கடிதம் ஜனவரி 20,2005 – செருப்பு: குறும்படம்.

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

கோவிந்த்


குறும்படம் என்ற பெயரில் பல குறும்புப் படங்கள் பார்த்த நிலையில், குறும்படம் என்றாலே ஒரு அலர்ஜி இருந்ததுண்டு.

ஆனால், மனதை அடித்துப் போட்ட மாதிரி உணர்வை படம் பார்த்தவுடன் தந்தது, ஒரு குறும்படம்-

அது- ‘செருப்பு ‘ எனும் குறும்படம்.

இலங்கையிலேயே வாழ்வைத் தொடரும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வின் நிதர்சன உண்மைகளை நெஞ்சில் பதியும் படி ஒரு படம்.

நம்ம ஊரில் மிக ஆணித்தரமாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமானால், சொல்லும் மொழியிலேயே சொல்கிறேன், ‘செருப்பால் அடித்தமாதிரி ஒரு படம் ‘

கமர்ஷியல் கானா படங்களில் நல்ல சிந்தை மற்றும் கதைக் கருக்களை தொலைத்துக் கொண்டிருக்கும் தமிழ் படங்களிடையே மிகப் பெரிய நம்பிக்கையைத் தரும் குறும்படம்.

கதை…. ?

– யாழின் மண்ணிலே வாழும் ஒரு ஏழைக் குடும்பம். விறகு வெட்டி அப்பா. ஊடமாட ஒத்தாசை செய்யும் அம்மா. ஏழைக் குழந்தைகளுக்கே உள்ள செருப்புக்கு ஆசைப்படும் அடிப்படைக் கனவுடன் சின்னஞ்சிறு பெண்.

– சக தோழியின் செருப்பை ஒரு முறை கடனாக சிறு விநாடி போட்டுப் பார்த்து ஏக்கமுடன் சந்தோஷமடையும் அவளின் அந்த நேரங்கள்.

– செருப்பு வாங்க தந்தை செய்து தரும் உண்டியலில் சேமிக்கும் அவளின் எதிர்பார்ப்பு நிறைந்த கண்கள்

– வெறும் பாதத்திற்கு மருதாணி போட்டு அழகு பார்த்து கொலுசுக்காய் அம்மாவிடம் கோரிக்கை வைக்கும் கனவு நேரம்…

– அந்தக் கனவு கேட்டு கலங்கும் தாயின் விழிகள்.

எதைச் சொல்ல… ?

அது தாண்டி, செருப்புடன் வரும் அப்பா சைக்கிள் நோக்கி , குறுக்காய் துள்ளி ஒடும் அந்த சந்தோஷத்தருணத்தை சிதைக்கும் அந்த கன்னி வெடி…

வெடித்து சிதைத்தது திரையில் கால்களைத் தான். ஆனால், மனது இன்னும் கிடைந்து பதைக்கிறது.

பொது மனித தீர்வு என்று நினைத்து செயல்படுத்தப்படும் ஒரு போராட்டமுறை எப்படி தனிமனித வாழ்வை முடமாக்குகிறது என இதை விட இதயம் தொடும் படி யாரும் சொன்னதுண்டா… ?

எங்கோ ஒரு நாள் பார்த்த ‘bicycle thief ‘ ‘pather panchali ‘ படங்களை ஞாபகப்படுத்தியது – உணர்வைத் தூண்டியதில்.

கட்டாயம் பார்த்து பிறரையும் பார்க்கச் சொல்ல வேண்டிய படம்.

நீங்களும் பாருங்கள் @ http://www.yarl.com/audio_video/archives/2004/08/000670.shtml

—-

பட நண்பர்களுக்கு,

நீங்கள் மேன்மேலும் இது மாதிரி யாழ்வாழ் மக்களின் உண்மை மனநிலையை படம் எடுங்கள்.

ஏன் நீங்கள் ஒரு PAYPAL கணக்கில் விருப்படவர்களிடம் பணம் வாங்கக் கூடாது… ? உங்களின் அடுத்த முயற்சிக்கு உதவுமே..

—-

மக்களுக்கு:

– கட்டாயம் உங்கள் பகுதியில் நடக்கும் குறும்பட விழாக்களுக்கு இதை பரிசீலனைச் செய்யுங்கள். உங்களுக்கும் பெருமை.

—-

கோவிந்த்

govindmedia@yahoo.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்