அன்புள்ள ஆசிரியருக்கு

This entry is part 3 of 14 in the series 19990902_Issue

நத்தம் அங்கணன்.
(ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதுபவர்கள் ஒரு தனீ ரகம். ஒவ்வொரு பத்திரிகையின் ஜீவநாடியை முழுமையாக அறிந்தவர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். “குமுதத்தின் கவர்ச்சிப் படம் மகா ஜில்லு. என்னை ஜொள்ளு விட வைத்தது” என்று எழுதிய பேனாவினாலேயே துக்ளக்கிற்கும், “குமுதம் போன்ற ஆபாசப் பத்திரிகைகளைத் தடை செய்ய வேண்டும் ” எழுதினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இதோ ஒரு கற்பனை – ஆனால் உண்மையின் சகல குணாம்சங்களும் கொண்ட சில உதாரணங்கள்.)நத்தம் அங்கணன்.

குமுதம் :

அடடா அட்டைப் படத்தின் கவர்ச்சியில் மூழ்கினவன் எழுந்திருக்கவே இல்லை. என்னைத் தூக்கி விட அடுத்த வாரம் அட்டையில் என்ன போடப் போகிறீர்கள்?

கொருக்குப் பேட்டை குப்புசாமி.

சிம்ரன் நாக்கையும் ரம்பாவின் நாக்கையும் ஒப்பிட்டு எழுதிய அரசு பதில்கள் படித்தேன். சிம்ரனுக்கு நாக்கு நீளம் என்று நீங்கள் சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. ஏதோ ஒரு படத்தில் நாக்கினால் மூக்கைத் தொடும் போட்டியில் வெற்றி பெற்றால் போதாது. சிம்ரன் தன் நாக்கினால் தன் மூக்கைத் தான் தொட்டார். ரம்பாவோ தன் நாக்கினால் சூப்பர் ஹீரோவின் மூக்கையே தொட்டவர் என்று நினைவு படுத்துகிறேன்.

சிலுக்குப் பட்டி, விஸ்வநாத சர்மா.

துக்ளக்

சோவின் கட்டுரையில் தாக்கப் பட்ட எல்லா அரசியல் வாதிகளையும் உயிரோடு எரித்து விட வேண்டும். அப்போது தான் வாஜ்பாய், அத்வானி போன்ற நேர்மையான அரசியல் வாதிகள் செல்வாக்குப் பெற முடியும். அத்வானி இதற்காக “கத்தி துப்பாக்கி ரத யாத்திரை” செய்ய வேண்டும் என்பது என் வேண்டு கோள்.

மௌண்ட் ரோட், தி நகர், மெட்ராஸ் . எஸ். பார்த்த சாரதி.

திராவிடக் கட்சிகளின் சுய ரூபத்தைத் தோலுரித்துக் காட்டிய உங்கள் கட்டுரையை தமிழ்நாட்டின் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். எம் ஜி ஆர், ஜெயலலிதா போன்ற உன்னதத் தலைவர்களை முதலில் ஆதரித்ததன் மூலம் திராவிடக் கட்சிகளின் முதுகெலும்பை உடைத்திருக்கிறீர்கள். இந்த முட்டாள் மக்கள் எப்போது தான் திருந்துவார்களோ தெரியவில்லை.

ஸ்ரீரங்கம். எல். ரங்கநாதன்

காலச் சுவடு

பின் அமைப்பியல் வாதம் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன்.அமைப்பியல் வாதத்தில் பின் செருகப்பட்டதும் பின் அமைப்பியல் வாதம் உரிவாகியது என்பதை நன்றாக விளக்கியிருந்தீர்கள். பின் என்று குறிப்பிடாமல் குண்டூசி அமைப்பியல் வாதம் என்று இதனை அழைத்திட்டால் நல்லது. என்னைப் போன்ற தமிழ் மட்டுமே அறிந்த இலக்கிய அன்பர்களுக்கு நன்றாகப் புரிய வேண்டும் அல்லவா?

திருப்பூர் குருதிக் கனல்.

மார்க்ஸியம் மடிந்து விட்டது என்று குரல் கொடுக்கும் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக நீங்கள் மாறிவிட்டது வருத்தமும் கோபமும் அளிக்கிறது. லெனின், ஸ்டாலின், கார்க்கி வழியில் சோஷலிஸ சமுதாயம் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்போது தங்களின் நசிவு இலக்கிய முயற்சிகள் முறியடிக்கப் பட்டு, சோஷலிஸ யதார்த்தம் நிலை நாட்டப் படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நெல்லை. தி க சி.

கல்கி

கல்கியின் மகோன்னத சேவையைத் தமிழ் கூறு நல்லுலகிற்கு எடுத்துக் கூறி, பொன்னியின் செல்வனை முப்பதாவது தடவையாகப் படிக்கச் செய்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரிய வில்லை. வந்தியத் தேவனின் வாள் வீச்சில் நான் மெய்மறந்தேன். எம் எஸ்ஸின் கீத ஒலி கல்கியைத் திறந்தாலே என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. காஞ்சிப் பெரியவரின் தெய்வீகக் குரலை ஒவ்வொரு பக்கத்திலும் வெளியிட்டு தமிழ்நாட்டை ரட்சிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

நத்தம் அங்கணன்.

Thinnai 2000 January 10

Series Navigation<< இறைவனின் எல்லாக் குழந்தைகளுக்கும் அப்போது சிறகுகள் இருந்தனமங்கையர் மலரில் இதுவரை வெளிவராத சமையல் குறிப்புகள் >>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *