பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 4

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

சாய் (என்கிற) பேப்பர்பாய்



– டேக் – 4 –
ராஜகுமாரி

நீதிக்கட்சியில் அண்ணா சேர்ந்த போது திருக்குவளை முத்துவேலர் கருணாநிதிக்கு வயது சுமார் 10 (பிறப்பு: 3-6-1924). அண்ணா தனது எழுத்தாற்றலாலும் பேச்சுத்திறனாலும் செயல் வேகத்தாலும் நீதிக்கட்சியில் முக்கிய மையமாக – குறிப்பாக இளைஞர்களை வசீகரிக்கும் மந்திரக் கோலாக வேகமாக உருவெடுத்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் மு.க.,வுக்கு விடலைப் பருவம். படிக்க வேண்டிய வயதில் அரசியலில் ஆர்வம். விளைவு… பள்ளிப் படிப்போடு சரி. பெரியார் மற்றும் அவரது கருத்துகள் மீது அதீத நேசம். இயக்கத்தின் பிரச்சார பீரங்கிகளாக வலம் வந்த ‘அஞ்சா நெஞ்சன்’ அழகிரி, ‘ தளபதி’ அண்ணா ஆகியோர் மீது தனி ஈர்ப்பு.

தனது 14வது வயதிலேயே ஊரில் கையெழுத்துப் பிரதி பத்திரிகையை நடத்துமளவுக்கு எழுதுவதிலும் இயக்கத்தின் மீதும் ஆரம்பத்தில் இருந்தே மு.க.,வுக்கு அப்படியொரு மோகம். அவரின் வயதுக்கு போட்டியாக இன்னும் சொல்லப் போனால் அதனை முந்திக் கொண்டு அவரது எழுத்தாற்றலும் வளர்ந்தது. பகுத்தறிவு, திராவிடம் போன்ற கருத்துருக்களின் அடிப்படையில் அமைந்த கதைகள், கட்டுரைகள் அண்ணா நடத்தி வந்த ‘திராவிட நாடு’ உள்ளிட்ட திராவிட இயக்கப் பத்திரிகைகளில் பிரசுரமாகுமளவுக்கு மு.க.,வின் எழுத்துகள் கூர்மையடைந்து வந்தன.

கருணாநிதியின் பேனா கதை, கட்டுரைகளுடன் நின்று விடாமல், நாடகத் துறைக்கும் சென்றது. கிராமத்து வாலிப பருவம் தொடங்கி நீதிக்கட்சி, தி.க., தி.மு.க., என்று அரசியலின் அனைத்துக் கட்டங்களிலும் அவர் நாடகங்கள் எழுதியதுடன் அவற்றில் நடிக்கவும் செய்தார். ‘ பழநியப்பன் ‘ தொடங்கி ‘தூக்குமேடை’, ‘மணிமகுடம்’, ‘விமலா அல்லது விதவையின் கண்ணீர்’ , ‘அம்மையப்பன்’, ‘வாழ முடியாதவர்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது தான் நடிகவேள் எம்.ஆர்.ராதா, கருணாநிதிக்கு ‘ கலைஞர் ‘ பட்டம் கொடுத்து பாராட்டினார்.
( இந்த பட்டப் பெயரே கருணாநிதி என்ற பெயரோடு இரண்டற கலந்து இன்றளவும் நீடித்து வருகிறது. )

ஆரம்ப காலத்தில் நாடகங்கள் மூலம் தனது எழுத்து வன்மையை கூர் பார்த்த மு.க.வின் இலக்கு சினிமாவாக இருந்திருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தது, 1940களின் மத்தியில் ஈரோட்டில் பெரியாரின் ‘குடியரசு’ பத்திரிகையில் துணையாசிரியராக மு.க. பணியாற்றிக்
கொண்டிருந்த போது தெரிய வந்தது. 1947ல் அவருக்கு ‘ராஜகுமாரி’ முதன் முறையாக சினிமா
சான்ஸ் பெற்றுத் தந்தாள்.

ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராஜகுமாரி’ (1947) படத்தில் மூலமே மு.கருணாநிதி, சினிமாவுக்குள் காலடி வைத்தார். அப்படத்தில் வசனகர்த்தா இலாகாவில் உத்யோகம் கிடைத்தது. அப்படத்தின் டைட்டிலில் ‘ கதை, வசனம் , சினாரியோ & டைரக்ஷன் ஏ.எஸ்.ஏ. சாமி’ என்றும் ‘ உதவி ஆசிரியர் மு. கருணாநிதி’ என்று தான் வரும்.

ஆக, சினிமாவில் நுழைந்த ஆண்டு வகையில் பார்த்தால் அண்ணாவை (1949) விட கலைஞர் கருணாநிதி சற்று சீனியர் தான். ஆனால் ஒரு இயக்கத்தின் முக்கிய தலைவராக – முழு நேர அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர், முழுக்க முழுக்க தான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கருத்துகளை மையமாக வைத்து கதை அமைத்து வசனங்களையும் எழுதி மக்கள் மன்றத்துக்கு கொண்டு சென்ற வகையில் பார்த்தால் அண்ணாவே சீனியர். தமிழ் டாக்கியில் திராவிட
இயக்கத்தின் தாக்கத்துக்கு நேரடியாக வித்திட்டவர் என்ற பெருமையை பெற்றவராகிறார்.

அதே நேரத்தில், சினிமாவுக்காக எழுதிய படைப்புகளின் எண்ணிக்கையிலும் அந்த எழுத்துகள் ஏற்படுத்திய பரபரப்பு மற்றும் தாக்கத்தின் வீரியத்திலும் அண்ணாவை மிஞ்சியவராகிறார் கலைஞர்.

சினிமா எழுத்தில் அண்ணா கையாண்ட உள்ளடக்கங்களையே மு.க.,வும் கை கொண்டாலும் இவரது எழுத்து நடையும், பாணியும் வித்தியாசப்பட்டிருந்தன. அண்ணாவின் எழுத்து நடையில் தென்றல் இழையோடுமென்றால் மு.க.,வினுடையதில் சூறாவளி மையம் கொண்டிருக்கும். பொதுவாக, இருவரது சினிமா எழுத்துமே எதிராளியை கை நீட்டி இழுத்து போட்டு அடிக்காது. ரத்தம் வராமல் உள்ளடியாக நாசூக்காக தாக்கும். அதுவும் சிரித்துக் கொண்டே ஊசியால் குத்தும் சாமர்த்தியம் இளவலின் எழுத்துக்கு சற்று கூடுதலே எனலாம்.

***************

மு.க.,வின் சினிமா வாழ்க்கையை முக்கியமாக மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். அவை: 1) 1947- 1967 ; 2) 1967 -1972 ; 3) 1972 முதல் 87 வரை. இதில் முதலாவது மற்றும் மூன்றாவது கட்டங்களில் அவர் தனது பேனாவில் மையிக்கு பதில் அமிலத்தை நிரப்பிய காலங்களாகும். முதலாவதில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியையும் மூன்றாவதில் எம்.ஜி.ஆரையும் அவரது ஆட்சியையும் குறி வைத்து குத்தீட்டிகளை வீசியது அவரது எழுத்து; தனது பிரத்யேக பாணி பிசகாமல்.

முதன்முதலாக 1947ல் கலைஞருக்கு சினிமா கதவை திறந்த ‘ராஜகுமாரி’ ஒரு மந்திர ஜால ராஜா ராணிப் படம். ‘ ச்சூ மந்திரக்காளி ‘ என்கிற மந்திரவாதி, பறக்கும் கம்பளம், மாயமோதிரம் என்றெல்லாம் பகுத்தறிவுக்கு ஒப்பாத கதையம்சம் கொண்டது. இதில் வசனத்துக்கென விசேஷம் சொல்லி கொள்கிறார் போலில்லை.

படத்தின் கதாநாயகனும் – பின்னாளில் தனது அரசியல் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் முக்கியப் பங்கு வகிக்கப் போகப் போகிறவருமான நடிகர் எம்.ஜி.ராமசந்தருடன் மு.கருணாநிதிக்கு நெருக்கமான நட்பு மலர்ந்தது தான் ‘ராஜகுமாரி’யில் விளைந்த உருப்படியான விஷயம் எனலாம்.
அடுத்து, கருணாநிதிக்கு அதே கம்பெனியார் தயாரித்த ‘அபிமன்யூ’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. புராணப்படம். முந்தைய படத்தில் நாயகனாக நடித்த ராமசந்தருக்கு இதில் துணை வேடம் தான். அபிமன்யூவின் அப்பா அர்ஜுனன் வேடம். ஆக, நண்பர்கள் இருவருக்குமே வேலை தராத படம்.

