சோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் ?

This entry is part 11 of 49 in the series 19991203_Issue

தினக்கப்ஸா


ஜிம்மி காந்தி ஸ்பெஷல்

சோனியா இத்தாலி பயணம்

சூன் 1. இன்று சோனியா இத்தாலிக்கு பயணமானார். சோனியா பிரதமராவார் என்று ஆவலுடன் இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்திருந்த அவர் தாயார், தந்தையார், சகோதரிகள் அனைவருடனும் மிகுந்த ஏமாற்றத்துடன் இன்று சோனியா இத்தாலிக்கு திரும்புகிறார். அவரது இந்தியக் குடியுரிமைப் பத்திரத்தையும், இந்திய பாஸ்போர்ட்டையும் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவித்தார். இத்தாலிய குடியுரிமை பெற்றுவிட்டார்களா என்று நிருபர்கள் கேட்டபோது, அவர் இத்தாலிய பாஸ்போர்ட்டை காண்பித்து, தான் இத்தாலிய குடியுரிமையை எப்போதும் திருப்பிக்கொடுக்கவில்லை என்றும், இந்தியர்கள் நன்றி கெட்டவர்கள் என்றும் தன்னை பிரதமர் ஆக்காதது சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காங்கிரசுக்கும், மகாத்மா காந்திக்கும், இந்திரா காந்திக்கும், ராஜீவ் காந்திக்கும் செய்யும் துரோகம் என்றும் பதில் சொன்னார்.

 

‘நீங்கள் இப்போது பிரிந்து செல்ல வேண்டிய அவசியமே இல்லையே. இங்கு ஏதும் போர் நடக்கவில்லை. கலவரங்களும் இல்லை. ‘ என்று எல்லோரும் சமாதானப் படுத்தினாலும் சோனியா கேட்பதாக இல்லை.

 

விமான நிலையத்தில் அவரது காலடியில் மன்மோகன் சிங், அர்சுன் சிங், மூப்பனார், சிதம்பரம், மணி சங்கர அய்யர், சரத்பவார், அஜித் ஜோகி, சுப்பிரமணியம் ஸ்வாமி போன்றோர் அழுது புரண்டனர்.

 

‘மேலிடம் மேலிடம் என்று இனி யாரை அழைப்போம் . மேலிடம் இல்லாமல் காங்கிரஸ் செயல் பட்டதாக சரித்திரமே இல்லை ‘ என்று தெரிவித்தார்கள் காங்கிரஸ் காரர்கள்.

 

‘உங்களை நம்பினேன். என்னை நீங்கள் பிரதமராக ஆக்குவேன் என்று உறுதி கூறினீர்கள். இருந்தும் அந்த முலாயம் சிங்கை உங்களால் சமாளிக்க முடியவில்லை. வெட்கமாக இல்லை ‘ என்று திட்டினார் சோனியா. அவரது திட்டலை கேட்டு தலை குனிந்து நின்றவர்களில் கம்யூனிஸ்ட் தலைவர்களான சுர்ஜீத் சிங், ஜோதிபாசு இன்னும் பல காங்கிரஸ் காரர்களும் அடங்குவர்.

 

‘வகுப்பு வாதத்தை எதிர்த்துப் போரிட எங்களில் யாருக்கும் திறமையில்லை என்று தானே உங்களைக் கொண்டு வந்தோம். இத்தாலி நாட்டில் வகுப்பு வாதம் இல்லையே . நீங்கள் எதை எதிர்த்துப் போராடுவீர்கள் ‘ என்று கேட்டார்கள்.

 

‘இனி பிரதமராக யாரை தேர்தலில் நிறுத்தப்போகிறீர்கள் ‘ என்று நிருபர்கள் காங்கிரஸ் தலைவர்களை கேட்டார்கள். அதற்கு மன்மோகன்சிங், சரத்பவார் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ‘மேலிடமே போய்விட்டது, இனிமேல் இந்தியா எக்கேடு கெட்டால் என்ன ? ‘ என்று பதில் சொன்னார்கள். உணர்ச்சி வயப்பட்ட சிதம்பரமும் மூப்பனாரும் ‘மேலிடம் போகுதே, எம்மையே பிரிந்தே ‘ என்று ஒப்பாரி பாடினார்கள். மூப்பனாரும் மேடத்துடன் பயணப் படுவதாய்த் தெரிவித்தார். மேடத்தின் லக்கேஜையெல்லாம் பொறுப்பாகக் கொண்டு போய்ச் சேர்ப்பது தன் பணியென்றும், காந்தி குடும்பத்தினருக்குப் போர்ட்டர் வேலை பார்ப்பது தன் பாக்கியம் என்றும், இந்திராகாந்திக்கு அளித்த உறுதிமொழி இதுதான் என்றும் தெரிவித்தார். தமிழ் மேடம் காங்கிரஸை, இத்தாலி மேடம் காங்கிரஸ் என்று மாற்றுவதாய்த் தெரிவித்தார்.

 

ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் பொறுப்புகளும் பணமும் தன்னிடமே இருக்கும் என்று சோனியா தெரிவித்தார். இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு உதவத் தயாராய் இருப்பதாகவும், பீரங்கி ஏதும் வாங்கும் திட்டமிருந்தால். தன் பழைய அனுபவத்தைப் பயன் படுத்தி நன்முறையில் முடித்துத் தருவதாக வாக்களித்தார். மறுபடியும் பிரதமர் பதவி காலியானால், தனக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

 

பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கி இதைக் கொண்டாடியதாகச் செய்தி வந்தது.

 

ஜிம்மி காந்தி தலைவரா ?

 

சோனியா இத்தாலிக்கு கோபித்துக்கொண்டு சென்றுவிட்டது தெரிந்ததே. இதனால் நேரு குடும்பம் இல்லாமல் அரசியல் நடத்தத்தெரியாத காங்கிரஸ் தலையை பிய்த்துக் கொண்டு அலைவதும் தெரிந்ததே. இன்று காலை ஜனாதிபதியைச் சந்தித்த காங்கிரஸ்காரர்கள் அவரிடம் ஆலோசனை கேட்டார்கள். சோனியா இந்தியாவிலேயே விட்டுச்சென்றுவிட்ட நாயான ஜிம்மியை காங்கிரஸ் தலைவராக்கும்படி ஆலோசனை கூறியதாக தெரியவருகிறது.

 

பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் ஜனாதிபதி கட்சி சார்பாக செயல்படுகிரார் என்று குற்றம் சாட்டினார்கள். பிரதமர் வாஜ்பாயி, பாரதீய ஜனதா கட்சியினர் ஜனாதிபதி பதவிக்கு இழுக்கு நேரும்படி பேசக்கூடாது என்று கட்டுப்படுத்தினார். சந்திரசேகர் தான் காந்தி குடும்பத்துக்கு தீவிர எதிர்ப்பாளன் என்றும் ஆனால் ஜிம்மி காந்தி, தான் மீண்டும் பிரதமராவதற்கு உதவினால், ஜிம்மி காந்தி ஆதரவோடு ஆட்சி அமைக்க தயார் என்றும் கூறினார்.

 

காங்கிரஸ் தலைவர்கள் ஜிம்மி காந்திக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றும் அவருக்கு பிரதமர் பதவி என்றாலே வேப்பங்காயாக கசக்கிறது என்றும் இன்று கூறினார்கள்.

 

ஜிம்மி காந்தியைப்பற்றி கேள்விப்பட்டவுடன் த மா க தலைவரான மூப்பனார் இன்று அவசரமாக டெல்லி திரும்பினார்.

 

ஜிம்மி காந்தி காங்கிரஸ் தலைவரானது

 

இன்று தற்காலிக தலைவராக பொறுப்பேற்றிருந்த சரத்பவாரை பார்த்து ஜிம்மி காந்தி குலைத்தது. இதனால் காங்கிரஸ் காரியக்கமிட்டியைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, ஆர் கே தவான், தாரிக் அன்வர், சங்மா போன்றோர் அவசர கூட்டம் கூட்டினார்கள். ஜிம்மி காந்தி காரியக்கமிட்டி கூட்டத்துக்கு வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்று யோசித்து 10 ஜனபத் இந்திரா காந்தி மாளிகையிலிருந்து காங்கிரஸ் காரியாலயம் வரை நாய் பிஸ்கட்டுகள் போடப்பட்டிருந்தன. இதனால் ஜிம்மி காரிய கமிட்டிக்கு வந்தது. இந்த கூட்டத்தில் அவசர அவசரமாக மூப்பனார், பவாரை கழுத்தை பிடித்து தள்ளினார். இதனால் குழப்பம் நிலவியது. ஆர் கே தவான் சொல்ல, பிரணாப் முகர்ஜி வழி மொழிய காங்கிரஸ் கமிட்டி ஏக மனதாக ஜிம்மி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றது. பவார் வெளியே நின்று அழுது கொண்டிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

‘ஜிம்மி காந்தி வெளிநாட்டு நாய்! ‘ ஜிம்மி காந்திக்கு பி ஜே பி எதிர்ப்பு

 

இன்று பி ஜே பி தலைவரான பிரமோத் மகஜன் ஜிம்மி காந்தியை எதிர்ப்பதாக தெரிவித்தார். ‘ஜிம்மி ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு நாய். காங்கிரஸ் காரர்களுக்கு இந்தியாவில் இருக்கும் எத்தனையோ தெரு நாய்கள் கண்ணுக்கு தென்படவில்லையா ? காங்கிரஸ்காரர்கள் வெளிநாட்டுமோகத்தில் அலைகிறார்கள். மேலும் அது ஜிம்மி என்று பெயர் வைத்திருக்கிறது. எனவே அது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தது என்று நாங்கள் கருதுகிறோம். நம்ம தெரு நாயாக இருந்தால் அதற்கு மணி, பூச்சி போன்ற இந்திய பெயர்களாக இருக்கும் என்பதை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம். ‘

 

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். காங்கிரஸ் தலைவரான மணி ஷங்கர் அய்யர், ‘ஜிம்மி ஜெர்மன் ஷெப்பர்டு நாய் என்பது உலகத்துக்கே தெரியும். ஜெர்மன் ஷெப்பர்டு நாயாக இருந்தாலும் அது நேரு குடும்பத்து நாய். நேரு குடும்பத்து நாய் என்பது மட்டுமல்ல அது சிவப்பான அழகான நாய். அறிவு மிக்க நாய். நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா என்று கவிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே இந்தியாவிலுள்ள எல்லா இந்தியர்களை விட ஜிம்மி காந்தி இந்தியப்பற்றுள்ள நாய். ஜிம்மியைப்பற்றி பேச இந்தியாவில்லுள்ள யாருக்கும் அருகதை கிடையாது. அவர்கள் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு நேரு குடும்பத்து நாய்க்கு ஓட்டு போட்டுவிட்டு போவதுதான் அவர்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம். மைனாரிட்டிகள் எல்லோரும் ஜிம்மிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் என்பது தான் பி ஜே பி தலைவர்களுக்கு ஜிம்மி காந்தியை பிடிக்காமல் போய்விட்டது ‘ என்று கருத்து தெரிவித்தார்.

 

ஜிம்மி காந்தி இன்று பொதுக்கூட்டத்தில் பேசினார்.

 

இன்று தமிழகத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று மூப்பனார் தலைமையில் த.மா.கா சார்பில் ஜிம்மி காந்தி பேசினார். ஜிம்மி ‘வள் ‘கம் என்று குலைத்ததை ப சிதம்பரம் வணக்கம் என்று மொழி பெயர்த்தார். ஜிம்மி காந்தி தமிழ் பேசி குலைத்ததைப்பார்த்து தமிழக மக்கள் புளகாங்கிதம் அடைந்தனர். ‘எவ்வளவு சேப்பா இருக்கு பாத்தியா ‘ என்றும் ‘நேரு வீட்டு நாய் எவ்வளவு அழகா குரைக்குது பார்த்தியா ‘ என்றும், ‘என்ன இருந்தாலும் நேரு நாய்தான் நம்ம பிரதமர் ‘ என்றும் மக்கள் பேசிக்கொண்டு சென்றார்கள். பின்னால் பொருளாதாரம் பற்றி பேசிய ப சிதம்பரத்துக்கு கூட்டம் இல்லாமல் போய் பாதியிலேயே நிறுத்தி கூட்டம் சிறப்பாக முடிவடைந்தது. பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றியடைந்தது என்றும் இது ஜிம்மி காந்தியே அடுத்த பிரதமர் என்று மக்கள் கூறுவதாகவும், டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து போன்ற பத்திரிக்கைகள் தலையங்கங்கள் எழுதியிருக்கின்றன.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜிம்மியை ஆதரிக்கிறது

 

இன்று கம்யூனிஸ்ட் கட்சியைச்சார்ந்த சுர்ஜீத், ஜோதி பாசு போன்றோர் ஜிம்மி இந்தியப் பிரதமராக காங்கிரஸ் கட்சியால் முன்னிருத்தப்படுவதை வரவேற்பதாக கூறினார்கள். செக்குலர் சக்திகள் ஒருங்கிணைந்து ஜெயலலிதா, லல்லு பிரசாத் யாதவ் போன்றோரின் ஆதரவுடன் ஜிம்மி காந்தியை பிரதமராக ஆக்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள்.

 

டெல்லி கத்தோலிக்க ஆர்ச் பிஷப், ஆலன் டி லாஸ்ட் ஜிம்மிக்கு ஆதரவு.

 

‘பி ஜே பி இந்துத்துவா என்று பேசிக்கொண்டு இந்து மதத்தின் உயர்ந்த கருத்துக்களை மதிக்காமல் இருக்கிறார்கள் ‘ என்று இன்று கத்தோலிக்க ஆர்ச் பிஷப் ஆலன் டி லாஸ்ட் தெரிவித்தார்.

‘எல்லா உயிர்களிலும் ஆண்டவன் இருக்கிறான் என்று இந்து மதம் சொல்கிறது. கிரிஸ்தவ மதம் அவ்வாறு சொல்லவில்லை. இஸ்லாமும் அவ்வாறு சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது, இந்து மதத்தை காப்பாற்றுவதாக சொல்லும் பி ஜே பி, ஜெர்மன் ஷெப்பர்டு நாய் கிரிஸ்தவ மதத்தை சேர்ந்தது என்ற ஒரே காரணத்துக்காக பிரதமராக ஆகக்கூடாது என்று தடுப்பது பி ஜே பி யின் குறுகிய புத்தியை காட்டுகிறது ‘ என்று அவர் கருத்து தெரிவித்தார்.

 

அமெரிக்க புரபஸரான அமுல்யா கங்குலி ஜிம்மி காந்தி பற்றி கருத்து தெரிவித்தார்.

 

சோனியா காங்கிரஸ் தலைவராக ஆவதற்காக அரசியல் சட்டத்தை திருத்தியது போல ஜெர்மன் ஷெப்பர்டு நாயான ஜிம்மி காந்தி பிரதமராக ஆவதற்காக அரசியல் சட்டத்தை திருத்தலாம் என்று அமெரிக்க புரபஸர் ஆலோசனை தெரிவித்திருக்கிறார். இன்று ஐ.எம்.எப், உலக வங்கி யிலிருந்து வந்த பெரும் தலைவர்களும், ஐ நா தலைவரும் சற்று நேரம் ஜிம்மி காந்தியுடன் பந்து போட்டு விளையாடினார்கள். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் பேசும்போது, ஜிம்மி ஒரு புத்திசாலியான நாய் என்றும், இந்தியாவுக்கு அது பிரதமராவது இந்தியா செய்த புண்ணியம் என்றும் கருத்து தெரிவித்தார்கள்.

 

இன்று ஜிம்மி காந்திக்கு உடல்நலம் சரியில்லை

 

ஜிம்மி காந்திக்கு இன்று வயிற்றால் போவதால், அவர் எந்த பொதுக்கூட்டத்துக்கும் போக முடியாமல் போனது தெரிந்ததே. இதனால் மனமுடைந்த பிரணாப் முகர்ஜி இன்று தீக்குளிக்க முடிவு செய்தார். ஆர் கே தவான் பத்து மாடிக்கட்டடத்திலிருந்து குதிக்க முடிவு செய்தார். ஐந்து மாநில காங்கிரஸ் முதலமைச்சர்கள் இன்று ஜிம்மி காந்திக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்கள். இந்திராகாந்தி வீட்டு முன் பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் தொண்டர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்தார்கள்.

 

ஜெயலலிதா ஜிம்மி காந்தி நாய்பிஸ்கட் பார்ட்டி – சுப்பிரமணிய சாமி ஏற்பாடு

 

ஜிம்மி காந்தி டா சாப்பிடாததால் நாய் பிஸ்கட் பார்ட்டிக்கு சுப்பிரமணிய சாமி ஏற்பாடு செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இன்று ஜெயலலிதாவும் ஜிம்மி காந்தியும் ஒரு நாய் பிஸ்கட்டை இரண்டாக உடைத்து பாதி பாதி சாப்பிட்டார்கள். இது இந்திய அரசியலில் பரபரப்பான விஷயமாக பேசப்படுகிறது. பிறகு சுப்பிரமணிய சாமி பேசுகையில், எனக்கு ஒரு துணை மந்திரி பதவி கூட கொடுக்க மறுத்த பிஜேபியையும் வாஜ்பாயியையும் ஒழிப்பதே என் வேலை. அதற்காக என் மனைவி, மக்கள், இந்தியா, எதையும் பழி கொடுக்க நான் தயங்கமாட்டேன் என்று முழங்கினார்.

 

ஜெயலலிதா, ஜிம்மி காந்தி கூட்டுக்கு மக்கள் ஆதரவு – கருத்துக் கணிப்பு வெளியீடு.

இன்று டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து பத்திரிக்கைகள் இணைந்து நடத்திய நாடு தழுவிய கருத்துக்கணிப்பில், ஜிம்மி காந்திக்கு பெருத்த ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

அடுத்த பிரதமராக வர யார் தகுதியுடையவர்கள் என்ற கருத்துக்கணிப்பில், ஜிம்மி காந்தி, பிரணாப் முகர்ஜி, ஆர் கே தவான், பவார், மூப்பனார் என்ற நான்கு பேரில் ஜிம்மி காந்திக்கே பெருத்த ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறித்து சிலர் குறை கூறினார்கள். அவர்களது கருத்துக்கள் இதில் இடம் பெறவில்லை.

ஜிம்மி காந்தியின் குணங்களில் மக்களுக்கு பிடித்தது அவர் வாலாட்டும் விதம் தான் என்பதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அவர் குலைக்கும் விதம் இரண்டாவதாகவும், அவர் கழுத்தை தூக்கும் விதம் மூன்றாவதாகவும் இடம் பெற்றிருக்கிறது.

 

இதைப்படிக்கும் யாரும் தயவு செய்து காங்கிரஸ் தலைவர்களிடம் இதை சொல்லி விடாதீர்கள். இது நகைச்சுவையே. இதனால் யாருக்கும் நாங்கள் ஐடியா கொடுக்கவில்லை. மேலும் ஜிம்மி காந்தி ஒரு வேளை இந்தியா பிரதமரானால் நாங்கள் பொறுப்பாளி அல்ல.


.

 

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< விழாவும் நாமும்மரியா >>

தினக்கப்ஸா

தினக்கப்ஸா