இட ஒதுக்கீடு

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

மதிமாறன்



ஒருவருக்குத் தெரியாத மொழியில் அவர் எதிரில் பேசுவது, அவரை அவமானப்படுத்துவது மாதிரி. இப்படி ஒரு முதல்வரை அவமானப்படுத்த நினைத்து, மூக்குடைபட்ட ஆதிக்க சாதியினரின் கதை இது.

மதுரையில் 80 ஆண்டுகளுக்கு முன்பு, சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் (பி.ராமராய நிங்கர்) மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிராமணர் அல்லாதார் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர். சமஸ்கிருத மாநாட்டுக்கு அவரை அழைத்த உயர் சாதியினர், திட்டமிட்டு தமிழில் பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.

முதல்வருக்கு சமஸ்கிருதம் தெரியாதே என்ற எண்ணத்தில், பனகல் அரசரைப் பற்றி கேலியும் கிண்டலுமாக சமஸ்கிருத சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. எல்லோரும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். ஆனாலும் அமைதியாக அமர்ந்திருக்கிறார் பனகல் அரசர்.

நிறைவாக ‘இப்போது முதல்வர் பேசுவார்’ என்று அறிவிக்கப்படுகிறது. பனகல் அரசர் தனது பேச்சை ஆரம்பிக்கிறார். தமிழில் அல்ல…. தெளிவான சமஸ்கிருதத்தில்! அது வரை பேசியவர்களைவிடச் சிறப்பாக, அவர்களுக்குப் பதில் சொல்வது போல் இலக்கியத் தரம் வாய்ந்த சொற்பொழிவை சமஸ்கிருதத்தில் ஆற்றி முடிக்கிறார். முதல்வரை அவமானப்படுத்த நினைத்தவர்கள் அவமானப்பட்டுப் போகிறார்கள். பனகல் அரசர் சமஸ்கிருதத்தில் பட்டப் படிப்பு முடித்தவர் என்ற தகவல் அவர்களுக்குத் தெரியாது.

அந்த மாநாடு முடிந்த சில நாட்களில் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கிறார் முதல்வர். அதுவரை மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் பாடமாக இருந்த சமஸ்கிருதத்தை நீக்கும் உத்தரவு அது.

‘ஆங்கிலத்தில் படிக்கப் போகும் மருத்துவக் கல்விக்கும் சமஸ்கிருதத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்ற கேள்வி முதல்வருக்கும் எழுந்திருக்கிறது. ‘சமஸ்கிருதம் தெரிந்தவர்கள்- பட்டவர்த்தனமாகச் சொன்னால் பிராமணர்கள் மட்டும்தான் மருத்துவக் கல்வி படிக்க வேண்டும். மற்றவர்கள் படிக்கக் கூடாது’ என்ற உணர்வே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தார் முதல்வர். அதனால் சமஸ்கிருதத்தை நுழைவுத் தேர்வில் இருந்து நீக்குகிறார்.

முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு வருகிறது. மருத்துவக் கல்வியில் தகுதி, திறமை போய்விடும் என்கிற கூப்பாடு எழுகிறது. அதைப் புறம் தள்ளுகிறார் முதல்வர். அதன் பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று நிறைய பேர் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள். இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட ஊர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது சென்னை. வெளி நாட்டினர்கூட இங்கு வந்து இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு போகும் நிலைமை உருவாகியிருக்கிறது. 80 ஆண்டுகளுக்கு முன் பனகல் அரசர் போட்ட உத்தரவு, செரியன், சாலமன் விக்டர் போன்ற உலகப் புகழ்பெற்ற டாக்டர்கள் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது என்றால் அது அதிகபட்சமான வார்த்தையாகாது.

இன்று உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தவுடன், 80 ஆண்டுகளுக்கு முன் சமஸ்கிருத மாநாடு நடத்தியவர்களின் பேரன்கள், துள்ளிக் குதிக்கிறார்கள், ‘ஐயோ! தகுதி,திறமை போய்விடும். மனிதாபிமானம் போய்விடும்’ என்கிறார்கள்.

