பர்ஸாத்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


அவன்… போதும். பேர் வேணாம். வேர் வேணாம் என்று ஒதுங்கியவன் அவன். நாடோடி வாழ்வில் பிரியம் விழ உறவைப் பிரிந்தவன்… அடையாளங்கள் அற்றவன்.

அவன்.

படிப்பு ஏறத்தான் இல்லை. படி வைத்துக் கட்டாத மூளை. வீட்டு நெருக்கடி… கொசுக்கடி எனத் தாளாமல் ஓரிரவு வெளியே வந்தான். வானத்து நிலா. காற்று. தனிமை. இரவு. அதன் பிரத்யேக வாசனை.

சிறிது பசி. அதுக்கென்ன ? வா உன்னையும் கூட்டிப் போகிறேன்… என்று ஏற்றுக் கொண்டான்.

ஊரெல்லை மண்டப வளாகங்கள். திண்டுகள். திண்ணைகள். நீர்க்கரைத் திடல்கள். படித்துறைகள். மரத்தடிகள். நாணல்ப் புதர் உள்வெளிகள்… மனதைப் பறவையாய் வைத்திருந்தன அவை.

சிறகு முளைத்த மானுடன்.

படிப்பில் கவனம் இன்றி பாடத்தை எழுதிக் கொள்ளாமல் வாத்தியர் முகத்தைப் படம் வரைந்தான். கவனித்து திட்டி வெளியே முட்டிபோட அனுப்பினார் வாத்தியார். நோட்டுப் புத்தகமும் பென்சிலும் விசிறப்பட்டு வெளியே விழுந்தன.

முட்டி போட்டபடி மீதிப் படத்தை வரைந்து முடித்தான். மாலை வகுப்பு முடிந்ததும் வாத்தியார் அவனைத் தன் அறைக்கு வரச் சொன்னார்.

‘ ‘நல்லா வரையறே… ‘ ‘ என்றார். அந்தத் தாளை அப்படியே கிழித்துக் கொடுத்தான்.

மறுநாள் அவனுக்காக ஆசிரியர் காத்திருந்தார்.

அவன் பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி யிருந்தான்.

ரயில் இறங்குவான். எதோ ஊர். எந்த ஊருக்கும் அவன் பேரை கவனித்து அக்கறை காட்டியதில்லை. ஜனங்கள் யாரோடும் பேச எதுவும் இல்லாதவன். அதைப் பற்றிய விசனமும் கிடையாது அவனிடம். புன்னகை. பூத்த மனம் வெளிவீசிய மகரந்த மணம். நிலா வெளிச்சம்.

அழுகை மறந்திருந்தான்.

ஒரு பொதுக் கூட்டத் திடல். கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த வாக்கில் கண்ணில் தட்டுப்பட்டது அது – சற்று துாரத்திலான மரம். குளித்ததலை வாராத அதன் இலையெடுப்பு. சூரியன் உள்ளே இலைவழியே ஒளியை வழிய விட்டது. அருகில் இருந்த இஸ்திரி வண்டிக்காரன் வீண் என்று போட்ட கரிக்கட்டி கிடந்தது. அந்தக் காட்சியைப் படமாய் வரைந்தான். ஊர் உலகம் மறந்த கணங்கள். வரைவது பசியைக்கூட மறக்க உதவியது. அந்த ஊர் பிடித்துப் போனது ஏனோ.

பொதுக்குளம் எடுத்த ஊர். குளித்து விட்டு திரும்ப மேடைக்கு வந்தபோது வெயில் எடுத்திருந்தது. இஸ்திரிக்காரன் புன்னகை செய்தான். ‘ ‘நல்லா வரையறே ‘ ‘ என்று டா வாங்கிக் கொடுத்தான். அவனையே பக்கத்தில் வரைந்து காட்டினான். என்னவோ கிறுக்கல் மாதிரி ஆரம்பித்து… கிடுகிடுவென்று உக்கிரப்பட்டு உயிர் பெருகியது ஓவியத்துக்கு.

‘ ‘அட என் அம்மாவே… ‘ ‘ என்றான் இஸ்திரிக்காரன்.

கரிக்கட்டிகள் சேமிக்க ஆரம்பித்தான். வண்ணப் பொடிகள் சேர்க்க ஆரம்பித்தான்.

சாலையோர ஓவியங்களை ஜனங்கள் ரசித்தார்கள். காசுகள் விழுந்தன.

‘ ‘தலைவர் படம் வரைவியா ? ‘ ‘

நேயர் விருப்பம்.

சாப்பாட்டுப் பிரச்னை தீர்ந்தது.

வார்த்தைகள் தொலைந்திருந்தன அவனிடம். விரல் பேச ஆரம்பித்திருந்தது. அப்பா அம்மா உறவுக் கூட்டமே அவனுக்கு முகம் மறந்திருந்தது. எப்பவாவது நிழல்மேகமாய் ஞாபகம் மோதும். தோள்ப்பை வாரைத் தலையில் மாட்டி பள்ளிக்கூடம் போகும் சின்னப் பையனைப் பார்த்தால்… அலைகள் அல்ல, அலைச்சத்தம் உள்ளே கேட்கும். அக்பர் சாலையோரம் நிழல் தரும் மரங்கள் வளர்த்தார்… அவர் என்னா வளக்கறது. தானே வளரும் அது. அவன் அப்போதே பதில் எழுதினான்- அக்பர் தாடி வளர்த்தார்!

வசீகரப் பொய்கள் சுமந்த வாழ்க்கை. திடாரென்று வரைவதை நிறுத்திவிட்டு புல்வளாகங்களில், புதர் வெளிகளில் உள்ளே படுத்துக் கிடப்பான். கடும் இருளான கணங்கள். வெளிச்சம் பொங்கிய இரவுகள்… அவை அவனுக்கானவை. ஒளியின் இதமான மணத்தை நுகர்வான். இருளோவெனில் இன்னும் சிலாக்கியம். இருள் உக்கிரமான உள்ப்பார்வை கொண்டது. அதனுள் காணாமல் கரைந்து போவது அற்புத அனுபவம்…

இந்த இருளுக்குள்ளும் அவனைத் தேடிவந்து அருகில் போல அணைத்துக் கொள்ளும் சிறு சப்தங்கள் இசையொலிகளாய்க் கேட்டன. அருவியோசை. தாழம்பூ மணம். அட கெட்ட நாற்றமுங்கூட… அவற்றின் எட்டலில் ஒரு பிரிய வருடலை உணர்ந்த மனம்.

உலகம் அழகானது.

அதிகாலை போக்குவரத்து துவங்குமுன் வரைவான். பார்த்தவர்கள் மிதிக்காமல் தாண்டிப் போனதை கெளரவமாய் உணர்வான். வாழ்க்கை இத்தனை சுதந்திரமாய் எளிமையாய் அமையும் என எதிர்பார்க்கவில்லை.

மீதமிருந்தன பொழுதுகள். நடையில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமேயில்லை. நிகழ்வுகள் சாலையில் மாறிக்கொண்டே யிருந்தன. பஸ்சுக்குப் பரிதவித்துக் காத்திருக்கும் முகம். வந்தபஸ் வராதபஸ் என்று கவலையே படாத காதலன் காதலி.

வாழ்க்கையில் முரண் அம்சங்களுக்குப் பஞ்சமில்லை.

சரி என நினைப்பதும் சரி. அதே விஷயம் தவறு என நினைப்பதும் சரியே என சிரிக்கும் இயற்கை.

தண்டவாளங்களுக்கு உள்ளே வாழ்க்கை… சரி. அழகு வெளியே இறங்கிப் போயிருந்தது.

பச்சைக்கொடி காட்டும் ரயில்கார்டு. இலைகள் சிரிக்கின்றன. அட புழுதிகிளப்பிப் போகும் பஸ்சுக்குக் கையாட்டும் குழந்தை என அவை அவரை உணர்ந்தனவா ?

குளிரும் வெயிலும் மழையும் பெரும் சேதி கொண்டு வந்தன அவனுக்கு.

பறவையொலிகளின் மொழிப்பரிமாற்ற நேர்மை மனிதனிடம் கிட்டவில்லை.

இசையை இசையெனப் பெயர் சொன்னபோதே இசை செத்தொழிந்து போனது.

தங்குமிடம் என்றும் பெரிதாய் உலகில் அலட்டிக் கொள்ள ஏதும் இல்லை. உடைகளோ உணவோ ஒரு பொருட்டே அல்ல. பாஷையுங் கிடையாது.

அழகு நிரந்தரமாய்க் குடியேறிய மனம்.

உண்மையில் உறவுகளை அவன் வெறுக்கிறானா ?

அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்…

நேற்றுவரை காலியாய்க் கிடந்த மரவெளி. புது மனிதர்கள் வந்திருந்தார்கள். மூக்கு குத்தி வளையம் மாட்டிய பெண்கள். அடர் வண்ண சுரிதார் அணிந்து நெற்றியில் நீல நிற குங்குமம் அணிந்திருந்த பெண்கள். மூதாட்டிகள் இடுப்புப் பக்கம் துட்டு வைக்க பை வைத்த சட்டை, சீட்டிப் பாவாடை அணிந்து விநோத காதுவளையம் வளையல் வளையங்கள் சுமந்திருக்கிறார்கள்…

துாரப் பார்வைக்கே வரைய ஆசை கொண்டான்.

ரஜபுதன மக்கள். கடும் உழைப்பாளிகள். பாலைவன பூமி. செருப்பணியாமல் வெயில் பொசுக்கும் மணல்வெளியில் கல்குத்தும் தரை கடந்து ஆழஆழத்தில் இருந்து நீர் இறைத்துக் கொணர்கிற ஜனங்கள். வாழ்வின் மிரட்டல்கள் முன் மண்டியிடாதவர்கள்…

கண்ணாடிச் சில்லில் சாண்டிலியர், பீங்கான் பொருட்கள், பிரம்பில் நாற்காலி- கூடை – என விற்க அடுக்கினார்கள்.

இந்தி தெரியாது அவனுக்கு. புரியாத பாஷையைப் பறவையொலியாய்க் குறித்துக் கொண்ட மனம் வேடிக்கை பார்த்தது தன்னைப்போல.

தனிப்பெரும் முண்டாசுக்கார ஆண்கள். அவர்களின் பஞ்சகச்ச ஆடையுடுத்தல். அழுக்கு. குளிக்காத… பல்கூட சரியாய் விளக்காத ஜனங்கள். யாரிடமும் வாழ்வு சார்ந்த அந்த சுமையுணர்வு இல்லை என்பதே பிடித்திருந்தது. மனசில் ஒட்டுதல் கண்ட கணங்கள்.

இருளில் சிறுகூடாரம் காற்றுக்கு மூச்செடுத்து விம்மித் தணிவது கவிதை. அரிக்கன் விளக்கின் சிற்றொளியில் மூக்குவளைய இளம் பெண் பொன்னென ஜொலித்தாள்.

கூடாரம் அருகே சிறு தீ மூட்டி சப்பாத்தி செய்கிறார்கள். பசி என அதைக் கேட்டுச் சாப்பிட மனம் ஏங்கியது ஆச்சரியமாய் இருந்தது. பையில் துட்டு கிடந்தது.

நாறுகிறது மீன் விற்ற காசு.

சற்று துாரத்தில் அமர்ந்து கொண்டான். விடியல் துவங்கும் காலை. காகிதத்தில் கரி ஓடியது பரபரப்பாய்.

அந்தக் கிழவன் முகத்தில்தான் எத்தனை சுருக்கங்கள். அனுபவ முத்திரைகள்.

முதன் முதலாய் சுயம் துறந்து கிட்டேபோய் நின்று அந்தப் பெண்ணிடம் காட்டினான். தீ வெளிச்சத்தில் பெண் முகம். பீடிகங்கு பொங்க கிழவன். முக்காட்டை நேர்செய்யும் மூதாட்டி.

பிரம்புச் சேரில் உட்காரச் சொல்லி சப்பாத்தி தந்தார்கள். பேசிக்கொள்ள எதுவும் இல்லைதான். அவர்களை அவன் அறிவான். அவர்களுக்கு அவனைப் பிடித்திருந்தது.

தனியே அறிமுகம்… பாஷை தேவை இல்லாதிருந்தது. மனம் மிதந்தது. சிலிர்த்துத் தளிர்த்தது உள்ளே.

அதிகாலை வானத்தின் முகம் வெளிறிக் கிடந்தது. போக்குவரத்து துவங்குமுன் சாலையில் படம் வரைந்து விட்டு வந்திருந்தான். வானம் மூடிக் கிடந்தது. குளிராய் இருந்தது. அடாடா மழை வரும்… என நினைக்கு முன்னே நனைந்து போனான். ஓவியம் கண்ணெதிரே வண்ணங் கரைந்தது. டாசல் சிந்திய தண்ணீராய் சாயம் ஓடியது சாலையில்.

மரத்தடியில் ஒதுங்கியவன் அடாடா, என நினைத்துக் கொண்டான். அந்த லம்பாடிக் கூட்டம். கூடாரத்தில் மழைநீர் புகுந்து அவஸ்தைப் படுமே. அடுப்பை விளக்கை அணைத்திருக்குமே மழை…

விறுவிறுவென்று அவர்கள் கூடாரம் நோக்கித் தன்னைப் போல விரைவு கண்டன கால்கள். திரும்பிய கணம் கண்ட காட்சி அவனைத் திக்குமுக்காட வைத்தது.

வறட்சி கண்ட மக்கள். மழை காணா மக்கள்… மூதாட்டி. முதியவர். இளம் பெண்கள்…

கூடாரத்துள் மழை நீர். அடுப்புக்குள் மழை நீர். அதைப் பற்றியென்ன… வெளியே வந்து ஆடிக் கொண்டிருந்தார்கள். மழை அவர்களை உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை வருடிக் கொடுத்தது.

படம் அழிந்த அந்த துக்கம் மறந்து போனான். போய்ப் பிரியமாய் அவர்களோடு இணைந்து கொண்டான்.

மழை பெய்து கொண்டிருந்தது.

—-

(பர்ஸாத் இந்திச் சொல். தமிழில் மழை.)

from the desk of storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்