கடிதம் ஜனவரி 20,2005 – திருமாவளவனும் தமிழ்த்திரையுலகும்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

வரதன்


தமிழ்த் திரையில் பெண்களைச் சித்தரிக்கும் முறையும், குறிப்பிட்ட ஜாதிகளை உயர்த்தியோ அல்லது குத்தியோ காட்சியமைப்புகளும், அதிகமாகிப்போயிருப்பது எனும் குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழ்ப் படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் கிளம்பியிருக்கின்றன.

இதில் தற்போது கோரிக்கைத் தாண்டி மிரட்டல் வழி கடைப்பிடிக்கப்படுகிறது தான் கவனம் கொள்ள வேண்டிய விஷயம்.

சரி , ஊடகம் என்பது திரைப்படங்கள் மட்டும் தானா… ? தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் கிடையாதா… ?

பின் ஏன், திரைப்படங்கள் மட்டும் இலக்கு.. ?

1. தமிழ்ப்படங்களில் ஆங்கில மொழியில் பெயர் வைப்பது கூடாது.

– திரைப்படம் என்பது வணிகமும் கலந்து ஒரு வியாபார வடிவம். எது விற்கிறதோ அது வியாபாரத்திற்கு வரும். மேலும், திரைபட வடிவில் கலாச்சார பதிவுகள், அறிவு பூட்டல் விஷயங்கள் ‘செய்திபடங்கள் மற்றும் பதிவுப் படங்களாக ‘ தயாரிக்கப்படும். அது மாதிரி பட வடிவங்களையும் வணிகப் படங்களையும் ஏன் குழப்பிக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

2. தமிழ் கலாச்சார சீரழிவு கமலஹாசன், சூர்யா வைத்திருக்கும் படத் தயாரிப்புகளில் தான் இருக்கிறது.

– இது வேடிக்கையான வாதம்.

படையப்பா, அருணாச்சலம், சுவர்ணமுகி, ஒளவை சண்முகி, கண்களால் கைது செய், அன்பே சிவம், ஆயுத எழுத்து என்பன போன்ற படங்களின் தலைப்புகளும் வருகின்றன.

மேலும், திருமாவளவனுக்கு சினிமாவில் மேட்டுக்குடி கருத்துக்கள் புத்திசாலித்தனமாக புகுவது தெரியாமல், ‘உன்னால் முடியும் தம்பி ‘ ‘அன்பே சிவம் ‘ ‘நம்மவர் ‘ போன்ற அற்புத கருத்துப் படங்கள் தந்த கமலஹாசன் எதிரியாகத் தெரிகிறார்.

ஆனால், அதே சமயம் ஜாதிய உணர்வுள்ள ‘அந்நியன் ‘ தெரிவதில்லை.

சங்கர் படங்களைப் பாருங்கள்,

முற்பட்ட வகுப்பினர் கோட்டாவால் பாதிக்கப்படுவதை புத்திசாலித்தனமாக, முற்பட்டவரால் வளர்க்கப்படும் ‘பிற்படுத்தப்பட்டவரால் ‘ வசன வடிவில் ஜென்டில் மேன் படத்தில் தந்தார்.

இந்தியன், முதல்வன், ஜீன்ஸ் படத்திலும் கதாபாத்திரங்கள் முற்பட்ட ஜாதியினர் தான்.

— டாக்டரின் கைகள் பற்றி டெரிகாட்டன் பேண்ட், டெரிலின் சேர்ட் போட்டு தமிழ்பண்பாடு பற்றிப் பேசும் திருமாவளவனுக்கு தற்போது ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.

சங்கர் தற்போது எடுக்கும் , தூய தமிழ் பெயர் கொண்ட , அந்நியன் படத்தில் கூட, மேல்நாடு போல் நம்நாடு முன்னேற வேண்டும் என்று வெளிநாட்டிலிருந்து வந்து ஹீரோயிஸம் புரியும் தமிழன் பாத்திரம் ஒரு ‘ஐயங்கார் ‘ பையன் தான்.

இங்குதான் இருக்கு சூட்சமம்.

இது மட்டுமல்ல, மக்களுக்காக கிளர்ந்து எழும் இளைஞர்களாக மணிரத்னம் ஆயுத எழுத்தில் காண்பிக்கும், மூன்று கதாபாத்திரங்களும் கிறிஸ்துவ மற்றும் மேட்டுக்குடியினர் தான்.

ஒரு பிற்படுத்தப்பட்டவனோ, தாழ்த்தப்பட்டவனோ கிடையாது.

திருமாவளவன் போன்றோருக்கு தலைப்பு போன்ற பைசா பெறாத விஷயங்கள் பெரிதாய் தெரியும் போது, இது மாதிரி புத்திசாலி கலாச்சார எதேச்சதிகாரம் தெரியாதது அவரின் தலைமை பண்பிற்கான நுண்ணறிவைத்தான் கேள்விக்குறியாக்குகிறது.

3. அது கிடக்கட்டும்.

சூர்யா தனது படத்தில், ‘கும்பகோணம் மாமி ‘ என்று ஒரு ஜாதிய அடையாளத்துடன் ஒரு கேவலத்தைச் செய்தாரே அப்போது எங்கு போனார் திருமாவளவன்… ?

ஏன், சூர்யா அந்தக் கதாபாத்திரத்தை ‘ஸ்டெல்லா சிஸ்டர் ‘ என்று தான் சார்ந்த கிறிஸ்துவ மத பெண்மணி சாடையைக் கொண்டிருக்கலாமே…. ?

சூர்யா இந்து மத ஜாதியினரைக் கேவலப்படுத்தியதில் ஏதோ குஷியால் தானே திருமாவளவன் அமைதியாய் இருந்தது.

சூர்யாவின் கேவல சிந்தனையைப் பற்றிக் கேள்வி கேட்காமல் தலைப்பைப் பற்றி பேசுவது சரியான காமடியாக இருக்கிறது.

ஒரு வேளை, ‘என் இனிய நண்பன் ‘ என சூர்யா B.F பட டைட்டிலை மாத்தி விட்டு XXX படம் எடுக்கும் அங்க மற்றும் அசிங்க சொற்களை அதற்குண்டான அழகுத் தமிழ்ப் பெயரில் விளித்தால் திருமாவளவன் ‘தமிழ் வாழ்க ‘ என்பாரோ… ?

திருமாவளவன் தனது இந்த சிந்தனை அடிப்படைக் கோளாறைச் சரி செய்ய வேண்டும்.

இல்லாவிடில் இது வெறுமனே மிரட்டல் வழி என்றே கொள்ளப்படும்.

4. தவிர மாற்றம் என்பது மக்களின் மனநிலையில் ஏற்படுத்தப்பட வேண்டியது.

‘பாய்ஸ் ‘ படத்திற்கு ‘சீ ‘ என்று விமர்சனம் வந்தும் குழந்தைகளுடன் படம் பார்த்தவர்களும் இருந்தனர். நியூ படத்திற்கு சிறுவர்களை அழைத்து வந்த பெரியவர்கள் அதிகம்.

பிராச்சாரம் நடக்க வேண்டியது வேறு இடம்.

இது விடுத்து மிரட்டல் பாணி ஒர்க்கவுட் ஆகாது.

மேலும் உருப்படியான முறைகள் கொண்டு, சரியான விஷயங்களுக்கு திருமாவளவன் பாடுபடட்டும் இல்லாவிடில் ஏவி விடுபவரின் பலிகடா ஆகிவிடுவார்.

சிந்திப்பாரா திருமாவளவன்…. ?

வரதன்

பி.கு:

திருமாவளவன் இன்னும் சன் டி.வியையோ ஜெயா டிவியையோ தமிழ்ப் படுத்துதலில் இறங்காதது வியக்கவில்லை. ஏனென்றால் ,மிரட்டலின் விடை திமுக & அதிமுக-விடம் வேறுமாதிரி இருக்கும் என அனைவரும் அறிந்ததே.

திருமாவளவின் தைரியம் நிழல் ஹீரோக்களிடம் மட்டும் தானா…. ?

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்