எண்ணச் சிதறல்கள் – சுதந்திர இந்தியா, இராணுவம், சட்டை-செரீன் – சாருநிவேதிதா, தாஜ், சின்னக்கருப்பன்

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

நேச குமார்


“உனது குறைகளையும் மீறி உன்னை நான் விரும்புகிறேன்” என்றானாம் பைரன். இதை குறிப்பிட்டிருந்தார் குமுதத்தில் தமிழருவி மணியன். இந்திய சுதந்திர தினத்தன்று இதுதான் நினைவுக்கு வந்தது. எல்லாக்குறைகளையும் மீறி எனது நாடு உன்னதமானது. வேறெந்த நாட்டிலும் இவ்வளவு வறுமையிலும், வேதனையிலும், அவலங்களுக்கு மத்தியிலும் இந்த மனிதத் தன்மையைப் பார்க்க முடியாது. மேலை நாடுகளில் மனித உரிமை, மதிப்பு, உதவி செய்யும் மனப்பான்மை எல்லாம் நம்மைவிட மிகுதியாக இருப்பது உண்மைதான். ஆனால் இதெல்லாம் வயிறு நிரம்பியவுடன் வந்தது, வருவது. உதாரணத்துக்கு ஜெர்மனியை எடுத்துக் கொள்ளுங்கள். பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கும் கிழக்கு ஜெர்மனியில் ரேசிஸம் அதிகம். கிழக்கு ஐரோப்பா முழுவதுமே இந்த நிலைதான். பெட் ரோல் கிடைப்பதற்கு முன்பு சவுதி வகாபி வம்சம் மற்ற அரபிகளை கா·பிர்கள் என்றறிவித்து அவர்களைக் கொள்ளையிடுவதை குரானைக்காட்டி நியாயப்படுத்தி வந்தது.

***
நான் ஒரு காலகட்டத்தில் கிரிமினல்களுடன் உண்டு, உறங்கி, குடித்து, சூதாடி, சினிமா பார்த்து, கதை பேசி வாழ்ந்திருக்கின்றேன். அவர்களைக் கிரிமினல்கள் என்றழைக்கலாமா என்பது பற்றிய சஞ்சலம் இன்றும் உண்டு. கடத்தல் செய்பவர்கள், கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், அடியாட்கள், பிம்ப்கள், பிக்பாக்கெட் பேர்வழிகள் என்று அவர்களின் பின்புலம் நாம் அவர்களுடன் நட்பு கொண்டிருப்பதை மற்றவர்களுக்கு சொல்லும்போது சங்கோஜத்தை ஏற்படுத்தவல்லது. என்னை ராஜகுமாரனாக பாவித்து நேசத்தைப் பொழிந்த நண்பர்கள் அவர்கள். எனது நட்பு அவர்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்தியது. ஆனால், அவர்களின் உலகம் தனியானது. என்னை உயர்த்தி வைத்து தங்களை தனியாக்கிக் கொண்டார்கள் அவர்கள். எனது உறவினர் ஒருவரும் அவர்களுடன் வசித்துவந்தார். அவர் என்னைக் கண்டபோது சங்கோஜமடைந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. “மாமா வேலை பார்க்கிறார் அவர்” என்று மிகவும் சகஜமாக சொன்னான் அங்கு நான் சந்தித்த நண்பன் ஒருவன். அதற்குச் சில வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு மதிய வேலையில் எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டுவிட்டு முற்றத்தில் கைகழுவிப் போனது நினைவிலாடி தொண்டைக்குழியை அடைத்தது.
அதே போன்று எனது நண்பன் ஒருவனின் தாயார் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர் என்று தெரிந்தவுடன் மற்றொரு நண்பன் வீட்டில் எழுந்த களேபரமும் நினைவில் இருக்கிறது. அந்த நண்பனின் தந்தை நல்ல மனிதர், வண்டியோட்டிப் பிழைத்தார். தாயாரும் நல்ல மனிதர்தான். நண்பனின் மீது நிறைய அன்பு. அவனாவது படித்து நல்ல வேலைக்குப் போகட்டும் என்றெண்ணி மற்ற குழுக்களோடு சண்டைபோட்டு சாராயம் வித்தார். நண்பன் உருப்படவில்லை. இன்று குடித்துக் குடித்து கூடாகிப் போன நெஞ்செலும்போடு, இரண்டு திருமணம் செய்துகொண்டு சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறான். கடைசியாய்ப் பார்த்தபோது,”அம்மா போயிட்டுது” என்றான் மேலே பார்த்தவாறு.
இன்னொரு நண்பன் கடைசியாய்ப் பார்த்தபோது, ” நான் முன்ன மாறியில்லண்ணே மாறிப்போயிட்டேன்” (ஆதலால் என்னுடன் நட்பு பாராட்டாதே என்ற தொணியில்) என்றான். போதைப்பொருள் கடத்துகிறான் என்று கேள்விப்பட்டேன், என்ன சொல்வது என்று தெரியாமல் பேச்சு வராமல் இருந்தேன். தற்போது எதோ ஒரு கொலை வழக்கில் மாட்டி ஜெயிலில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டேன். அவனது அம்மா என்னிடம் காது மெஷினை வாங்கி வரச்சொல்வார்கள். நானும் மவுண்ட் ரோடில் அண்ணா சிலைக்குப் பக்கத்தில் இருக்கும் காம்ப்ளெக்ஸில் மெனக்கேட்டு சென்று ‘செவிட்டு’ மெஷினுக்கான உபகரணங்களை வாங்கித் தருவேன். இரண்டே இரண்டு குமாரர்கள். மூத்தவன் முழுக்குடிகாரனாகப் போய் எங்கோ இப்போது கூலி வேலை செய்கிறார். இளையவன் இப்போது கொலைக்கேசில். பழைய வீட்டை காலி செய்துவிட்டு போய்விட்டார்கள், துக்கம் தாங்காமல், வறுமையைக் கண்டு வெட்கி. என்னிடம் வீட்டைக் காட்டக்கூட மறுத்துவிட்டான் இளையவன் கடந்த முறை பார்த்தபோது.

எனது இந்தியா இவர்கள் யாவரையும் உள்ளடக்கியது. இவர்களை மேலேற்றாமல், வாழ்வை மாற்றாமல் தேசியக் கொடி என்றும் பட்டொளிவீசாது. வறுமை, வறுமையின் காரணமாக ஏற்படும் வன்முறை, வன்முறையின் மூலம் வறுமையை விட்டு வெளியேற முயல்வது, ஓரிருவர் மட்டும் வெளியேற மற்றவர்கள் இந்தச் சூதாட்டத்தில் பகடைக்காயாவது என்ற இந்த vicious cycleலிருந்து எப்போது இவர்களெல்லாம் வெளிவருவார்கள் என்பது குறித்து நிறையமுறை யோசித்துள்ளேன். இப்போது எழுதும் கூட அவர்களின் நினைவில் வந்து நெஞ்சடைக்கிறது – அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாத எனது கையாலாகாத்தனத்தை நினைத்து. நான் வெளியேறிவிட்டேன் – குடியிலிருந்து, சூதாட்டத்திலிருந்து, இருளிலிருந்து – எனக்கு இன்று சமூக அந்தஸ்து இருக்கிறது, வளமிருக்கிறது, நல்ல வாழ்க்கை இருக்கிறது. அவர்களெல்லாம் ஒடுங்கியவர்களாக, விளிம்பிற்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள் காலதேவனால். “வீணாப்போயிட்டேம்பா” என்ற வார்த்தைகள் தாம் விரக்தியோடு வருகின்றன அவர்கள் வாயிலிருந்து. இந்த ‘வீணாப்போனவர்கள்’ பற்றி கதைகதையாய் எழுதவேண்டும் காலம் கிட்டும்போது, மற்றவர்கள் இந்த சுழலுக்குள் விழுந்து விடாமலிருக்க.

