செவ்வாய் கிரகத்தின் கடந்த காலம்

This entry is part 12 of 14 in the series 19990902_Issue


செப்டெம்பர் 1997 இல் செவ்வாய் சர்வேயர் (Mars Global Surveyor) என்ற விண்கலம் செவ்வாயைச் சென்றடைந்தபோது ஒரு குழறுபடியால் அதன் சூரியச் சக்தி பட்டைகள் அதிகமான அதிர்வுக்கு ஆளாகும்படி நேர்ந்தது. இதனால் விண்கலம் மெதுவாக அதனுடைய சரியான சுற்றுப்பாதையை சென்றடைவதற்கு அதனை கட்டுப்படுத்தும் NASA பொறியாளர்கள் ஒரு வருடம் உழைக்கவேண்டியதாக இருந்தது. இப்போதுதான் சர்வேயர் அதன் குறிப்பிட்ட பாதையை சென்றடைந்து தன் இரண்டுவருட வேலையான செவ்வாய் முழுவதையும் இஞ்ச் விடாமல் படம் பிடிக்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறது.

இந்த ஒரு வருடகாலம் காத்திருந்த காலத்தில் சர்வேயர் அவ்வப்போது படம் பிடித்து அனுப்பிக்கொண்டே இருந்தது. இது கொஞ்சம் காத்திருப்பை பொறுக்க உதவியது எனலாம். ஒரு சமயம் சர்வேயரின் பாதை செவ்வாய்க்கு மிகவும் பக்கத்தில் 100 மைலுக்குள் சென்றபோது அது எடுத்த படங்கள் ஆச்சரியமானவை.

“எங்களுக்கு இது ஒரு போனஸ்” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச்சார்ந்த, 72 வயதான, இந்த முயற்சியின் தலைவரான Dr ஆர்டன் அல்பீ.

சில படங்கள் எதிர்பார்க்காத சில விஷயங்களை சொல்கின்றன, உதாரணமாக ஏற்கெனவே தெரிந்த இடமான வாலேஸ் மாரினாரிஸ் (Valles Marineris) என்ற 2400 மைல் நீளமான செவ்வாய் மத்தியரேகைப் பக்கம் இருக்கும் பள்ளத்தாக்கின் சுவர்களில் தௌ¤வான பக்கவாட்டு கோடுகளை பார்க்க முடிகிறது. கறுப்பும் வெள்ளையுமான கோடுகள், ஒவ்வொன்றும் 15 லிருந்து 165 அடி அகலமாக அடுத்தடுத்து 5 மைல் ஆழத்துக்கு காணப்படுகின்றன.

அரிஜோனா பல்கலைக்கழகத்தின் Dr ஆல்பிரட் மக்ஈவென், இது செவ்வாயில் முன்பு எரிமலைக் குழம்பு ஓடியதன் விளைவு என்கிறார்.

அப்படிப்பட்ட முன்காலத்து எரிமலைகள், செவ்வாயை வெப்பமான கிரகமாகவும் அடர்த்தியான காற்று மண்டலம் உடையதாகவும் வைத்திருந்திருக்கும். இன்று செவ்வாயின் வெளி அதீத குளிரிலும், தண்ணீர் செவ்வாயில் இருக்க முடியாத அளவுக்கு அதன் காற்று மண்டலம் மெல்லியதாகவும் இருக்கிறது. ஆனால் மாரினர் (Mariner 9) விண்கலமும் வைக்கிங் விண்கலங்களும் 1970இலேயே ஆழமான கால்வாய்களையும் காய்ந்த நதிப்படுகைகளையும் வெள்ளம் பாய்ந்த வெளிகளையும் இன்னும் ஏராளமாய், செவ்வாயில் நீர் பாய்ந்து கொண்டிருந்ததற்கான ஆதாயங்களை படம் பிடித்து காண்பித்திருந்தன. இது கடந்தகாலத்தில் அடர்த்தியான வெப்பமான காற்று மண்டலம் செவ்வாயில் இருந்ததற்கு அறிகுறி.

எரிமலைகள் தேவையான அளவுக்கு நீராவியையும், இன்னும் பல வாயுக்களையும் கடந்தகாலத்தில் காற்று மண்டலத்தில் உமிழ்ந்திருக்கவேண்டும். அந்த உமிழ்வில் கரியமில வாயு இருந்திருந்தால் அது காற்று மண்டலத்தில் green house விளைவை உருவாக்கி அதன் காற்று மண்டலத்தை காப்பாற்றிருக்கும்.

இன்று செவ்வாயின் மெல்லிய காற்று மண்டலத்தில் கரியமிலவாயுவே(carbon di oxide) அதிகம் காணப்படும் பொருள். ஆனால் சர்வேயரின் அறிவியலறிஞர்கள் எரிமலைகள் கரிய மில வாயுவை உமிழ்ந்ததற்கான ஆதாரம் செவ்வாயில் இல்லை என்று சொல்லிவந்தார்கள்.

“ஒரு கிரகத்தில் எவ்வாறு தட்பவெப்பம் உருவாகிறது, அது எவ்வாறு காற்று மண்டலத்தை உருவாக்கிக்கொள்கிறது, அந்த காற்று மண்டலம் எவ்வாறு அழிகிறது என்பதை ஆராய்வதற்கு, செவ்வாய் ஒரு அற்புதமான, தனித்த இயற்கையான பரிசோதனைக்களமாக கிடைத்திருக்கிறது ” என்கிறார் Dr Zuber.

இந்த கண்டுபிடிப்புகள் செவ்வாயின் கடந்த காலத்தில் நீர் நிரம்பி இருந்தற்கான ஏராளமான ஆதாயங்களை கொடுத்திருக்கிறது. மழைநீரை விட தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த ஆறுகளே செவ்வாயில் காணப்படும் மண் அரிப்பு தடையங்களுக்கு காரணம் என்று கூற முடிகிறது.

சர்வேயரின் புகைப்படம் அல்லாத மற்ற கண்டுபிடிப்புகளும் முக்கியமானவை. சர்வேயர் செவ்வாயில் காணப்படும் காந்த மண்டலத்தின் அளவை எடுத்திருக்கிறது, இது முன்பு அதன் ஆழத்தில் உருகி ஓடிக்கொண்டிருந்த இரும்பு எரிமலைக்குழம்பு உறைந்து போனதை குறிக்கிறது.

அதன் புவியீர்ப்பு விசை சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் குறைந்தும் காணப்படுகிறது. இது சமச்சீரற்று முன்னொருகாலத்தில் உறைந்து விட்ட ஆழமான எரிமலைக்குழம்பைக் குறிக்கிறது.

இது தவிர மேலும் சில விஷயங்கள் இருக்கின்றன. அமெரிக்க விண் நிறுவனமான NASA செவ்வாயை பூமிபோல மாற்றி மனிதர்களை குடியேற்ற திட்டம் தீட்டி அதனை சிறுகச் சிறுக செயல்படுத்தி வருகிறது. இந்த வேலையில் மற்ற நாடுகளை அது கண்டு கொள்வதேயில்லை. இது போன்ற முயற்சிகளும் இது போன்ற ஆர்வங்களுமே பல்வேறு விதங்களில் மனித முயற்சியை அதிகப்படுத்தி கூர்மைப் படுத்துகின்றன. அமெரிக்க மக்களை வெட்டியான விஷயங்களிலிருந்து காப்பாற்றி அவர்களை அவர்களது தொழிலிலும் அறிவியலிலும் புதுப்புது விஷயங்களை கண்டுபிடிக்கத் தூண்டுகின்றன.

இந்தியாவுக்கு இது போன்ற அனைத்து மக்களையும் இணைக்க ஒரு பொதுக் குறிக்கோள் தேவையென்றே கருதுகின்றேன். செவ்வாய்க்கு செல்வது என்று பேச ஆரம்பித்தாலே “இங்கே மனிதன் சைக்கிள் ரிக்ஷா இழுக்கிறான், அவனுக்கு சோறு போடுவதை விட்டு விட்டு ஏன் செவ்வாய் போக வேண்டும்” என்று கேட்க இந்தியாவில் ஏராளமான ஆட்கள்

இருக்கிறார்கள். அது போன்று கேட்டவர்கள் இது வரை ஆட்சியிலிருந்தாலேயே இந்தியாவில் வறுமை பிடுங்கித் தின்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா சந்திரனில் மனிதனின் காலடியை பதித்தபோது அமெரிக்காவில் ஏராளமானவர்கள் ஏழ்மையில் இருந்தார்கள், நியூயார்க் மற்றும் பெரு நகரங்கள் பிச்சைக்காரர்களும் வீடற்றவர்களும் போதைமருந்து அடிமைகளும் நிறைந்ததாக இருந்தன, இன்றும் பல நகரங்கள் அப்படியே இருக்கின்றன, இந்த 40 வருடங்களில் அவை மிகவும் குறைந்திருக்கின்றன,

40 வருங்களுக்கு முன் யாரும் அமெரிக்காவை அது போல் கேள்வி கேட்கவில்லை. அவர்கள் அது போல் அறிவியலின், தொழில் நுட்பத்தின் எல்லைகளை உடைத்து முன்னேறும் போதுதான் அவர்களது பார்வையும் விசாலமாகிறது. மத, இன, மொழி மனமாச்சர்யங்களை கடந்து மக்களின் நல்வாழ்வு அவர்கள் முன்னேற்றம் என்கிற அடிப்படை கொள்கைகள் முன்னுக்கு வருகின்றன. தனது சாதி அரசியல்வாதி என்பதற்காக அவரது ஊழலை சகித்துக் கொள்ளும்போக்கு மாறுகின்றது.

இந்தியா அணுகுண்டு வெடித்தபோது காங்கிரஸ், சாதீய தலைவர்களான லல்லுபிரசாத், முலயாம் போன்றவர்கள், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் அடைந்த அதிர்ச்சி அவர்கள் இந்தியா எந்த தொழில்நுட்பத்திலும் முன்னேறிவிடக்க்கூடாது என்று எண்ணம் கொண்டதுபோல இருந்தது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவு நிறைந்த, ஒன்றுபட்ட மக்கள் இத்தகைய கட்சிகளுக்கு ஆபத்தானவர்கள் என்பதை இத்தகைய கட்சித் தலைவர்கள் உணர்ந்ததுபோலவே இருக்கிறார்கள்.

சிறு குறிப்பு : NASAவில் வேலை செய்யும் மக்களில் 30 சதவீதம் இந்தியர்கள்.

Series Navigation<< ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins)2001 க்கு அப்புறம் – ஆர்தர் சி கிளார்க் >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *