பண்டைத் தமிழர்களின் அணு அறிவு கணிதம் என்பது அறிவியல் மொழி – தொடர்ச்சி – காலம்

This entry is part of 31 in the series 20060908_Issue

புதுவை ஞானம்


கடந்த கட்டுரையில் கணபரிமானம் பற்றிய பண்டைத் தமிழர்களின் புரிதல், கணக்கதிகாரத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதனைக் கண்டோம் அல்லவா ?

இப்போது காலம்- Time- பற்றிய புரிதலை ஆய்வு செய்யலாம்.நடை முறையில் நாம் வினாடி,நிமிடம்,மணி இவற்றை இயல்பாக புரிந்து கொள்கிறோம்.அந்தக்காலத்தில் முன்னோர்கள் ‘தெறிப்பளவு’ என்ற பெயரில் :

2 கண்ணிமை – 1 நொடி
2 கைநொடி – 1 மாத்திரை
2 மாத்திரை – 1 குரு
2 குரு – 1 உயிர்
2 உயிர் – 1சணிகம்
12 சணிகம் – 1 விநாடி
60 விநாடி – 1நாழிகை
2 1/2 நாழிகை – 1 ஒரை
3 3/4 நாழிகை – 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் – 1 சாமம்
4 சாமம் – 1 பொழுது
2 பொழுது – 1 நாள்
15 நாள் – 1 பக்கம் (பட்சம் )
2 பக்கம் – 1 நாள்
30 நாள் – 1 மாதம்
6 மாதம் – 1 அயனம்
2 அயனம் – 1 ஆண்டு
60 ஆண்டு – 1 வட்டம்

என்று கணக்கிட்டனர். எனினும், இமைப் பொழுதுக்கும் கீழே நுட்பமான அளவைகளையும் கையாண்டு இருப்பது சாமானியர்கள் கண்ணில் படுவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த நுட்ப அளவைகள் பற்றி கணக்கதிகாரம் பேசுகிறது. இந்த அளவைகள் வானவியலோடு தொடர்பு கொண்டவை என்பதாகத் தோன்றுகிறது.

ஆனாதி சாரம் நாற்பத்தஞ்சதே சாரமாகும்
தானாதி சாரம் நாலோ டரையதிற் அற்பமாகும்
ஊனமில் அதிலற் பந்தான் ஒங்கியவை ஐந்தேயாகில்
மானிகர் கண்ணாய் அற்பம் என நீயும் மதித்துச் சொல்லே.
சொல்லியவற்ப மஞ்சு துய்யதற் பரைத னக்கு
வல்லதிங் கறுமூன் றென்று வகுத்ததற் பரையதாகும்
நல்லதற் பரைமி ரேழு நாடதி நுட்பமாகும்
மெல்லதி நுட்பந் தோறும் ஏழரை நுட்பந்தானே.

நுட்பமூன்றரையே மிம்மி நொய்ய பத்தரையே கொண்டால்
முட்கரை பெறுத மூன்றுங் கீழின்முந் திரிகையாகும்
வடக்குமுந் திரிகை முன்னூற் றிருபதே விரும்புங்காலை
புட்செரி குழலாய் ரண்டாய் கீழின் முந்திரிகையாமே.

ஆமென விரண்டாங் கீழோர் ஆணிமு திரிகை தானும்
மாமரை குழலாய் முன்னுற் றிருபதே விளங்கும் காலே
பாமன்றல் தெரியு மிக்கொர் பகர்வரே முதற்கீ ழன்றி
தேமன்றல் தானு முன்னுற் றிருபதேமுந் திரிகை தானே.

சின்னம்பத் தேமுக்கால் செப்புந் தொகை நுண்மை
நுண்மையில் மூன்று நுவல் இம்மி – இம்மி
வருபத் தரையன்றாங் கீழாவேதான்
வருமுந் திரியெனவே வாட்டு.

இதன் விளக்கம் கீழே தரப்படுகிறது.
அதிசாரம் 45 கொண்டது = சாரம்

சாரம் 4 1/2 = அதிஅற்பம் 45 * 4.5 = 202. 50
அதிஅற்பம் 25 = அற்பம் 202.5 * 25 = 5062. 50
அற்பம் 5 = அதி தற்பரை 5062.5 * 5 = 25312. 50
அதிதற்பரை 22 = தற்பரை 25312.5 * 22 = 556875. 00
தற்பரை 14 = அதிநுட்பம் 556875 * 14 = 7796250. 00
அதிநுட்பம் 7 1/2 = 3ஆம் கீழ் முந்திரிகை 7796250 * 7.5 = 58471875. 00
3 ஆம் கீழ் முந்திரிகை 320 = 2ஆம் கீழ் முந்திரிகை 58471875 * 320 =18711000000 .00
2ஆம்do 320 = 1ஆம் do 18711000000. 00 * 320 =598752000000.00
1ஆம் do 320 = முந்திரிகை 5987520000000.oo * 320=1916006400000000.00
சின்னம் 10 1/2 = நுண்மை முந்திரி 1916006400000000.00 *10.5=201180672000000000 .00
நுண்மை முந்தரி 3 = இம்மி முந்திரி 20118067200000000.00*3=60354201600000000.00
இம்மி முந்திரி 10 1/2 = கீழ் முந்திரி 60354201600000000.00*10.5=633719116800000000.00
கீழ் முந்திரி 320 = மேல் முந்திரி 633719116800000000.00*320=202790117376000000000
மேல் முந்திரி 320 = ஒன்று 202790117376000000000.00*320=64892837560320000000000.00
1/ 64892837560320000000000.00 =

541002116097123235781168089894 e-23
1.
இதுவே நவீன அறிவியலில் (Negative number) ஆக கீழ் கண்டவாறு வரும்:–

1 / 202.5 = 0.00493827160493827160493827160493827
1 / 5062.5 = 1.97530864197530864197530864197531 e-4
1 / 25312.5 = 3.95061728395061728395061728395062 e-5
1 / 556875 = 1.79573512906846240179573512906846 e-6
1 / 7796250 = 1.28266794933461600128266794933462 e-7
1 / 58471875 = 1.71022393244615466837689059911282 e-8
1 / 18711000000 = 5.3444497888942333386777831222276 e-11
1 / 5987520000000 = 1.6701405590294479183368072256961 e-13
1 / 1916006400000000 = 5.2191892469670247448025225803004 e-16
1 / 20118067200000000 = 4.9706564256828807093357357907622 e-17
1 / 60354201600000000 = 1.656885475227626903111911930254 e-17
1 / 633719116800000000 = 1.5779861668834541934399161240515 e-18
1 / 202790117376000000000 = 4.931206771510794354499737887661 e-21
1 / 64892837560320000000000 = 1.541002116097123235781168089894 e-23

இதுவே இறங்கு வரிசையில் உங்கள் வசதிக்காகத் தரப்படுகிறது.

1 / 64892837560320000000000 = 1.541002116097123235781168089894 e-23
1 / 202790117376000000000 = 4.931206771510794354499737887661 e-21
1 / 633719116800000000 = 1.5779861668834541934399161240515 e-18
1 / 60354201600000000 = 1.6568854752276269031119119302541 e-17
1 / 20118067200000000 = 4.9706564256828807093357357907622 e-17
1 / 1916006400000000 = 5.2191892469670247448025225803004 e-16
1 / 5987520000000 = 1.6701405590294479183368072256961 e-13
1 / 18711000000 = 5.3444497888942333386777831222276 e-11
1 / 58471875 = 1.71022393244615466837689059911282 e-8
1 / 7796250 = 1.28266794933461600128266794933462 e-7
1 / 556875 = 1.79573512906846240179573512906846 e-6
1 / 25312.5 = 3.95061728395061728395061728395062 e-5
1 / 5062.5 = 1.97530864197530864197530864197531 e-4
1 / 202.5 = 0.00493827160493827160493827160493827

மேலே காணப்படும் நுண்ணிய கால அளவைகளுக்கும் Nano seconds என்று பேசப்படுவதற்கும்
ஏதாவது ஸ்நானப் பிராப்தி உண்டோ ? விவரம் தெரிந்தவர்கள் எழுதலாமே !

பதார்த்தசாரம் எனும் சமண நூல்,(சரஸ்வதி மஹால் வெளியீடு) பற்றி முன்னரே குறிப்பிட்டு இருக்கிறேன்.அந்த நூல் காலம் பற்றி எவ்வாறு பேசுகிறது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

“கால அளவு :

‘சமயம்’ என்பது ஒரு பரமாணு மந்த கதியில் ஒரு அணு பிரதேசத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம்.இச்சமயம் தொடங்கி ஆவளி,உயிர்ப்பு,தோவம்,இலவம்,நாளி,மூழ்த்தம்,திவசம்,பக்கம்,திங்கள்,இருது,அயனம்,ஆண்டு முதலான காலங்கள் கணக்கிடப் படுகின்றன.

அயங்கிய சமயம் கொண்டது – ஒரு ஆவளி
சங்கிய ஆவளி கொண்டது _ ஒரு உயிர்ப்பு
7 உயிர்ப்பு கொண்டது _ஒரு தோவம்
7 தோவம் கொண்டது – ஒரு இலவம் -3731/ 17 வினாடி
381/2 இலவம் கொண்டது – ஒரு நாளி (நாழி)- 24 நிமிடம்
2 நாளி கொண்டது – ஒரு மூழ்த்தம் (48 நிமிடம் )
ஒரு மூழ்த்தம் (-)1 சமயம் – ஒரு பின்ன மூழ்த்தம்
ஆவளி (+) 1 சமயம் முதல்
பின்ன மூழ்த்தம்(-) 1சமயம் வரை – ஒரு அந்தர் மூழ்த்தம்

30 மூழ்த்தம் கொண்டது – ஒரு திவசம்
15 திவசம் கொண்டது – ஒரு பக்கம்
2 பக்கம் கொண்டது – ஒரு திங்கள்
2 மாதம் கொண்டது – ஒரு இருது
3 இருது கொண்டது – ஒரு அயனம்
2 அயனம் கொண்டது – ஒரு ஆண்டு
5 ஆண்டு கொண்டது – ஒரு பணையுகம்
84,00000 கொண்டது – ஒரு பூர்வாங்கம்
84,00000 பூர்வாங்கம் கொண்டது – ஒரு பூவம்

இப்படி 84,00000 மடங்குகளாக பெருக்கிக் கொண்டே போக வேண்டும்

அயங்கியம் பூர்வம் கொண்டது — ஒரு பல்லம்
பத்துக்கோடாகோடி பல்லம் கொண்டது – ஒரு கடல்

பிறகு அனந்தம் வரை கால வேறுபாடுகளைக் கூறும் போது நிமித்ததின் இன்றியமையாமையைக் குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக பரமாணுவின் வேக ஆற்றல் பற்றிக் குறிப்பிட்டுள்ளர். காலத்தின் இருப்பை உறுதிபடுத்திய ஆசாரியர் அது வேறொரு பொருளுக்கு உபதானம் ஆகாது என்பதால் அது ஏற்கத்தக்கது அன்று என்று குறிப்பிட்டுள்ளார். இது நிச்சய நய நோக்கு ஆகும்” பதார்த்தசாரம்
பக்கம்.47.

பதார்த்தம் என்பது Matter எனவும் , சாரம் என்பது Essence எனவும் அந்தக் காலத்தில்
பெளதீகம் எனப்பட்ட இயற்பியலில் சொல்லித் தரப்பட்டது. எனவே பதம் + அர்த்தம் + சாரம்
என்பதாக சரஸ்வதி மஹால் வெளியிட்ட இந்நூலின் –‘ நூல் குறிப்புச் சுருக்கத்தில்’ ( பக்கம் எண்
22)சொல் விளக்கம் என்ற துனைத் தலைப்பில் “பதார்த்தம் = பத + அர்த்தம். பத எனில் சொல்;
அர்த்தம் எனில் அறியப் படுவது, அதாவது அறிவால் உணரப்படுவன இதனையே ஆசிரியர்
‘ ஞானத்தினால்’ பரிச்சேதிக்கப் படும் வஸ்துவுக்கு பதார்த்தம் என்ற பெயராகும், என்றார்.” எனக்
குறிப்பிடுவது ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. Essence of Matter என்பது பொருட்களின் சாரம், அதாவது உள்ளியல்பு – இயல் பண்பு Atributes of Matter என்பதாக எனக்குத் தோன்றுகிறது.

“அறிவு காட்சி முதலான உணர்வுகள் இல்லாதது உயிரில்(லாத) பொருள்களாகும்.அவை புற்கலம், தன்மம், அதன்மம்,ஆகாயம், காலம் என ஐந்து வகைப்படும். அவை ஆக்கவும் அழிக்கவும் முடியாதவை, என்றும் தாமாக நிலைத்திருப்பவை (ஸ்வயம்பு ). புற்கலம் என்ற சொல்லுக்கு ‘ கூடுதலும் பிரிதலும்’ என்று பொருள். கூடுதல், வளர்தல், பிரிதல் உடையது புற்கலம் என்பர்
மேருமந்தர நூலாசிரியர். இந்நூலாசிரியரும் இதனையே கூறுகிறார். உண்மையில் புற்கலம் அணு தான்.அணுக்கள் பல கூடுவதாலும் பிரிவதனாலும் தான் இந்த உலகில் காணப்படும் சித்திர-விசித்திரங்கள் தோன்றுகின்றன ” பதார்த்தசாரம்- பக்-41.
“அணு :
அணு என்ற சொல்லுக்கு நுண்மை என்று பொருள்.பொறிகளுக்கு இலக்காகும் புற்கலங்களின் (Matter ) கடைசி கூறு மேலும் பிரிக்க இயலாத நுண்ணிய கூறு – அணு ஆகும்.

இதனையே ‘ பரமாணு’ என்று குறிப்பர். மண், நீர்,நெருப்பு,காற்று ஆகிய பூதங்களுக்கு அடிநிலைக் கூறாக இருப்பன இப்பரமாணுக்களே. பரமாணுக்கள் என்ற அளவில் இவற்றிடையே வேறுபாடுகள் இல்லை.” Ibid.

“பரமாணுவின் பொதுப் பண்புகள் :
இப்பரமாணுக்களை அழிக்கவோ ஆக்கவோ முடியாது. இவற்றுள் பொறிகளாளோ நுண்கருவிகளாலோ அறிய முடியாது.இவை தாமாகவே என்றும் உள்ளவை (ஸ்வயம்பு).

இவ்வணுக்கள் நாற்றம்,சுவை,ஊறு,வண்ணம் ஆகிய குணங்களை உடையன.ஒவ்வொரு தனி அணுவிலும் ஒரு நாற்றம் ஒரு சுவை ஒரு வண்ணம் இரு ஊறுகள் இருக்கின்றன. மென்மை-கடுமை,இலேசு-பளு,பண்புகள் பரமாணுவில் கிடையா.

ஊறுஇரண்டாகி நாற்றம் வண்ணமும் சுவையும் ஒன்றாய்
கூறுஇரண்டு ஆக்க லாகா நுண்மைத்தாய் அளவைக்கெல்லாம்
பேறுதன் வழிய தாகி பிறஙி மூவுல முற்றும்
ஆறுகந் தங்கட்கு ஆதியாகியது அணுவதாமே. (மேரு மந்தர புராணம் ) 86.

