ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

ஆசாரகீனன்


காலனியக் கடப்புக்குப் பிறகு வளர்ந்தவராக வாழ்வில் நுழைந்த தலைமுறையில் ஒரு சிறு கூட்டம், தமது பண்பாட்டை அறவே மோசமானது என்று விலக்கி, மேலை நாடுகளுக்குச் சென்று, அங்கு தம் நாட்டைப் பற்றிய தமது கடும் விமர்சனத்தை இன்னமும் தீவிரமாக்கிக் கொண்டு, மேலை நாட்டில் ‘நல்ல வாழ்விற்கு ‘த் தாம் விடைகளாகப் பெற்றவற்றை அவற்றின் பொருத்தம் பார்க்காமல், அவை எழுந்த விதத்தைப் பற்றி விமர்சனம் மேற்கொள்ளாமல் – அதாவது தமது பண்பாடு, தமது ‘நாடு ‘ ஆகியவற்றுக்குத் தாம் வந்து சேர்ந்த நாட்டுக்குக் கொடுக்கும் மரியாதை, ஒத்துழைப்பு, இருக்கும் ஒழுங்கு குறித்த அமைதி காத்தல் ஆகிய ‘நன்னடத்தையை ‘ச் சிறிதும் தராமல் – தம் நாட்டுக்கு இறக்குமதி செய்து காலனியத்தை இன்னமும் தொடர வகை செய்கின்றனர் என்று பார்த்தோம். வெளி நாட்டு வாசகர்களில் பலருக்கும் இது எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம் என்று தோன்றியதால் ஒரு விளக்கம் தருகிறேன்.

இப்படி கடும் விமர்சகராக மேலை நாடுகளில் உலவுபவர்கள் பலரும் சமூகவியல் துறைகளில் ஆய்வாளரே. அதில் பலர் வரலாறு, அதிலும் தற்கால இந்திய வரலாற்றிலேயே வல்லுநர்கள். மிகச் சிலரே பண்டை இந்தியாவைப் பற்றி ஆய்பவர்கள். இவர்களுக்கெல்லாம் தெரியாத இந்தியப் பண்பாடு அல்லது சமூக அமைப்பின் குணாம்சங்கள், அல்லது வரலாற்றின் வண்டல் படிவுகள் உனக்கென்ன தெரியும் என்று சாதாரணப் பார்வையாளர்கள் கேட்கக் கூடும். ரொமிலா தாபர், தீபேஷ் சக்ரவர்த்தி, சுமித் சர்க்கார், இர்ஃபான் ஹபீப், ஞான் ப்ரகாஷ், காயத்ரி சக்ரவர்த்தி, ஆயிஷா ஜலால், சுப்ராதா மித்ரா, சுகாதா போஸ், சுதிப்த கவிராஜ், முஷிருல் ஹாசன், அய்ஜஸ் அகமது, அஷிஸ் நந்தி, இத்தியாதி போன்றவர்களை விடக் கூடுதலாக இந்தியப் பண்பாட்டைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்றும் கேள்வி எழலாம். அனேகமாக இவர்களில் எவருமே இந்தியாவின் பண்டைப் பண்பாட்டை உயர்வாகக் கருதுவதில்லை. மாறாக அது குறித்து கண்டனங்கள்தான் தெரிவிக்கின்றனர் என்னும் போது இவன் என்ன இந்தியப் பண்பாட்டைத் தீரப் புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று எழுதுவது என்றும் கேட்கலாம்.

பிறருடைய ஆய்வுப் பாங்கை விட, அவரது அடையாளத்தை அதிக எடை உள்ளதாகக் கருதும் மன உளைச்சல்பட்ட மனிதருக்கு எந்த விளக்கமும் அதிகம் உதவாது. அப்படிப்பட்ட அரசியல் பார்வைதான் இன்று இந்தியக் கருத்துலகில் மிக ஆழமாகப் பரவி உள்ளது. மோதலும், அதிகாரப் பறிப்புக்கான அவசரமும் நிறைந்த களம் இன்றைய இந்தியா. உலக மயமாதலும், நுகர்வுப் பண்பாடும், முதல் குவிப்புக்கான புதுமையான, காலம் அதிகம் தேவைப்படாத சுருக்குவழியும் சாமர்த்தியமுமே அதிகம் உதவக் கூடிய சந்தை-முதலாளியமும் இந்தியச் சூழலை காலனியத்திலிருந்து விடுபட்ட காலத்தை விட நெருக்கடிகள் அதிகமான காலமாக ஆக்கியுள்ளன என்பதால் அதிகாரத்துக்கும் முதல் குவிப்புக்கும் உடனடித் தொடர்பு இருப்பது அனேக மக்கள் குழுக்களுக்கும் தெரிந்துள்ளதால், இந்த அவசரம். இதில் மற்றவரின் போட்டியை எந்தக் கருவி கையில் கிட்டினாலும் அதைப் பயன்படுத்தி அவர்களைக் களத்திலிருந்து ஒழித்துக் கட்டும் முறைகள் மிகவும் எளிதாகத் தெரிகின்றன. இதில் அடையாள அரசியல் இன்று ஓர் அவசியமான, குறி தவறாத போர்க் கருவியாகிச் சில பத்தாண்டுகள் ஆகி விட்டன. ஆயுதத்தின் கருக்கும், தாக்கமும், வீரியமும் குறையவில்லை. மாறாகக் கூடுதலாகி இருக்கிறது. தேக்கமுற்ற பொருளாதாரம், வசதிகளின் மீது அரசின் பயனற்ற ஆனால் குரங்குத் தனமான பிடிப்பு, கூடுதலாகிப் போன மக்கள் கூட்டம் இவையும் சேர ஆயுதப் பிரயோகத்திற்கு எந்த அறநெறியும் தேவை இல்லை, எந்த முறைமையும் தேவை இல்லை என்பது நியதியாகி உள்ளது.

ஆனால் அடையாள அரசியலை அறப் போராட்டமாக மட்டுமே சித்தரிப்பது இடதுசாரியின் பார்வை. அப்படிப்பட்ட சித்தரிப்பால்தான் மக்களை அந்த வகை அரசியலுக்கு திரட்ட முடியும். போராட்டம் முடிந்து ஒரு சில சமூகக் குழுக்களை போட்டியில் இருந்து நிரந்தரமாக நீக்கியதும் மக்களுக்கு அந்த வசதிகள் மீது கூடுதலான வாய்ப்பு கிட்டுமா என்றால் அப்படி ஒரு தோற்றம் நிச்சயம் கிட்டும். ஆனால் இறுதியில் வாய்ப்புகள் முன்போலவே தூரத்தில் தான் இருக்கும். அதை யாரும் தெளிவாக்க மாட்டார்கள். வலதுசாரியின் பார்வையில் அடையாள அரசியலே மொத்தமாக ஒரு பெரும் அதர்மப் போர் என்பது போன்ற வாதம் இருக்கும். பொதுவாக அதிகாரத்தில் இருக்கும் வலதுசாரியினர் பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியாத புகை மூட்டமான சொற்குவியலுக்குள் ஒளிந்து கொண்டு தமது அடையாள அரசியலை மரபு, வழக்கம், புழக்கத்தில் இருக்கும் நெறிகள், முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நியாயப்படுத்திக் கொண்டு நடத்துவர். காட்டு: சங்கர மடங்களுக்கு பார்ப்பனர்தாம் தலைமை வகிப்பர், சைவ மடங்களுக்கு குறிப்பிட்ட சாதியார் – பிள்ளைமாரோ, அல்லது இதர வேளாளரோதான் தலைமை வகிப்பர். பள்ளி வாசல்களில் ஆண்கள்தான் தொழுகைத் தலைமை வகிப்பர். கத்தோலிக்கச் சர்ச்சுகளில் தலைமை ஆண்களிடம்தான் இருக்கும். கோவில்களில் பார்ப்பனர் அல்லது சைவ குருக்கள் அல்லது குறிப்பிட்ட குடும்பங்களில் இருந்துதான் பூசாரிகள் அல்லது பூசை செய்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அது தவிர அரசு வேலைகள், வங்கி வேலைகள் என்று பல இடங்களிலும் ஏற்கனவே உள்ளே இருக்கும் சமூகக் குழுக்கள்தாம் மறுபடி மறுபடி வாய்ப்புகளை அடுத்த தலைமுறைகளுக்கு கை மாற்றித் தருவர். இவை எல்லாமே அடையாள அரசியல்தான். ஆனால் அப்படி அவை அறியப்படாதவை. இது வலதுசாரிக்கு ஓர் ஆதாயம், இயல்பான பாதுகாப்பு.

ஆக அடையாளங்களை மட்டுமே கருதி, கருத்தாக்கங்களை அவற்றின் கட்டுமான நியதிகள், தர்க்க வலு ஆகியவற்றைக் கருதாமல் ஒதுக்கும் பண்பு இன்று இந்தியாவில் ஓங்கியதற்கு ஒரு காரணம், இடதின் குரல் கருத்துலகில் ஓங்கி இருப்பதுதான்.

அடையாளமும் கருத்தியலும் கலந்த ஒரு இடைவெட்டில் மேற்சொன்ன ஆய்வாளர்கள் இருப்பதால் அதை ஒட்டிய சில வாதங்களை முன் வைக்கிறேன். இவர்களுக்குப் பிடித்தமான அடையாள அரசியல் வாதங்களை முன் வைத்தால் என்ன ஆகிறது என்று பார்ப்போம். சுருக்கமாகச் சொன்னால், இவர்களில் பெரும்பான்மை இடதுசாரியினர் அல்லது மார்க்சியர். குறைந்த பட்சம் இந்து மதத்தைத் தமது மதமாகக் கருதுபவர் எவரும் இந்தப் பிரபலமான சிந்தனையாளர்களில் இல்லை. மாறாகக் கிருஸ்தவம் அல்லது இஸ்லாம் ஆகிய மதங்களைத் தமது மதமாகக் கருதுபவர்கள் இதில் உண்டு. இந்திய அரசியல் எப்படி இருக்கிறதென்றால், இந்துவாக ஒருவர் இருந்து கொண்டு நடு நிலைமை வகிப்பவராகக் கருதப்படவே முடியாது. இந்து மதத்தைக் கண்டனம் செய்யாத இந்துவை நடு நிலைமையாளராக யாரும் கருத மாட்டார்கள். அதற்கு மேல் போய் இந்துக்களைத் தொடர்ந்து கண்டித்தால்தான் மதச் சார்பின்மை உள்ளவர் எனக் கருதப்படுவர். ஒரு கிருஸ்தவர் அல்லது முஸ்லிம் எதுவும் அதிகமாகச் செய்ய வேண்டாம். மற்றவர்களை மதச் சார்பின்றி இருக்கும் படித் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் போதும் அவர் நடு நிலையாளர் மட்டுமல்ல, மத நல்லிணக்கத்துக்குப் பாடுபடுபவர் என்று வேறு பெயர் வாங்கி விடுவார். தனிப்பட்ட அளவில் அவர் இந்து மதத்தையும் இந்தியப் பண்பாட்டையும், இந்துத் தத்துவம் அல்லது இந்தியத் தத்துவம் ஆகியவற்றையும் கடுமையாகச் சாடிக் கொண்டிருக்கலாம், அதாவது தமது மதத்தில் உள்ளவரிடையே அவர் எந்தக் கருத்தையும் பரப்பலாம். ஆனால், பொது அரங்கில் மத நல்லிணக்கம் கோருவதாகச் சொல்லி விட்டால் போதும் எல்லாரும் புளகாங்கிதம் அடைந்து விடுவார்கள். மாறாக ஒரு சிவமடாதிபதியோ, அல்லது மேல் சாதியின் குருமார்களோ, மடாதிபதிகளோ நல்லிணக்கம் தமக்கும் பிடித்தமானது என்று சொன்னால் மட்டும் போதாது, மற்ற மதத்தினரைப் பற்றியோ, அல்லது மற்ற மதங்களைப் பற்றியோ தவறியும் எந்தக் குறையும் சொல்லி விடக் கூடாது. உடனேயே அவரை வெறியர் என்றும், மதச் சகிப்பின்மை இல்லாதவர் என்றும் பிறகு அவருடைய குலம், குடும்பம், மேலும் வரலாற்றில் என்னென்ன குறைகள் உண்டு என்றும் தேடிப் பிடித்து ஏசித் தள்ளி விடுவார்கள்.

இது மாத்திரம் இல்லை. இந்தியாவில் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்றாலும் இந்து மதம் தன்னுடையது என்று சொல்லும் எவரும் வரலாற்றாசிரியராகவோ, சமூக அறிவியல் துறைகளிலோ பிரகாசிக்க முடியாத சூழல் இந்தியாவில் இருக்கிறது. அப்படி யாரும் இருந்தால் அவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் ஒரு நூறு விமர்சகர்களுக்கு இந்து மதம் ஏன் குப்பை இல்லை என்று நிரூபிக்க வேண்டி வரும். இந்து மதம், தத்துவம், பண்பாடு ஆகியனவற்றை எவரும் – கிருஸ்தவர், முஸ்லிம், மார்க்சியர், ஃபார்சி, பெளத்தர், ஜைனர், மேலும் எந்த நாட்டினரும் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கடுமையாகத் தாக்கலாம். அவர்களுக்கு இந்து மதத்தில் ஒரு துளி கூடத் தெரிந்து இருக்கத் தேவை இல்லை. இந்திய மொழியே எதுவும் தெரியாதவர்கள் கூட இந்துக் கடவுள்கள், இந்துப் பழக்க வழக்கங்கள், இந்துப் பண்பாடு ஆகியவற்றில் ஏதாவது ஓர் அம்சத்தை எடுத்துக் கொண்டு அதுதான் 3000 வருடங்களாக இந்தியாவில் மக்களை நசுக்கியது என்று தைரியமாக எழுதலாம். அது உண்மை இல்லை, கொடுக்கப்பட்ட தகவல்கள் முழுவதும் சோடிப்பு என்று சொல்லுமளவு கூட இந்திய வரலாறு, பண்பாடு, பண்டைய மொழிகள், மதத்தின் முக்கிய நூல்கள் ஆகியவற்றில் பெரும்பாலான மக்களுக்கோ அல்லது கல்லூரிப் படிப்பு முடித்தவர்களுக்கோ அல்லது பொறியியல், தொழில் நுட்பம், மேலாட்சித் துறை, பொருளாதாரம், அறிவியல் இத்தியாதி துறைகளில் முனைவர் பட்டம் வாங்கியவர்களுக்குக் கூட எதுவும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடிய கருத்துகள் மேற்படி விமர்சகர்கள் எழுதிய பல புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டு எளிமைப் படுத்தப்பட்ட விமர்சனப் பார்வைகள் அல்லது அவர்களே மறுபடி மறுபடி ஆங்கிலப் பத்திரிகைகளில் உள் நாட்டுப் பண்பாட்டைக் கிழித்து எழுதும் விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றில் இருந்துதான் கிட்டும். இவற்றைக் கற்ற மக்களுக்கு அனேகமாகத் தம் நாட்டைப் பற்றிய ஆக்கபூர்வமான தகவல்கள் எதுவும் தெரியாது. ஆனால் இந்தியப் பண்பாடு என்று உள்ளீடு அற்ற பெருமையை மட்டும் ஒரு போலியான தேசிய உணர்வுடன் தம்முள் வளர்த்து வைத்து இருக்க வாய்ப்பு உள்ளது.

இவர்களை வெளி நாட்டு அரங்குகளில் பார்க்க நேர்ந்தால் சில நேரம் மிகவும் பரிதாபமாக உள்ளது – இவர்களைச் சொல்லவில்லை. இவர்களுக்குத் தமது அறியாமை ஒரு பெருமையான அத்தாட்சிப் பத்திரமாயிற்றே. பரிதாபப்பட்டு என்ன பயன் ? இவர்களைக் குடிமக்கள் என்று வளர்த்து அன்னிய தேசங்களுக்கு அனுப்பும் ஒரு நாட்டை நினைத்தால் பரிதாபமாக இல்லாமல் வேறெப்படி இருக்கும் ? இப்படிச் சொல்வதற்கு எதிர் வினையாகச் சிலர் கேட்பர் – இந்து சமூகம் என்று ஒன்று இருக்கிறதா, எந்த உலகத்தில் இருக்கிறாய் நீ ? என்று. சாதிகளால் உடைபட்ட ஒரு நாட்டில் ஒரு மதத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது வெறும் கற்பிதம் என்று நிறுவத் தயாராக ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது. இந்தப் பட்டாளத்தைத் தான் காலனியச் சிந்தனையின் காலாட் படையினர் என்று முன்பு சொன்னேன்.

காட்டாக, நான் ஆசியச் சிந்தனை முறைக்கும் மேலைச் சிந்தனை முறைக்கும் உளவியல் ரீதியாக என்ன மாறுபாடுகள் உள்ளன என்று விளக்கிய ஒரு அமெரிக்க உளவியல் பேராசிரியரின் பேச்சைக் கேட்கப் போய் இருந்தேன். அதன் முடிவில் ஒரு கேள்வி வந்தது. பெளத்தம் முன்பு இருந்த நாடுகளில் கம்யூனிசம் ஏன் அதிகம் பரவியது, இஸ்லாம் இருந்த நாடுகளில் அதற்குச் சிறிதும் ஏன் மவுசு இல்லை என்று ஒரு கேள்வி. இதற்குப் பேச்சாளர் சிறிது தயங்கிப் பதில் சொன்னார் – அத்தகைய அரசியல் கேள்விகளைத் தான் ஆராயவில்லை என்று சொன்னார். கூட்டம் முடிந்த பின் நான் அவரிடம் போய் கேட்டேன் – இது ஒரு நல்ல கருத்தாக இருக்கிறதே, ஆசிய நாடுகளில் ஜப்பானியரைப் பெரிதும் ஆராயும் அவர் ஏன் கம்யூனிசத்தின் கீழ் வளர்ந்த சீன இளைஞரை ஆராயவில்லை ? அத்தகைய இளைஞரிடம் இதர ஆசிய இளைஞரோடு ஒப்பிட்டால் ஏதும் சிந்தனை முறையில் மாறுபாடு தெரியாதா என்று கேட்டேன். இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஆய்வு நடத்தத் தனக்கு விருப்பம்தான், தக்க ஆராய்ச்சி மாணவர் தம் மேற்பார்வையில் இயங்குபவராகக் கிடைத்தால் அவற்றை மேற்கொள்ளத் தயக்கம் காட்ட மாட்டேன் என்றார்.

மேலும் சிறிது பேசிய போது அங்கிருந்த ஓர் இந்தியப் பேராசிரியர் கலந்து கொண்டார். இடதுசாரி, வங்காளி என்பது தெரிந்தது. வழக்கம் போல முழுதும் பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசினார், சிறிதும் இந்திய மொழியின் பாதிப்பு இல்லாத ஆங்கிலம். உயர்குடியினர் அல்லது முழுதும் ஆங்கில மீடியம் பள்ளியில் படித்தவர் என்று ஊகித்தேன். அவர் வங்காளத்தில் பொதுவுடைமைக் கட்சி பல பத்தாண்டுகளாக ஆள்வதைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். நான் ஒரு நிமிடம் என்று சொல்லி விட்டு, அந்த மாநிலத்தில் பொதுவுடைமை பரவியதற்கும், அதற்கு முன்னால் இஸ்லாம் பரவியதற்கும் வங்காளிகளின் பண்பாடு ஒரு காரணமா ? பொதுவுடைமைக் கருத்துகளில் அவர்களுக்கு உள்ள இயல்பான ஈடுபாடு என்று கருதுவது சரியானால் அவர்கள் மிகவும் நவீனப் பட்ட மக்கள் என்று முடிவு கட்ட முடியுமா என்று கேட்டேன். அதாவது மேலைக் கருத்தாக்கங்கள் ஊடுருவிய பண்பாடா என்பது உட்கேள்வி. ஆனால் என் கேள்வியை காலனி ஆட்சிக்கு மிகவும் பலியான மேல் மட்ட மக்கள் வங்காளத்தில் அதிகமா என்றும் புரிந்து கொள்ள முடியும் என்பது அப்போது எனக்குத் தோன்றவில்லை. இத்தகைய அர்த்தப்படுத்தலை எல்லாம் அவர் தம்முள் நடத்திக் கொள்ளவில்லை என்பது அவருடைய எதிர் வினையில் தெரிந்தது. அவர் இக் கேள்வியை விரும்பவில்லை. வங்க மக்கள் பிறவியிலேயே முற்போக்கானவர்கள் என்று சொன்னால்தான் மகிழ்ச்சி அடைவார் போல் இருந்தது.

அடுத்து நான் சொன்னேன் – முதலில் கூட்டத்தில் யாரோ கவனித்தது போல வங்கமும் பெளத்தத்தால் பல பத்தாண்டுகள் பாதிக்கப்பட்டு இருந்தது. அதை ஒழித்துத்தான் இஸ்லாம் பரவியது. இந்த இரு மதங்களும் சமூகக் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக் கொள்பவை. குழு நடத்தையைக் கண்காணிப்பவை. இந்து மதம் போல மூட்டை நிறைய நெல்லிக்காய்களாக இம் மதத்து மக்கள் இருப்பதில்லை என்பதால், இந்த சமூகக் கட்டுப்பாடு நெறியாகிய தன்மையை அடிப்படையாகக் கொண்டு பொதுவுடைமைக் கருத்துகள் அங்கு வளர்ந்தன என்று கருத முடியாதா என்று கேட்டேன். அந்த வங்காளிப் பேராசிரியர் பெளத்தம் வங்கத்தில் இருந்தது என்ற கருத்தையே அடியோடு மறுத்தார். எனக்குச் சிறிது ஆச்சரியமாக இருந்தது. பாலா வம்ச மன்னர்கள் பல நூறாண்டுகள் வங்கத்தில் ஆண்டிருந்தனர். அவர்களுடைய கல்வெட்டுக்களை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். மேலும் மேற்கு வங்க அரசும், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் பண்டைக் காலச் சின்னங்களைப் பாதுகாத்த சில இடங்களின் வரலாற்றுக் குறிப்பில் பாலா வம்ச மன்னர்களைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்திருக்கிறேன். பாலர்கள் மக்களிடையே இருந்து எழுந்த ஓர் ஆளும் கூட்டம். அவர்கள் சுமார் நானூறு ஆண்டுகள் ஆண்ட போது பெளத்தத்தை மிகவும் ஆதரித்தனர். இந்து மன்னர்களான போதிலும், இந்தியாவின் இதர இடங்களில் பெளத்தம் தன் ஆளுமையை இழந்த பின்னும், வங்கத்தில் பால மன்னர்களின் ஆதரவில் செளகரியமாக இருந்தது. ஆனால் வங்காளத்தின் ஒரு மெத்தப் படித்த அறிஞர் தமது மாநிலத்து வரலாற்றைக் கூட அறியவில்லை என்பதற்கு என்ன காரணம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் அந்த அமெரிக்கப் பேராசிரியர், இந்த வங்காளிப் பேராசிரியரின் அழுத்தமான மறுப்பை நம்பி அவருடன் மேலும் பேச ஆரம்பித்தார். எனக்கு இரு பிரச்சினைகள் – வங்கம் என் தாயகம் இல்லை. என் ஆங்கிலம் தமிழ்ப் பேச்சின் தாக்கம் உள்ள ஆங்கிலம். இயல்பான கவர்ச்சி அவரிடம்தான் கூடுதலாக இருக்கும். எனவே, ஒதுங்கி விட்டேன். பிற்பாடு எனக்குத் தோன்றியது, இடதுசாரியினர் பல பத்தாண்டுகளாக ஆளும் ஒரு மாநிலத்தில், பெளத்தத்தை முஸ்லிம்கள் அழித்தனர் என்ற சாதாரண வரலாற்று உண்மையை அந்த அரசு பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கி, இந்துக்கள்தான் பெளத்தத்தை அழித்தனர் என்ற கருத்தையே போதித்திருப்பர் என்று தோன்றியது.

இதை எதற்குச் சொன்னேன் என்றால் ஒரு நாடு, அதற்குள் பல வகையான வரலாறுகள், அதுவும் விமர்சனப் பார்வை இல்லாமல் ஆங்காங்கே உள்ள அரசியல் சார்புடைமையைப் பொறுத்து சங்கடமான உண்மைகளை ஒளித்து வரலாற்றைப் போதிப்பதில் இந்திய வரலாற்றைக் குறித்து இந்தியரிடையே சுமாராக ஒரே திசையில் செல்லும் அறிவு கூட இல்லை என்று புரிய வேண்டும் என்பதற்காகத்தான். இந்தப் பின்னணியில் மேலே சொன்ன வரலாற்றாளர் அல்லது சமூக அறிவியல் வல்லுநர்களின் அறிவுத் திரட்டுப் பங்கு என்ன என்று பார்க்க வேண்டும். இத்தனை பேரின் எழுத்துகளாலும் இந்திய வரலாறோ, சிந்தனையோ, தத்துவமோ, உளவியலோ, சமூகவியலோ எந்தத் துறையிலும் இது அல்லது இவைதான் இந்தியாவின் கடந்த காலப் பதிவுகள் என்று இந்திய மக்களுக்கும் சாதாரணருக்கும் ஏற்புடையதான ஒரு கருத்துக் குவியலை இன்னமும் தொகுக்க முடியவில்லை. இது உண்மையானால், ஏன் அப்படி என்பதுதான் நாம் கேட்க வேண்டியது. அதற்கும், காலனியக் கடப்புக்குப் பிறகு இந்தியருக்குப் போதிக்கப்படும் கருத்துகளின் இயல்புக்கும் என்ன உறவு என்று கேட்கத் தோன்றுகிறது. இது நமது பெரும் தவறுதான் என்றுதான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பதிவு உள்ள ஒரு நாட்டில், பல முறை வெளிநாட்டினரால் அடிமையாக்கப்பட்ட ஒரு நாட்டில் காலனியம் வெள்ளையர் காலத்தில் இருந்து தான் துவங்கியது என்று பரவலாக்கப் பட்ட ஓர் அடிப்படைக் கருத்தைக் கூட என்னால் ஏற்க முடியவில்லை. இருந்தாலும் இவர்களில் பலரும் அத்தகைய வரலாற்றுப் பார்வையைத்தான் முன் வைக்கின்றனர். பல குரல்கள் போலத் தெரிந்தாலும் பெரும்பாலான குரல்களும் ஐரோப்பியரின் பார்வையைப் பிரதி எடுப்பதாகத்தான் தெரிகிறது. இவர்களில் பலருக்கு பண்டைய இந்திய மொழிகளில் புலமையோ அல்லது சீரிய திறனோ கிடையாது என்பதும் இவர்கள் எழுதுவதைச் சற்று யோசனையோடுதான் பார்க்கத் தூண்டுகிறது.

மார்க்சியர் பண்டைய நாகரிகங்கள் குறித்து எழுதப் புகுகின்றனர் என்பதே ஒரு நகை முரண். சமூகங்களை ஆராயும் முன் முன்-தீர்மானங்களோடு செல்பவர், அனேகமாகத் தமது முன் தீர்மானத்துக்கான ஆதாரங்களை மட்டுமே பொறுக்கி எடுத்து, எதிரானதை ஒதுக்கியே செயல்படுவர். சில நேரம் அவர்களே முதலில் இத்தகைய முயற்சிகளைச் செய்யத் தலைப்பட்டாராயின், மாற்றுச் சான்றுகளைப் பிறர் காண விடாமல் அழிக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. வரலாற்றின் எச்சங்களை அழிப்பதில், வசதிப்படாததை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் தீவிரத்தில் சில கருத்தாக்கங்கள் மிகவும் பிரசித்தியானவை. அத்தகைய கருத்தாக்கங்கள்தாம் தமது பார்வைக்கு உதவும் ஆடிகள் என்று முன்னமேயே அறிவித்து விடும் இவர்களின் முடிவுகளை எளிதில் ஏற்க முடியவில்லை. இவர்கள் வரலாற்றைத் திரித்துத்தான் எழுதி இருக்கிறார்கள் என்று கறாராகச் சொல்ல முடியாது என்றாலும் வர்க்கம், இனம் ஆகிய வகைப் படுத்தல்களிலும், மதம், மொழி, தத்துவம் ஆகிய வரலாற்றுப் போக்குகளிலும் இவர்களது சுயசார்புகள் சான்றுகளுடன் ஒட்டாத முன் முடிவுகளுடன் இயங்குகின்றன என்றுதான் தோன்றுகிறது.

ஒரே ஒரு வகையான நேர்கோட்டுப் பதிவைத் தரச் சொல்லி வற்புறுத்துகிறேன் எனக் கருத வேண்டாம். 3000 வருடங்களாகவாவது தாங்கி இருந்து, ஒரு பிலியன் மக்களுக்கு உறைவிடமாக இருக்கும் ஒரு நாடு, அதன் பண்பாடு இவர்கள் சொல்வது போல வெறும் வன்முறையும் அநீதியும் வெறுப்பும் இனவெறியும் மட்டும் அதைச் செலுத்தி இருந்தால் பெரும் படுகொலைக் களமாக எப்போதோ மாறி இருக்கும்.

அரை நூற்றாண்டில் ஆப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்காவும் எத்தனை வன்முறையை, அடக்கு முறையைச் சந்தித்திருக்கின்றன ? அவையும் காலனி ஆதிக்கத்தின் இரையாக இருந்து விடுபட்ட நிலப் பரப்புகள்தாம். ஆனால் இவை போலவே காலனி ஆதிக்கத்திலிருந்தும், அதற்கும் மேலே போய் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக பல வித அன்னியரின் ஆக்கிரமிப்புகளையும் சந்தித்த ஒரு மக்கள் திரள் இன்னமும் ஒரு நாடாகச் சேர்ந்து பெரும்பாலும் அமைதியுடன் இருக்க முடிகிறது – அது எதனால் ? மொழியினாலா, இனத்தாலா, அல்லது பண்பாட்டாலா ? மேற்சொன்ன வரலாற்றாளரின் நூல்களில் இந்த வகை ஆய்வை அதிகம் காண முடியாது. அப்படியே இருந்தாலும் அந்தப் பார்வை ஓர் எதிரியின் பார்வையாகத்தான் இருக்கும். அதாவது இந்த நிலப்பரப்பில் உள்ள மானுடம் எப்படி எல்லாம் நோய்ப்பட்டது என்று நிறுவும் குமைச்சல் நிறைந்த பார்வையாகத்தான் இருக்கும். ஆக்கத்தைக் காண மறுத்து, அழிப்பையும், கெடுதலையும் மட்டுமே நோக்கும் கடும் விமர்சகனின் பார்வையாகத்தான் இருக்கும். இது உள்நாட்டுக்குள் மட்டும் புழங்கும் போது ஒரு வேளை சமூகத் திருத்தங்களுக்கு உதவலாம். ஆனால் இவை மட்டுமே இந்திய யதார்த்தத்தை கறாராக நிறுவுகின்றன என்ற ஒரு மனப்பாங்கையும், இந்திய சமூகத்தின் ‘உண்மைகள் ‘ இவற்றில் மட்டுமே கிட்டும் என்ற வகைப் புரிதலையும் இந்தியாவுக்கு வெளியே பன்னாட்டு வெளியில் நிறுவப்பட்டு விட்டால் அது புதுக் காலனிய முயற்சியில் இறங்கி இருக்கும் மேலை நாட்டு ஆதிக்க சக்திகளுக்கு மிக உதவியாக இருக்கும் என்பதைப் பற்றி இவர்கள் சற்றும் கவலைப்படுவதில்லை.

இப்படி ஓர் எதிரிப் பார்வை இவர்களில் பலருக்கும் வர ஒரு காரணம் – மேலைத் தத்துவம், மேலை வரலாற்றியல், மேலை சமூகவியல், மேலை மானுடவியல் என்று பல மேலைத் துறைகளில் முதலில் தேர்ச்சி பெற்று, பிறகு தமது சமூகத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறார்கள். தமது சமூகங்களைப் பற்றி இவர்கள் ஆய்வு செய்யத் தொடங்கும் நேரத்தில் இவர்களுக்கு முதலிலேயே தெரிந்தவை மேலைப் பார்வையில் படிக்கப்பட்ட, எழுதப்பட்ட நூல்கள்தாம். அவற்றின் சார்புடைமையை இந்த நூல்கள் முதலிலேயே எடுத்து வைத்து விட்டன, அது தெரிந்துதான் அந் நூல்களைக் கற்கிறார்கள் என்று கூட வாதிட முடியாது. இந்த வகை நூல்களில் பெரும்பாலானவை உள்நாட்டில் அத்தகைய நூல்களோ சிந்தனைகளோ இல்லாததால், அவைதாம் அத்துறையின் செவ்வியல் நூல்கள் என்று போதிக்கப் படுகின்றன.

இந்திய வரலாறும், சமூகவியலும், மானுடவியலும், தத்துவமும் அவற்றின் பின்புலன், பல காலத்துக் களன், பெரும்பான்மையினரின் மதப் பார்வை, சிறுபான்மையினரின் பண்பாட்டு/மதப் பார்வைகள், என்று பலவித தன்னாட்டு மக்களுடைய காலப் பயணத்தில் எழுந்த ஒரு பார்வை, ஓர் அறிதல், ஓர் அறிவுக் கருவூலம் இவர்களிடம் முதலில் சேர்வதில்லை. அவர்களின் அடித்தளம் அது அல்ல. மாறாக அது இவர்களின் கருது பொருளாக ஆயிற்று. அது இத்தகைய புறப் பொருளாக்கப்படுதலை (objectification) மீறித் தன்னிலை உணர்வாகவோ, அறிவாகவோ ஓரளவு இவர்களிடம் இருக்கும் என்றால் அது அன்றாட வாழ்வில் அறிதலுக்கான, தேடல் இல்லாத இயல்பான வாழ்வின் நடைமுறை அறிவாகத்தான் சேர்ந்திருக்கும்.

ஆக தன் சமூக நடைமுறைகளின் வழி அறி உணர்வு இவர்களை உலகை ஓர் ஆய்வுப் பொருளாகப் பார்க்கச் சொல்லி அழைத்துப் போவதில்லை. மாறாக அதுவே ஓர் அடக்கப் படவேண்டிய, ஒடுக்கப் படவேண்டிய ஒன்றாகவோ, நோய்ப்பட்ட உடலாகவோ, துண்டுபட வேண்டிய நிலப் பரப்பாகவோ, சில நேரம் முற்றிலும் அழிக்கப்பட்டு ஆய்வாளரின் அபிமானக் குழுவின் பண்பாட்டாலோ அல்லது அபிமான மதிப்பீடுகளாலோ அல்லது அவரது விருப்பத்துக்குரிய பெருநாயகரின் வரலாற்றுப் பார்வையாலோ அல்லது அபிமான மதம்/அரசியல் கோட்பாட்டாலோ மறு வார்ப்பு செய்யப்பட வேண்டும் என்றே இவர்களால் பார்க்கப்படுகிறது என்று நான் கருதுகிறேன்.

இவர்களைப் போல அல்லாமல், ஃபூகோ தன்னைச் சுற்றிலும் உள்ள ஒரு பண்பாட்டை வெறுக்கவும் இல்லை, அதை அழிக்க ஒரு திட்டத்தோடும் வரலாற்றை எழுத முற்படவில்லை. அவருக்கான குறிப்பிட்ட ஒரு செயல் திட்டத்துக்கு ஏற்ப வரலாற்றை மாற்றும் எண்ணத்தோடு தமது சமூகத்தை அணுகவில்லை. அதே நேரம் அவர் அந்த சமூகப் பண்பாட்டின் அன்றாட உற்பத்தியில் – பொருட்கள், உறவுகள், குறியீடுகள், நுகர்வுகள், மதிப்பீடுகள், நகர்வுகள், கடப்பை ஏற்கும் விதங்கள், எதிர்ப்பை மேற்கொள்ளும் விதங்கள் என்று மக்கள் பலவிதமாக பண்பாட்டை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்களே அந்த அன்றாட உற்பத்தியில் – ஆர்வத்தோடு ஈடுபடவும் இல்லை. அதைத் தமது பார்வையாகவோ, கடமையாகவோ அல்லது சார்புடைமையாகவோ மேற்கொள்ளவும் இல்லை. மாறாக ஒரு விலகல், ஓர் அடி பின் தங்கி இருந்து நோக்கல், பழகிய ஒன்றை புது அனுபவமாக, புதுப் பொருளாக (meaning, not object) ஏன் அன்னிய வாழ்வாகக் கூட கருதும் ஒரு மனச் சாய்வு இவற்றோடு அணுகுகிறார். அன்னியம் என்னும் போது வெறுப்புடன் என்று பொருள் கொள்ள வேண்டாம்.

அதே நேரம் அவர் அந்த அன்றாட வாழ்விலிருந்து விலகி விடவும் இல்லை. அத்துடன் இயங்கிக் கொண்டே கவனிக்கிறார். இதை திரெய்ஃபஸ், ராபினெள என்ற இரு ஆய்வாளர்கள் தமது நூலில் தெளிவு படுத்துகிறார்கள் – ‘நாம் இனிமேல் கருத்தாக்கங்களை (theory) உருவாக்க முடியாது. நாம் இனிமேல் ஆழமான மறைந்துள்ள அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருக்கப் போவதில்லை. இருப்பினும், நாம் பண்பாட்டின் பிரச்சினைகளை முக்கியமாகக் கருதுவதால், ஃபூகோவின் நிலைபாட்டின் பால் நமது விருப்பம் ஏதும் இன்றியே, தேர்வு இன்றியே, இழுக்கப்படுகிறோம். ‘ மேலும், நமது பண்டைப் பண்பாடு அல்லது அதன் இன்றைய வடிவத்தில் தஞ்சம் புகாமல் இருக்கவும், அதே நேரம் தற்கால ஓட்டத்தில் சமூக விருப்பங்கள் அல்லது உடனடி அவசியங்களில் இன்று கவர்ச்சி எதற்கு உள்ளதோ அதை ஆய்ந்து கொண்டு பொழுதைக் கழிக்க முயலாமல் இருக்கவும் விரும்பினால் இந்த ஒரு நிலைதான் நமக்கு எஞ்சி இருக்கிறது என்கின்றனர் இவர்கள் இருவரும்.

அதனால் ஃபூகோவின் பார்வையில் இன்று என்ன நடப்பாக உள்ளது என்பதை நாம் அப்படியே ஒப்புக் கொள்கிறோம் என்பதில்லை. நாம் பிறருடன் சில பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். பகிர்ந்து கொள்கிறோம். அவைதாம் நம்மை உருவாக்கி இருக்கின்றன, அவைதாம் நமக்கும் பிறருக்கும் இடையே ஒரு பொதுக் களத்தைத் தருகின்றன. அறிவதற்கும், புரிவதற்கும், செயல்படவும் இந்தப் பொதுக் களம்தான் நமக்கு எஞ்சி இருக்கிறது என்பதால் இந்த வெளியைக் குறித்த ஓர் ஆய்வு பூர்வமான அர்த்தப்படுத்தும் நடவடிக்கை நமக்கு அவசியம். அது ஒன்றுதான் சக்தி வாய்ந்தது, சாத்தியமானது மேலும் நேர்மையான தேர்வாக இருக்க முடியும் என்றும் எழுதுகிறார்கள். இதற்கு மேலும் முக்கியமான சில கருத்துகள் இந்த நூலில் உண்டு. [கு1]

குறிப்பாக, ஒரு பிலியன் மக்களின் அன்றாட வாழ்க்கையோ, அதன் ஊடாக நெடுகச் செயல்படும் ஏராளமான நடவடிக்கைகளோ, அர்த்தங்களோ, கருத்தாக்கங்களோ, அவர்களின் அனுபவங்களில் இருந்தும் செயல்பாடுகளில் இருந்தும் எழும் தர்க்கங்களோ எல்லாம் அவ்வளவு பயன் உள்ளவை அல்ல, அவற்றைக் குறித்து ஓர் ஆய்வாளர் அல்லது அவரது சகாக்களின் சிறு கூட்டம் என்ன கருதுகிறதோ அதுதான் அதிகமான கனமும், பொருளும், மதிப்பும், பயனும் உள்ளது எனக் கருதும் ஒரு மனப்பாங்கு முன்னால் சொன்ன ஆய்வாளர்களின் நூல்களில் எங்கும் விரவிக் கிடக்கிறது என்றே தோன்றுகிறது.

இவர்கள் நல்லவர்கள், கெட்டவர்கள், இந்தியாவின் எதிரிகள் அல்லது ஆதரவாளர்கள் என்றெல்லாம் கூறு போடவில்லை. பல நேரம் நமது நண்பர்களிடம் இருந்து நம்மை யாராவது காப்பாற்றினால் போதும் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஒருவரின் நல்லெண்ணங்களே ஒரு செயல் திட்டத்தின் பயனைத் தீர்மானிப்பதில்லை. கெடுமதியாளரின் தீய எண்ணங்கள் சில நேரம் நமக்கு விடுதலையைக் கூடத் தேடித் தர வாய்ப்பு இருக்கிறது. இவர்களது அறிவுத் தேட்டையையோ அல்லது அறிவுத் திரட்டையோ நான் சந்தேகிக்கவும் இல்லை, அவமதிக்கவும் இல்லை. ஆனால் அவற்றின் வழியே இந்தியாவையோ அதன் மக்களின் வாழ்வையோ புரிந்து கொள்வது யதார்த்தத்தின் அர்த்தத்தை அல்லது அர்த்தங்களை அழிக்கும் செயல் என்று கருதுகிறேன். இவர்கள் பெரும்பாலான மக்களிடம் இருந்து தமக்கு உவப்பானவற்றை மட்டுமே கற்கின்றனர். அல்லது தாம் விமர்சித்து கண்டிக்கக் கூடியவற்றையே பார்க்கின்றனர். ஒரு விலகலுடன், தன்னிலைப் பார்வையை முன்வைத்து எல்லாவற்றையும் அணுகாமல் புற நிலையைத் தமது விருப்பத்துக்கு உட்படுத்தாமல் அணுக இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்பது என் கருத்து. தன்னிலையைக் கூடிய மட்டும் புரிந்து கொண்டு, தம் விருப்பங்களையும் அறிந்து கொண்டு இயங்குவது அவசியம்தான். அவற்றிற்கு மாறாகவோ, அவற்றை முழுதும் ஒதுக்கி வைத்தோ இயங்க முடியாது என்றும் தெரிகிறது. தன் நிலைபாடுகளைத் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தாமல் இயங்கும் ஆய்வாளர்களால் பிற மக்களை அவர்களது நிலைபாடுகளைச் சோதனைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்த முடியும் என்றோ அல்லது அம் முயற்சியில் போதுமான வெற்றி பெற முடியும் என்றோ தோன்றவில்லை. அப்படி ஒரு வெற்றி கிட்டுகிறது என்றால் அந்த முயற்சியின் பின்னே ஏதோ ஓர் அதிகாரக் குவிப்பு இருக்கிறது, அதிகாரப் பயன்படுத்தல் இருக்கிறது என்றே கருதுகிறேன்.

ஃபூகோவிடம் இருந்து இந்த ஒரு சிறு விஷயத்தையாவது நாம் கற்கலாம். வரலாறு நம் விருப்பப்படியோ, அல்லது நமது கணிப்புப்படியோ எப்போதாவதுதான் நடக்கிறது. அது பெரும்பாலும் வெறும் ஒருசேர நடந்த தற்செயல் நிகழ்வாகக் கூட இருக்கலாம். உடைவுகளும், வெடிப்புகளும், தொடர்பின்மையும், மெளனங்களும், ஒதுக்கல்களும், விபத்துகளும், தற்செயல் நிகழ்வுகளும் மனிதப் பயணத்தை நகர்த்திய அளவு முனைந்த செயல்பாடும், திட்டமிட்ட இயக்கமும் நகர்த்தவில்லை என்றே அவர் கருதுகிறார். மனிதரை என்றும் எங்கும் தொடரும் நிழல்கள் இவையே.

இவர்களில் பெரும்பாலாரும் மக்களின் நலனுக்காகப் போராடுவதாகவோ அல்லது வாதாடுவதாகவோ தம் நிலையை முன் வைக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய புரிதலில் இந்தியா உள்ள வகையும், அன்றாட வாழ்வு, தொடரும் சமூகப் பழக்க வழக்கங்கள், குடும்பங்களின் மதிப்பீடுகள், பல சமூக உறவாடல்கள் ஆகியவற்றில் சாதாரண மனிதருக்குக் கைவசப்படும் ஒரு புரிதலின் சிறு சில்லுகள்தான் அகப்படுகின்றன. மாறாக அத்தகைய சாதாரணரின் அறிவுத் திரட்டைப் பெரும்பாலும் அறிவு மயக்கம் என்றே ஒதுக்கும் சிந்தனையாளர்களே இவர்களில் பலரும்.

இப்படிப் பட்ட இடைவெளி – மக்களுக்கும் இந்த அறிவாளரின் அறிதலுக்கும் இடையே ஏன் உள்ளது என்று யோசிப்பது அவசியம். நாளாக ஆக இந்த இடைவெளி அதிகரிக்கிறது என்பதே என் கருத்து. ஆனால் அதை நிறுவ என்னிடம் ஏதும் ‘சான்று ‘ இல்லை. மேலே சொன்ன ஆசிரியர்கள் இதே கருத்தை வேறுவிதமாக எழுப்பி இருக்கிறார்கள் என்று கண்டு சிறிது மகிழ்வாய் இருந்தது. அதை இங்கு மொழி பெயர்த்துத் தருகிறேன். ‘உடல்-அதிகாரத்திற்கு எதிர்ப்பை எப்படி வலுப்படுத்துவது ? மனிதரையும் அவரது சமூகத்தையும் சரியான கருத்தாக்கங்களின் வழியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என உந்தும் இயங்கியல் வாதங்கள் பெரும் திரளான மனிதரைத் தட்டி எழுப்ப இயலாமல் இருக்கின்றன. மேலும், ஃபூகோவின் தீர்வையில் பிரச்சினையின் ஒரு பகுதியே இத்தகைய வாதங்கள் என்பதையும் நாம் கருத வேண்டும். ‘ (பக்கம் 206).

கதை போல நேரான நடையில் எழுதப்பட்ட வரலாறையே மிகச் சில நபர்கள்தான் படித்துள்ளனர். இப்போது நவீனக் கடப்பு முறைகளில் எழுதும் வரலாறு அனேகமாக சாதாரண மக்களைச் சென்று சேர்வதில்லை. ஆனால், அந்தப் பார்வையில் மக்களைக் கூறுகளாகப் பிரித்துப் பலவிதப் பகைகளைத் தூண்டும் உணர்ச்சிக் கட்டுரைகள் நிறைய கிட்டுகின்றன என்பதில் ஒரு முரண் இருக்கிறது.

மறுபுறம் இத்தகைய ஆய்வை வரலாற்றைப் போதிப்பவர்களே சிரமப்பட்டுத்தான் புரிந்து கொள்கிறார். என்ன புரிந்து கொண்டோம் என்று பரஸ்பரம் வாதம் செய்வதற்கும் அவர்களுக்கு நேரம் போதவில்லை. பிறகுதானே மக்களுக்குத் தம் புரிதல்களைக் கை மாற்றித் தர. மாஒவைப் போல யதார்த்தத்துடன் தொடர்பற்ற முழு நிச்சயத்துடன், வாழ்வு பற்றிய மக்களின் புரிதல் வெறும் எச்ச சொச்சங்களால் ஆனது, பிற்போக்கானவை அதில் ஏராளமாக உண்டு, உருப்படியானவையும் சிதறிக் கிடக்கின்றன. ஆகவே ‘விவரம் தெரிந்தவர்களால் ‘ இந்தப் புரிதல் முழுதுமாக அழித்து எழுதப் படக்கூடியது என்று கருதும் அளவுக்கு இவர்களுக்கு இன்னமும் பார்வை மழுங்கவில்லை என்பதுதான் இதில் இருக்கும் ஒரே ஆறுதல். லெனினிய ஆணவம் இந்த ஆய்வாளரிடம் இன்னமும் அதிகம் பரவவில்லை. ஒரு ஜனநாயக அமைப்பில் பல காலம் இயங்கியது இவர்களது தன் நிச்சய உணர்வை ஓரளவு குறைத்திருக்கலாம்.

(தொடரும்)

[கு1] ஹூபர்ட் திரெய்ஃபஸ், பெளல் ராபினெள (Hubert L. Dreyfuss and Paul Rabinow) எழுதிய ‘மிஷெல் ஃபூகோ- அமைப்பியலுக்கும் பிரதி விளக்க முறைக்கும் அப்பால் ‘ என்ற புத்தகம் இது. பார்க்க பக்கம் 124-125. (Michel Focault, Beyond Structuralism and Hermeneutics, 1983, University of Chicago Press)

aacharakeen@yahoo.com

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)

அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்