ஜெயலலிதா பிரதமரானால்
ஸ்பெஷல்
தின
கப்ஸா
செய்திகளை முந்தித் தருவது தின கப்ஸா
பிஜேபி எம்பிக்களை காணவில்லை.
மே 1. பிஜேபியைச் சார்ந்த 180 எம்பிக்களையும் நேற்று மாலையிலிருந்து காணவில்லை. இவர்கள் அனைவரும் பெங்களூருக்கு கடத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. சுப்பிரமணியசாமி அனைவரையும் டீ பார்ட்டிக்கு அழைத்து மயக்கமருந்து கொடுத்து பெங்களூருக்கு பஸ்ஸில் கடத்திக்கொண்டு சென்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஆட்சி?
மே 2. இன்று காலை புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் ஜனாதிபதி கே ஆர் நாராயணனை சந்தித்து பிஜேபி யைச் சேர்ந்த 180 எம்பிக்களும் அதிமுகவில் இணைந்து விட்டதை தெரிவித்து அதிமுகவை அரசாள அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பிறகு நிருபர்களை சந்தித்த புரட்சித்தலைவி மீதமிருக்கும் எம்பிக்களான அத்வானியும் வாஜ்பேயியும் அதிமுகவில் இணைந்து அண்ணாவழியில் புரட்சித்தலைவர் பாதையில் அமைய இருக்கும் அதிமுக ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதற்கிடையே பெங்களூரில் இருந்து தப்பிய ஒரு பிஜேபி எம்பி ஹைதராபாதில் பிடிபட்டதாகவும் அட்மிரல் விஷ்ணு பகவத் அந்த எம்பியை பிடித்து திருப்பி பெங்களூருக்கு கொண்டுவந்து சேர்த்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெயலலிதா பிரதமர்.
மே 4. இன்று காலை ஜனாதிபதி கே ஆர் நாராயணன் ஜெயலலிதாவுக்கு பிரதமர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சோனியா துணை பிரதமரானார். காங்கிரஸ் தலைவியான சோனியாவும் ஜெயலலிதாவும் வெகுநேரம் டீ அருந்தி மகிழ்ந்ததை வண்ணப்படத்தில் காணலாம். சோனியா பிறகு நிருபர்களை சந்தித்தபோது காங்கிரஸ் அதிமுகவு கூட்டணிக்கு அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் மீத நான்கு வருடங்களும் நிலையான ஆட்சி நடக்கும் என்று கூறினார், அங்கு இருந்த கம்பூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். அப்போது புதிய நிதி அமைச்சரான சுப்பிரமணியசாமி ஜெயலலிதா ஆட்சியை இறக்குவதே தன் முதல் வேலை என்று தெரிவித்தார். பல நிருபர்கள் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார்கள் என்று தெரிகிறது.
.
.
டெல்டா விமானம் நொறுங்கியது.
சூன். 1. ஜெயலலிதா கட் அவுட்டுகள் டெல்லி முழுவதும் நிரம்பி இருப்பதால் எந்த இடத்தையும் அடையாளம் காண இயலாமல் மக்கள் திணறியதில் இன்று 3000 பேர்கள் காணாமல் போனதாக தூர்தர்ஷன் தெரிவித்தது. மற்றொரு செய்தியில் அமெரிக்க டெல்டா விமானம் இன்று ஜெயலலிதா விமான நிலையத்துக்குள் இருந்த கட் அவுட்டில் இடித்து விமானம் வெடித்து 100 பேர் இறந்ததார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஜெயலலிதா பேரவையைச் சார்ந்த சேஷாத்திரி இன்று டெல்டா விமானம் ஜெயலலிதா கட்அவுட்டில் இடித்து நாசம் செய்தது அமெரிக்க சதிவேலை என்று கூறி அமெரிக்கா மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்தார்
டெல்லி பெயர் மாற்றம்
சூன் 2. இன்று முதல் டெல்லி பெயர் மாற்றம் பெறுகிறது. டெல்லியின் பெயர் இன்று முதல் புரட்சித்தலைவி ஜெயலலிதா நகர் என்று அழைக்கப்படும். கல்கத்தா சசிகலாநகர் என்று அழைக்கப்படும். பம்பாய் நடராஜன்நகர் என்றும் சென்னை புரட்சித்தலைவர் எம்ஜியார்நகர் என்றும் அழைக்கப்படும்
ஜெயலலிதா டெல்லி வருகை
சூன் 20. இன்றூ சென்னை போயஸ் தோட்டத்திலிருந்து டெல்லி வரை அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. ஜெயலலிதா உயிருக்கு பாதுகாப்பு வேண்டி அனைத்து விமான, ரயில், கார், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது என்று ராணுவம் அறிவித்தது. ஜெயலலிதா சென்னையிலிருந்து டில்லி செல்வதற்காக 100 விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அவர் முன்பு 100 கார்கள் முன்னும் பின்னும் செல்ல போயஸ் தோட்டத்திலிருந்து ஜார்ஜ் கோட்டைவரை சென்றது போலவே இப்போதும் அவர் 100 விமானங்கள் முன்னும் பின்னும் செல்ல போயஸ் தோட்டத்திலிருந்து டில்லி செங்கோட்டை வரை செல்வார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்க்காரியா தீர்ப்பு இன்று
சூன் 22. சர்க்காரியா கமிஷன் தீர்ப்பு இன்று அமலாக்கப்படுகிறது. கருணாநிதி தேசத்துரோகி குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மைலாப்பூர், அடையார் போன்ற இடங்களில் ஒரு சில சமூகத்தினர் இந்த நாளை சமூக எழுச்சி நாளாக கொண்டாடினார்கள். லல்லு பிரசாத் யாதவ், முலயாம் சிங் யாதவ் மற்றும் தேவிலால் இந்த நாளை இந்தி எழுச்சி நாளாக கொண்டாடினார்கள்.
மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
சூலை 3. ஜனாதிபதி கே ஆர் நாராயணன் ஒரு விழாவில் பேசும் போது அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கே ஆர் நாராயணன் வெட்கப்பட்டு கண்ணை மூடிக்கொண்டு ஓடும் அளவுக்கு ஆர்ப்பாட்டம் இருந்ததால் பெருத்த குழப்பம் நிலவியது.
இன்று உடன்பிறவா சகோதரி பிறந்த நாள்.
சூலை 7. இன்று உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் பிறந்தநாள். இதனால் டில்லி சென்னை கல்கத்தா பம்பாய் போன்ற நகரங்கள் விழாக்கோலம் பூண்டன. அமெரிக்க அதிபர் கிளின்டன், செர்பியா அதிபர் மிலாசவிக், ரஷிய அதிபர் போன்ற அனைத்து உலகத் தலைவர்களும் வந்திருந்து சசிகலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்கள் வராவிட்டால் இந்தியா தூதரகங்களை மூடி உறவுகளை முறித்துக்கொள்ளும் என்று மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. விழாவுக்கு வந்த உலகத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இந்திய ராணுவ ஜெட் பரிசாக அளிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு சாப்பாடும் ஒரு கிலோ தங்கமும் வழங்கப்பட்டதாக விழாக்குழு தலைவர் சரத்பவார் கூறினார்.
கே ஆர் நாராயணன் ஜெயா சந்திப்பு
சூலை 10. ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இன்று போயஸ் தோட்டத்துக்கு சென்றார். ஜெயலலிதா கே ஆர் நாராயணனை ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பார்க்க மறுத்ததால், இன்று வழக்கத்துக்கு மாறாக ஜனாதிபதி கே ஆர் நாராயணன் போயஸ் தோட்டத்துக்கு சென்று புரட்சித்தலைவி ஜெயலலிதாவை பார்த்து பேசினார்.
கே ஆர் நாராயணன் பர்மா தப்பி ஓட்டம்
சூலை 17. அட்டார்னி ஜெனரல் ஜெயலலிதாவிடம் செருப்படி வாங்கியது தெரிந்ததே. இதனால் நடந்த குழப்பத்தில் கே ஆர் நாராயணன் காணாமல் போனதை யாரும் கவனிக்கவில்லை. இதற்கிடையே அவர் பர்மாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்வானி, வாஜ்பாயி பாகிஸ்தான் தப்பி ஓட்டமா?
சூலை 27. லாகூருக்கு போய் வந்துகொண்டிருந்த பஸ்ஸில் அத்வானியும் வாஜ்பாயியும் தலைமறைவாக தப்பி பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
குட்டரோச்சி ஜனாதிபதி ஆனார்.
சூலை 30. கே ஆர் நாராயணன் பர்மாவுக்கு ஓடி விட்டதால், சோனியா சிபாரிசில் அவரது உறவினரான குட்டரோச்சி இன்று முதல் ஜனாதிபதி ஆகிறார்.
ஆகஸ்ட் 10. இன்று கும்பமேளா
இன்று கும்பமேளாவில் பிரதமர் ஜெயலலிதாவும் அவரது உடன்பிறவா சகோதரியுமான சசிகலாவும் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி விளையாடி மகிழ்ந்தார்கள். அவர்கள் கங்கையில் விளையாடிய ஒரு கரை முழுவதும் பொதுமக்கள் உபயோகம் செய்யமுடியாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக போலீஸார் தடை செய்து வைத்ததனால், மறு கரையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிலர் மறு கரை நோக்கி நீந்தி வந்ததைப்பார்த்த போலீஸார் தடியடி பிரயோகம் செய்ததில் நெரிசல் ஏற்பட்டு 10 லட்சம் பேர் இறந்தனர். இது கேட்டு வருத்தப்பட்ட ஜெயலலிதா யாரும் கேட்காமலேயே விசாரணைக் கமிஷன் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விசாரணைக்கமிஷனுக்கு அலாஹாபாத் முனிசிபல் குமாஸ்தா தலைமை தாங்குவார் என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு?
ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்தபோது நோபல் பரிசு பெற ஆவலாக இருந்தது தெரிந்ததே. அப்போது எதிர்கட்சிகளின் சூழ்ச்சியாலும் பத்திரிக்கைகளின் பொய்ப்பிரச்சாரத்தாலும் அவர் நோபல் பரிசு பெற முடியாமல் போனது என்பது ஜெயலலிதாவின் ஆதங்கமாக இருந்தது. இதனால் அதிமுக ஜெயலலிதா பேரவைத் தலைவரான சுப்பிரமணிய சாமி ஜெயலலிதா சார்பாக நோபல் பரிசு கமிட்டியை சந்தித்து பேசினார். அப்போது அவர் நோபல் பரிசுக் கமிட்டியிடம் தான் இரண்டு நாட்களுக்குள் ஜெயலலிதாவுக்கு நோபல்பரிசு பெற்றுத்தருவதாக இந்தியாவில் கூறியிருப்பதால் தயவு செய்து ஜெயலலிதாவுக்கு சமாதான நோபல் பரிசு தந்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு நோபல் பரிசுக் கமிட்டியினர் அது அவ்வளவு எளிதில்லை என்றும் பாகிஸ்தானிடம் காஷ்மீரை கொடுத்துவிட்டால் நோபல் பரிசு நிச்சயம் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனால் சந்தோஷமடைந்த ஜெயலலிதா காஷ்மீர் மட்டுமல்ல, கேரளாவின் மலப்புரம், தமிழக நாகர்கோவில், கீழக்கரை, லட்சத்தீவுகள், ஹைதராபாத், கூடவே பம்பாயையும் பாகிஸ்தானுக்கு தந்து நோபல் பரிசு பெற தீவிரமாகி இருக்கிறார். இன்று காலை இது கேள்விப்பட்ட கீழக்கரைசேர்ந்த மக்கள் பாகிஸ்தானுடம் சேரமாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 300 பேர் மரணம் அடைந்தனர். இது பற்றி விசாரிக்க பிரதமர் ஜெயலலிதா ஒரு வக்கீல் குமாஸ்தா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
- ஒளிர்ந்து மறைந்த நிலா
- இறைவனின் எல்லாக் குழந்தைகளுக்கும் அப்போது சிறகுகள் இருந்தன
- அன்புள்ள ஆசிரியருக்கு
- மங்கையர் மலரில் இதுவரை வெளிவராத சமையல் குறிப்புகள்
- குடி குடியைக் கெடுக்கும் – தமிழ்நாடு பற்றிய திண்ணை அட்டவணை1998ஏப்ரல்-1999 மார்ச் – ல் டஸ்மாக் நிறுவனம் வழியாக விற்பனையான மதுவகைகளின் அளவு: 22 கோடி லிட்டர்
- திண்டுக்கல் சோதிடரும் மழையும்
- எங்கே மகிழ்ச்சி ?
- பேட்டிகள் : தின கப்சா விற்கு மட்டுமே கிடைத்தவை.
- ஜெயலலிதா பிரதமரானால்
- ஆன்மீகமும் யூத எதிர்ப்பும் பற்றிய உரையாடல்
- ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins)
- செவ்வாய் கிரகத்தின் கடந்த காலம்
- 2001 க்கு அப்புறம் – ஆர்தர் சி கிளார்க்
- ஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..