தேர்வில் 90 சதவிகிதம் எடுத்தால் அது தகுதி, 87 சதவிகிதம் எடுத்தால் தகுதியில்லை என்று அர்த்தமா? ஆம். இட ஒதுக்கீடு என்பது இந்த மாதிரி சின்ன வித்தியாசம் மட்டுமே. இதைத்தான் தகுதிக் குறைவு என்கிறார்கள். சரி. தகுதி,திறமை அடிப்படையில் வந்த இவர்களின் மனிதாபிமானம் எப்படி இருக்கிறது?

உயிருக்குப் போராடிய நிலையில் ஒரு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள். இந்த தகுதி,திறமை நிறைந்த மனிதாபிமான மருத்துவர்கள், ‘சிகிச்சை அளிக்க முடியாது. நாங்கள் போராட்டத்தில் இருக்கிறோம். இட ஒதுக்கீட்டை வாபஸ் பெறச் சொல்லுங்கள்’ என்று புறக்கணிக்கிறார்கள்.

ஒரு பாவமும் அறியாத ஒரு குழந்தையின் உயிரைப் பறிக்கக் காத்திருக்கும் இவர்கள்தான் சொல்லுகிறார்கள், ‘இட ஒதுக்கீடு வந்தால் மனிதாபிமானம் போய்விடும்’ என்று!

இந்தியாவுக்கு இட ஒதுக்கீடு புதியதல்ல. அது 2 ஆயிரம் ஆண்டு காலமாக நடைமுறையில் இருப்பதுதான். மனுதர்ம சாத்திரத்தில் வகைப்படுத்திச் சொல்கிற இட ஒதுக்கீடு, மன்னர் ஆட்சிக் காலத்தில், ‘அரசின் அனைத்துத் திட்டங்களும் பிராமணர்களையே போய்ச் சேர வேண்டும். அதன் பிறகே அடுத்தவர்களுக்கு’ என்று வகைப்படுத்தினார் மனு. அவர் வரிசைப்படுத்திய சமூக அமைப்பு இதுதான். முதலில் பிராமணர்.பிறகு சத்திரியர். அடுத்து வைசியர். அதன் பிறகு சூத்திரர். அதற்கும் கடைசியாக பஞ்சமர் என்று சொல்லப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்கள். இதுவே மனுவின் இட ஒதுக்கீடு.

அரசின் சலுகைகள், முதலில் பஞ்சமர் என்று மனு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிறகு சூத்திரர் என்று சொல்லப்படுகிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கடைசியாக பிராமணர்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்று இதை நீதிக் கட்சிக்காரர்கள் 80 ஆண்டுகளுக்கு முன் திருப்பிப் போட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்று கோரிக்கையை எழுப்பும்போதெல்லாம், ‘அப்போது எங்களுக்கு?’ என்ற கேள்வியை உயர்சாதிக் காரர்கள் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

மனுவின் இட ஒதுக்கீடு அமலில் இருந்தது 2 ஆயிரம் ஆண்டுகள். மாற்று இட ஒதுக்கீட்டின் காலம் ஒரு நூற்றாண்டுகூட இல்லை. 2 ஆயிரம் ஆண்டு காலம் இவர்களைத் தூக்கிச் சுமந்தவர்கள் கொஞ்சம் மேலே எழுந்து வர முயற்சிக்கும்போது, இவர்கள் காட்டும் எதிர்ப்பு, ‘ஐயோ, கீழே இறக்கி விடாதே. எனக்குக் கால் வலிக்கும்’ என்பது போல் இருக்கிறது.

இவர்களில் பரிதாபத்துக்கு உரியவர்கள் யார்? பல்லக்கை சுமந்து வந்தவர்களா அல்லது, அதில் உட்கார்ந்து வந்தவர்களா?

************************************************
kavinmathimaran@yahoo.co

Series Navigation

மதிமாறன்

மதிமாறன்