பெண்களுக்குப் பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடு தேவையா ?

This entry is part 4 of 4 in the series 20000402_Issue

thinnai


கோபால் ராஜாராம்

மறுபடியும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா -85-வது சட்ட அமைப்புத் திருத்தம்- தாக்கல் செய்யப் பட்டுள்ளது.இது முன்னரே 1996-இல் ஐக்கிய முன்னணி அரசும், பின்பு 1998-இல் பி ஜே பி அரசும் தாக்கல் செய்த மசோதாதான்.  மறுபடியும் சிலர் – குறிப்பாக யாதவ்கள் – முலாயம் சிங் யாதவ், லாலுப் பிரசாத் யாதவ் பொன்றவர்கள் – சபாநயகரையும் , மசோதாவை ஆதரிக்கிற மமதா பானர்ஜி போன்றவர்களையும் தாக்கியிருக்கின்றனர். பெண்களின் திறமையைச் சந்தேகிப்பவர்கள் பெண்கள் பற்றிய தம் தாழ்வான அபிப்பிராயங்களை மறைக்கக் கூட முயலவில்லை. ‘இது குட்டைமயிர்ப் பெண்களுக்குத்தான் பயன் படும் ‘ என்பது ஒருவரின் கருத்து. இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறது. இதில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை என்பது அவர்களின் வாதம்.யாதவின் முதல் பயம் மற்ற பிற்படுத்தப் பட்டோர், முஸ்லிம்களின் ஓட்டு வங்கியை இந்த ஒதுக்கீடு பாதிக்கக் கூடும் என்பதாகச் சொல்கிறார்கள். 10 சதவீதம் ஒதுக்கீடு போதும் என்று சிலர் கருதுகின்றனர்.

மாயாவதி , கன்ஷிராமும் இதனை எதிர்க்கிறார்கள். ஏன் ? மறுபடி படித்த மேல் தட்டுப் பெண்கள் முன்னணிக்கு வருவார்கள் என்கிற பயம். கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியில் தேர்தலில் நின்ற 224 பேரில் 11 பேர் தான் – 5 சதவீதத்திற்கும் குறைவான எண்ணிக்கை – தான் பெண்கள்.
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 47 பெண்கள் தான் தேர்வு பெற முடிந்தது. இடது , வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன. இருப்பினும் நடப்பு எப்படி இருக்கிறது ? இடது கம்யூனிஸ்ட் கட்சியின் 72 மக்களவை உறுப்பினர்களில் 5 பேர் தான் பெண்கள். வலது கம்யூனிஸ்ட் கட்சியின் 54 பேரில் 4 பேர் தான் பெண்கள்.காங்கிரஸ் இனி 33 சதவீதம் கட்சிப் பதவிகளைப் பெண்களுக்கு ஒதுக்கப் போகிறோம் என்று சொல்கிறது. ஆனால் தேர்தலில் 453 பேரில் 51 பெண்களைத் தான் நிறுத்தியது. பி ஜே பியோ 340 பேரில் 25 பெண்களை நிறுத்தியது. மத்திய அமைச்சரவையில் 8 பேர் தான் பெண்கள். அதிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகமற்ற துறைகளைத் தான் அமைச்சரவையில் ஒதுக்குகிறார்கள் என்பதும் உண்மையே. இன்னமும் யாரும் காந்தி குடும்பம் தவிர்த்த பெண்கள், பாதுகாப்பு, நிதித் துறை, வெளியுறவு போன்றவற்றிற்குத் தம் திறமையைத் தரும் வாய்ப்புப் பெறவில்லை. 

சமூக நீதி பற்றிப் பேசும் , முற்போக்கு , நசுக்கப் பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியும் பேசும் இந்தக் கட்சிகள் பெண்களுக்கான ஒதுக்கீட்டை எதிர்ப்பது அர்த்தமற்றது. படித்த நகர்ப் புறப் பெண்கள் வந்துவிடுவார்கள் பதவிக்கு என்கிற பயம் ஏன் இவர்களுக்கு வருகிறது ? ராப்ரி தேவி போன்ற பெண்கள் கணவன் தூக்கி உட்கார வைக்கவில்லையென்றால் பதவிக்கு வர மாட்டார்கள் என்பது இந்தத் தலைவர்களைப் பற்றிய விமர்சனமும் கூட. சும்மா பொம்மை மாதிரி தான் பெண்கள் இருப்பார்கள். கட்சியும், கணவனும் ஆட்டுவித்த படி ஆடுவார்களேயானால், இந்த இட ஒதுக்கீடு எந்தப் பலனும் தராது என்பது ஓரளவு உண்மை தான் எனினும், பெண்கள் முழுமையான கல்வி பெற்றுவிடுகிற காலம் வரை காத்திருத்தல் இயலாது. அதிகாரத்திற்கு வருகிற எந்தப் புதிய பிரிவினரும், ஏற்கனவே மற்ற வசதிகளைப்  பெற்றிருப்பவர்கள் என்கிற போக்கு எல்லா வளரும் சமூகத்திலும் ஏற்படக்கூடிய ஒன்று தான். இந்த விபத்தைத் தடுக்க விழிப்புணர்ச்சி அவசியமே தவிர அதிகாரப் பகிர்தலையே எதிர்ப்பது நம்மை மீண்டும் பழைய எதேச்சாதிகாரப் பாதைக்கே இட்டுச் செல்லும். பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கான முயற்சிகளில், கட்சிக்கப்பால் பெண்கள் இணைவதையும் காண முடிகிறது. இது ஒரு வரவேற்கத் தக்க ஒரு ஆரோக்கியமான போக்கு. 

பெண்களுக்கான தொகுதிகளை எப்படி நிர்ணயம் செய்யப் போகிறார்கள் ? லாட்டரி மாதிரி குலுக்கிப் போட்டுத் தீர்மானிக்கப் போகிறார்கள். அதில்லாமல் ஒவ்வொரு தேர்தலிலும் பெண்கள் தொகுதி மாறவும் கூடும். தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்கள் தம் தொகுதியுடன் நல்லுறவை ஏற்படுத்தி வளர்த்தெடுக்க இயலாத படி, தொடர்ச்சியற்றுப் போகும் அபாயம் இந்த ஏற்பாட்டில் உள்ளது.ஆனால், பெண்கள் மற்ற தொகுதிகளில் நிற்கலாகாது என்கிற தடை ஏதும் இல்லையாதலால், பெண்களின் தொகுதி பொதுத் தொகுதி ஆன பிறகும் கூட பெண்கள் அதில் போட்டியிடலாம்.

மானுஷி என்ற ஏட்டின் ஆசிரியரான மது கிஷ்வர் ஒரு கருத்துத் தெரிவித்துள்ளார். அதன் படி மூன்று தொகுதிகள் இணைக்கப் பட்டு, முதன்மையாய் வாக்கு எண்ணிக்கை பெற்ற இரு ஆண்களும், முதன்மை எண்ணிக்கை பெற்ற ஒரு பெண்ணும் தேர்வு செய்யப் படுவார்கள். இது நடைமுறைக்கு ஒத்து வரும் என்று தோன்றவில்லை. தொகுதிகள் பெரிதாய் இருப்பதால் யாரும் தொகுதியுடன் உறவு கொள்ள முடியாது போய்விடும். 

பெண்களுக்கான இட ஒதுக்கீடு வெறுமே ஒப்புக்காகத் தரப் படுகிற சலுகையாய் மட்டுமே நிண்ரு விடும் அபாயம் இருக்கிறது. ஜெக ஜீவன் ராம், கே ஆர் நாராயணன் போன்றோரின் சாதனைகள் எல்லாத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமான முன்னேற்றமாகாது தான் என்றாலும், வரவேற்கத் தக்க ஒன்று தான். இதே போல் பெண்களின் இட ஒதுக்கீடும் பெண்கள் அரசியல் தளத்தில் பங்கு பெற நிச்சயம் வழி வகுக்கும்.

ஏற்கனவே தமிழ் நாடு, கர்நாடக மானிலங்களில் 33 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள். இந்த அனுபவம் தொகுக்கப் பட்டிருக்கிறதா, ஏது ஆய்வுகள் நடை பெற்றனவா என்று தெரிய வில்லை. அப்படிப் பட்ட ஆய்வுகளின் முடிவுகளை, மக்களவை இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிர்ணயிக்கும் போது பயன் படுத்த வேண்டும்.
 
 

Series Navigation