வந்தாள் ‘மந்திரிகுமாரி’ 1950ல். ‘ ராஜகுமாரி ‘ செய்யாததை இந்த ‘ மந்திரிகுமாரி ‘ செய்தாள். ‘திராவிட இயக்க’ கருணாநிதியின் ‘ஏவுகணை’ எழுத்தை முதன் முதலில் பளீரென அடையாளம்
காட்டியது இந்த மந்திரிகுமாரி தான். இப் படத்தில் ஒவ்வொரு வசனமும் ‘ நறுக்; சுருக் ‘.
தமிழ் சினிமா உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

மந்திரிகுமாரியும், ராஜாராணி கதை தான். ‘ஆண்டவன், ஆச்சார அனுஷ்டானங்கள், வைதீகம்..’ என்றெல்லாம் சொல்லி நாட்டு மன்னனை பொம்மையாக ஆட்டி வைக்கும் ராஜகுருவின் நரித்தனமும் அவரது மகனின் கொள்ளை அட்டூழியங்களுமே இப்படத்தின் மையக் கரு. ” கொள்ளையடிப்பதும் அருமையான கலை” என்ற லட்சியத்தோடு வரும் ராஜகுரு மகன் பாத்திரத்தில் எஸ்.ஏ.நடராஜன். (இப்படத்தில் பெயருக்கு தான் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகன். வில்லனாக வரும் எஸ்.ஏ.என். தான் உண்மையில் நாயகன்) உச்சிக்குடுமியும் பூணுல் மார்புமாக ராஜகுருவுக்கு (எம்.என்.நம்பியார்) கெட்டப்.

போதாதா… மு.க.வின் திராவிட இயக்க பேனாவுக்கு ! கேலிகளும் கேள்விகளுமாக வசனங்கள் துள்ளின.

அப்பாவி ஜனங்களை தாக்கி கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க சேனாதிபதி கிளம்பிப் போக அதை தடுப்பார் ராஜகுரு. ” படைகள் போக வேண்டியதில்லை. ” அரண்மனையில் ஒரு யாகம் செய்தாலே போதும். கொள்ளைக் கும்பல் தானாகப் பிடிபடும்” என்று ராஜகுருவை பேச வைத்து படம் பார்க்கும் ஜனங்கள் ‘ இதென்ன அபத்தம் ‘ என்று எண்ணவும் ; அடிக்கடி தனது
சுயநலத்துக்காக சாஸ்திர சம்பிரதாயம், வைதீக சமாச்சாரங்களை சொல்லி மன்னரை ராஜகுரு
மிரட்டும் போதெல்லாம் ‘அவாளோட தந்திரத்தை பார்த்தியா’ என்று சொல்லாமல் சொல்ல வைத்த சாமர்த்தியம் மு.க.வின் பேனாவுக்கு இருந்தது. அத்துடன், ‘அந்தண சிரோன்மணியே’ என்று அடிக்கடி குத்தல் டயலாக் வேறு.
அடுத்து அதே ஆண்டில் மருதநாட்டு இளவரசி, பின்னர் ‘மர்மயோகி’ (1951) , மணமகள் (என்.எஸ்.கே.தயாரித்தது), என அடுத்தடுத்து படங்கள் மு.க.வுக்கு குவிந்தன.

1952ம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ படம் மு.கருணாநிதிக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கே பெரியதொரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் வசனங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் வீரியம் மற்ற திராவிட இயக்க எழுத்தாளர்கள் எவருடையதும் ஏற்படுத்தியதில்லை என்பதே உண்மை. அவ்வளவேன், குருவை மிஞ்சிய சிஷ்யன் என்ற உச்சத்தை மு.க., எட்டினார் என்றால் அதுமிகையாகாது. இந்த படத்தின் வசனங்கள் மூலம் இன்றளவும் கலைஞர் பேசப்படுகிறார்.

பராசக்தி படத்தில், நாயகன் (சிவாஜிகணேசன்) ரங்கூனில் இருந்து சென்னைக்கு வந்திறங்குவான். அப்போது பிச்சைக்காரன் ஓடி வந்து “அய்யா பிச்சை போடுங்கைய்யா” என்று கையேந்த, ” சபாஷ், தமிழ்நாட்டின் முதல் குரலே பிரமாதமாக இருக்கிறதே’ என்று கிண்டலடிப்பான் கதாநாயகன். அப்போது தமிழகத்தில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் அவலத்தை இந்த வசனத்தின் மூலம் மு.க. சுட்டிக்காட்டினார்.

அதே போல் இன்னொரு ‘ குட்டு ‘. வாழ வழியில்லாத விதவைப் பெண் கல்யாணி. வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வதென்று கலங்கி நிற்கும் போது மற்றொரு ஏழைப் பெண் சொல்வாள்:
” தெரு முனையிலே இட்லிக் கடை வெச்சி பொழச்சிக்கோ. இப்போ நம்ம ஊர்லே, தாலியறுத்தவளுங்களுக்கெல்லாம் இட்லி கடை தான தாசில் உத்யோகம் !”

மேலும் இப்படத்தில், கதாநாயகி கல்யாணியும் அவள் கணவனும் தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணாக இருந்தால் ‘பன்னீர்செல்வம்’ என்றும் பெண்ணாக இருந்தால் ‘நாகம்மை’ என்றும் பெயர் சூட்டுவோம் என்று சொல்வதாக வசனம் எழுதி தனது இயக்கப் பற்றை பறைசாற்றினார் மு.க. ( பன்னீர்செல்வம் நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ஈ.வெ.ரா.
பெரியாரின் முதல் மனைவி நாகம்மையார். வைக்கம் போராட்டம் உட்பட பெரியார் நடத்திய சமூகப் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்று திராவிட இயக்கத்தாரின் பெருமதிப்புக்குரியவர் )

அதே போல், 1956ல் வந்த ‘ராஜாராணி’ (சிவாஜி கணேசன் கதாநாயகன்) கலைஞரின் கதை, வசனத்தில் உருவானது. இது, பால்ய விவாகக் கொடுமையைச் சாடி விதவைகள் மறுமணத்தை
வலியுறுத்திய சமூகப் படம். 5வயது குழந்தைப் பருவத்திலேயே ஒரு சிறுவனுடன் பால்ய விவாகம் செய்விக்கப்பட்டு அதே வயதில் விதவையும் ஆனவள் கதாநாயகி. அவளது குமரிப் பருவத்தில்,
பால்ய விதவை என்று குத்திக்காட்டி அவளை அவளது காதலனுக்கு மணம் முடித்துக் கொடுக்க மறுக்கும் தந்தையிடம் கதறுவாள்: “பாழும் விதவையெனும் கட்டுப்பாட்டுச் சூறாவளிக்குள் சிக்கி
சீரழியத் தான் வேண்டுமா நான்?.

பால்ய விவாகத்தை ‘மர பொம்மை விளையாட்டு’ என்றும் சாடுவார் மு.க.

அதே படத்தில் இடம் பெறும் ‘ சேரன் செங்குட்டுவன்’, நாடகத்தில் தமிழை, தமிழர்களை தூக்கி
நிறுத்தும் வசனங்கள் நிறைய.
உதாரணத்துக்கு : “தமிழைப் பழித்துச் சொன்னான் ஒரு சொல்லை; அவன் தலையில் தூக்கி வை கல்லை” (கண்ணகி சிலைக்காக கல்லை கனகவிஜயனின் தலையில் சேரன் செங்குட்டுவன் ஏற்றி கொண்டு வரச் செய்த காட்சியில் வசனம்).

மேலும், அதே ‘ ராஜா ராணி’ படத்தில் இன்னொரு நாடகம் ‘சாக்ரடீஸ்’. அதில் ஈ.வெ.ரா. பெரியாரை சாக்ரடீஸாக உருவகப்படுத்தி பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்தது மு.க.வின் தமிழ். அதிலும் முக்கியமாக , எழுத்து மற்றும் பேச்சு வன்மையால் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அல்லது திராவிட இயக்கம் இளைஞர்கள் மயக்கி தன் பக்கம் இழுத்துக் கொள்கிறதென்று சனாதனிகளும் ( திராவிட இயக்க பாஷையில் ‘பார்ப்பனர்கள்’) காங்கிரஸாரும் அப்போது கூறி வந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்த நாடகத்தின் மூலம் பதிலடி கொடுத்தார் கலைஞர்.

வாலிபர்களே.. விவேகமில்லாத வீரம் விலை போகாது. அறிவாயுதம் ; அது காலத்தால் அழியாத ஜோதி.. என்ற வசனத்துடன் சாக்ரடீஸ் அறிமுகப்படுத்தப்படுவார்.

அவரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தும் காட்சியில் “அரசுக்கும் ஆண்டவனுக்கும் விரோதமாக இளைஞர்கள் திசை திருப்பும் பிரச்சாரம் செய்கிறான் இந்த சாக்ரடீஸ் கிழவன் ” என்று ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

உடனே, “கிரேக்கத்தின் கோமான்களும் பெரியோர்களும் இத்தனை ஆண்டுகள் பேசி பேசி திருத்தி வைத்துள்ள இளைஞர் கூட்டத்தை இந்த ஒரு கிழவன் எப்படியப்பா கெடுத்து விட முடியும் ?” என்று கிண்டலாகத் திருப்பி கேட்பார் சாக்ரடீஸ்.

“ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்” – இது குற்றம் சாட்டும் ஆட்சியாளர்கள்

“ஏன், இப்படியிருக்கலாமே. இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு என்று !” – இது சாக்ரடீஸ்.

தொடர்ந்து ” நான் பேசுவது வார்த்தை அலங்காரமல்ல. தரம் குறையாக் கருத்துகள்.
கொள்கைகள். அவற்றை அந்த அழகு மொழியில் அவர்களும் பேசட்டுமே. முடியாது. அவர்கள் பேசி தோற்றுப் போனவர்கள் ” -என்று தங்கள் இயக்கம் மீது வீசப்பட்ட விமர்சனத்துக்கு சாக்ரடீஸ் மூலமாக பதிலடி கொடுத்தார் மு.க.

ஒரு கதாபாத்திரத்தை ‘கிரேக்கப் பெரியாரே’ என்று சாக்ரடீஸை வர்ணிக்க வைத்து தனது எழுத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை கருணாநிதி.

“எதையும் ஏன், எப்படி, எதற்கு என்று கேள்வி கேளுங்கள். அவர் சொன்னார்; இவர் சொன்னாரென அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் பகுத்தறிவால் பகுத்து பார். உன்னையே நீ அறிவாய்” என்று இளைஞர்களுக்கு சாக்ரடீஸ் உருவத்தில் பெரியார் அறிவுரை கூறுவதாக நாடகத்தை
முடிப்பார்.

அது மட்டுமா, அந்த நாடகத்தை பார்க்க வந்திருக்கும் ஒரு பெரிய மனிதர் ( என்.எஸ்.கிருஷ்ணன்) மேடைக்கு ஓடி வந்து சாக்ரடீஸ் விஷம் குடிப்பதை தடுத்து நிறுத்தி, “இந்த பெரியார் போனால் இனி ஆயிரம் வருஷமானாலும் அறிவாயுதக் கிடைக்குமா நமக்கு?” என்று ஆடியன்ஸை பார்த்து கேட்பார்.

1967ல் தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்து அண்ணா முதலமைச்சரானார். பொதுப்பணித் துறை அமைச்சரானார் மு.கருணாநிதி. பின்னர் புற்றுநோயால் 1969ல் அண்ணா மறைந்து, கருணாநிதி முதலமைச்சரானதும் அவரது சினிமா ஈடுபாட்டு வேகம் சற்று குறைந்தே காணப்பட்டது. ஆனால் 1972ம் ஆண்டு வரை தான் இந்த ஓய்வு. 72ல் எம்.ஜி.ஆருடன் பிணக்கு ஏற்பட்டது தொடங்கி அவர் (எம்.ஜி.ஆர்) 1977ல் தமிழக முதலமைச்சராகி 1987ல் மரணமடையும் வரை மு.க.,வின் பேனா பழையபடி சுறுசுறுப்பாக இயங்கியது. எம்.ஜி.ஆரையும் அவரது ஆட்சியையும் தனது பாணியில்
கொத்தியது கலைஞரின் எழுத்து.

அதாவது பொது எதிரிகளான சனாதனிகள், காங்கிரஸ் ஆகியோரை விட்டு விட்டு திராவிட பாரம்பரியம் தனக்குள்ளேயே மோத ஆரம்பித்த அத்தியாயம் தமிழ் டாக்கியில் 1972ல் துவங்கியது எனலாம்.

இந்த எம்.ஜி.ஆர்., எதிர்ப்பு பிரச்சாரத்திற்காக தனது மகன் மு.க.முத்துவை சினிமாவில் இறக்கி விட்டார் கருணாநிதி. எதிர்பார்த்தளவுக்கு முத்து எடுபடாமல் போகவே நடிகர் ஜெய்சங்கரை பயன்படுத்தினார். ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்து 1978ல் வெளியான ‘வண்டிக்காரன் மகன்’ (கதை அண்ணாவினுடையது. வசனம் மட்டும் மு.க.) , ‘ஆடுபாம்பே’ (1979) போன்ற சில படங்களுக்கு கருணாநிதி காரசார வசனங்கள் எழுதினார். அதற்கேற்ப ‘ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே’ ; ‘ பாம்பே நீ ஆடு பாம்பே…’ என பாடல்களையும் வைக்க செய்தார். (மு.க.முத்து மற்றும் ஜெய்சங்கர் பற்றி தனித்தனி அத்தியாயங்களில் பார்ப்போம்).

இது தவிர, 1980களின் துவக்கத்தில் சத்தியராஜ், சந்திரசேகர், ராதிகா, போன்றவர்களை வைத்து தயாரிக்கப்பட்ட பாலைவன ரோஜாக்கள், தூக்குமேடை, நீதிக்கு தண்டனை போன்ற படங்களில் கருணாநிதியின் வசனங்களில் எம்ஜிஆர் அரசு எதிர்ப்பு வசனங்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தில் வசனங்கள் செம சூடு. உதாரணத்துக்கு: குழாயடியில் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்து “இவங்களும் சத்துணவு சாப்பிடறாங்களோ என்னவோ” என்று கதாநாயகன் கமெண்ட் அடிப்பதாக ஒரு டயலாக் வைத்திருப்பார் கலைஞர். (எம்ஜிஆர் அரசு கொண்டு வந்த பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தின் மீது தான் இந்த ‘பஞ்ச்’)

1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர்., மறைவோடு கலைஞர் தனது காரசாரமான சினிமா பேனாவின் முள்ளின் தலையில் மூடியை கவிழ்த்து விட்டாரெனலாம். (சமபல போட்டியாளருடன் மோதுவதில் தான் தனி சுவாரஸ்யமோ என்னவோ !)

‘வசந்தசேனை – வட்டமிடும் கழுகு; வாய் பிளந்து நிற்கும் ஓநாய்; சிரிக்கும் சிலந்தி’ புகழ் ‘மனோகரா (1954), மலைக்கள்ளன், அம்மையப்பன், நாம், திரும்பிப்பார், அவன் பித்தனா, புதையல், புதுமைப் பித்தன், பூம்புகார், காஞ்சித் தலைவன், குறவஞ்சி, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, நியாயத்தராசு,
பாசப்பறவைகள் உட்பட இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ( மற்ற திராவிட இயக்க எழுத்தாளர்கள் அறிஞர் அண்ணா உட்பட எவருமே இத்தனை படைப்புகளை சினிமாவுக்கு அளித்ததில்லை.) இந்த எண்ணிக்கை இனியும் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், முதலமைச்சர் மு.க.வின் எழுத்து வயதை விழுங்கியது.
காயகல்பத்தை சாப்பிட்டதாகும்!

(வளரும்)

அடுத்து : நாலு ‘ரா’க்கள்


vee.raj@rediffmail.com

Series Navigation

சாய் (என்கிற) பேப்பர்பாய்

சாய் (என்கிற) பேப்பர்பாய்