ஒரு மனுதர்மவாதியும், ஒரே பொய்யின் ஆயிரம் வடிவங்களும்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

ராதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

அரவிந்தன் நீலகண்டன்தான் விவாதத்தில் எழுப்பபட்ட கேள்விகளுக்கு பதில் தராமல் நழுவுகிறார். அவருக்கு இச்சர்ச்சைக் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதே தெரியாதா, இல்லை தெரிந்தும், சோவியத் பிராச்சாரத்தை ஏன் ஏற்றார், முன்வைத்தார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.இந்த சர்ச்சையில் 1970களின் இறுதியிலேயே இக்கடிதம் மார்க்சுக்கு எழுதப்படவில்லை என்பது நிருபீக்க்பட்டது. இந்த சர்ச்சையின் முழு விபரங்கள் தெரியாமல் அவர் எழுதினாரா. இன்னொரு தரப்பு இருக்கும் போது அதை தான் ஏன் ஏற்கவில்லை என்பதையாவது குறிப்பிடாதது ஏன். டார்வின் மார்க்சுக்கு எழுதிய கடிதமும், சர்ச்சைக்குள்ளான கடிதத்தினையும் படிப்பவர்களுக்குப் புரியும் அவர் செய்வது மோசடி என்று. எதையோ கட்டியம் கூறுவது போல் இது உள்ளது என்பது இவருடைய கண்டுபிடிப்பா இல்லை வேறு யாரவது கூறியிருக்கிறார்களா என்று கேள்வி கேட்டால் அதற்கு பதில் இல்லை.அந்த இரண்டு கடிதங்களில் காணப்படும் செய்திகளுக்கும்,கருத்துக்களுக்கும் இவரது முடிபிற்கும் தொடர்பேயில்லை.

மார்க்சியர்கள் டார்வினின் தத்துவம், பரிணாமவாதம் குறித்து மார்க்ஸ் காலத்திலிருந்தே விவாதித்து வருகிறார்கள்.இதற்கு சான்றும் திண்ணையில் தரப்பட்டுள்ளது. லைசென்கோ விவகாரம், ஸ்டாலின் குறித்து மார்க்சியர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். இன்றும் மார்க்சியர்களும், இடதுசாரிகளும் அறிவியல், மார்க்சியம், பரிணாமவாதம் குறித்து பல்வேறு தளங்களில் விவாதித்து வருகின்றனர். Science and Society, Science As Cultre போன்றவற்றிலும், Science For the People போன்ற மின்னஞ்சல் விவாதபதிவுகளிலும் மார்க்சியர்கள், இடதுசாரிகள் பரிணாமவாதம்,மரபணுவியல், அறிவியல் குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதவிர அறிவியலின் வரலாறு, உயிரியலும், தத்துவமும் என்பன போன்றவை குறித்த ஜர்னலில்களும் கட்டுரைகள் வெளியாகியுள்ளன, வெளியாகின்றன. இவை பற்றிய அறிவு இம்மியளவு கூட இல்லாத ஹிந்த்துவ ‘அறிவியல் ‘ ஜெகத்குரு தனக்கு எல்லாம் தெரிந்த தோரணையில் எழுதுவது நகைப்பிற்குரியது. உதாரணமாக லைசென்கோ விவகாரம் பற்றி ஒருதலைப்பட்சமான சித்திரிப்பினை முன்வைக்கும் அவர் இது குறித்து பேசும் முக்கியமான நூல்களை குறிப்பிடுவதில்லை. அதற்கு காரணம் அறியாமையா பயமா. பின்னதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அறியாமையும்,அகந்தையும் ‘சரியான ‘ விகிதத்தில் அவரிடம் இருப்பதை அவர் எழுத்துக்கள் காட்டுகின்றன.

இவர் மேற்கோள் காட்டிய தளத்திலிருந்தே இவர் எழுதியதற்கு எதிராக சான்று கொடுத்த பின்னரும், வேறு சான்றுகள் மூலம் அவர் கொடுத்துள்ள தகவல் தவறு, அதனடிப்படையில் அவர் எழுதியது பொய் என்பதை அம்பலப்படுத்திய பின்னரும், அவரால் உண்மையினை ஏற்கமுடியவில்லை. சுலேகா தளத்தில் நான் அவரது மோசடியை அம்பலப்படுத்திய பின் அவருக்கு கூடுதலாக ஆத்திரம் வருகிறது.தமிழில் தன் ‘தெறமை ‘ காட்டிய பின் ஆங்கிலத்தில் ‘தெறமை ‘ காட்ட முயன்ற போது அம்பலப்பட்டுப்போன ஆத்திரத்தில் இன்னும் பொய்களை அள்ளி விடுகிறார். அவரது வியாபார சரக்கே திரிபுகளும், பொய்களும்தானே. அந்த ஆத்திரத்தில் நான் இந்து யூனிட்டிதளம் குறித்து எழுதியதைக் திரித்தே எழுதுகிறார் அவர். நான் எழுதியுள்ளதையும், அவர் எழுதியுள்ளதையும் ஒப்பிட்டுபார்த்தால் அவர் எழுதியுள்ளது பச்சைப் பொய் என்பது தெளிவாகும்.AID போன்ற அமைப்புகள் மீது ஹிந்த்துவவாதிகள் விஷமப்பிரச்சாரம் செய்வது வருவதை ஆதாரத்துடன் காட்டினேன். ஆயிரம் கைகளால் சூரியனை மறைக்க முடியாது, அது போல் இவரது ஆயிரம் பொய்களாலும் உண்மையினை மறைத்துவிட முடியாது.கொசுறு தகவல் ‘புகழ் ‘ அரவிந்தனால் திரும்ப திரும்ப ஒரே பொய்யை வேறு வார்த்தைக்களில் எழுதத்தான் முடியும்.இவரிடமிருந்து டாகின்ஸ், கோல்ட், லெவாண்டின், லெவின்ஸ் போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளைப் போன்றவைகளையா எதிர்பார்க்கமுடியும். அதெல்லாம் கொசு(று) அளவே மூளை உள்ள அவருக்கு புரியுமா என்பதே சந்தேகம்.

இரண்டு நபர்கள் ஒரே தளத்தினைக் குறிப்பிட்டால் இவருக்கு என்ன பிரச்சினை அதில். ஹிந்து யுனீட்டி தளத்தில் நாதுராம் கோட்சே குறித்து உள்ளதை இவர் ஏற்கிறாரா. விஜில் என்ற ஹிந்த்துவ தளத்தில் என் கருத்துக்களை அவர் பார்க்கலாம். அவை என் பெயரில்தான் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். தளத்தில் அவர்கள் கூறுவதை விமர்சிக்கும் கருத்துக்கள் இடம் பெற அனுமதிப்பதில்லை. இது என் அனுபவம்.

மேலும் காஞ்சி சத்யா தளத்திற்கு என் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன். இதில் ஒளிவுமறைவில்லை. இரண்டு பேர் தனித்தனியே தான் எழுதியதை பொய் என்று நிருபீப்பார்கள் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை போலும். அதை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத போது அவர் விஷமப்பிரச்சாரத்தில் இறங்குகிறார். இன்னும் எத்தனைகாலம்தான் இது போன்ற கேவலமான உத்திக்களை நம்பி பிழைப்பு நடத்தப் போகிறார்.பொய்சாட்சி சொல்வதை தொழிலாக மேற்கொள்வது போல்தான் இதுவும்.

சங்கர்ராமன் கொலைப் ‘புகழ் ‘ காஞ்சி சங்கர மடம் நடத்தி வரும் வேத பாடசாலைகளில் வேதங்களை பிராமணர் அல்லாதோர் படிக்க முடியுமா, பெண்கள் படிக்க முடியுமா, ஒரு பெண் சங்காராச்சாரியார் ஆக முடியுமா. மனுதர்மத்தினை கட்டிக்காக்கும் சங்கர மடத்தினை, இன்றும் தீண்டாமைக்கு ஆதரவாக, விதவை மறுமணத்தினை எதிர்க்கும் , குழந்தைத் திருமணம் சரி என்று வாதிடும் கருத்துக்களை தெய்வத்தின் குரல் என்று கொண்டாடும் மடத்தினை ஆதிரிக்கும் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மனுதர்ம புரவலர், ஆதரவாளர், அதனைப் பின்பற்றுபவர் என்பதுதானே உண்மை. விவாகரத்து குறித்து காஞ்சி மட இணையதளம் என்ன கூறுகிறது. இது குறித்து ஆர்.எஸ்.எஸ் தன் எதிர்ப்பினைக் காட்டியுள்ளதா. தமிழில் குடமுழுக்குச் செய்வதை எதிர்த்த ஜெயேந்திரரை ஆதரிக்கும் ஆர்.எஸ்.எஸ் தமிழ்த்துரோகிகளின் அமைப்புதானே. அனைத்துசாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்த்தது யார். பொது சிவில் சட்டம் குறித்து போலிக் கண்ணீர் விடும் ஹிந்த்துவ அமைப்புகள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழிவகுக்கும் சட்டம் தேவை என ஏன் போராடவில்லை. ஆறாண்டு காலம் ஆட்சியில் இருந்த பா.ஜ.கவும், அதன் அசல் முகமான ஆர்.எஸ்.எஸும் இது குறித்து எதுவே செய்யவில்லையே, ஏன் ?. உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னும் ஏன் அத்தகைய ஒரு சட்டத்தினை கொண்டு வரவில்லை. கண்டதேவி தேர் இழுப்பு பிரச்சினையில் அவர் நிலைப்பாடு என்ன ?.திண்ணையில் அவர் எழுதியதை விளக்குவாரா.

இப்படி பலவகைகளில் மனுதர்மத்திற்கு பாதந்தாங்கியாகவும், பல்லக்குத் தூக்கியாகவும், விசுவாசியாகவும், பாதுகாவலாராகவும் உள்ள ஒருவர், அதை மறைக்க போடும் வேடம்தான் தன்னை அறிவியல் மீது அக்கறை கொண்டவராக காட்டிக் கொள்வது. அதன் மூலம் மார்க்சியம், மார்ச்சியர் குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்வதை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். மற்றப்படி பரிணாமவாதத்திற்கும், அறிவியலுக்கும் இந்த ஏமாற்றுப் பேர்வழிக்கும் எந்தத் தொடர்புமில்லை. இந்த ஏமாற்றுப் பேர்வழி அறிவியல் கருத்துக்களையும், பிறர் கருத்துக்களையும் திரித்துக் கூறும் கீழ்த்தரமான பிரசாரகர்.

தைரியமிருந்தால் இன்னும் மனுதர்மத்தினையும், சாதிப்பாகுப்பாட்டினையும் முன்னிறுத்தும் காஞ்சி மடம் முன் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு வேளையாவது உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் கோருவாரா. தலைமை மறுத்தால் குறைந்தபட்சம் காஞ்சி மடத்தின் நிலைப்பாடுகளை விமர்சித்து தன் பெயரில் திண்ணையில் கட்டுரை எழுதும் தைரியமாவது அவருக்கு உண்டா. திண்ணையில் அவர் மனுதர்மத்தினை எதிர்ப்பது போல் காட்டிக்கொள்வார், ஆனால் அவரது விசுவாசம் அதற்குத்தான்.

இவரது ஹிந்த்துவ ‘அறிவியல் ‘ ஜெயமோகனின் அங்கீகாரத்தைப் பெறுவது வியப்பில்லை. ஜெயமோகன் ஒரு முறை இவருக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் போது வெங்கட் ரமணன் பெயரையும் சேர்த்தே குறிப்ப்பிடுள்ளார். இது குறித்து கவலைப்பட வேண்டியது, எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டியது வெங்கட் ரமணன்தான். ஒரு quack இன்னொரு charlatan ன்னுக்கு நற்சான்றிதழ் தருவதில் வியப்பில்லை. ஆனால் அதன்அடிப்படையில் வெங்கட் ரமணன் எழுதுவதும் ‘ஹிந்த்துவ ‘ அறிவியல் அல்லது மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரம் என்று தவறாக அனுமானிக்க அல்லது நினைக்க வாய்ப்புள்ளது. எனவே வெங்கட்ரமணன் தன் நிலைப்பாட்டினைத் தெரிவித்துவிடுவது நல்லது, அவருக்கும், பிறருக்கும்.

வணக்கத்துடன்

ராதா

radha100@rediffmail.com

Series Navigation

ராதா

ராதா