***
யோசித்துப் பார்த்தால், பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேற வேண்டும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, நல்ல சட்டம்&ஒழுங்கு – இதெல்லாம் தான் இந்த சுழலில் இருந்து மெதுவாக அவர்களை மீட்கும். இவற்றை சாதிக்க நம்மை காபந்து செய்துகொள்ள வலுவான இராணுவம் வேண்டும்.
இந்தியர்களிடம் எல்லாம் இருந்தது, நல்ல வியாபார வர்க்கம் இருந்தது, நல்ல கலைஞர்கள், தொழில்நுட்பம் இருந்தது, நல்ல சிந்தனையாளர்கள் இருந்தார்கள். ஆனால், எங்கு தோற்றோம் என்றால் இராணுவ ரீதியாக நம்மை பலப்படுத்திக் கொள்ளவில்லை, மற்றவர்களின் சூழ்ச்சிகளை திட்டங்களை உளவியலை சித்தாந்தங்களைப் புரிந்து கொள்ளவில்லை. இராணுவ தொழில்நுட்பங்களை பெற்று நமது போர்த்தளவாடங்களை அபிவிருத்தி செய்து கொள்ளவில்லை. கோரி முகம்மதை மன்னித்த பிருதிவிராஜனிலிருந்து பிரச்சினை தொடங்கியது. மற்றவர்கள் துப்பாக்கியும், வெடிமருந்தும், குதிரையணிகளும் வைத்திருக்க நம்மவர்கள் மண்கோட்டையும், வாள்களும், செருப்பில்லா வீரர்களோடும் போரிட்டு குறைந்த எண்ணிக்கையில்- நவீன தொழில்நுட்பங்களுடன் வந்த துருக்கியரிடம், முகலாயர்களிடம், பரங்கியரிடம் தோற்றனர். இந்தத் தோல்வியால் ஈரான் வாழ்ந்தது – கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தால், வருடக்கணக்கில் வரி விலக்கு அங்கு வாழ்ந்த மக்களுக்கு அளிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் வாழ்ந்தது – விண்ணளாவிய கட்டிடங்கள் இந்தியர்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் கட்டப்பட்டன, இங்கிலாந்து வாழ்ந்தது – கொண்டுபோன செல்வங்களால் கோமான்களானவர்கள் குறித்து அங்குள்ளவர்கள் குமுறும் அளவிற்கு பிரச்சினையின் தீவிரம் இருந்தது.
ஆனால், இங்கே வறுமையும், வெறுமையும், பஞ்சங்களும் தாண்டமாடின. கும்பல் கும்பல்களாக இறந்தனர் மக்கள், கால்நடைகளைப் போன்று மற்ற நாடுகளுக்கு அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர், காலணியாதிக்கத்தின் கடைசி காலங்களில் கூட மற்ற நாடுகளின் தோட்டங்களில் வேலை செய்ய விலை பேசப்பட்டனர். அந்தக் கொடுமைகள் மீண்டும் நிறைவேற்றப்படாமலிருக்க, நமது சரித்திரத்திலிருந்து பாடங்களைக் கற்கவேண்டும். அதுவே சுதந்திர தினத்தில் நாம் நினைவிற் கொள்ள வேண்டிய பாடம். இராணுவ பலம் வெறும் முஷ்டி தட்டும் விவகாரமல்ல, நமது வளங்களை காக்கும் அரண் – நமது சந்ததிகள் சுதந்திர புருடர்களாக, வறுமையில் தள்ளப்படாமல், வன்முறைக்கு ஆளாகாமல் , தலைநிமிர்ந்து வாழ வழிவகை செய்ய உதவும் அத்தியாவசியத் தேவைகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இங்கே இன்னொன்றையும் நான் சொல்லியாக வேண்டும். அதிகாரப்பரவல், பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது, மனித உரிமை மீறல்களைத் தடுப்பது போன்றவை நமது நாட்டின் ஆரோக்கியத்துக்கு, வளத்துக்கு, வலிமைக்கு இன்றியமையாதவை – நல்ல இராணுவம் போல. இரண்டும் நடைபோட வேண்டும், சரி சமமாக.

***
சின்னக்கருப்பன் மிகவும் ‘பெருந்தன்மையோடு’, ‘உயர்ந்த நிலையில்’ இருந்து எழுதியிருந்த கட்டுரையைப் படித்தபோது கோபம்தான் வந்தது. “பிருத்திவிராஜ் சவுகான் கோரி முகம்மதிடம் பெருந்தன்மையோடு நடந்து கொண்டது நினைவுக்கு வருகிறது” என்றேன் அவரிடம் பேசும்போது.
நல்ல மனிதர், நல்ல சிந்தனை – ஆனால், எங்கே – யாருக்கு உபதேசிக்க வேண்டும் என்ற விவரம்தான் தெரியவில்லை. அரக்கனாக இருந்தாலும் நீதியுணர்வு கொண்டவன் இராவணன். யுத்த தர்மங்களை பின்பற்றியவன். சீதையைக் கவர்ந்து வந்தாலும் பாலியல் பலாத்காரம் செய்யாமல் மரியாதையுடன் நடத்தியவன். அவனிடம் யுத்த தர்மத்தைப் பின்பற்றி இராமன் நடந்து கொண்டது சரியே. ஆனால், கோரி-கஜினி-சிமி-லஷ்கர்-அல் உம்மா-அல் கொய்தா எந்த யுத்த தர்மத்தைப் பின்பற்றினார்கள், பின்பற்றுகிறார்கள்? கா·பிர்களின் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது அல்லாஹ்வின் பார்வையில் சரியானது, குழந்தைகளும் அவர்களைச் சார்ந்தவர்களே(எதிரிகள்), கா·பிர்களைக் கொள்ளையடிப்பது கடவுளின் பார்வையில் சரியானது என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் முகமது – அவருக்கு ஏற்பட்ட அன்மீக அனுபவங்களின் அடிப்படையில் – என முழுவதுமாக நம்புகின்றனர் இவர்கள். இவர்களிடம் பெருந்தன்மை காட்டுவதுதான் தர்மம், அதுதான் உயர்ந்த இந்து தர்மம் என்றால், எனக்கு அப்படி இன அழிக்கு என்னை இட்டுச் செல்லும் தர்மமும், மதமும், இராமனும், கிருஷ்ணனும், சாத்திரங்களும், புராணங்களும், போதனைகளும் வேண்டாம். காடனையும் மாடனையும் வணங்கி நியாயமென்று பட்டதைச் செய்யும், பேசும், எழுதும் தாழ்ந்தவனாகவே நான் இருந்து விட்டுப் போகின்றேன்.
மனித சரித்திரத்தில் உயர்ந்த குலங்களெல்லாம் அழிந்து போவது, எதோ விதிவசத்தால் ஏற்பட்டது அல்ல என்பது சி.க அவர்களின் கட்டுரையைப் படித்தபோது தோன்றியது.
***
சீரியஸான விஷயங்களை விட்டு விட்டு கொஞ்சம் கலாய்ப்பான விஷயங்களுக்கு வருவோம். காலாய்ப்பான விஷயம் என்றவுடனேயே நினைவுக்கு வருகிறார் சாரு நிவேதிதா. குமுதத்தைப் புரட்டினால் “சட்டையைக் கழட்டிய செரீன்” பற்றிய அவரது கோணல் குறிப்பு வருகிறது. விஷயம் இதுதான், அவரது நண்பர் ஒருவருக்கு மூன்று பெண்களுடன் சிநேகிதம்(மூன்றில் ஒன்று – அப்பெண் மின்மடல் மூலம் தோழியானவளாம்). சென்னையில் டிஸ்கோத்தே ஒன்றிற்கு செல்கிறார்கள்(அங்கு சென்றோம், அனுமதியில்லை, இங்கு சென்றோம் அனுமதியில்லை என்று சென்னையில் இருக்கும் டிஸ்கோத்தேக்களின் லிஸ்ட் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இனிமேல் அடிக்கடி இந்தப்பெயர்களெல்லாம் வரும் என்கிற உபதேசம் வேறு). அங்கு அவரும் செரீனும் நடனத்தளத்தின் கீழே டைடானிக் ரேஞ்சுக்கு ஆடிய ஆட்டத்தில் தான் செரீன் மேல் சட்டையைக் கழட்டி வீசினாராம்(இது நிகழ்ந்த போது டைடானிக் படம் ரிலீஸ் ஆகியிருந்ததாம்).
ஆகா, லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களையெல்லாம் விஞ்சும் ரேஞ்சுக்கு நாகூர் எழுத்தாளர்கள் போய்க்கொண்டிருப்பது, சக தமிழன் என்கிற முறையில் பாலை நிலத்தில் வாழும் நமது மனதில் இலக்கியப் பாலை வார்க்கிறது. ஆனால், இதில் என்ன பிரச்சினை என்றால் கடந்த வாரமலரில் அந்து(மணி)யும் ஒரு சம்பவம் எழுதியுள்ளார். அதிலும் வருகிறார் இதே நண்பர்( கனெக் ஷன்கள் மூலம் கோடி கோடியாய் சம்பாதிப்பவர்), ஒரு க·பேயில் பெண் ஒருத்தியைச் சந்திக்கிறார். “எல்லாம் முடிந்து விட்டது, முக்கிய விஷயத்தைத் தவிர” என்றெழுதி அங்கலாய்க்கிறார் அந்துமணி, சீரழிந்து வரும் இந்தியக்கலாச்சாரத்தைப் பற்றிய கவலையுடன். இதில் நண்பருடன் காரில் அமர்ந்திருந்த அந்தப் பெண் எவ்வளவு அழகாயிருந்தார் என்ற வர்ணனை வேறு.
கொஞ்சம் சிந்திக்கும் எவருக்கும், சாரு கேட்ட அல்லது பார்த்த, சாருவுக்கும் மணிக்குமான பொது நண்பரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் லத்தீன் அமெரிக்க இலக்கிய வர்ணத்தோடு சாருவின் மனதில் எழுந்து அது கோணல் பக்கங்களிலும் இடம்பிடித்துள்ளது என்றே தோன்றும். உண்மையில் ஆடிக்கூட இருக்கலாம், உண்மைக்கும் பொய்மைக்கும் கனவுக்கும் கற்பனைக்குமான இடைவெளி என்பது ஒரு எழுத்தாளனின் மனவெளியில் இருக்க வாய்ப்பில்லை என்பதால். இப்படி ஒரு சிறந்த கனவாளியை, நவீன தமிழிலக்கியவாதியை விட்டுவிட்டால் தமிழிலக்கிய உலகில் என்னவிருக்கும்? பாணனிலாத பண்டிதர்கள் நிறைந்த பண்டைய தமிழிலக்கிய உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படிப்பட்ட சமஸ்கிருத இலக்கிய உலகம் என்னவாயிற்று?
இதனால் தான் சொன்னேன், கலகமும் – குதூகலமும் – பாதை மாறி யோசிப்பதும் எழுதுவதும் இலக்கியத் தேரின் முக்கிய அங்கமே , அதை இட்டுச் செல்வது என்று. அதற்கு என்னென்னவோ எழுதியிருக்கிறார் தாஜ். இதில், நான் திடீரென்று திசை திரும்பியதற்குப் பின்னே இருக்கும் ரகசியத்தைப் பற்றிய கண்டுபிடிப்பு வேறு. அய்யன்மீர், சின்னக்கருப்பனைக் கூடத்தான் கடுமையாக விமர்சிக்கிறேன், அதனால் அவர் மீது எனக்கு வெறுப்பிருக்கிறது என்றர்த்தமா என்ன? விமர்சனம் வேறு, வெறுப்பு வேறு. இஸ்லாம், இஸ்லாமியர்கள் குறித்து எனக்கு விமர்சனம் உண்டு, வெறுப்பு கிடையாது. ஒரு கோட்பாட்டை விமர்சிக்கிறோம், ஒரு கோட்பாட்டை பின்பற்றி செயல்படுபவர்கள் என்கிற முறையில் குழுக்களடங்கிய ஒரு குழுவை விமர்சிக்கிறோம். ஆனால், அதற்காக அக்குழுக்களில் இருப்பவர்கள் மீது வெறுப்பு என்று அர்த்தம் செய்துகொண்டால், விமர்சனம் என்கிற நாகரிக சமுதாயத்தின் முக்கியப் படிக்கட்டையே எட்டாத காட்டுமிராண்டிகளாகத்தான் நாம் இருக்கிறோம் என்றர்த்தம். மற்றபடி தாஜ் அவர்கள் எனது எழுத்துக்களைப் பற்றி, கருத்துக்களைப் பற்றி உயர்வாக எழுதியிருப்பது, எனது எழுத்துக்களைத் தொடர்ந்து படித்திருப்பது குறித்தெல்லாம் எனக்கு ஆச்சர்யமும், ஆச்சர்யம் கலந்த மனமகிழ்வும் ஏற்படுகின்றன – என்னை நண்பர் என்று விளித்து எழுதியிருக்கும் பதிவுகள் ஆசிரியர் கிரிதரனின் கடிதம் உட்பட. ஆபிதீனின் கருத்துக்கள் அதே ஊரில் இஸ்லாமிய சமூகத்தைப் பிறப்பிலிருந்து அருகாமையில் பார்த்து வந்த சாருவால் உள்வாங்கப்பட்டு, மெருகேற்றப்பட்டு புத்தகமாக வந்ததா, அல்லது அது அப்படியே எழுத்தாளர் பெயரை மட்டும் அடித்து மாற்றப்பட்டு பணத்தேவைக்காக அனுப்பப்பட்டு வெளிவந்ததா என்பதையெல்லாம் பற்றி சம்பந்தப்பட்ட சாரு மனம் திறந்து பேசினால் தான் முடிவு கிட்டும். அல்லது ஆபிதீன் சட்டத்தின் துணையை நாடவேண்டும். இது இரண்டும் நிகழாதவரையில், இஸ்லாமியர்களெல்லாம் கூட்டுச் சேர்ந்து சாருவைத் தூற்றுவது, உள்ளாடை முதற்கொண்டு எங்களிடமிருந்து தான் இரவல் வாங்கிப் பயன்படுத்தினார், குடும்ப வறுமை காரணமாக நாகூர் பக்கவே தலைவைத்துப் படுக்காமல் இருந்தார், குருவி சுடப்போனதை வேட்டைக்கு போனோம் என்று எழுதுகிறான், தலித்துக்கு முஸ்லிம் மீது பாசமா என்றெல்லாம் இழிவுபடுத்தி எழுதுவது, இந்தப் பிரச்சினையை தீர்க்காது – இவ்வளவு தூற்றல்களுக்கு நடுவிலும் முன்னாள் நண்பனுக்கெதிராக பேச மறுக்கும் சாருவின் மீது மரியாதையைத்தான் ஏற்படுத்துகிறது.

***
– நேச குமார் –

Series Navigation

நேச குமார்

நேச குமார்