பரமானுவின் வகைகள் :
காரண பரமாணு, காரிய பரமாணு என இரு வகை பரமாணுக்கள் உள.மண்,நீர்,நெருப்பு,காற்று முதலான பொருள்கள் உண்டாவதற்கு காரணமாகும் அணுக்கள் காரண பரமாணுக்கள்.அது போன்ற பொருள்கள் சிதைந்து தனி அணுவாகப் பிரிந்து நின்றால் அவை காரிய பரமாணுக்கள்
அதாவது ‘கந்தங்கள்’ உண்டாவதற்குக் காரணமானவை காரண பரமாணு, ‘கந்தங்கள்’ சிதைவதால்
உண்டாகும் தனி பரமாணு காரிய பரமாணு ஆகும்.

“ (பரமாணுவில் ஒலி இல்லை:
தனி பரமாணுவில் ஒலி இல்லை. அது அணுக்கூட்டத்தின் (கந்தத்தின்) பரியாயம் ‘அணுத்திரள் ஒலி’ என்பது நன்னூல்.

பரமாணுவின் வடிவம் :
பரமாணு நுண்ணிதும் நுண்ணிது.ஆதலால் அதில் முதல் இடை கடை என்ற பகுதிகள் இருக்க
இயலாது.

கந்தம் (ஸ்கந்தம்):

அணுத்திரள் ‘ஸ்கந்தம்’ (Molecule) எனப்படுகிறது. பரமாணுக்கள் ஒன்று சேர்தல் கந்தம்பரமாணுவில் ‘ ஸ்நிக்த’ ‘ ரூஷ’ என இரண்டு ஆற்றல்கள் இருக்கிறது. இந்த ஆற்றல்கள் வெளிப்பாட்டில் ஏற்றத் தாழ்வு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.ஓர் அணு மற்றோர் அணுவோடு சேரும் தகுதியான வெளிப்பாடு அந்த ‘ஸ்நிக்த’ , ‘ரூஷ” ஆற்றலில் தோன்றும் போது அவை
ஒன்றோடொன்று சேருகின்றன. இப்பரமாணுக்கள் பிணைந்து கந்தமாவதில் விதிமுறைகள் காணப்படுகின்றன. அவை விரிக்கின் பெருகும் .

அணுத்திரள் (ஸ்கந்தங்கள் ) வகை:
கந்தங்கள் ஆறு வகைப்படும். அவை: நுண்மையுள் நுண்மை (ஸ¥க்ஷ்ம ஸ¥க்ஷ்ம ),நுண்மை (ஸ¥க்ஷ்ம),நுண்மையில் பருமை ( சூக்ஷ்ம ஸ்தூலம்), பருமை (நுண்மை (ஸ்தூல ஸ¥க்ஷ்ம ) பருமை (ஸ்தூலம் ) இருபருமை (ஸ்தூல ஸ்தூலம் ).

1.நுண்மையுள் நுண்மை : வினையாகா அணுத்திரள்
2.நுண்மை 🙁 கர்ம) வினையாகும் அணுத்திரள்
3.நுண்மை பருமை : சுவை, மணம்,ஒலி முதலானவற்றின் அணுத்திரள் அதாவது
மெய்,வாய்,மூக்கு,காது பொறிகளுக்கு இலக்காகும் அணுத்திரள்.
4.பருமை நுண்மை :நிழல் இருள் ஒளி முதலானவற்றை ஆக்கும் அணுத்திரள்.
5.பருமை : :நெய், எண்ணெய், நீர் , பால்,முதலான திரவப் பொருளை ஆக்கும்
அணுத்திரள்
6.இரு பருமை : நிலம்,மலை முதலானவற்றை ஆக்கும் அணுத்திரள்.

இந்த ஆறு வகை அணுத்திரள்களில், முதல் இரண்டும் பொறிகளால் அறியமுடியாடவை, அடுத்த இரண்டும் ஒரு பொறிக்கு இலக்காவன,கடைசி இரண்டும் பல பொறிகளுக்கு இலக்காவன.

இந்த அணுத்திரள்களை 23 (இருபத்து மூன்று ) தொகுதிகளாக வகைப் படுத்திக் காணுவர். அத்தொதிகளை ‘ வர்கணை’ என்பர்.ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பரமாணுக்கள் அவ்வத்தொகுதி பொருள்களை உண்டாக்குமேயழிய பிற தொகுதி பொருள்களை உண்டாக்கா.ஆனால்,ஒரு தொதியில் உள்ள பரமாணு தனது ‘ஸ்நிக்ஷ’ ;ரூஷ’ ஆற்றல் வெளிப்பாட்டுக்கு ஏற்ப பிரிந்தும் வேறு தொகுதியில் சேரவும் இயலும்.

அளவுகள் :

பரமாணுவை அடிநிலையாகக் ( UNIT) கொண்டே அளவைகள் குறிக்கப் படுகின்றன.
பரமாணு என்பது பிரிக்க முடியாத அழியாத நுண்துகள்.அனந்தானந்த பரமாணு கொண்டது ஒரு அவஸ்ன்னாஸன்னை.

8அவஸன்னாஸன்னைக் கொண்டது – ஒரு ஸன்னாஸன்னை.
8 ஸன்னாஸன்னைக் கொண்டது – ஒரு திருட்டரேணு. (வியவஹார அணு )
8 திருட்டரேணு கொண்டது – ஒரு திரஸ ரேணு.
8 திரஸ ரேணு கொண்டது – ஒரு இரத ரேணு.
8 இரத ரேணு கொண்டது -ஒரு உத்தம போக பூமி மயிர் நுணி.
8 உ.மயிர் நுணி கொண்டது – ஒரு மத்திம போக மயிர் நுணி.
8 ம.மயிர் நுணி கொண்டது -அதம போக மயிர் நுணி
8 அ.மயிர் நுணி கொண்டது -ஒரு கரும பூமி மயிர் நுணி.
8 க.மயிர் நுணி கொண்டது -ஒரு லீக்
8 லீக் கொண்டது – ஜூ
8 ஜூ கொண்டது – ஒரு யவ
8 யவ கொண்டது – ஒரு உத்தேச அங்குலம்.
500 உத்தேச அங்குலம் கொண்டது – ஒரு பிரமாண அங்குலம்
.ஆத்மா அங்குலம் – பரத ஐராவத சக்ரவர்த்தி (ஆள்) அங்குலம்.
6 ஆள் அங்குலம் – ஒரு காலடி (பாதம் )
2 காலடி கொண்டது – ஒரு விதஸ்தி
2 விதஸ்தி கொண்டது – ஒரு முழம்
2 முழம் கொண்டது – ஒரு கிஷ்கு
2 கிஷ்கு கொண்டது – ஒரு தண்டம்
2000 தண்டம் கொண்டது -ஒரு கோசம்
4 கோசம் கொண்டது – ஒரு ஓசனை (யோசனை)
(குறிப்பு :உத்தேச அங்குலத்தால் வியவஹார ஓசனையும் பிரமாண அங்குலத்தால் பிரமாண ஓசனையும் கணக்கிடப்படும்.)

500 வியவஹார ஓசனை கொண்டது -ஒரு பிரமாண ஓசனை 768000 அங்குலம் கொண்டது
ஒரு ஓசனை.
ஓசனையிலிருந்து கயிறு (ரஜ்ஜு ) கணிக்கப்படுகிறது.

“ Rajju is according to Colebrook the distance which a Dev flies in six months at the rate of
2057192 yojanas in one instant of time.” Cosmology old and new p.105.

கயிறு (ரஜ்ஜு) அடிப்படையில் உலக கன அளவு தரபடுகிறது.உலகம் அடியில் 7 கயிறு நீளமும்
நடுவில் 1 கயிறு நீளமும் முடிவில் 1 கயிறு நீளமும் உள்ளது. இடைப் பகுதிக்கும் முடிவுப் பகுதிக்கும் இடையில் 5 கயிஉ நீளமும் உள்ளது. ( 7+1+1+5=14 ) 14/4=3 1/2 கயிறு அகலமுலகின் நீளம் 7 கயிறு உயரம் 14 கயிறு. எனவே உலகின் கண பரிமானம் 3 1/2 *7*14
=7-3=343 கயிறு.

தன்ம திரவியம் அதன்ம திரவியம்

இவ்விரண்டும் உருவம் இல்லாதவை. எனவே பொறிகளுக்குப் புலனாகா. இவை உலக முழுதும் இடை அணுக்களால் ஆனவையும் அல்ல. எனவே அயங்கிய பிரதேசங்களை உடையன. வண்ணம் முதலான குணங்கள் இவற்றிற்கு இல்லை. இவை துண்டு படாத அகண்ட பொருள்கள். எள்ளில் எண்ணை பரவி இருப்பது போல இவை உலகில் பரவியுள்ளன. அதாவது இவை பரவியுள்ள எல்லைவரை தான் உலகம் இருக்கிறது. வெளியே இல்லை.

உயிரும் புற்கலமும் இடம் விட்டு இடம் பெயர தன்மமும், அவை நிலை பெற்று ஒர் இடத்தில் உதாசின நிமித்தமாக விளங்குகின்றன.

ஆகாய திரவியம்

ஆகாயம் உருவம் இல்லாதது: எனவே கண்ணுக்குப் புலப்படாது. அணுக்களால் ஆனது அன்று; எனவே நிறம் முதலான குணங்கள் இல்லை. இது துண்டு படாத அகண்ட திரவியம் எங்கும் பரவி இருப்பதால் அனந்த பிரதேசங்களை உடையது.

இந்த ஆகாயத்தின் நட்ட நடுப்பகுதியில் உயிர் முதலான ஆறு திரவியங்களும் உள்ளன. அதுவே உலகம் எனப்படுகிறது. உலகம் உள்ள ஆகாயப் பகுதி உலக ஆகாயம் என்றும் குறிக்கப்படும்.

எல்லாப் பொருள்களும் இருப்பதற்கு ஆதாரமாக இருப்பது இதன் பயன். இதைக் காட்டிலும் பெரிதான பொருள் இன்மையால் ஆகாயத்திற்கு வேறொரு பொருள் ஆதாரம் இல்லை. தனக்குத் தானே ஆதாரமாக இருக்கிறது.

காலம் ஒரு மிக நுண்ணிய திரவியம் வண்ணம் முதலான குணங்கள் இன்மையால் பொறிகளுக்குப் புலப்படாது உலகு அயங்கியம் பிரதேசம் உடையது. ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு கால அணு தனித் தனியாக உள்ளது. இக்கால அணுவுக்கு நிறம் முதலிய குணங்கள் இன்மையால் அவை உருவம் இல்லாதவை.

பொருள்களது மாறுதல்களுக்கு இக்காலமே உதாசின நிமித்தமாகும். சமயந்தோரும் நிகழும் பொருள்களானது மாறுதல்களுக்கு இக்காலமே நிமித்தமாகும்.

இக் காலம் நிச்சய காலம், வியவகார காலம் என இரு வகைப்படும். சமயம் தொடங்கி கூறப்படும் கால வேறுபாடுகள் வியவகார காலமாகும்.” பதார்த்த சாரம் பக்.46.

எங்கோ தொடங்கி எங்கோ போவதாக, மேலோட்டமாகத் தோன்றிய போதிலும் ஆழ்ந்து அக்கறை செலுத்தப்பட வேண்டிய விவகாரங்கள் இவை என்பதாக அடியேனுக்குத் தோன்றுகிறது. இன்னும் தூரம் பற்றிய அளவைகள் மற்றும் இந்திய கணக்கியல் பற்றிய வெளிநாட்டார் புரிதல் பற்றி எல்லாம் கொஞ்சம் எழுதியாக வேண்டும். (வியப்பு என்னவெனில் எனக்குத் தெரிந்த தமிழ் பற்றாளர்களை விட அந்நியர்கள் நம் முன்னோர்களின் கணித அறிவு பற்றி மிகத் தெளிவாகவே
காணப்படுகின்றனர் என்பதாகத் தோன்றுகிறது.)

புதுவை ஞானம் – 9/6/2006

Series Navigation