

பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி