2001 க்கு அப்புறம் – ஆர்தர் சி கிளார்க்

This entry is part 13 of 14 in the series 19990902_Issue


யார் என்ன சொன்னாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. என்னை மற்றவர்கள் என்னதான் “சோதிடன்” என்று சொன்னாலும் நான் என்னை இன்றைய நிகழ்வுகளை எதிர்காலத்தில் பொருத்திப் பார்ப்பவனாகவே கருதி வந்திருக்கிறேன். என்னுடைய அறிவியற்கதை புத்தகங்களிலும், கதையற்ற அறிவியற் புத்தகங்களிலும், சாத்தியமான பல்வேறு எதிர்காலங்களை கோடிட்டு காட்ட முயன்றிருக்கிறேன். அதே நேரத்தில், எதிர்பார்க்கவியலாத கண்டுபிடிப்புகளும், நிகழ்ச்சிகளும், சில வருடங்களில், எந்த விதமான கணிப்பையும் அபத்தமாக்கி விடுகின்றன. உலகத்தில் ஐந்து அல்லது ஆறு கப்யூட்டர்களுக்குத்தான் வேலை இருக்கிறது என்று 40களில் ஐ பி எம்மின் சேர்மன் சொன்னதுதான் இந்தமாதிரி எதிர்பார்ப்புகளுக்கு ஒரு நல்ல உதாரணம்.என்னுடைய அலுவலகத்திலேயே அவர் சொன்னதை விட நிறைய கம்ப்யூட்டர்கள் இருக்கின்றன. இன்னும் முயல் குட்டி போடுவது போல பெருகிக் கொண்டே இருக்கின்றன.
ஆனால் தாமஸ் வாட்ஸனை விமரிசிக்க எனக்கு ஒன்றும் பெரிய அருகதை கிடையாது. Transit of Earth (1971) என்ற எனது நாவலில் செவ்வாயில் மனிதன் காலடி வைப்பது 1994 இல் நடக்கும் என்று எழுதியிருந்தேன். அது 2010இல் நடந்தால் நாம் அதிர்ஷ்டக்காரர்கள் போல இப்போது தோன்றுகிறது. அதே நேரம் 1951இல் Prelude to Space என்ற நாவலை வெளியிட்டபோது நான் சந்திரனில் மனிதன் காலடி வைப்பது 1976இல் நடக்கலாம் என்று நான் எழுதியது மிகவும் அவசரப்படுவது போல எனக்கு தோன்றியது. ஆனால் அதற்கு பத்து வருடங்களுக்கு முன்பே நீல் ஆர்ம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் இருவரும் சந்திரனில் காலடி வைத்து விட்டனர். இருந்தாலும் 1945 இல் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் (Telecommunications Satellite)கள் நான் கணித்துச் சொன்ன வருடத்தில் தான் வந்தன என்பது எனக்குப் பெருமை தான். இன்றைக்கு கிளார்க் சுற்றுவழி (Clarke Orbit) என்ற வார்த்தைத் தொடரைப் பல பேர் உபயோகிப்பது “பூமியின் மேல் ஒரே இடத்தில் நின்றபடியே சுற்றும் நிலை” (Geostationary orbit) என்று சொல்வதை விட அது எளிதாக இருப்பதால் இருக்கலாம். எனது 1990 நாவலான “Century Syndrome” புத்தகத்தில் எல்லோரையும் கலவரப்படுத்தும் இந்த y2k பிரச்னையைப் பற்றி முதலில் தெரிவித்தேன்

இருந்தாலும் கீழ்க்காணும் வரிசையை எச்சரிக்கையோடேயே அணுக வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் விண்பயணம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் சில ஏற்கெனவே தேதி நிர்ணயம் செய்யப்பட்டவை. மற்ற நிகழ்ச்சிகள் நடக்கும் என்றே நம்புகிறேன். இன்னும் சுவாரசியமான பல எதிர்பார்ப்புகளையும், விபத்துகளையும் விட்டு விட்டேன். எதிர்காலத்தை நல்ல நம்பிக்கையுடன் அணுகுவது நல்லதுதானே: அந்த நம்பிக்கை தரும் எதிர்பார்ப்புகளே (Self fulfilling prophecy) நம் ஜோதிடத்தை உண்மையாக்கி விடலாம்.

