அவன்…அவன்?

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

அதிரை தங்க செல்வராஜன்


ஏய் சாவித்திரீ ஒரு நிமிஷம் இங்கே வந்துட்டு போ.

இருங்க வரேன், தோசை கருகுனா அதுக்கும் கத்துவீங்க. என்ன தலை போற
காரியம், வேர்வையை புடவை தலைப்பில் துடைத்தவாறு ஹாலுக்கு வந்தாள்.

இந்த கருமத்தை பாரு, ஆம்பிளையோட ஆம்பிளை சேர்ந்து வாழலாமாம்
எந்த தப்பும் இல்லையாம் டெல்லி கோர்ட்ல தீர்ப்பாயிருக்காம். இதுக்கு
வெக்கமில்லாம கொடி புடிச்சுகிட்டு ஊர்வலம் போறானுக பாரு.

ஊருலகத்துல இத்தினி கேஸ¤ தீர்ப்பில்லாம கெடக்கு, இது ரொம்ப
முக்கியமாக்கும்.

“ஓரினக்காதல்,” வார்த்தைய பார்த்தியா, அசிங்கத்தை கூட அழகாச் சொல்ல
தமிழ்ல மாத்திரம்தான் முடியும்.

உங்களுக்கும் இந்த வயசில எதை பாக்குறது, பேசறதுன்னு வெவஸ்தையே
இல்லை. பொடி தொட்டுக்கிறீங்களா? இல்லை குழம்பெடுத்துட்டு வரட்டுமா?

ஏன் சட்னி அரைக்கலயா? வர வர சோம்பேறியாயிட்டே.

அதாரு நம்ம புள்ளையான்டானாட்டம் இருக்கு, என்ன சொல்றீங்க என்றவாரு
டிவியின் மிக அருகே சென்றவள், அட அவன்தான். யாரோ வெள்ளைக்காரன்
கையை புடிச்சுகிட்டு போறான்.

இவன் எங்கம்மா போனான் இந்த கூட்டத்துல.

டிவி அடுத்த செய்திக்கு தாவ, என்னங்க இது, என்று குழப்பமானாள்.

ஒத்த புள்ளையாச்சேன்னு பொத்தி பொத்தி வளத்தோமெ, பாவி பய
இப்படி பன்னிட்டானே.

சும்மா பெனாத்தாமே அவனுக்கு போனை போடு.

போன் போமாட்டேங்குதுங்க.

மத்த நேரமாயிருந்தா மாட்டை கட்டி இழு போகும்னு ஜோக்கடிக்கலாம்.

என்னதான் எம்புள்ளை மேல நம்பிக்கையிருந்தாலும், அந்த வெள்ளைகாரன்
யாரு, எதுக்கு இவன் அவங்கையை பிடிச்சுக்கிட்டு சுத்துறான்னு ஒன்னுமே
புரியலை. இந்த கசம் பிடிச்ச ஊர்வலத்துல இவனுக்கென்ன வேலை.

முப்பத்து நாலு வயசாச்சு, எந்த ஜாதகம் வந்தாலும் பொருந்தலை, குரு பெயர்ச்சியோட
எல்லாம் சரியாகும்னாங்க, அவன் நேரம், குரு பெயருது, வரன் பெயரல.

ஏதாவது லவ்வு கிவ்வு இருந்தா சொல்லுடா அதையே முடிச்சிபுடுவோம்.
அட போங்கப்பா, நீங்களே பார்த்து முடிங்க, அமையரப்போ அமையட்டும்னு
சொன்னானே, இப்ப இப்படி ஆயிடுச்சே.

சரி வேலைய பாரு, அது அவனா இருக்காது. வாய் சொன்னாலும் மனசு குழப்ப
கும்மாளமிட்டது. நாளைக்கு காலையிலெ ஒத்தொத்தனா விசாரிக்க வந்துருவான்.
என்னத்த சொல்ல.

ஈ யிலேந்து மனுஷன் வரைக்கும் இந்த பழக்கமிருக்குன்றான். இவனுக்கெப்படி
பொம்பளைய பிடிக்காம போச்சு. நம்ம ஊரு பொண்ணுவ ஒன்னும் மொத்தமா
கலாச்சாரம் கெட்டு கெடக்கலையே. நல்லதும் கெட்டதும் கலந்து தானே இருக்குது.

இந்த அரசாங்கத்துக்கும் ஏந்தான் இப்படி புத்தி கெட்டு போச்சுன்னு தெரியல.
சுதந்திரம்கிற பேர்ல எல்லா அசிங்கத்தையும் அரங்கேத்தற இங்கிலீசுகாரனே, இதை
தப்புன்னு போட்ட சட்டத்தை, கலாச்சாரத்தில தொங்கிட்டிருக்கிற நாம உடைச்சது
சரியான்னு தெரியல.

என்னங்க இன்னும் தூக்கம் வரலியா? ச்சு இவனை படிக்க வைக்காம கடையில
போட்டிருந்தா இன்னைக்கு நமக்கு இந்த குழப்பமே இல்லை.

சிகரெட், ட்ரிங்ஸ், பான்பராக் மாதிரி இந்த கஷ்டமும் ஊர் முழுக்க பரவிட்டா என்ன
பன்றது? ஏன் இதை அரசாங்கம் நினைச்சு பாக்கலை. தீர்ப்பு சொன்ன நீதிபதியும்
மனுஷந்தானே, அவர் புள்ளே இந்த வழில போனா சரிம்பாரா?

இது சரியா தப்பாங்கிறதவிட எம்புள்ள இதுல படக்கூடாதுன்னுதான் மனசு வேண்டுது.
சிலப்போ நம்ம சுயநல வாதியோன்னு தோனுது.

இந்த விசயத்தில ஒவ்வொத்தரும் சுயநலவாதியா இருந்தாலே அதுவே பொது
நலமாயிடும், இருங்க வாரேன் சாமிக்கு காசு முடிஞ்சு போட்டுட்டு.

அடிச்சு வளக்காத பிள்ளையும், ஒடிச்சு வளக்காத முருங்கையும் ஒன்னுத்துக்கும்
உதவாதும்பாங்க, அது சரியாத்தான் போச்சு போ.

முறையில்லாத காமமும், அது இல்லைனா வர்ற கோபமும், அதை எப்படியாவது
அடையனுங்கிற பேராசையும் நரகத்தோட வாசல்கள்னு பகவான் சொன்னதை
படிச்சவன்தானே, பின்ன எப்படி இதுல சிக்குனான்னு தெரியலயே.

நம்ம பார்த்த மாதிரி வேற யாராவது பார்த்திருந்தா பொண்ணு கிடைக்கிறது
குதிரை கொம்பாயிடும்.

சும்மா புலம்பாமே தூங்குங்க, நம்ம புள்ள அப்படியெல்லாம் போமாட்டான்.
காலைலே போன் பன்னா என்னான்னு தெரிஞ்சுட்டு போவுது.

உங்காத்து பையனை கூப்பிடுங்கோ, இவாத்து பையனை ட்ரஸ் மாத்தி அழைச்சுன்டு
வாங்க. மோதிர தாம்பாலத்தை ஆசிர்வாதத்துக்கு அனுப்புங்க. கெட்டி மேளம், கெட்டி
மேளம், நல்ல நேரம் முடியறதுக்குள்ளே மோதிரத்தை மாத்துங்கோ.

காலில் விழுந்த மகனையும், மற்றவனையும் என்ன சொல்லி வாழ்த்த?

வேர்வையும் மூச்சு முட்டலுமாய் எழுந்து உட்கார்ந்த போதுதான் புரிந்தது கனவென்று.

டொக்…டொடக்…டொக் கூர்க்கா வெளிக்கதவில் தட்டிச்செல்லும் ஒலி, மணி
ரெண்டிருக்கும். கடவுளே நல்ல வழி காட்டு, நிலைப்படியில் தலை வைத்து கோனலாய்
படுத்திருந்தவளை பார்க்க பாவமா இருக்கு. இது வரைக்கும் புள்ளைக்கு கல்யாணம்
கூடலயேன்னு ஒரு கவலைதான் இப்ப இடி விழுந்த மாதிரி இது ஒன்னு.

மொபைலின் சுப்ரபாதம் போர்வைச் சுற்றலில் எங்கோ இடுப்பு பகுதியில் கேட்டது.
எரிச்சலோடு கண் இடுக்கி தேடி எடுத்த போது நின்று போனது. வாசலில் தண்ணீர்
தெளித்துக் கொண்டிருந்தவளுக்கு கேட்க வாய்ப்பில்லை.

எழுந்து காபியோடு கொல்லைக்கு சென்ற போது மீன்டும் சுப்ரபாதம், என்னங்க
அவன்தான், என்றவாறு, எப்படிடா இருக்கே, நேத்திக்கு ஏம்ப்பா போனே கிடைக்கலே.
இந்தாங்க, சுமையை இளகுவாய் என் தோளுக்கு மாற்றினாள்.

வணக்கம், வணக்கம் என்னடா, போன வேலை முடிஞ்சுதா எப்ப வர்ற?
நாளான்னைக்கா.

மூளை அவசர அவசரமாய் வார்த்தைகளை தேடி பிடித்தது.

நேத்து உன்னை டிவீல பார்த்தோமே.

அடக்கஷ்டமே நீங்களும் அதை பார்த்தீங்களா?

ஜெர்மன் கிளையன்ட் அடம் பிடிச்சிட்டான், துணைக்கு வந்தே ஆகனும்னு.

டெல்லிதானே, நம்மள யாருக்குத் தெரியப்போவுதுன்னு போய் தொலைஞ்சேன்.

சரி சரி நீ ஒன்னும் கவலை படாதே, நல்லபடியா வந்து சேரு.

எங்கம்மா ஈரத்தலையோட கிளம்பிட்டே?

எல்லாம் நல்லபடியா தெளிவிச்ச பெருமாளுக்கு ஒரு அர்ச்சனை செஞ்சுட்டு
வந்துடுறேன்.

ts23071965@yahoo.co.in

Series Navigation

அதிரை தங்க செல்வராஜன்

அதிரை தங்க செல்வராஜன்