வெங்கட் சாமிநாதன்,மு.மேத்தா, ஒரு தொகுப்பு – ஒரு குறிப்பு

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


வெங்கட் சாமிநாதன் (வெ.சா) மு.மேத்தாவின் கவிதைத்தொகுப்பினைப் பற்றி எழுதிய அந்தப் புகழ் பெற்ற வாசகத்தினை அத்தொகுப்பில்

பார்த்ததாக நினைவு. எந்தப் பதிப்பு என்பது நினைவில்லை, ஆனால் நூலின் உள்ளே பிறர் கருத்துக்களுடன் இதுவும் இடம் பெற்றிருந்தது என்று நினைக்கிறேன். தமிழ்ப் புதுக்கவிதை மேத்தாவின் கன்ணீர்ப்பூக்களைத் தாண்டி சென்றுவிட்டது, அது போல் இலக்கிய விமர்சனமும் அந்த புகழ் பெற்ற வாசகத்துடன் நின்றுவிட வில்லை.வெ.சாவிற்கு அது ஆயுள் சாதனையாகத் தெரியலாம். கிட்டதட்ட முப்பதாண்டுகளுக்குப் பின் அதற்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் மிகக் குறைவானதுதான், அதிகபட்சம் ஒரு அடிக்குறிப்பாக குறிப்பிடலாம். வறட்டு மார்க்சியவாதிகளை வெ.சா விமர்சித்தார், அதை விட சிறப்பான விமர்சனம் மார்க்சியத்திற்குள்ளிருந்தே வந்தது. வானம்பாடிகள் குறித்து கோவை ஞானியும் எழுதியிருக்கிறார். வெ.சா விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், வானம்பாடிகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழ்ப் புதுக்கவிதையில் சில விரும்பத்தக்க மாற்றங்களுக்கு காரணமாக இருந்தார்கள் என்பது உண்மை.

வெ.சா விமர்சித்த வறட்டு மார்க்சியவாதிகளின் கருத்துக்களும், அவரது விமர்சனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மு.மேத்தா பின்னர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார், வரலாற்றுப் புதினம் எழுதினார், திரைப்படம் தயாரித்தார், கணக்கற்ற மேடைகளில் கவிதைகள் வாசித்தார். இவ்வளவு செய்தவர் கண்ணீர் பூக்களின் 31வது பதிப்பு விழாவில் அம்மேடையில் வெ.சா விற்கும் ஒரு இடம் தந்து அந்த புகழ் பெற்ற வாசகத்தினை வெ.சா கூற கூடியிருந்தோர் கேட்கும் வண்ணம் செய்திருக்கலாம். இப்போதும் கூட காலம் கடந்துவிட வில்லை. இனி அடுத்து கண்ணீர் பூக்களின் பதிப்பு விழாவொன்றில் கூட இதைச் செய்யலாம். அதில் வெ.சா காலம் விருது பெற்றதை பாராட்டி நான்கு வாக்கியங்கள் கூறலாம்.

நான் என்னுடைய 18 வது வயதில் வெ.சா வின் இரண்டு நூல்களை (பாலையும் வாழையும், ஒர் எதிர்ப்பின் குரல்) முதன் முறையாகப் படித்தேன். இவர் கருத்துக்கள் வித்தியாசமாக உள்ளன என்று முதலில் படித்த போது தோன்றியது.ஆனால் ஒராண்டிற்குள் அவர் எழுத்தில் உள்ள குறைகள், போதாமைகள் தெரிந்திவிட்டதாலும், அடுத்து நான் படித்த அவரது கட்டுரைகளும் தொகுப்பிலிருந்த கட்டுரைகள் போல் இருந்ததாலும் சலிப்புதான் ஏற்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் கழித்துப் படிக்கும் போது ஒரு தேர்ந்த பதிப்பாசிரியர் இக்கட்டுரைகளை அவை உள்ள நீளத்தில் மூன்றில் ஒரு பங்காக தந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று தோன்றியது. அவரது பல கட்டுரைகளில் சப்தம் (noise) அதிகம் சரக்கு குறைவு. ஆனால் அவை வெளியான காலத்தில் அவை வரவேற்பினைப் பெற்றதை நான் புரிந்து கொண்டேன். இரண்டு கிணறுகளில் இருந்த தவளைகளுக்கிடையே நடந்த ‘விவாதம் ‘ அது.

இணையத்தில் வெ.சா வின் எழுத்துக்களைப் படித்த போது அவரிடம் புதிதாகச் சொல்வதற்கு அதிகம் இல்லை, இன்னும் பழைய சட்டகங்களையே பயன்படுத்துகிறார் என்பது தெளிவானது. கண்ணீர் பூக்களுக்கு வெ,சா வைத்த அதே விமர்சனத்தினை அதாவது அந்த வாசகத்தினை சற்றே மாற்றி வெ.சாவின் இலக்கிய விமர்சனங்கள் குறித்து யாரேனும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தாலும் அதில் வியப்படைய ஒன்றுமில்லை.

இன்று வெ.சா அன்று எழுதியதை அப்படியே மறுபிரசுரம் செய்ய என்ன தேவையிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படியே மறுபிரசுரம் செய்தாலும் வெ.சா வின் மீள்பார்வை என்ன என்பதையாவது அவர் எழுதியிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.அப்படி இல்லாத போது வெ.சாவின் கருத்துக்களை அறிமுகப்படுத்தி, முப்பதாண்டுகளுக்கும் நுன் அவை எழுதப்பட்ட சூழ்நிலையை விளக்கி, இன்று அவற்றின் மீதான ஒரு மதீப்பீட்டினை முன் வைக்கும் கட்டுரை ஒன்று அந்த தொகுப்பில் இடம் பெறுவது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

எதிர்ப்பின் குரல் தொகுப்பிலிருந்த கட்டுரைகள் இன்று வாசகர்கள் படிப்பது அவசியம் என்று வெ.சாவோ அல்லது வெளியீட்டாளரோ கருதினால் அத்தொகுப்பினை வெ.சாவின் பின்னுரையுடன் மறு பிரசுரம் செய்யலாம் அல்லது அதிலிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பினை கொண்டுவந்திருக்கலாம். வெ.சா கடந்த 10-15 ஆண்டுகளில் கவிதை பற்றி எழுதியவற்றை ஒரு தொகுப்ப்பாக கொண்டு வந்திருக்கலாம். அவ்வாறின்றி எதிர்ப்பின் குரலில் ‘தேங்கிப் போன ‘ கட்டுரைகளையும், கடந்த 10-15 ஆண்டுகளில் எழுதப்பட்டவற்றிலிருந்து கவிதை பற்றி எழுதப்பட்டவற்றையும் ஒரே நூலாக கொண்டுவருவதற்கான தேவை அல்லது நியாயம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை.

ravisrinivas@rediffmail.com

http://ravisrinivas.blogspot.com/

Series Navigation