2001 – ஜனவரி 1, காஸினி விண்கோள் சனிக்கிரகத்தின் சந்திரன்களையும், அதன் வளையத்தையும் ஆராய ஆரம்பிக்கும். (1997 அக்டோபர் விண்ணில் செலுத்தப்பட்டது. சூலை 1999 இல் சனிக்கிரகத்தை சென்றடையும்)

கலிலியோ விண்கோள் (1989இல் செலுத்தப்பட்டது) வியாழன் கிரகத்தை ஆராய ஆரம்பிக்கும். யூரோப்பா என்னும் சந்திரனின் பனிப்பாறைகளுக்குக் கீழே உயிரினங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கும்.

2002 குளிர் அணு இணைப்பு (cold fusion) தத்துவம் சார்ந்த வியாபார ரீதியான எளிய சுத்தமான சக்தி தரும் ஜெனரேட்டர்கள் கடைகளில் கிடைக்கும். இது பெட்ரோல்,கரி போன்ற அனைத்து அசுத்த எரிபொருள்களுக்கும் முடிவு கட்டும். பொருளாதார, அரசியல் பூகம்பங்கள் வெடிக்கும். 1989இல் குளிர் அணு இணைப்பு கண்டு பிடித்ததற்காக போன்ஸ், ப்லேன்ஷ்மேன் இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும்.

2003 வாகனம் தயாரிப்பவர்கள் 5 வருடங்களில் குளிர் அணு இணைப்பு சார்ந்த உபகரணங்களுக்கு எல்லா வாகனக்களும் மாற்றப்படவேண்டும் என்று கட்டளை இடப்படும். NASAவின் செவ்வாய் சர்வேயர் செவ்வாய்க்கு அனுப்பபடும்.

2004 – முதல் (பொதுவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ) மனித நகல்.(clone)

2005 – செவ்வாய் சர்வேயர் மீண்டும் பூமிக்கு செவ்வாய் பொருட்களை அனுப்பும்

2006 – கடைசி நிலக்கரிச் சுரங்கம் மூடப்படும்.

2007 – NASA இப்போதுள்ள ஹப்பல் உருவமைப்பு இல்லாமல், முற்றிலும் புதிய முறையில் தயாரிக்கப் பட்ட புது வகை விண் தொலைநோக்கியை அனுப்பும்.

2008 – தன் 80 ஆவது வயதில் 2001 space Odyssey எடுத்த திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் வாழ்க்கை முழுவதும் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கார் பெறுவார். (ஸ்டான்லி குப்ரிக் கடந்த மாதம் இறந்துவிட்டார். – மொழி பெயர்ப்பாளர்)

2009 – மூன்றாம் உலக நாட்டில் ஒரு நகரம் எதிர்பாரா விதமாக அதன் ஆயுதக்கிடங்கில் இருக்கும் அணு குண்டு வெடித்ததன் காரணமாக முழுவதும் அழிந்து போகும். ஐக்கிய நாடுகள் சபையில் சிறிது விவாதத்தின் பின் அணு ஆயுதங்கள் உலகம் முழுவதும் அழிக்கப்படும்.

2010 முதல் க்வான்டம் ஜெனரேட்டர்கள் (வெற்று வெளியிலிருந்து சக்தி) உருவாக்கப்படும். இவை வீட்டுக்கும், சிறு கடைகளுக்கும் கூட எளிதாக கிடைக்கும். இவை வெற்று வெளியிலிருந்து கணக்கிலடங்கா மின்சாரத்தை தந்து கொண்டே இருக்கும். மத்திய பெரும் மின்சார நிலையங்களும், நாடு தழுவிய மின்சார வலைகளும் பெரும் மின் கம்பங்களும் உடைக்கப்பட்டு விற்கப்படும்.

அரசாங்கத் தலையீடு என்று கூச்சல்களுக்கு இடையே, கம்ப்யூட்டர் கண்காணிப்பு மூலம் தொழில்முறைக் குற்றவாளிகள் சமூகத்திலிருந்து விலக்கப் படுவார்கள்.

2011 கடலிலுள்ள மிக ஆழமான குழியான மாரியானா பள்ளத்தாக்கில் 75 அடி நீளமான ஆக்டோபஸ் உலகத்தின் மிகப் பெரிய மிருகமாக கண்டு பிடிக்கப்படும்.

அதே வேளையில், அதை விட பெரிய கடல் மிருகங்கள் வியாழனின் சந்திரனான யூரோப்பாவின் பனிக்குள் இருக்கும் கடலில் கண்டுபிடிக்கப்படும்.

2012 ராக்கெட் விமானங்கள் பயனுக்கு வரும். இவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ராக்கெட் தொழில் நுட்பத்தின் மூலம் சென்றடையும். (உதாரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல இப்பொது 22 மணி நேரமாகிறது. ராக்கெட் விமானத்தின் மூலம் சென்றால் 1 மணி நேரத்துக்குள் சென்று விடலாம்- மொ.பெ)

2013 பிரித்தானிய அரண்மனை தெரிவிக்கும் கவலைகளைப் பொருட் படுத்தாமல் , இளவரசன் ஹாரி, விண்வெளிக்குச் செல்லும் முதல் அரச குடும்பத்தினராவார்.

2014: பழைய விண்கல பொருட்கள் மூலம் விண்ணில் சுழலும் ஹில்டன் சுற்றுப்பாதை ஹோட்டல் கட்ட ஆரம்பிக்கப்படும்.

2015 க்வான்டம் ஜெனரேட்டர்களின் முக்கியமான பலனாக அணுவைத் துல்லியமாக கட்டுப்படும் தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப் படும். இதனால் கடந்தகால ரசவாதக் கனவுகள், வியாபார ரீதியில், ஆச்சரியமான விளைவுகளுடன் நிறைவேறும். ஈயம் செம்பு போன்றவை ரசவாதத்திற்கு அதிகம் தேவைப்படுவதால் தங்கத்தை விட இவை இரு மடங்கு விலை அதிகமாக இருக்கும்.

2016 ; உலகத்தின் எல்லா பண நோட்டுகளும் செல்லாதவையாகும். மணி மெகாவாட் (megawatt hour) புதிய பணமாகும்.

2017 : டிசம்பர் 16 ஆர்தர் சி கிளார்க் தன் 100ஆவது பிறந்த நாளில் புது ஹில்டன் விண் சுற்றுப்பாதை ஹோட்டலின் முதல் விருந்தாளிகளில் ஒன்றாக இருப்பார்.

2019 வடக்குபுல பனிப்பாறையில் ஒரு விண்கல் மோதி பெரும் அழிவை ஏற்படுத்தும். மனித அழிவில்லாமல் இருந்தாலும், அதனால் உருவாகும் புயல்காற்று பெரும் சேதத்தை உருவாக்கும். இதனால் உலகத்தை இதுபோன்ற விண்கற்களிலிருந்து காப்பாற்ற ‘விண்காப்பு ஆயுதம்’ உருவாக்கப்படும்.

2020: செயற்கை அறிவு (Artificial Intelligence) மனித தரத்தை எட்டும். எனவே உலகத்தில் இரண்டு அறிவுஜீவி உயிரினங்கள் இருக்கும். செயற்கை அறிவு ஜீவி உயிரினம் மனித அறிவை விட மிக வேகமாக பரிணாமமடையும். அருகில் உள்ள நட்சத்திரங்களுக்கு இந்த செயற்கை அறிவு ஜீவி உயிரினங்கள் கொண்ட விண்கலங்கள் அனுப்பப்படும்.

2021: மனிதர்கள் முதன் முதலில் செவ்வாயில் காலடி வைப்பார்கள். சில அசௌகரியமான ஆச்சரியங்களை சந்திப்பார்கள்.

2023: கம்ப்யூட்டர் உருவாக்கிய டி என் ஏ (DNA) மூலமாக டினோசார் நகல்கள் உருவாக்கப்படும். டிஸ்னி “டிரையாசிக் மிருக காட்சி சாலையை” புளோரிடாவில் திறக்கும். சில சோகமான விபத்துகளுக்குப் பின் சிறு ரப்டார் மிருகங்கள் நாய்களுக்குப் பதிலாக காவல் மிருகங்களாக பயன்படுத்தப்படும்.

2024: நமது பேரண்டத்தின் மத்தியிலிருந்து வரும் கீழ்சிவப்பு கதிர்கள் கண்டுபிடிக்கப்படும். இவை நம்மை விட தொழில்நுட்பத்தில் முன்னேறிய சமூகத்திலிருந்து வருவது என்று உணர்ந்தாலும் அந்த கதிர்களை பிரித்து பொருள் கண்டுபிடிப்பது முடியாமல் போகும்.

2025: நரம்பு மண்டல ஆராய்ச்சி மூலம், கண்கள் காதுகள் போன்ற உணர்வு செலுத்திகள் இல்லாமலேயே , நேரடியாகவே மூளைக்கு உணர்வுகளை அனுப்புவது கண்டு பிடிக்கப்படும். (இந்த காலத்து வாக்மேன் போல அவை இருக்கும்)

இந்த ஹெல்மெட் அணியும் நபர்கள் நேரடியாக புது அனுபவங்களைப் பெறலாம். மற்ற மனித உணர்வுகளோடு இணைவதும் சாத்தியமாகும். இது சட்டத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும். நீதி மன்றத்தில் பொய் சொல்வது இயலாததாகும்.

இந்த ஹெல்மெட் சுத்தமான வழுக்கையான தலையில் நன்றாக வேலை செய்வதால், பொய்முடி (விக்) தொழில் பெரும் தொழிலாகும்.

2040: அனைத்து பொருள் படிவாக்கி (Universal Replicator) தொழில்நுட்பம் சிறப்படையும். இது எந்த விதமான பொருளையும் எந்த விதமான பொருளிலிருந்தும் உருவாக்கும் திறத்தை தரும். இதனால் வைரத்திலிருந்து சாப்பாடு வரை எல்லாவற்றையும் குப்பையிலிருந்து கூட உருவாக்கும் கருவிகள் கடைகளிலில் விற்கப்படும். இதனால் விவசாயம், பெரும் தொழிற்சாலைகள் மறைந்துபோகும். கலை இலக்கியம் கல்வி பொழுதுபோக்கு துறைகளில் இதனால் பெரும் வளர்ச்சி ஏற்படும்.

விவசாயத்தேவையில்லாததால் பூமியின் பெரும் பகுதிகள் மீண்டும் காடாக மாற்றப்படும். வேட்டுவ-திரட்டி உண்ணும் சமூகங்கள் வேண்டுமென்றே உருவாக்கப்படும். இளைஞர்கள் தங்களது முரட்டுத்தனமான உணர்வுகளை வெளிப்படுத்த காடுகளும், அதிலுள்ள ஆபத்தான இயந்திர மிருகங்களும் பயன்படுத்தப்படும்.

2045 : முழுமையான தன்னிறைவு கொண்ட நடமாடும் (100 வருடங்களுக்கு முன் பக்மினிஸ்டர் புல்லர் கனவுகண்ட) வீடுகள் உருவாக்கப்படும். உணவுக்குத் தேவையான கரியை காற்றிலுள்ள கரியமிலவாயுவிலிருந்து இவ்வீடுகள் பெற்றுக் கொள்ளும்.

2050: “சொர்க்கத்திலிருந்து தப்புதல்” இந்த அமைதியான ஆரவாரமற்ற யுகத்தில் போரடித்துப் போய் கோடிக்கணக்கானவர்கள் தங்களை அதீத குளிரில் உறைத்துக் கொண்டு நட்சத்திரங்களுக்கு பயணப்படுவார்கள். அண்டார்க்டிக் மற்றும் சந்திரனின் பனிப்பிரதேசங்களில் வாழ நிறையப் பேர் கிளம்புவார்கள்.

2057: அக்டோபர் 4. ஸ்புட்னிக் செயற்கைக் கோளின் நூற்றாண்டு நிறைவு. இது பூமியில் கொண்டாடப்படாமல், சந்திரனிலும், செவ்வாயிலும், யூரோப்பாவிலும், வெள்ளி, நெப்டியூன், ப்லூட்டோ கிரகங்களின் சுற்றுப்பாதைகளிலும் கொண்டாடப்படும்.

  1. ஹாலி வால் நட்சத்திரத்தின் மீண்டும் வருகை. அதன் உள்ளே மனிதர்கள் இறங்குவார்கள். அதில் இறந்த உயிருள்ள உயிரினங்களை கண்டுபிடிப்பார்கள். விண்வெளி முழுவதும் உயிர்கள் நிரம்பிக்கிடக்கின்றன என்று சொன்ன ஹாயில் மற்றும் விக்கிரமசிங்கே ஆகியோரின் சிந்தனையை நிரூபிக்கும்.
  2. அதிக அளவில் காற்றிலிருந்து தோண்டப்படுவதால் காற்றில் கரியமிலவாயு தீர்வதால், அதைச் சரிப்படுத்தவும், அருகே வரும் பனியுகத்தை தள்ளிபோடவும் மீண்டும் கரிசார்ந்த எரிபொருட்களான பெட்ரோல், நிலக்கரி போன்றவை தோண்டப்பட்டு எரிக்கப்படும்.

2095: புதிய, முழுமையான ‘விண் வாகன ஊர்தி’ கண்டு பிடிக்கப்படும். இது கால – வெளி களின் எல்லைகளை உடைத்து ஒளிக்கு நிகரான வேகத்துடன் மனிதர்கள் பிரயாணிக்க உதவும். மனிதர்கள் முதன்முதலாக அருகிலுள்ள நட்சத்திரங்களுக்கு பிரயாணப்படுவார்கள்.

2100- வரலாறு தொடங்கும் மறுபடியும்.

-Translation by Rajaram&Thukaram

Series Navigation<< செவ்வாய் கிரகத்தின் கடந்த காலம்ஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி.. >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *