திவசம் @ டோம்பிவிலி – அவுட்சோர்ஸிங் (Outsourcing)

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

கே. ஆர். மணி



அப்பாவிற்கு திவசம் போடவேண்டியிருந்தது. புதுதாய் வாங்கிய வீட்டின் முதல் விசேடமாக அது அமைய வேண்டாமென அம்மா விரும்பியதால் டோம்பிவிலியில் ஒரு மாமியிடம் அவுட்சோர்ஸிங் (Outsourcing) செய்துவிடலாம் என்று முடிவாயிற்று. எல்லாமே வாத்தியார் மாமா செட்டப்தான். வெறும் துண்டோடும், துட்டோடும் போனால் போதும், மற்ற எல்லாம் துட்டுக்கேற்றபடி கிடைத்துவிடும். வாத்தியார் சொன்ன ஆத்திலே(வீட்டிலே) குளித்து மடியாய் (அதென்ன மடி.. எதை மடிக்க) மடியை மடித்துக்கொண்டு உட்கார்ந்தால்போதும், மற்றபடி தேவபாசைகளை துட்டிக்கேற்ப வாத்தியார் வழக்கம்போல கவனித்துக்கொள்வார். தாம்பாலம், துளசி, சந்தனம், அரிசி, எள்ளு, சில்லறை, சின்ன சின்ன பாத்திரங்கள், தொன்ணை செய்ய இலை, அதை நறுக்க சின்னதாய் சிசர், அதில் சொருக
ஈர்க்குச்சி எல்லாம் வாத்தியார் கொண்டுவந்துவிடுவார். மடியாய் பட்சணம், திவச சமையல் எல்லாம் திவசமாமி கவனித்துக் கொள்வார்கள். தேவபாசைகளின் பலத்தின்பேரில் எந்த விலாசத்தொந்தரவும், ரயில் தொந்திரவுமில்லாமல் எங்களின் மூன்று தலைமுறையும் டோம்பிவிலி திவச வீட்டிற்கு வருசசாப்பாட்டிற்கு வருகை தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை, பின்ன தேவபாசைன்ன சும்மாவா..

அம்மாவிற்கு ஆச்சரியமான ஆச்சரியம். ‘மும்பைல துட்டு கொடுத்தா திதி என்ன, அம்மா, அப்பா கிடைச்சாலும் ஆச்சரியமில்லை போல’ என்றாள். விலைக்கு விந்தும், கர்ப்பைப்பையும் உண்மையிலே கிடைக்கிறதென்று நான் சொன்னதை அம்மா விளையாட்டுக்காக சொன்னதாய் நினைத்துக்கொண்டுவிட்டாள். அதைவிட ஆச்சரியமும், அதிர்ச்சியும், வருசத்திற்கொருதடவை வந்துவிட்டுப்போகும் ஆவிருபமான அப்பாவுக்குத்தான். அந்த மும்பை திவசத்திற்குப் பிறகு, வந்த எல்லா திவசங்களுக்கும் முன்னாடியே அம்மாவின் கனவில் வந்து எல்லாவற்றையும் செக் செய்யாமல் வருவதேயில்லை என்று தீர்க்கமான முடிவு கொண்டுவிட்டார். இப்படிப்பட்ட திவச சாப்பாடிற்கு பதிலாக லங்கணம் பரம ஜூவிதம், கொலைப்பட்டினி பரவாயில்லை என்று முடிவு கட்டிருக்கலாம். அவுட்சோர்ஸிங் தடைசெய்யப்படவேண்டும் என்று பேசுகிற ஜார்ஜ் புஸ்ஸை ஆதரிக்க கூட இப்போது தயாராகயிருப்பதாக கேள்வி.

காலையில் லோக்கல் மின்வண்டி பிடித்திறங்கி அந்த பிளாட்டில் புகுந்தோம். வழியில் நின்று நெம்பர் பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்த சின்னப்பெண் வந்தது.

‘இங்க லோகுமாமியாம் எங்கே..’ நான் தமிழிலே கேட்டேன்..
‘ எங்காம்த்தான். வாங்கோ.. வாங்கோ’ இரண்டாவது புளோருக்கு கூட்டிப்போனாள்.
‘அம்மா.. தானேயிலிருந்து திவச மாமா வந்திருக்கா..’ சொல்லிக்கொண்டே உள்ளே போனது.
‘வாங்கோ, வாங்கோ..’ மாமி சிரித்துக்கொண்டே வழியில் நின்றவாறே சொல்லிக்கொண்டேயிருந்தாள்.
‘அம்மா. அவாளுக்கு ‘இடஓதுக்கீடு’ கொடும்மா.’ என்றாள் அந்தப்பெண். அந்த தூயதமிழிலும் அர்த்ததிலும் ஒரு நொடி அசைக்கப்பட்டோம்.

‘என்னது.. என்னம்மா..சொல்றே’ அண்ணா கேட்டான் கொஞ்சம் அதிர்ச்சியாய்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. என்னை வழி விடுங்கோன்னு சொல்றா. சன் டிவி நியூஸெல்லாம் தவறாம பாப்பா.. நல்ல தமிழும் பேசுவா.. ‘ மாமியின் சமாளிபிகேஸன். இடம் ஓதுக்கிடு செய்தால்தான் நாங்கள் உள்ளே போக வழிகிடைக்கும். ஆகா.. என்ன சமுதாய தத்துவம்..தமிழ்த்தாய் எங்கள் முன் கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடி வரவேற்பதாய் மாயை. தாத்தாவிற்கு தமிழ் என்றால் உயிர். பாவம் மணிப்பிரவாள தமிழ் கேட்டவர் அரபிக்கடலோர சன் டிவீ உபய மும்பை தமிழ் கேட்டிருந்தால் அந்தப்பெண்ணை வயதையும் மீறி சாஸ்டாங்கமாய் நமஸ்கரித்திருப்பார். அந்தப்பெண் ஏதோ மாபெரும் காவிய இயற்றிய பில்டப்பில் அநியாயத்திற்கு பெருமையாய் சிரித்ததுதான் கொஞ்சம் பயமாயிருந்தது. தேவாரமும், திருப்பாவையும் சொல்லிக்கொடுத்து தமிழில் தேய்ந்து கிடக்கும் அம்மா,
இடஓதுக்கிட்டுத்தமிழ் கேட்டு மெல்ல இடிந்துபோனாள். வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. எப்படியோ நாங்கள் ஒரு நரசுஸ் காப்பியில் சிரமப்பரிகாரம் பண்ணிக்கொண்டு எங்கள் பித்ருக்களை வரவேற்கத்தயாராணோம்.

அது ஒரு ரூம் கிட்சன். ரூமில் அடைசல். சுவரில் பாலிவுட் நட்சத்திரங்கள். பாத்ரூமில் பாதிபாத்திரம். மீதி கழிப்பறை. பாத்திரத்தின்மீது நின்று கொண்டு குளியல். கொஞ்சநாளுக்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாலும் யாரோ அப்படி நின்று கொண்டு குளித்திருப்பார்கள், அதில்தான் அப்பாவின் பட்சணங்கள் தயாராகின்றன என்ற நினைப்பே அப்பாவின் மீதான பரிதாபத்தை அதிகப்படுத்தியது.

எங்கள் வீட்டில் நடக்கிற திவச ரகளை அந்த ஏரியாவுக்கே தெரியும். தான் போடுகிற சிரார்த்தத்தில் ரொம்பவும் சிரத்தை கொள்ளும் அப்பா, அம்மாவிற்கு பட்சணம் செய்து கொடுக்க காலை மூன்றுக்கு எழுந்து பொதுக்கிணத்தில் குளித்து, மடியாய் ஜலம் கொண்டுவந்து, ஈர துணியோடு வடைக்கு அரைத்தல், பாத்திரத்தை அலும்புதல், தேங்காய் துருவல் போன்ற லேபர் வேலைகளை ரொம்பவே மடியாக செய்து கொடுப்பார். அதற்குப்பிறகு ஒரு குளியல், பின் வாத்தியார் வந்ததும் ஒரு குளியல். ஆக குறைந்தது மூன்று குளியலாவதிருக்கும்.

அப்பாவின் சுத்தம் பார்த்து மற்றவர்கள் பெருமைப்பட அம்மா ஆனந்த கண்ணீர் மல்குவார். பின்ன கிணத்து ஜலத்தை அள்ளிக்கொட்டுவது அம்மாவாயிற்றே. அம்மா திவச காரியத்திற்கு ஏதாவது பக்கத்திலிருக்கும் தூரம்(!) போன மாமியை உதவிக்கு வைத்துக்கொள்ளலாம். தேவைக்கு மீறி எதாவது அபச்சாரம் ஏற்பட்டு அதிகம் குளிக்கவேண்டியிருந்தால் அது அன்றைய டாக் ஆப் த டேயாகவும் அது பேசப்படும். அன்று தெருவில் அவரது நடை, உடை, பாவனை எல்லாம் மேன் ஆப் த மேட்ச் வாங்கப்போகிற கிரிக்கெட் ப்ளேயர் போலயிருக்கும்.

சுவரிலுள்ள மற்ற படங்கள் எல்லாம் கழற்றப்பட்டு தாத்தா, பாட்டி படம் மட்டும் மாட்டப்படும். விஸ்ணு இலைக்காக மட்டும் பாஸ்போர்ட் சைசு குஞ்சு குருவாயூரப்பன் எந்த ஜட்டி போடாமலிருக்கும் படம் வெளியே வைக்கப்படும். பாட்டிக்கு அந்தப்படம் ரொம்ப பிடிக்குமென்பதால் அந்தப்படத்திற்கு மட்டும் விதிவிலக்கு. எந்தப்படம் வைக்கப்படவேண்டும், பாத்திரம் எப்படி கழுவப்படவேண்டும் குழந்தைகள் எப்போது உள்ளே வரவேண்டும் என்கிற வரைமுறைகள் அப்பாவின் ராசங்கத்தில் அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும். கோமு பாட்டி வந்து கனவில் ஏதாவது உத்திரவு கொடுத்துவிட்டு போனார்களா என்று நாங்கள் நினைக்கும் அளவிற்கு மர்மம் நிரம்பியதாகயிருக்கும். ‘ இருக்கும்போதே தாலிய அறுத்தா.. இப்ப இழவு.. வருசாப்தியோட போட்டோம் ‘ என்று அம்மாவின் முணகல் டெசிபல் ஒவ்வொரு வருடம் உயர்ந்தது அவளது தைரியம் உயர்ந்ததையும் அப்பாவிடம் இங்கிதம் அதிகரித்தையும் காட்டியது. அம்மாவின் திவச உழைப்பிற்கு மறு நாளுக்கு மறுநாள் தனியாய் அணைப்பாய் குழைவாய் சன்மானம் தர அப்பா மறந்ததேயில்லை. அம்மா அந்த அன்பான அங்கீகாரத்திற்குத்தான் அத்தனை திவசங்களையும் பொறுத்துக் கொண்டிருக்கலாம். ‘ரொம்ப படுத்திட்டுனாடி கோந்த’ ‘ச்சீ அதெல்லாம் ஓண்னில்லைன்ணா..’ அம்மா குழைந்து உருகிவிடுவாள். அடுத்த திவசத்திற்கு ஆயுத்தமாகிவிடுவாள், புலம்பலோடு.

இப்போது டோம்பிவிலியில் ஓரே குளியல்தான். அதுவும் பாதி பாத்ரூமில் பாத்திரங்களுக்கு மேலே. வெளியே வந்தால் சல்மான்கானும், ஸருக்கானும், பாதி முதுகு காட்டிக்கொண்டு மாதுரியும், ஒல்லியாய் இருந்த ஊர்மிளாவும் எங்களை விடாமல் சிரித்து துரத்தினார்கள். அப்பாவிற்கு ஒல்லியாக யாரையும் அவ்வளவாக பிடிக்காது. மாதுரியை இவ்வளவு முதுகு காண்பித்ததாலும், இடுப்பை வளைத்து இவ்வளவு பெரிதாக காட்டுவதாலும் மன்னிக்கலாம். ஊர்மீளா மீது அவருக்கு கோபம் கண்டிப்பாய் வர வாய்ப்பிருக்கிறது. பின்ன ஏற்கனவே இவ்வளவு ஒல்லி, அதிலயும் இவ்வளவு பெரிசா காலை காட்டிக்கணுமா.. நடிகை சரிதாவை ஏதோ ரொம்பவே அப்பாவிற்கு பிடித்துப்போயிருந்தது.

பட்.. யாரை என்னதான் பிடித்திருந்தாலும் திவச சாப்பாட்டிற்கு வேற மனுசாளா வீட்டிக்குள்ள விடுணுமாடி.. என்று அப்பா கடிந்து
கொள்வாரோ என்கிற பயம் அம்மாவிடம் மெல்ல குடிகொண்டிருந்தது. என்ன ‘கான்’ பேமிலியோடு லஞ்சு செய்யும் பாக்கியம் ராமகிருஸ்ண கனபாடிகள் குடும்பத்திற்கு ஏற்பட்டதற்கு அந்த இடஓதுக்கிடு பெண்தான் காரணம். அந்த ரூமில் எங்களது மூன்று தலைமுறைகள் சாப்பிடுவதை பார்த்தது உண்மையில் கான் வகையறாக்களுக்கு பெரிய கொடுப்பினைதான். அதன்பிறகு தான் ஒரு கான் மானை சுட்டுவிட்டு சிறைக்கும், மற்றொரு கான் மார்க்கெட்டும் போயிற்று என்று நீங்கள் சொன்னால் நான் கேட்டுக் கொள்ளப்போவதில்லை.

“எங்காத்து பெண்ணுக்கு இவான்னா..ரொம்ப பிடிக்கும்..பாட்டெல்லாம்.. அப்படி பாடுவா..” மாமி வடைதட்டிக்கொண்டே பேசினாள்.
அது ஓரமாய் நின்று ரெண்டுகெட்டானாய் பெருமையாய் சிரிப்பு வேற சிரித்தது.மாதுரி ஸ்டைலில் கொண்டை வேறு போட்டிருந்தது.
‘அப்படியே மாதுரி மாதிரியே சோலிகே பாட்டுக்கு ஆடுவள்’ என்றாள் மாமி.
‘அப்படியா.. குட்.. குட்.. ‘ அண்ணா ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காய் சொன்னான்.
நல்லவேளை அவள் எதுவும் அப்படி ஆடிவிடவில்லை..
ஆடியிருந்தால் “…ளி, இதென்ன.. ..டியா குடியா..” என்று மாதுரியை என் ரிக்வேத தாத்தா அதர்வண பாசையில் அர்சித்திருக்கலாம்.

நல்லவேளை மாதுரி அந்தமாதிரி எந்த வசவும் வாங்காமல் எம்.எப்.ஹைசைன் கண்டத்திலிருந்தும் தப்பி குடியும் குடித்தனமாய்
செட்டிலானது எங்கள் ராமகிருஸ்ண கானபாடிகள் குடும்பத்தின் ஆசிர்வாதம் என்று சொன்னால் நீங்கள் சீரிப்பீர்கள். கவலையில்லை.
எல்லா பாலிவுட் கடவுளர்களையும் அந்த பெண் சிரித்தபடியே பார்த்து, ஓரு கதாநாயகர்களுக்கு ஓரு பாட்டின் இரண்டு வரிவீதம்
தனக்குள்ளே பாடிக்கொண்டது.

எங்கள் பாட்டி நாங்கள் பார்க்கவே சாப்பிடமாட்டாள். எங்களையே இரவு படுக்கப்போகுமுன் தான் பேன் பார்க்கமட்டுமே தொடுவாள்.
‘பிண்ட பித்ருன்னு..’ என்னடா இரப்பாளி, கடங்காரா, கண்ட கட்டைல போறவன் போட்டோவ வெச்சுண்டு எனக்கு என்னடா திதி
வேண்டிக்கிடக்கு. இருந்தப்போ எத்தனை கோட்ட வரப்பாடோட இருந்தவடா’ என்று எந்த டப்பிங்குமில்லாமல் பாட்டி பேச ஆரம்பித்தால், சல்மான் சட்டை போட ஆரம்பிக்கலாம். ஸருக்கான் ஜென்மத்தில் எந்த தமிழ் படத்திலும் நடிக்கமாட்டேனென்று முடிவுக்குவரலாம்.

நாங்கள் பய பக்தியோடு பிதிர்களுக்காக காத்திருக்க வாத்தியார் வந்தார். ஆரம்பித்தார். விஸ்ணு இலைக்கும், அப்பாவின் தூதராகவும் இரு மாமாக்கள் வந்தார்கள். சீக்கிரம் முடித்துவிட்டு அடுத்த இரண்டு இடத்திற்கு ஒரு சுப, மற்றொருஅசுப காரியத்திற்கு அவர்கள் போகவேண்டும். சினிமாவில் எக்ஸ்ட்ரா ஆக்டர்கள் மாதிரி. எல்லாம் டோம்பிவிலி வாத்தியார் எக்ஸேன்ஸில் (Exchange) இன்றைக்கு கிடைத்த இரு வேதவித்துகள். பொதுவாக வெகு காலையில் அவர்களது மீட்டிங் வேதவிற்பனை ஆரம்பிக்கும். அப்போது மொபைல்கள் இல்லாத காலம். ஆகவே டோம்பிவிலியில் ஓன்னாம் நம்பர் ப்ளார்ட்பார்மில் பேசி அவர்களது வேத கனத்திற்கும், வேட்டி கனத்திற்குமேற்ப அப்பாயிண்ட்மெண்டுகள் வைத்துக்கொண்டுவிடுவார்கள். நேற்றைய தட்சணையின் பங்கும் டிமேட் அக்கவுண்டு இல்லாமல் செட்டில் செய்யப்பட்டு விடும். எல்லாம் ஒரு சில சீனியர் வாத்தியார்களின் லாபியில் மேற்பார்வையில் நிகழும். இப்போதெல்லாம் குறுஞ்செய்தியிலேயே (SMS) எல்லா தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது என்பது ஆச்சரியமான விசயமல்ல. ஒரு வாத்தியார் மாமாவின் குறுஞ்செய்தியை இப்போது கள்ளத்தனமாக படித்தபோது, ” கிட்டு Tomo..5.30 GP ஹோமம்.. 7.30 திவசம்.. வாழைக்காய். நோ ஹோமம்@ chembur, 11.30 கிரகபிரவேசம் நேருல் மாமியாத்தில். எல்லா சாமானும் கொண்டு வரும். பழைய வேட்டி, புது கமல் சாங்க் MP3ல் blue toothல் காப்பி பண்ணிக்கிறேன்..”

அன்றைக்கு எழுந்தருளியிருந்த (வந்த) மகாவிஸ்ணு ரொம்ப இளைஞனாயிருந்தார். பின்ன மகாவிஸ்ணுயில்லையா. பெர்முடாஸ் மாதிரியான ஒரு சிக்ஸ்பாக்கெட் பேண்டும், ரீபேக் டிசர்ட்டும் போட்டுக்கொண்டு வந்திருந்தார். அது மப்டி உடைபோல

‘என்னடி மகாவிஸ்ணு இப்படி..’ அப்பா அதிர்ந்து போயிருக்கவேண்டும். அவர் சிரார்த்தம் போடும்போது மகாவிஸ்ணு இலைக்கு உட்காருபவனை அப்பா அலசி அலசி தேர்ந்தெடுப்பார். அன்றைக்கு அந்த இலைக்கு உட்கார்ந்தவரை பார்த்து ஆவி ரூபத்திலிருந்து எழுந்துவந்து அவன் கழுத்தை பிடித்து தள்ளி வெளியேற்றிவிடுவார் என்று எங்களுக்கெல்லாம் பயமாய்த்தானிருந்தது.

எவ்வளவு பெரிய போஸ்ட் மகாவிஸ்ணு போஸ்ட். அதை ஓவ்வொரு வருடமும் தன்னை கூச்சப்படாமல் புகழும் நபருக்கே
கொடுத்து கெளரவிப்பார் அப்பா. சாகித்யா, கலைமாமணி விருதுக்கு இணையான அரசியல் அந்த மகாவிஸ்ணு இலைக்கு
தேர்ந்தெடுக்கும் நபரில் இருக்கும். சாப்பாட்டிற்கு பின்னான திவச அந்தணர்களை சுற்றும்போது மகாவிஸ்ணு இலைக்காரரால்
ஒரு பெக்கு, ஒரு டோஸ் அதிகமாகவே தான் புகழவேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பு. தஞ்சாவூர்காரர்களை தவிர்த்துவிடுவார்.
ரொம்ப வாயை புடுங்கி கேட்டதற்கு, ‘அவா புகழறாளா, காலை வாரளான்னே தெரியாது ‘ என்று பட்டும் படாமலும் சொன்னார்.
மொத்தத்தில் சனாதனதர்மத்தை இந்த பூவுலகத்தில் தான் மட்டும் கடைபிடிப்பதால் வானிலை அறிக்கைகளை மீறியும் வருடம்
மும்மாரி பொழிகிறது என்பதற்கு இணையான புகழ்வார்த்தைகளை மகாவிஸ்ணு இலைக்காரர் சொல்லிவிடவேண்டும் என்கிற
பேராவா பூர்த்திசெய்யப்பட்டுவிடும். ஆனால் அன்றைக்கு அந்த இலைக்கு உட்கார்ந்தவரை பார்த்தால் அப்பா ஆவி ரூபத்திலிருந்து
கண்டிப்பாய் கன்வர்டாகி மனுதரூபத்திற்கு மாறிவிடுவார் என்று நாங்கள் ரொம்பவே பயப்பட்டோம்.

அம்மா அதிகமாகவே பயப்பட்டாள். அம்மா அப்பாவின் ‘மறு எழுச்சி’ பற்றி இப்போதெல்லாம் அதிகமாகவே பயப்படுகிறாள்.மூன்றுநாள் கழித்து எழுந்து வர அப்பா மேரிமைந்தனல்ல என்று ஆசுவாசப்படுத்தவேண்டியிருக்கிறது. ஏன் பயம் ? பின்னேயிருக்காதா. அப்பா ஒன்னுவிட்ட, விடாத ஒரு துட்டுக்கும் பிரயோசனப்படாத சித்தப்பா, சித்தி எல்லோருக்கும் ப்ரி கொள்ளியும் தவறாமல் அக்னிஹோத்திர திவசமும் பண்ணும் பொருட்டு அம்மா தாலியை அவர் இருக்கும்போதே சிம்பாலிக்காக அறுப்பார். கடனோ, உடனோ வாங்கி பித்ரு காரியங்களுக்கு குறைவைக்க கூடாதென்பதில் அவர் உறுதி எந்த வெப்பத்திலும் உருகாத இரும்பு போன்றது. அந்த கடுப்பில் ‘அந்த மனிசன் போனதற்கப்புறம் ஒரு திவசத்தோடு போயிடுத்தே.. இருந்தா ஒரு ஆறு ஏழு சொல்லி கழுத்தை அறுத்துருவாரே’ என்று நினைத்து கண்கலங்குவதை அப்பாவை அன்பாய் நினைத்து கண்கலங்குவதாய் வாத்தியார்மாமா எண்ணி, உங்க அப்பா என்ன பெரிய மனுஸன்யா.. க்ரேட்.. என்று ஏதோ போட்ட சாப்பாட்டிற்கு பில்டப் கொடுத்துவிட்டு போவார்.அப்பாவிற்கு ஓவ்வொரு திவசத்திற்கும் கிடைக்கும் இதுபோன்ற பாராட்டே மிகப்பெரிய பலமாயிருக்கவேண்டும்.

மகாவிஸ்ணு போஸ்ட் எவ்வளவு பெரிய போஸ்ட் அது !

அப்படிப்பட்ட அக்னிஹோத்திரி, ஒபாச ஹோமமும் செய்த அப்பாவிற்கு ‘ பில்டர் அக்னி ஹோத்திரி’ மகாவிஸ்ணு கிடைத்தது பிரபஞ்சத்தின் முரணயிங்கல் என்றுதான் அப்பாவிற்கு பிடித்த காரல் மார்க்சு சொன்னபடி சொல்லவேண்டியிருக்கிறது. அன்றைய டோம்பிவிலி மகாவிஸ்ணு கோல்டுபிளாக்கும், திப்பெட்டியும் வெளியே தெரியும் வெள்ளைச்சட்டையும், பெர்மூடாஸிமாக உட்கார்ந்திருந்தது பகவானின் சங்கல்பாகமாகத்தானிருக்கவேண்டும். ஹோமப்புகையையும் மீறி நேற்றைய இரவின் சோமபானம் கண்களில் கொஞ்சம் மிச்சமிருந்தது.

‘அப்பம், வடை , எள்ளுருண்டை அச்சா சைட் டிஸ்ரே- க்யா’ என்று அவர் வாத்தியர் மாமாவை கேட்டதுதான் கொஞ்சம்
அதிகமாயிருந்தது. நல்லவேளை தேவபாசை மட்டுமே தெரியும் நிலையிலிருக்கும் அப்பாவிற்கு சைட் டிஸ் சமாச்சாரம் கேட்டிருக்காது.

திவசம் களை கட்டியது. அண்ணா தனக்கு தெரிந்த ஸ்லோகங்களை சொல்லி வாத்தியாரின் முகத்திலிருந்து புன்முறுவலை
சம்பாதிக்க முயற்சி செய்துகொண்டிருந்தான். பத்துவருசம் திவசம் போட்டால், படிக்காதவனும் வாத்தியாராகிவிடலாம். ஒரே வழக்கம், பேட்டன். ஸங்கல்பம், ஹோமம், மூணு ரோவில் சாதப்பிண்டங்கள் அதே நெய்மணம். ஒருவழியாய் தேவபாசை வகுப்பு முடிவடைந்தது. கண்டிப்பாய் நெய் மணமும், வார்த்தைகளும் அதிக செலவில்லாமல் பூமி, ஸ்டேட்டோஸ்பியர் தாண்டி நாஸாவில் கண்டுபிடிக்கமுடியாத தேவலோகத்திற்கு போயிருக்க வேண்டும்.

அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லோரும் சம்பதி சமேதராய் வந்துவிட்டார்கள். புதுயிடம், நோக்கியா ஈயர் ரிங்கோடு ஈ-70 மாடல் வைத்திருந்த புதுவாத்தியார் மாமா, இளமை ததும்பும் மகாவிஸ்ணு, அசமஞ்சமாய் தனது களைக்கு கொஞ்சம் கூட பொருந்தாத ஒரு மாமா. இதையெல்லாம் தரிசித்த அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லோர் முகத்திலும் ஆச்சரியம் தெரிந்தது. அது எங்களுக்கும் தெரிந்தது.

‘கொஞ்சம் அட்ஸ்ட் பண்ணிக்கங்கோண்ணா இது அவுட்சோர்ஸிங் திவசம். அடுத்த தடவை நம்ம சொந்தாத்தில போடறப்போ இதெல்லாம் காம்மன்சேட் பண்ணிர்றேன்’ என்று அம்மா வேண்டிகொண்டதற்கிணங்க அவர்கள் அமைதியாய் ஏற்றுக்கொண்டார்கள். பின்ன அவர்கள் தேவர்களல்லவா இப்போது,
‘என்னடே, இழவு.திவசம் தா..ளி.’ என்று தாத்தா கத்தவா செய்வார். .
“குவாலிடி செக்கிங்கும், சர்வீஸ் அக்ரிமெண்டும் போடாமே எப்படி ஆர்டர் கொடுத்த” என்று அப்பா ரூல் பேசாததற்கும் காரணம் அவர்கள் தெய்வ ருபணெ – யில்லையா..

இத்தனை தவறுகளுக்கப்பிறமும் அப்பா மறுபடி ஹோமகுண்ட புகையிலிருந்து மலர்ந்தெழவில்லை. அப்படி எதுவும் நடக்காதது
அவர்கள் எங்களுக்கு செய்த மிகப் பெரிய ஆசிர்வாதம்தான். ஒருவேளை முதன்முதலாய் தமிழ் நாட்டுக்கு வெளியே கூட்டிக்கொண்டு வந்ததாலும் மும்பையில் இப்படியெல்லாம் இருக்கலாம் என்று அவர்களும் புரிந்துகொண்டிருக்கலாம்.திவசம் சாப்பிட்டுவிட்டு மெல்ல இண்டியா கேட்வே, மெரிண்ட் டிரைவ், மகாலட்சுமி கோவில், மாதுங்கா, செம்பூர் என்று சுற்றி பார்க்கும் அவசரத்திலும் இதையெல்லாம் அவர்கள் அட்ஸஸ்ட் செய்துகொண்டிருக்கலாம்.

ஆவிரூபமாக அவர்கள் சாப்பிட்டு இடத்தை காலி செய்தபிறகு, வாத்தியார் படைகளுக்கான சாப்பாடு தொடர்ந்தது. மாமி அளவுபார்த்து, ஆளைப்பார்த்து குக்கர் வைத்தார். அன்று பார்த்து கேஸ் தீர்ந்து போனது எங்களது பித்ருக்களின் பேட்லக்தான். பக்கத்துவீட்டிலிருந்து கேஸ் எடுத்து வந்து செய்வதற்குள் இருந்த இடைப்பட்ட நேரத்தில், இடது கையாலே மகாவிஸ்ணுவும், பித்ரு ரூபணே மாமாவும் ‘தீன்பத்தி’ சீட்டு விளையாட ஆரம்பித்தார்கள். வலது கையால் பாயசம் அதுபாட்டு போய்கொண்டிருக்க இடது கையால் சீட்டுவிளையாட்டும் எங்களையெல்லாம் பரசவப்படுத்தியது. அம்மாவிற்கு கோபம் கோபமாய் வந்தது, அந்த விளையாட்டு புரியாததால். ரம்மி விளையாண்டிருந்தால் ஒரு கை போட்டிருப்பாள்.

மோர் சாதத்திற்கு சுடச்சுட சாதம் வந்தது. பித்ரு ரூபத்திலிருந்த மாமா சாப்பாட்டுக்கு முன் ஒரு பத்துமாத்திரைகளும் அதற்குபின் ஒரு நாலு மாத்திரைகளும் எடுத்துக்கொண்டார். தனது உடல் நிலையை மீறியும் பித்ருக்களின் வயிறு நிறையவேண்டுமென்ற அவரது தொழில்பக்தி எங்களையெல்லாம் பரவசப்படுத்தியது. பின்ன எங்களது மூன்று தலைமுறைக்கும் அதுவும் ஒரு வருசத்திற்கும் சேர்த்து அவர் சாப்பிடவேண்டுமல்லவா..

அதற்கப்பின் எங்களது சாப்பாட்டுக்கடை ஆரம்பித்தது. அப்போது என் தம்பி தேவையில்லாமல், எங்கள் குடும்பத்தையே சுழற்று
போடக்கூடிய கேள்வியை கேட்டான், அந்த சின்னப்பெண்ணைப்பார்த்து,

‘ஏன்ம்மா.. பாட்டு எதுவும் படிக்கிறீயா..’ அந்த மாமிக்கு ரொம்ப பெருமை..
‘ ஆமாம். ஆமாம்.. கோந்தே. கேக்கறாளேள்ளியோ..ஏதாவது பாடும்ம..கூச்சப்படாம பாடும்மா..’
அந்த பெண் வசதியாய் உட்கார்ந்து கொண்டு, பாஸ்ட் பெளலரின் வார்ம் அப் ரன்போல தொண்டையை
கணைத்துக்கொண்டது.
“குழந்தைக்கு சபை கூச்சம் பாவம்.. ” மாமி இடைவெளி நிரப்பினாள். படத்திற்கு முன்னான ட்ரெயிலர் போல.
அந்த இரண்டுங்கெட்டான் திருவாய் மலர்ந்து பாட ஆரம்பித்தது.

‘திருப்பதி ஏழுமலை வேங்கடேசா..
டம்சுக்கு, டம்சக்கு.. டம்சக்கு..
எங்களுக்கு கருணை கொஞ்சம் காட்டு லேசா..
டம்சக்கு.. டம்சக்கு..
மலையேறி வந்த நாங்க.
டம்சக்கு.. டம்சக்கு.. ”
பிரபுதேவாவின் குத்துப்பாட்டு. சுருதி சுத்தமான பாவனையில் தொடையில் தாளம் போட்டு பாட ஆரம்பித்தது லேசா.ஆ..ஆ.. என்கிற முடிவில் கண்ணை மூடிக்கொண்டு நித்யசீரியாக கற்பனை பண்ணிக்கொண்டிருக்கும்போல. அப்பம், எள்ளுருண்டையின் இனிப்பையும் தாண்டி எங்கள் கண்ணில் ஸ்ரார்த்தோமான சிரார்த்தக்கண்ணீர்.

நாங்கள் விக்கித்து பார்க்க, அப்பா, தாத்தா, பாட்டி, கொள்ளுத்தாத்தா, கொள்ளுப்பாட்டி எல்லோரும் சேர்ந்து காக்கை ரூபத்தில் அழுததை பார்க்கநேர்ந்தது. அந்த மொத்த தலைமுறையை கணிசமாக வெறுக்கும் அம்மாவிற்கு கூட அவர்கள் எல்லோரும் சேர்ந்து அழுததை பார்க்க பாவமாயிருந்து, அதனால் ஓரிரு கண்ணீர்சொட்டு வந்தது. அந்த திவசத்தில் எங்கள் மூதாதையர்களெல்லாம் பேமிலி போட்டாவில் சிரிப்பதைப்போல , ஒன்றாய் அழுததை பார்க்கமுடிந்தது.

திருப்பதி ஏழுமலை வேங்கடேசா..டம்சக்கு டம்சக்கு..

—————————-

நன்றி: வடக்குவாசல் ஜீன் 2008


netwealthcreator@gmail.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி