Last kilo byte – 18 மும்பை அரங்குகளில் தமிழ்படங்களும், முகங்களும்

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

கே. ஆர். மணி


எப்போதாவது வருகிற மெகாபடங்களில், விழாக்களில் தமிழ் முகங்கள் தேடுதலும், தேடி தவிர்த்தலும், தவித்தலும், பாதிப்புன்னகையும், மென்று விழுங்குகிற வார்த்தைகளோடு குழவுதலும், திரை இடைவெளியில் சிறுநீர் கழிக்கிற அறையிலும், உணவு சிற்றூண்டி சாலைகளிலும் கலந்து கட்டி வருகின்ற இந்தி கலந்த தமிழ் (தந்தி!) வார்த்தைகள் சூழலும் கொஞ்சம் கிக்கானவை. ஒரு கல்யாண கூடம்போல, கோயில் போல, வீடு போல திரையரங்குகளும் தங்களது சுழலின் இருப்பை காற்றில் எழுதிவைத்துவிடுகின்றன.

புலம்பெயர் தமிழர்களின் சில சந்தோச துளிகளில் இப்படிப்பட்ட கணங்கள் அர்த்தமிகுந்தவைகள்.

மாதுங்கா தமிழ் திரைப்பட அரங்கத்திற்கு போய் ரொம்பநாளாகிவிட்டது. அதுவும் பழையதாகிவிட்டதாய் செய்தி. 90’களுக்கு முன்னால் புலம்புகர்ந்த தமிழ் இளைஞனின் வாழ்க்கையில் மாதுங்கா திரையரங்கத்திற்கு மறுக்காமல் இடமுண்டு. தாராவிக்கு பக்கத்தில் என்பது ஒரு காரணமாயிருக்கலாம். கடந்த இருபது வருடங்களில் புறநகர் வளர்ச்சிகள் அபரிதமானவை. தமிழர்கள் தங்களது எல்லைகளை மாதுங்காவை கடந்து புறநகரிலும் பெருக்கி கொண்டனர். நகரத்தின் வளர்ச்சியோடு அவர்களும் வளர்ந்தார்களென்பது உண்மை. அரசியல் கட்சிகள் கூட புறநகர் கிளைகள் வைத்திருக்கின்றன.

புறநகரில் பெருகி வளர்கிற மால்கள்(Mall) வந்தபிறகு சாதாரண அரங்குகள் தீண்டப்படாதவையாகிவிட்டன. அதன்பின் எடுத்து கட்டிக்கொண்டு கிடைக்கிற ஒரு ஞாயிறில் மாதுங்காவில் படம் பார்ப்பதென்பது மிக அரிதான ஒன்று. மால்களில் படம் என்பது ஒரு நடுத்தர குடும்பத்திற்கு கொஞ்சம் அதிகம்தானென்றாலும் ஹ¥ம். எப்போதாவது ஒரு தடவை, குறைந்தவிலையில் காலை காட்சிகள், இது வாங்கினா டிக்கெட் பாதி காசு என்று மத்திமர் முளையோடு பேரம்பேசி, மூக்கால் அழுது – மொபைலில், இணையத்தில்
பதிந்து, கார்பார்க் செய்துவிட்டு படம்பார்க்க போகும் சுகம், எந்தஒரு புலம்பெயர்ந்த தமிழனக்கும் கொஞ்சம் இனிப்பாய் வேர்தொடும் நிகழ்வாகத்தானிக்கமுடியும்.

அப்படித்தான் கடந்த சில நாட்களில் இரு நிகழ்வுகள் அமைந்தன. சாப்பாடு போட்டாலாவது வருவார்களா என பார்க்கும் தமிழ் சங்கங்கள், ஈ ஓட்டும் இலக்கிய கூட்டங்கள் என அருகிய கூட்டத்தையே பார்த்து பழகிப்போன மனதுக்கு தமிழர்கள் கடலையாய் இல்லையெனினும் தொட்டி அலையாய் கூடியதைப்பார்க்க சந்தோசம்தான்.

நிகழ்வு – 1:

சிரிப்பும், இரத்தத்தில் துள்ளலாய், குழந்தைகள் ஆடிக்கொண்டே அதை அநுமதிப்பதன் மூலம் தாங்களும் ஆடுவதாய், தனது குழந்தைத்தனத்தை தொடுவதான பாவனை அந்த அரங்கில் நிரம்பி வழிந்தது. எல்லாதரப்பினரும் கலந்திருந்தனர். இளைஞர்களிடம் கொஞ்சம் அதீத சந்தோசம் வழிய, பெரியவர்கள் அதை அடக்கி கொண்டு பிடிக்காததுபோல நடித்ததும் இனித்தது. சொல்லமுடியாத குழந்தை உற்சாகம், காட்சிக்கு காட்சி அதிர்வுகள், கைதட்டல்கள், விசில்கள், தன்னை மறந்த ரசிப்பு என அந்த கூட்டம் தன்னிலை
மறந்தது. ஒளி,ஒலி குறைந்த காட்சியில் வயதான பக்கத்து சீட்டு மாமிகூட கூவினாள். அது அந்த திரையரங்கம் கொடுத்த தைரியம், உற்சாகம். கோவிந்த நாம சங்கீர்த்தனம் கூட இரண்டு கட்டைக்குமேல் சொல்லாமல் வாய்க்குள்ளே சொல்லுகிற அந்த மாமியின் உற்சாகம் மும்பையின் மல்டிபிளக்ஸிற்கு முற்றிலும் புதிது. அந்த திரையரங்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது ரஜினியின் சிவாஜி.

நிகழ்வு – 2:
இதே அரங்கம் இன்று அப்படியில்லை. கொஞ்சம் கனமாயிருந்தது என்பதுதான் உண்மை. கொஞ்சம் மாமாக்கள், மாமிகள் இளைஞர்கள் கனமாய் வந்திருந்தார்கள், ஏதோ தேர்வு எழுதப்போவதுபோலான முகபாவங்கள். குழந்தைகள் கூட கவனமான ஆச்சாரமான ஒழுங்கோடுதானிருந்ததாகப்பட்டது. ஏதோ அந்த நூற்றாண்டின் சிறந்த இலக்கியபுத்தகத்தை படிப்பதான பாவனை அந்த அரங்கத்தில் நிரம்பி வழிந்தது. தெளிவாகவும், செறிவாகவும் அவர்களின் முகம் சதப்பிரஞ்ஞனின் கண்ணாடி போலிருந்தது. அவர்கள் ஏதோ சங்கப்புலவர்கள் போலவும் கவிஞனது புதுக்கவிதை பரிட்சித்து மதிப்பெண்ணிடும் தயவு தாட்சணயமற்ற தேர்வாளார்கள் போலவும் அமர்ந்திருந்தனர். கருப்புத்துணியும், தராசும் உள்ளவர அநுமதியாததால் கொண்டுவரவில்லை போலும். இது திரையரங்கா.. என்ன?? ஆமாம். இது கமலின் தசாவதாரம்.

கண்ணாடிகள் மற்ற பிம்பங்களை பற்றி கவலைப்படுவதில்லை. ஓற்றைச்சொல்லில் தங்களது எண்ணத்தை உதிர்த்து
போய்க்கொண்டேயிருக்கின்றன.

“மாப்ளை மேக்கப் பிரிச்சிட்டாங்கடா”
“விருமாண்டியவிட பேட்டர்”
“சுவாமி மறுபடியும் மேல வந்துடுத்துப்பாத்தேளா”
“தலைவ, மக்கா கலக்கல்ரா”
“என்னடா மேக்கப் மேக்கப்புன்னு சொதப்பிட்டான்”
“நன்னாயிருக்கே.. நன்னத்தான் பண்ணிருக்கான்..’
“அப்படியென்னும் சாரமில்லை.. கேட்டியோ”
“ஓகே”
“டிக்கேயார்..”
“கூல்யார்”
“நாட் பேட்”
“அச்சாரே..”

இடைவேளையில் சிறுநீர் தொட்டிக்கு நடுவில் நடக்கும் சிறுநீர் கதை உரையாடலில் என்ன சொல்லலாம் என்கிற குழப்பத்தில் இடைவேளை முடிந்து வேகவேகமாய் உள்ளே போகிறது. கூட்டம் தங்கள் மீது கவிழ்த்த பெரிய மெளன கனத்தோடு மெல்ல நகர்கிறது. பிரமாண்டம். தொய்வு, குழப்பம். பிரமாண்ட சுனாமி. மூன்று மணிநேரத்தை தனக்குள் வாங்கியும், உள்ளிருந்ததை துப்பியும், ஏதோ ஏதோ ஒற்றைவரி விமர்சனங்கள், கேள்விகள் சொல்லி கலைகிறது. போனில், இணையத்தில் கேள்விகேட்டு – அந்த திரைவாசகர்களின் குடைக்குள் மழை பெய்து கொண்டேயிருக்கிறது.

‘இத்தனை அவதாரம் தேவையா? ‘

‘எப்படியாவது நான் ஓம்பதுக்கு மேலான்னு சொல்றதுல்ல இருந்த கவனம் மத்ததுலயில்ல’

‘சொதப்பலான திரைக்கதை..வரிக்குதிரையை பாத்து கழுதை சூடுபோட்டுகிட்ட மாதிரி’

‘குருவி படத்தை ஞாபகப்படுத்துற மாதிரி.. செம வெஸ்ட் மச்சி’

‘முதல்பத்து நிமிசமும் கடைசி பத்து நிமிசமும் பரவாயில்லை. மத்ததெல்லாம்.. வேஸ்ட்’

‘அதிகமான நுண்ணரசியல்.. நாத்திகராக ஒரு பக்கம், ஆத்திகத்தை மதிக்கும் மதிப்பீடுகளுக்கு
ஜால்ராவாய் ஒரு பக்கம்.. தலைவர்களை குசிப்படுத்த மறுபக்கம், விற்பனைக்காய் ஒருபக்கம்’

‘முகுந்தா. முகுந்தா.. கோவிந்தா.. கோவிந்தா.. பணம் பூடுச்சி மச்சி..’

‘முதல் முதலா கதாநாயகியோடு ஒரு கெமிஸ்ட்ரியோ இல்லம்மா.. தலைவா. வயசாயிடுச்சா’

‘டேய்.. தலைவனுக்கு என்னடா வயசாகதுடா.. அடுத்த படுத்துல கண்டிப்பா ஜட்டியோடு இரண்டு சீனிருக்கும்டா’

‘இந்த படத்தில் இழந்த கமலை நாயகனிலும், அன்பே சிவத்திலும் C D போட்டு பார்த்துக்கொண்டால்தான்
தசாவதாரத்தலைவலி விடும்’

‘எல்லாம் இவரே பண்ணுவராம். மத்தவன் பணம் மட்டும் போடுவனாம்.. கோவிந்த.நாம சங்கீர்த்தணம்’

‘ங்கோத்தா.. ஆயிரம் மீனவர் செத்தது உன்னோட உம்மாச்சி வெளியவர்றதுக்கா’

‘பூவராகன்(தலித்) சாகறது.. தாழ்த்தப்பட்டவன் ஆதிக்க சாதிக்காக எப்போதுமே உயிரை கொடுக்கணும்ங்கிறது இதைவிட அப்பட்டமா சொல்லமுடியாது..’

‘இந்து மதத்தை என்னவேணா சொல்லலாம், அது (அநாதி) அநாதை மதம்தானே. கருத்து சுகந்திரங்கிற பேர்ல கற்பழிக்கலாம். அரசியல்வாதிகள் கிட்ட கொஞ்சம் கவனமாயிருக்க தெரிஞ்ச அவருக்கு பொலிடிக்கல் கரெக்ட்னஸ், இஸ்லாமிய மதத்தைபத்தி பேசும்போதிருந்த கவனம் இந்துமதத்தை கடவுளை கையாளும்போதில்லை. அது சரி கேட்டா நாத்திக சுகந்திரங்கிற பேர்ல அது மேலே மூச்சாகூட போகலாமே.. கூறுகெட்ட இந்துக்களுக்கு நுண்ணரசியலெல்லாம் எங்க தெரியப்போறது. ராமஜெயம்னு ஒரு லாரில இருந்துட்டா இதெல்லாம் மறந்துடுமே. மவனே தாக்கு .. போட்டு தாக்கு’

‘சைவம், வைணவம் சண்டையிருந்தது. அது கருத்துச்சண்டை. அதை தாண்டி போயிருக்கிறது இந்துமதம். அதைப்போல மற்ற உலகமதங்களையும் தன்னுள்ளிழுத்து வியாபிக்கும்’

‘வைணவத்தை தூக்கிபிடித்து சைவத்தை கரும்புள்ளியாக்கும் முயற்சி. கிருமிகண்ட சோழர்கள் இப்போதும் திரைப்படத்திலிருக்கிறார்கள், கருப்புச்சட்டை போட்டுக்கொண்டு’

‘பார்ப்பனிய பாசீச குட்டை..’

‘டேய்.. என்ன சொல்லு, உலகநாயகன் தலைவன் தாண்டா.’

‘கியாஸ் தியரிக்கு பிரமாதமான திரைக்கதை’

‘கியாஸ் தியரியோடு மெட்டா பிஸிக்ஸ் கலந்து செய்த கலவைப்பா..’

‘கியாஸ் தியரியும், பெருமாளின் பத்து அவதாரமும் இணைக்கப்பட்ட பிரம்மாண்ட நுணுக்கமான திரைக்கதை’

‘இந்திய தொழில்நுட்பம் உலகம் தொடும் அளவுக்கு உயர்ந்த படம்’

‘இந்திய நடிகனின் மிகப்பெரிய மைல்கல்’

வேதத்திற்கு பாஸ்யம் எழுதுவது போல தசாவதார உரைகள். கியாஸ் தியரிக்கு விளக்கங்கள். இன்னும் எப்படியெல்லாம் திரைக்கதை நுணுக்கங்கள் மேம்பட்டிருக்கலாம் என்கிற வியாக்கனங்கள். கமலே யோசித்திராத முனைகள். மேற்கத்திய படங்களோடு ஓப்பிடு. இணைய அடிதடி சண்டைகள். விமர்சன சூடேற்றம். குதர்க்கமான பின்னூட்டங்கள்.

அதுசரி, நிகழ்வு-1க்கும், நிகழ்வு-2க்கும் ஏன் வித்தியாசம் ? விடைகள் எளிதுமல்ல. கடினமுமல்ல. ராசேச்குமாரின் திகில் நாவலுக்கும் சுராவின் ஜேஜேவிற்கும் உள்ள வித்தியாசம் என்பார்கள் இலக்கிய செ(¡)றிந்த திண்ணை வாசகர்கள்.

திருப்தியின்மையும், அதீத திருப்தியும், கோபமும், பின் மறுபடி எதிர்ப்பார்ப்புமாய் இந்த கூட்டம் ஒரு திரைக்கோமாளியிடம் என்னதான் எதிர்ப்பார்க்கிறது. ஆவியும் குமுதமும் படிப்பவர்கள் நாங்களல்ல, எங்களுக்கு பாக்கெட்நாவல் வேண்டாம், பின்நவீனம் தாண்டி என்ன கொடுக்கப்போகிறாய் என்று குரூரமாய் விமர்சன தூண்டிலோடு உட்கார்ந்துகொண்டிருக்கிற கறாரான விமர்சனக்காரர்கள் போலவா ஒரு திரை வாசகர்களை, பார்வையாளர்களை பதப்படுத்தமுடியும் ? பதப்படுத்த முடிந்திருக்கிறது அவருக்கு என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

எல்லாம் தன்னை தானே அழித்துகொண்டு தன்மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளை ஏற்றிக்கொண்டு, மறுபடியும், மறுபடியும் முயற்சி என்கிற முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டேயிருக்கிற வேதாளமாகத்தான் கமல் ஓவ்வொரு முறையுமிருக்கிறார். அவரைப்போலவே அவரது ரசிகர்களும் திருப்தியின்மையின் மூலமே திருப்தியடைந்துகொள்கிறார்கள். ஓரு கனமான நாவல் தருகிற வெறுமையையும், கூடலுக்கு பின்னான அமைதியையும் ஓரு சேர தந்து பின் கலைத்துக்கொண்டு விமர்சனக்கத்தியால்
தங்களை குத்திக்கொள்கிற ரசிகர்பட்டாளத்தை வளர்த்ததே அவரின் பலம் மற்றும் பலவீனமும் கூட.

அவரால் எழுந்த தாகத்தை அவரால் முழுவதுமே தணிக்கமுடியும் என்பது பேராசை மட்டுமல்ல, முட்டாள்தனமும் கூடத்தானே.
கமல், ரஜுனி, அமிதாப், கான்கள் தாண்டி இந்திய சினிமா வளரவேண்டிய Tipping Pointன் காலமிது. அவர்களின் தோள்களின் மீது ஏறி நின்று சினிமாவை பார்ப்பது என்று சொல்வது மிகையாகவும், பொய்யாகவுமாகத்தானிருக்கும், பயணப்படாத
பாதைகள் இன்னும் பலயிருக்கும்போது.


netwealthcreator@gmail.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி