மதிப்பிற்குறிய தோழர் ரவி ஸ்ரீனிவாஸ் அவர்களது கவனத்துக்கு

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

புதுவை ஞானம்



தோழரே! வணக்கம்.

நீங்கள் எனது தோழர் ஆனால் நான் தான் மறந்து விட்டென் என்பதாக பரிக்ஷா ஞாநி சொன்னார். என்னால் நினைவு படுத்த முடியவில்லை , என்பதோடு “அழுதாலும் பிள்ளை அவள் தான் பெற வேண்டும்” என்ற எனது திண்ணைக் கட்டுரைக்கு நீங்கள் இது வரை பதில் அளிக்க முற்படவில்லை என்பதையும் நினைக்க வேதனையாக இருந்த போதிலும் தங்களது ‘சமூக அக்கறையை’ எப்பொதும் மதித்து வந்திருக்கிறேன்.

இந்த வாரம் திண்ணையில் நீங்கள் சட்டத்துறையை _ நீதி மன்றத்தைத் தமிழ்ப் படுத்துவது குறித்து எழுதியதில் உள்ள கவலைகளை நாணும் பகிர்ந்து கொள்கிறேன்.

இருந்த போதிலும் , ‘ Unfortunately we have become specialists’ என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக புத்தர் சொன்னதாக ‘Zen and the Art of Motor Cycle Maintanence’ என்ற புத்தகத்தில் நான் படித்ததாக நினைவுக்கு வருகையில், சில தமிழ்ப் படுத்தும் முயற்சிகள் _ உங்களது பார்வைக்கு வராத முயற்சிகள்_என் நினைவுக்கு வருகின்றன. மன்னிக்கவும்.

நான் முட்டாள் தனமாகவோ புத்திசாலித்தனமாகவோ LIC யில் நிம்மதியான அல்லது வசதியான உத்தியோகத்தை விட்டு விட்டு , ஏற்கனவே தாயை இழந்த நாலு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்ற போது அமரர் சங்கரலிங்கம்(Director, Roja Muththaiyaa Research Library ),பெரியவர் சேஷகிரி என்பவரை அறிமுகப்படுத்த அவர் என் மீது இரக்கம் கொண்டு “சட்டக்கதிர்” என்ற பத்திரிக்கையில் மொழி பெயர்ப்பாளராக செல்லுங்கள் என அறிவுறை கூறியபடி, உயர் நீதி எதிரே YMCA

கட்டிடத்தில் இயங்கி வந்த “சட்டக்கதிர்” எனும் மாதாந்திர பத்திரிக்கை அலுவலகம் சென்று திரு.புகழேந்தி எனும் வழக்கறிஞரைச் சந்தித்து அப்பத்திரிக்கையின் மொழிபெயர்ப்பாளர் குழுவில் இணைந்து தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் LLJ எனப்படும் ஆங்கில சஞ்சிகையிலிருந்து பல்வேறு உயர் நீதிமன்றத்தீர்ப்புகளை மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறேன்.திரு ஸ்ரினிவாசன் என்ற பெரியவர் எங்களுக்கு Content Editor ஆக இருந்து எங்களது மொழிபெயர்ப்புகளைச் செப்பனிட்டு இருக்கிறார். திரு ஏ.எம்.சம்பத் என்ற வழக்கறிஞர் அதன் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்தார் என்பதோடு ‘பண்டைத் தமிழர்களின் நீதித்துறை’ பற்றி முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்து கொண்டுமிருந்தார்.அந்தப் பணி எனக்கு ஆன்மதிருப்தியாக இருந்தது என்பதோடு ஒரு பக்கத்துக்கு ரூபாய் முப்பது வீதம் சன்மானமும் கிடைத்து என் குடும்பத்தைக் காப்பாற்றியது.

அந்த பத்திரிக்கை அலுவலகத்தில் மிக அருமையான சட்ட அகராதிகள் ஆங்கில மொழியில் இருந்தன,அவற்றைப் பயன் படுத்த அனுமதியும் கிடைத்தது. அத்தோடு கூட “தீர்ப்புத் திரட்டு” என்ற தமிழக அரசின் இதழ்களும் அதன் மூலம் தமிழில் சட்டச் சொல்லகராதிப் பணி தொடர்ந்து நடந்து வருவதையும் கண்டு மகிழ்வடைந்தேன்.என்னுடைய சர்க்கரை வியாதி முற்றி ரத்தம் கக்கி உணர்வற்ற நிலைக்குள்ளாழ்ந்து மருத்துவ மனை செல்லும் வரை இப்பணி தொடர்ந்தது. பின்னர் எனக்கும் அவர்களுக்கும் தொடர்பற்று நான் இந்திராகாந்தி பல்கலைக் கழக மொழி பெயர்ப்பில் ஈடுபட பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

இதற்கிடையில் சட்டப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டு விட்டதால் அப்பணி தொடர்ந்து நடை பெறுகிறது என நம்புகிறேன். ஆங்கிலத்தில் Dictionary of science and Technology,Dictionary of philosophy,Dictionary of Mind and Spirit என்றெல்லாம் பல அகராதிகள் இருப்பது போல், சீரிய அறிஞரும் சமூக அக்கறை உள்ளவருமான நீங்கள் உங்களுக்கு இருக்கும் கணிணி வசதியைப் பயன் படுத்தி ஏதாவது உருப்படியாகச் செய்யலாம் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

அன்புடன்,
புதுவை ஞானம்.


j.p.pandit@gmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்