ஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

முனிஸ்வரன், மலேசியா


எனது வாழ்க்கையின் பெரும்பகுதி செலவாவது எனது கட்டிலிலும் இந்தச்
சாலையிலும்தான். கட்டிலில் எனை மறந்து உறங்கி வழியும் தருணங்களை நான்
எப்போதும் குறை சொல்லியது கிடையாது. ஆனால், இரண்டாவதாகச் சொன்னேனே
அதுதான் எப்போதும் எனது சாபங்களை அள்ளித் தின்று வளர்ந்து நிற்கும்
பொல்லாத மனிதக் கண்டுபிடிப்பு!

சாலைகளின் சந்திப்புகள் நிகழுகின்ற இடங்களில் மனிதன் கட்டுப்பாடுகள்
வரைந்து வைக்க, அது மூன்று நிறங்களோடு நெடுக வளர்ந்து நிற்கிறது. அது
நில் என்றால் நாங்கள் நிற்க வேண்டுமாம்; போ என்றால் போயொழிய வேண்டுமாம்.
என்னய்யா உலகமிது? இரும்பில் அப்பிக்கொண்டு நிற்கும் மூன்று வண்ண
விளக்குகள் சொல்வதைக் கேட்டா மனிதர் நாம் வண்டியையும் பிழைப்பையும்
நகர்த்தவேண்டும்?

அந்த அடக்குமுறையாலோ அல்லது பச்சை நிறத்துக்காகக் காத்திருக்கும்
வெட்டிப் பொழுதுகளுக்காகவோ நான் சாலைகளையும் பிரயாணங்களையும் வெறுத்துத்
தள்ளுகிற ஆங்கார ஆசாமியாகியிருந்தேன். எனது ஆங்காரம் எங்கெங்கெல்லாம்
வெளிபடும் என்று சொல்வதற்கு எனக்கும் ஆவல்தான்.

முச்சந்தியோ நாற்சந்தியோ எந்த இழவோ, சிவப்புக்கு ஒதுக்கிவைத்திருக்கிற
நொடிகளையும் பச்சைக்கு ஒதுக்கி வைத்திருக்கிற நொடிகளையும்
எண்ணிப்பார்த்ததுண்டா நீங்கள்? நீங்கள் எப்படியோ தெரியவில்லை! நானும்
என்னைப் போன்ற மோட்டார் ஓட்டியும் கட்டாயம் தெரிந்து வைத்திருப்போம் இந்த
அக்கிரமங்களை. கணக்கு வேண்டும் என்று கேட்பீர்களோ? கேட்காதீர்கள்;
வேண்டுமானால் போய் எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்!

என்னுடைய வேலை இப்படி என்று ஆண்டவன் எழுதி வைத்துவிட்டான். நான்
என்னத்தைத்தான் செய்யமுடியும்? பிஸ்ஸாக்களைச் சுமந்துகொண்டு ஒவ்வொரு
சாலையிலும் ஊர்ந்து செல்லவேண்டும்; ஒவ்வொரு சந்திலும் சிந்துபாடியாக
வேண்டும்;. நான் பிஸ்ஸா உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்து மூன்றாண்டுகள்
கடந்தபோதும் இந்தச் சாலையும் எனது முந்தைய அனுபவ முதிர்ச்சியும்
பொறுமையைச் சொல்லித்தர மறந்திருந்தன. நீங்கள் எதைத்தான் சொல்லுங்கள்;
இந்த விஷயத்தில் மட்டும் எனது ரத்த அழுத்தத்தை என்னால் கட்டுப்படுத்த
இயலாது.

புதிதாக இந்தச் சாலையில் பச்சை நிறத்திலும் சிகப்பு நிறத்திலும் எண்கள்
மாறி மாறி கரைந்துகொண்டிருக்கும் ஒரு டிஜிட்டல் எண் சிலேட்டையும்
சேர்த்துக்கொண்டார்கள் அந்த மூவிளக்கு மூதேவிகளுக்குத் தோதாக.

இந்த எண்கள்தான் எனது வேகத்தின் அளவுகோள். ஒருவேளை நான் வரும்போதே அந்த
சிலேடு சிகப்பு எண்களோடு முறைத்தபடி நின்றிருந்தால் நிதானமாகத்தான்
போவேன். அதற்கெல்லாம் சீரிப்பாய்ந்துகொண்டு வந்தாலும் கடைசியில்
சந்தியில் நின்றுதானே தொலைக்கவேண்டும்? ஒருவேளை பச்சை எண்கள் உருகி
வழிந்துகொண்டிருந்தால்? அவைதான் எனது ஆண்மையைச் சோதித்துப் பார்க்கும்
சக்தி மிகுந்த எண்கள். நான் வருவதற்குள் நீ முழுமையாகக் கரைந்து
பொறுப்பைச் சிகப்பு எண்களிடம் கொடுக்கிறாயா, அல்லது உன் அந்திமக்
காலத்துக்கு முன்னமே நான் உன்னை ஊடுருவிச் சென்றுவிடுகிறேனா என்ற
தன்மானப் பந்தயம் நடந்துகொண்டிருக்கும். இதில் எங்களது வெற்றி தோல்விகள்
சம அளவில்தான் இருந்துவருகிறது. இருந்தாலும் அது எனக்குத் தீராத
எதிரிதான். என்னைச் சிவப்பு எனும் உச்சி வெயில் வியர்வைக்கும் வெட்டியாய்
தீருகிற எண்பது நொடிக்கும் தள்ளிவிட்டுவிட்டு எங்கோ ஓடி ஒளிந்துகொள்கிற
அந்த பச்சை மனநோயாளி, என்னையும் எத்தனையோமுறை பைத்தியமாக்கிவிடுகிறது.

இந்தச் சிவப்புகளை மீறுகிறவர்களை வளைத்துப் பிடித்துக்கொள்ள உளவுத்துறை
பூதக்கண்ணாடியோடு நிற்கும் என்றால் கொஞ்சம் யோசிப்பீர்கள்.
வெளிப்படையாகவே சொல்லுகிறேனே. ட்ரேப் கேமிராக்கள்தானைய்யா அது! சிகப்பைத்
தாண்டிவிட்டால் வண்ணப்புகைப்படத்தோடு தகவல் அனுப்பிவிடுகிறது அந்த
உளவுக்கார இரும்புக்கருவி. என்ன செய்வேன் நான். அது அம்பலப்படுத்திய எனது
பல ரகசிய மீறல்களுக்கு விலையாக ஒவ்வொரு தடவைக்கும் முன்னூறு வெள்ளியைச்
செத்தவன் கணக்கில் செலுத்தியுள்ளேன்.

இந்த உத்தியோகத்துக்கு எத்தனை காப்புறுதி எடுத்தாலும் தகும். நான் எனது
சக்திக்குத் தகுந்தபடி எனக்கென எடுத்து வைத்திருப்பது இரண்டே இரண்டு
பாலிஸிகள்தான். அடிபட்டாலோ செத்துவிட்டாலோ பொண்டாட்டி பிள்ளைகளுக்குப்
போய்ச் சேரட்டுமே. யார் கண்டார்? இத்துணூண்டு மோட்டாரை வைத்துக்கொண்டு
மாபெரும் சாலைகளில் நீச்சல் பழகிக்கொண்டிருக்கும் என்னை இடித்துத்தள்ள
எத்தனையோ வண்டிகள் தயாராய் திரிகின்றன. தினந்தினம் எத்தனை எதிரிகள்தான்
எனக்கு. அடையாளமே தெரியாத எதிரிகள் என்னைக் கடந்து செல்லும் களம் இந்தச்
சாலைகள். அவ்வப்போது அவர்களோடு கொஞ்சம் காலத்தைக் கழித்து உறவாடு
என்கிறதா இந்த சிகப்பு? இந்தச் சிகப்புக்கு அந்த அதிகப்பிரசங்கித்தன
அதிகாரத்தை யார் தந்தது? நான் கேட்கவில்லையே இந்த வழிபோக்கர்களிடம் எந்த
ஒட்டுறவையும்! சாலையின் இந்த வல்லரசுகளிடம் நான் கெஞ்சிதான்
பிழைக்கவேண்டும் என்றால் எனக்கு அப்படியொரு பிழைப்பு தேவையே இல்லை.
செத்தாலும் அண்ணாத்துரை கௌரவமாய்ச் செத்தான் என்ற பெருமை மிஞ்சும்.

வெயில் நாட்களில், சிவப்பில் நிற்கிற அவமானத்தைப் பற்றி குளுகுளு
வசதியோடு காரில் ஜம்மென்று உக்கார்ந்து பாட்டு கேட்டுக்கொண்டிருக்கும்
அவர்களுக்கு என்ன தெரியும்? பஞ்சு, பஞ்சுபஞ்சாய்ப்போன தலைக்கவசத்துக்
கூட்டின் பாதுகாப்பில் ஒளிந்திருக்கும் என் உச்சந்தலையிலிருந்து ஒழுகுகிற
வியர்வையைப் புஜத்தைப் போர்த்தியிருக்கும் சட்டைத் துணியைக்கொண்டு
அழுத்தித் துடைத்தெடுத்துக்கொள்வேன். அது அறை நிமிடத்துக்குத்தான்
தாக்குப்பிடிக்கும். பின்பு மீண்டும் வியர்வை ஒழுகும். அந்த வியர்வையின்
பிறப்பிடத்தை பட்டியலெல்லாம் இடமுடியாது. எங்கெங்கெல்லாமோ ஊற்றெடுத்து
உருகி மகிழும். அதைத் துடைத்துத் துடைத்து என் சட்டையில் ஒட்டிக்கொள்கிற
வியர்வை நாற்றம் நான் வீடு சென்று கழற்றிப் போடுவதற்குள் அழுகல்
நாற்றமாய் பரிணமித்திருக்கும்.

வெயில் காலத்தில்தான் எனக்கு இந்தக் கஷ்டங்கள். மழைக்காலத்துக் கதையைக்
கேட்கிறீர்களா? ஏதோ ஒப்புக்குக் கொடுத்து வைத்திருந்தார்கள் மழையாடையை
எங்களுக்கு. இதில் என்ன விசேஷம் என்றால், கண்களை அறையும் வெளிர் மஞ்சல்
நிறத்தில் இருக்கும் இந்த மழையாடை ஏதோ ஒரு காலக்கட்டத்தில் என்
கவனக்குறைவால் கிழிந்துபோனபோது அதற்கு மாற்று கிடைக்காமல் அந்தக்
கிழிசலையே போட்டு ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறேன் இன்று வரை.

அதோ, அதுதான் மழைக்கான அறிகுறி. வெகுதொலைவில் மழை பெய்கிறது என்பதை நான்
அறிந்துகொள்கிற தந்திரங்கள் சில உண்டு. எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
இலக்குப் பாதையில் ஒரு பணிப்படலம் பரவியது போன்று தெரியுமானால் அங்கு மழை
வாங்கோவென்று வாங்கிகொண்டிருக்கிறது என்று அர்த்தம். இன்னும் பிடிவாதமான
ஆதாரங்களுக்காகக் கொடிதூக்கும் ஆசாமிகளுக்கு மிகவும் எளிதான
எல்லாருக்கும் தெரிந்த இன்னொரு தந்திரத்தைப் பயன்படுத்துவதையும்
சொல்கிறேன். அங்கிருந்து பெயர்ந்து வந்துகொண்டிருக்கும் வண்டிகளின்
வைப்பர் துரிதமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தால், அந்த வண்டியின் உடல்
முழுக்க ஈரத்துளிகள் படர்ந்திருந்தால் அங்கு மழை என்று
தெரிந்துகொள்ளலாம். ஒரு வேளை இதுகூட உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை
என்றால் ஒன்று சொல்கிறேன்; தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். தயவுசெய்து
இனிமேல் வண்டியை எடுக்காதீர்கள்.

இந்த மழை இருக்கிறதே, இது மிக விசித்திரமான ஒன்று. வா வா என்று கம்பளம்
விரித்துக் கூப்பிடும் இடங்களுக்குப் போகாமால் போ போ என்று
விரட்டியடித்தாலும் வெட்கமில்லாம் வந்து கால் வரை விழுந்து பின் மண்ணோடு
மண்ணாகிப் போகும் மானங்கெட்ட இயற்கை அது. கவிஞன் கிடக்கிறானைய்யா. மழையை
வர்ணிப்பான் வீட்டுக் கூரையின் இதமான பாதுகாப்பில். உயிரைக் கையில்
பிடித்துக்கொண்டு பூ தேய்ந்துபோன டயரையும் நம்பி சேர்க்க வேண்டிய
பிஸ்ஸாவை பதினைந்து நிமிடத்துக்குள் உரிய இடத்துக்கு அனுப்பிவிடுகிற
பொறுப்புடைய என்னைப் போன்ற ஆட்களைக் கேட்டுப்பாருங்கள். அப்புறம்
தெரியும் மழையைப் பற்றின உண்மையான செய்திகள்!

நான் போகவேண்டிய தெரு அதுதான். கொஞ்சங்கொஞ்சமாய் நெருங்கும்போதே
கவனித்தேனே அங்கே மழை வரிந்து கட்டி களத்தில் இறங்கிக்கொண்டிருக்கிறது
என்று. என்னத்தைச் சொல்ல? இந்த மழையாடையையும் போட்டாகவேண்டிய சூழ்நிலை
இப்போதும் வந்துவிட்டதே எனக்கு.

சாலையின் ஒரு மூலையில், பாதுகாப்பு என்று என் மனது முத்திரை குத்திய
இடத்தில் மோட்டாரை நிறுத்திக் கீழே இறங்கினேன். எனது ‘திறந்த
மனப்பான்மை’யுடைய அந்த மழையாடையை எடுத்து உடுத்தினேன். அதன் ஆதிக்கம்
நிலைபெற்றபின் எனது சீருடை பவ்யமாய் மறைந்துகொண்டது புறத்திலுள்ளோர்
பார்வையிலிருந்து. ஏதோ அப்போதைக்கு என்னை மழையிலிருந்து காப்பாற்றும்
ஒற்றைக் கவசம் அதுதான். மீண்டும் மோட்டாரில் ஏறிக்கொண்டு புறப்பட்டேன்.
என்னைப் போலவே எத்தனை எத்தனை பேர் இந்த மழைக்கு அஞ்சி மழையாடை உடுத்தி
உந்துகிறார்கள் என்று தெரியுமா யாருக்காவது? அதைப் பற்றியெல்லாம்
கவலைப்படுவோர் மோட்டார் ஓட்டிகள் மட்டும்தான்.

இதோ, எனக்கு முன்னால் முந்திக்கொண்டு போனானே அவன் இன்னும் கொஞ்சம்
ஏமார்ந்திருந்தால் சறுக்கி விழுந்திருப்பான். நல்ல வேளை, இழக்காதிருந்த
நிதானம் அவனைக் காப்பாற்றி அவனது நாளைகளுக்கு இன்னும் உத்தரவாதம்
கொடுத்திருந்தது.

அவனை எது அவசரமாகப் போகச்சொல்லிப் பணித்தது? அதோ, இருபத்தொன்று, இருபது,
பத்தொன்பது என்று மழையோடு மழையாகக் கரைந்து ஒழுகிக் கொண்டிருக்கும் பச்சை
எண்கள் வாயிலை மூடிக்கொள்ளும் முன்பு அதைப் பயன்படுத்திக்கொள்ளத்தான்
அவனுக்கு அவ்வளவு அவசரம். அவனுக்கு இன்னும் பச்சை எண்கள் அவகாசம்
கொடுத்திருந்தன. இன்னும் பதினான்கு எண்கள் உண்டு அவை சிவப்பாய்
மாறுவதற்கு.

அந்தச் சந்தர்ப்பத்தை ஏன் நானும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது? இன்னும்
பன்னிரண்டு பச்சை எண்கள் உள்ளன. அதற்குள் நான் அந்தச் சாலைச்சந்தியைக்
கடந்துவிட்டால் ஒன்றரை நிமிடம் மழையில் நனைந்து சுருங்கின கோழி மாதிரி
நிற்கத்தேவையில்லை. அந்த எண்களைத் துரத்தினேன்.

முன்பு என்னைத் தாண்டிச் சென்றானே, அவன் அந்தச் சாலைச் சந்தியைத்
தங்குதடையின்றி கடந்திருந்தான். அவன் தாண்டும்போது எட்டு பச்சை எண்கள்
பாக்கியிருந்தன. நான் அதற்குள் வந்து சேர்ந்து சிவப்பு எண்களின்
பிடியிலிருந்து தப்பிப்பேனோ இல்லையோ என்று தெரியவில்லை.

என் வேகத்தைக் கூட்டினேன். ஏழு, ஆறு…

பெட்ரோல் மோட்டாரின் இயந்திரத்துக்குள் மிகையாக நுழையும்படி
முறுக்கினேன். தூரும் மழைநீரையும் குளிரையும் கிழித்து பிஸ்ஸா பெட்டியின்
எடையையும் என்னுடைய எடையையும் சேர்த்து முக்கிச் சுமந்து மூச்சிரைக்க
ஓடியது மோட்டார். எனக்குத்தான் என் மோட்டார் சைக்கிள்மீது கருணையில்லாமல்
போய்விட்டிருந்தது.

நான்கு, மூன்று, இரண்டு…

சாலையின் வெண்ணிற எல்லைக்கோட்டை இன்னும் தொடவில்லை. அதைத் தாண்டாமல்
என்னால் இனிமேல் நிறுத்துவது சாத்தியம் கிடையாது. மோட்டார் சைக்கிள்
அதிவேக சக்தியுடன் நெருங்கி வந்துகொண்டிருந்த சமயம். பச்சை எண்கள்
தீருவதற்குள் என்னால் சந்தியைக் கடந்துவிடமுடியும் என்று நினைக்கிறேன்.

ஒன்று… மஞ்சள்!

இன்னும் நான் அந்த வெண்ணிற எல்லைக் கோட்டைத் தாண்டியிருக்கவில்லை.
மோட்டாரைச் சட்டென நிறுத்தவும் முடியவில்லை. மழையில் அது சாறுக்கல்
கொடுத்து பிரேக்கை வேலை செய்யவிடாமல் தடுத்துவைத்தது. அதற்குள் மோட்டார்
அந்தக் கோட்டைத் தாண்டியது, எனது கட்டளையையும் மீறி.

சிவப்பு!

நான் இன்னும் அந்தச் சந்தியைக் கடந்திருக்கவில்லை. அடுத்தச்
சந்தியிலிருந்த லோரிக்காரன் பச்சை எண்களுக்கு உரிமை கொண்டாடி வண்டியை
உந்திவிட்டான்.

நான் மோட்டாரில் கொண்டுவந்திருந்த பிஸ்ஸா பெட்டி திறந்துகொண்டு
உள்ளிருந்த இரண்டு பிஸ்ஸாக்களும் சிதறிப்பறந்தன. நிறமற்ற மழை என்னைத்
தடவிச்செல்கையில் சிவப்பு நிறத்தைப் பூண்டது. அந்தச் சிவப்பைக் கண்டு
எல்லாரும் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்; கரைந்துகொண்டிருந்த பச்சை
எண்களையும் பொருட்படுத்தாமல்.

நன்றி – வல்லினம், மலேசிய இணைய இதழ்

Series Navigation

முனிஸ்வரன், மலேசியா

முனிஸ்வரன், மலேசியா